பரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பாதீர்!
கொரோனா பராமரிப்பு மையத்திலிருந்து நலவாழ்வுச் செயலர் இராதாகிருஷ்ணனுக்கு மடல்.
வணக்கம்! இந்த இக்கட்டான நேரத்தில் வருவாய்த் துறையிலிருந்து நலவாழ்வுத் துறைக்கு மாற்றப்பட்டு இருப்பது தங்களுடைய பேரிடர் கால பணிகளை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும். வாழ்த்துக்கள்!
கொரோனா நோயாளியாக அரசின் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கி இருக்கும் நிலையில் தங்களுடன் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். “zero stigmatisation – சிறிதும் களங்கப்படுத்தக் கூடாது, இதுவொரு கிருமித் தொற்று அவ்வளவே, அச்சப்படத் தேவையில்லை” என்று வேறெந்த அரசு அதிகாரியும் முன்வைக்காத கருத்துகளை ஊடகங்களில் முன்வைத்தது தாங்களே. மேலும், தொண்டு நிறுவனங்களை கொரோனா தடுப்பில் ஈடுபடுத்தியது, இதை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனையை எட்டிப் பிடித்தது எனச் சென்னையில் கொரோனா தடுப்பில் தங்களுடைய முன் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து நான் தங்கி இருக்கும் புளியந்தோப்பு k.p. park (ccc) மையத்தில் வெந்நீர் தட்டுப்பாடை தவிர உணவிலும், இருப்பிடத்திலும் குறையொன்றும் இல்லை. ஆளுக்கு ஓர் அறை, ஒரு படுக்கை , இருவருக்கு ஒரு குளியலறை, ஒரு கழிப்பறை, காலை சிற்றுண்டியுடன் ஒரு முட்டை, மதியம் முழு சாப்பாட்டுடன் ஒரு வாழைப்பழம், இரவு சிற்றுண்டி, காலை-மாலை இருவேளையும் தேநீர் மற்றும் கபசுர குடிநீர், காலை 11 மணிக்கு ஒரு ஆரஞ்சு பழம், மாலை 4 மணிக்கு ஒரு கைப்பிடி சுண்டல் என ஊட்டச்சத்தான உணவு கொடுக்கப்படுகிறது. சளி, காய்ச்சல் பிரச்சனைக்காக ஒருவரை தனிமைப்படுத்தி, இவ்வளவு ஊட்டச்சத்து மிக்க உணவைத் தன் குடிமக்களுக்கு அரசே வழங்கும் இந்த நிலையை கொரோனா தான் ஏற்படுத்தி இருக்கிறது. அரசிடம் இருந்து மக்களுக்கு இப்படியான ஒரு அக்கறை எல்லா காலங்களிலும் எல்லா நோய்களுக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்? என்று எண்ணத் தோன்றுகிறது.
உணவும் உறைவிடமும் முதன்மையானவை என்றாலும் இது போன்ற ஒரு நேரத்தில் அன்பும் அரவணைப்பும் மிக முக்கியமாகும். தன் வீட்டிலிருந்து ஒருவர் வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்படுவதும் நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் தன்னுடைய அன்புக்குரியவர் உடன் இல்லாததும் மிகவும் புதியது.
எடுத்துக்காட்டாக ஒரு பரிசோதனை மையத்தில் அடியெடுத்து வைக்கும் போதே அங்கிருக்கும் ஒரு அரசு அலுவலர், “உங்கள் சளி மாதிரியைக் கொடுத்த பின்பு நீங்கள் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்படுவீர், இரண்டு நாட்கள் கழித்து உங்களுக்கு ‘பாசிடிவ்’ என்று வந்தால் அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவீர் அல்லது ‘நெகட்டிவ்’ வந்தால் வீட்டுக்குப் போய்விடலாம்’ என்பார். சற்று எண்ணிப்பாருங்கள், பரிசோதனைக் கூடத்தில் அடியெடுத்து வைத்த மாத்திரத்தில் நிச்சயமின்மை தொடங்கிவிடுகிறது. “பாசிடிவ் என்றால் மருத்துவமனை – மருத்துவமனையில் ஒருவேளை சிகிச்சை தோல்வியடைந்தால் மரணம் – உடல் இடுகாட்டுக்குக் கொண்டுவரப்படும்”. நோயோ, நோய் தீர்வோ, மருத்துவமனையோ, வாழ்வோ மரணமோ எதுவும் புதிதல்ல. ஆனால் இந்த நிகழ்வுகளில் தன் அன்புக்குரியவர், தன் நம்பிக்கைக்கு உரியவர் தம்மோடு இல்லாதது தான் கொடுமையானது, புதியது, பதற்றத்திற்கு உரியது. இந்த பண்பாட்டு அம்சத்தை உள்வாங்கிக் கொண்டால்தான் அரசு இயந்திரம் இதயத்தோடு நடந்து கொள்ள முடியும். மக்களின் முழு ஒத்துழைப்பையும் பெற முடியும். மனிதன் சோற்றுப் பிண்டம் அல்லவே. இரத்தமும் சதையும் உணர்வுகளும் கலந்த உயிரி அல்லவா?
தாம் எப்போது வீட்டுக்கு திரும்பிச் செல்வோம்? பத்து நாள் என்பார் ஒரு மருத்துவர். இன்னொருவர் ஏழிலிருந்து பத்து நாள் என்பார். உள்ளே வரும் போதே அறிகுறிகள் இல்லாத பட்சத்தில் விடுவிக்கப்படும் தேதியை குறிப்பிட்டு ஒரு காகிதத்தைக் கையில் கொடுக்கலாமே, அதுதானே அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் முதல் செய்தியாக இருக்கும்.
இப்போது பராமரிப்பு மையமத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் முதலாவது கவலை- ”பரிசோதனை இன்றி தம்மை வீட்டுக்கு அனுப்புவது”. “வீட்டுக்கு அனுப்பும் முன் பரிசோதனை செய்வீர்களா? ” என்று நான் ஒரு மருத்துவரைக் கேட்டேன். அவர், ‘இல்லை’ என்று பதிலளித்தார். ஆனால் வீட்டிற்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் போகக் கூடாது என்றார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லை என்பதால் தானே எங்களை இந்த மையத்தில் தங்க வைத்துள்ளீர்கள். வீட்டில் தனிக் கழிப்பறை இல்லாத போது வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் பரவிவிடாதா? என்றேன். இல்லை பரவுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றார். பரவுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றால் வெளியில் மட்டும் ஏன் செல்லக்கூடாது என்கிறீர்கள் ? நடுவண் அரசின் நலவாழ்வுத்துறை, ” அறிகுறிகள் வந்ததில் இருந்து 10 நாட்கள் பராமரிப்பு மையத்தில் கழித்த பின்னர் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும்” என்றுதானே சொல்லியுள்ளது என்று கேட்டேன். அதற்கு அந்த மருத்துவர், ”எங்கள் டீன் சொன்னதைச் சொல்கிறேன், 14 நாட்கள் தணிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டார்.
என்னுடன் இங்கே இருக்கும் சக நோயாளிகளிடம், இதுபற்றி சொன்னால், எல்லோரும் ஒரே உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். ” சோதனை செய்யாமல் எப்படி அனுப்புவார்கள்? ” வெளிநாடு சென்று திரும்பிய இளைஞர், பழைய சாமான் கடைநடத்துபவர், இளம் பட்டதாரி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஒருவர், காவல் துறையை சேர்ந்த ஒருவர் என எல்லோரும் இதே உணர்வை வெளிபடுத்துகிறார்கள். கொரோனா தொடக்க காலத்தில் ஒருவருக்கு இரண்டு முறை டெஸ்ட் செய்து இரண்டிலும் நெகட்டிவ் வந்தால்தான் வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தது அரசு என்பது அவர்களுக்கு தெரியாது தானே. பின்னர் மே 8 ஆம் தேதி வாக்கில் விடுவிக்கும் கொள்கையில் (discharge policy) நடுவன் அரசு மாற்றத்தை அறிவித்தது. அறிகுறி ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டால் பரிசோதனையின்றி விடுவித்து வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் விடுப்பு கொள்கை . இந்த மாற்றம் செய்ததற்கு பெரிய விளக்கத்தையே கொடுத்தது நடுவன் நலவாழ்வு அமைச்சகம். ஆனால் விளக்கங்களுக்கு அப்பால், நெகடிவ் வரும்வரை பரிசோதனை செய்து மக்களுக்கு செலவு செய்ய அரசு தயாராக இல்லை என்பதுதான் சொல்லப்படாத விளக்கம்.
சாதாரண சளி, காய்ச்சலுக்கு பரிசோதனை செய்தே ஆகவேண்டும் என்றது அரசு. பின் கொரோனா ‘பாசிட்டிவ்’ என்று சொல்லி வீட்டிலிருந்து தனிமைப்படுத்திவிட்டு வீட்டுக் கதவில் ‘ஸ்டிக்கர்’ ஓட்டினார்கள். தெருவில் எல்லோரையும் என் குடும்பத்தை குறுகுறுவெனப் பார்க்க வைத்தார்கள். கொரோனா என்ற முத்திரையை என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் குத்திவிட்டு, மீண்டும் பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ என்ற முடிவைப் பெற்று தான் சுமத்திய களங்கத்தை துடைக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறது அரசு. சில தனியார் அலுவலகங்களில் ‘நெகட்டிவ்’ என்ற சான்றிதழோடு வரவேண்டும் என்கிறார்களே என்று கேட்டால், தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொள்ளவேண்டியதுதான் என்கிறார் மருத்துவர். “ஒரு மாத பிழைப்பைத் தொலைத்து, மேலும் 3000 ரூபாய் செலவும் செய்து நான் பரிசோதனை செய்துகொள்ளவேண்டுமா?” என்கிறார் ஒருவர். “பாசிட்டிவ் ஆக இருக்கும் போதே வீட்டிற்கு போனால் என்னிடமிருந்து என் குழந்தைகளுக்குப் பரவிவிட்டால் என்ன செய்வது? அவர்களுக்காகத்தானே இங்கே வந்திருக்கிறேன்” என்கிறார் மற்றொருவர்.
கிருமி தொற்றியோர் மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்க, அவருக்கிருக்கும் பதற்றம் போக, அவர் வசிக்குமிடத்திலும், பணிசெய்யுமிடத்திலும் அவரை சுற்றியிருப்போர் எப்போதும் போல அவரோடு பழகுவதற்கு கண்டிப்பாக பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ என்ற முடிவு பெற வேண்டும். கொரோனா மையத்தில் 10 நாள் முடக்கம், இங்கிருந்து வீட்டுக்கு சென்று 14 நாள் முடக்கம் என அவரும், அவரது குடும்பத்தாரும் ஒரு மாத வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு 15வது நாளில் பரிசோதனை செய்து நெகடிவ் வந்த்துவிட்டால் அவரது வாழ்கையைத் தொடரலாமே, இதனால் நாட்டின் உற்பத்தியில் பங்களித்து, தன் வாழ்வுக்கும் பொருள் ஈட்டிக்கொள்ள முடியும். சுளையாக 14 நாள் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்துவதால் ஏற்படும் வேலைநாள் இழப்பை தடுக்கலாம் தானே? பரிசோதனை செய்வதற்கு அரசுக்கு ஆகும் செலவு 2000ரூ என்று வைத்தாலும் கூட ஒரு குடிமகனை அந்த நோயினாலான அச்சத்திலிருந்தும், களங்கத்திலிருந்தும் விடுவிக்க முடியும் என்றால் அந்த செயலை அரசு செய்வது மதிப்புவாய்ந்ததே. மேலும், தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நாட்கள் குறையும் பட்சத்தில் இந்த 2000ரூ பணத்திற்கு ஈடாக அவர் உழைப்பில் ஈடுபடுவதன் மூலம் நாட்டிற்குப் பங்களிக்க முடியும், தன்னுடைய வருவாயிழப்பையும் ஈடுகட்டிக்கொள்ள முடியும்.
ஆகவே, கிருமித்தொற்றினால் ஏற்படும் மனஉளைச்சல், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், வேலை இழப்பு அகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்து கூட்டிக் கழித்துப் பார்த்தால் பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ உறுதி செய்ய 2000ரூ அரசு செலவு செய்வது மிகையான தொகையல்ல. பரிசோதனை செய்யாமல் விடுவிக்கும் நடுவண் நலவாழ்வு அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் என்பதை விடுவிப்புக்கொள்கையில் உள்வாங்கவில்லை. நான் தங்கியிருக்கும் கொரோனா மையத்தில், இன்றய விடுவிப்பு அறிக்கையில் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அறிகுறி தென்பட்ட நாள் தொடங்கி 17 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தனியறை, கழிப்பறை உள்ளிட்ட காரணிகள் நிறைவுசெய்யப்பட்டால் 17 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதி இல்லாதோர் அரசின் பராமரிப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும்.அறிகுறி தென்பட்ட நாளிலிருந்து எத்தனை நாட்கள் பராமரிப்பு மையத்தில் இருந்தார் என்பதை கணக்கில் எடுத்து அந்த நாட்களை 17 நாட்களிலிருந்து கழித்து எஞ்சிய நாட்களை வீட்டில் கழிக்க வேண்டும். ஆனால், அறிகுறி தென்பட்ட தேதி எங்குமே பெறப்படுவதில்லை. ஆகவே, பரிசோதனைக்கு மாதிரி கொடுத்த நாள், பரிசோதனை முடிவு வந்த நாள், கோவிட் பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்ட நாள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே வீட்டில் எத்தனை நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும்.
அரசின் விடுவிப்புக் கொள்கையைக்கூட உள்வாங்காமல் தொற்றுக்குள்ளானோரின் விவரங்களைப் பெற முயல்வது, அரைகுறை விவரங்களை பெறுவது ஆகியவை நடந்துவருகிறது. எதிலும் ஒத்திசைவு இல்லை. இந்த விடுவிப்பு அறிக்கை முகப்பில் கூட ‘ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி’ என அச்சடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கோவிட் பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்படுவோருக்கான பொது விடுவிப்புப் படிவம் கூட தயாரிக்கப்படவில்லை என்றும் எதுவும் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை என்றும் தெளிவாகிறது.
கோவிட் பராமரிப்பு மையத்தில் வெவ்வேறு விடுப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். நடுவண் அரசின் விடுப்புக்கொள்கையின் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு தனது விடுப்புக்கொள்கையை மே 15ம் தேதி அறிவித்தது. ஆனால் கேரள அரசு இன்றும் கிருமி தொற்றியவர்களை விடுவிக்கும்போது பரிசோதனை செய்து நெகட்டிவ் ஆகிவிட்டதா என்று பார்க்கிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால்,
- விடுவிப்பதற்கு முன் பரிசோதனைசெய்ய வேண்டும். விடுவிப்புக் கொள்கை தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மையங்களிலும் ஒரே மாதிரி கடைபிடிக்கப்பட வேண்டும்.
- விடுவிப்புக் கொள்கைப் பற்றி மருத்துவப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், கிருமித்தொற்று ஏற்பட்டவர்கள், மக்கள் என எல்லோருக்கும் வெளிப்படையாக அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- விடுவிப்பு அறிக்கை தமிழில் இருக்க வேண்டும்.
- விடுவிப்பு அறிக்கையில் அறிகுறி தொடங்கிய நாள், பரிசோதனைக்கு மாதிரி கொடுத்த நாள், பரிசோதனை முடிவு வந்த நாள், பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்ட நாள், பராமரிப்பு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நாள், தனிமைப்படுத்தல் முடியும் நாள்/இயல்பு வாழ்க்கை தொடங்கும் நாள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
- மேலும் எத்தனை நாட்கள் வீட்டிலிருக்க வேண்டும் என்பது (பரிசோதனை மாதிரி கொடுத்த நாள் + 17 நாள் – பராமரிப்பு மையத்திலிருந்து விடுவிக்கப்படும் நாள்) என்பதில் இருந்து பெறப்பட வேண்டும், மாறாக பொத்தாம் பொதுவாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்லக்கூடாது.
காய்ச்சல், சளி என்பது நம்முடைய சமூகத்தில் ஒரு பெரிய நோய் ஒன்றும் இல்லை.அதோடு வாழ்வது, வேலைக்குப்போவது என்பதுதான் நம் பொருளாதார நிலை. ஓரிரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளும் வாய்ப்புக்கூட பெரும்பாலானோருக்கு இல்லை. இந்நிலையில் தன்னிடமிருந்து பிறருக்கு பரவிவிடக்கூடாது என்பதற்காக 17 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள முன்வருகிறார் ஒருவர். இந்த சமுதாய உணர்வைப் போற்றி, அவருக்கு நம்பிக்கை ஊட்டி, மீண்டும் பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ என்று காட்டி விடுவிப்பதுதானே நியாயம். சுனாமி, சென்னைப் பெருவெள்ளம் எனப் பேரிடரின்போது மக்களோடு நெருங்கிப் பழகி நற்பெயர் பெற்ற தங்களால் இந்தக் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
செந்தில்
ஸ்டேட் எண் : 42277,
அறை எண் : 106, 4வது தளம்,
‘C’ பிளாக், கே.பி.பார்க்,
புளியந்தோப்பு,
சென்னை,
18-06-2020