சென்னையில் தீவிரமடையும் கொரோனா – புதிய ஊரடங்கு தேவையற்றது!

12 Jun 2020

நோய்த் தொற்றை அல்ல மரணத்தை சுழியம் ஆக்குவதே இலக்கு!

கொரோனா தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்று!

 

கொரோனாவுக்கு எதிரானப் போர் என்று ஆரவாரத்துடன் நமது ஆட்சியாளர்கள் பேசத் தொடங்கினர்.  ஊரடங்கு, 21 நாள் மகாபாரத யுத்தம், ஊரடங்கின் பலன், இந்தியாவின் சிறப்பான முடிவு என்றெல்லாம் பல்லவிகள் பாடப்பட்டன. இன்றைக்கு இந்தியா உலகில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நான்காவது இடத்தை எட்டிவிட்டது.  இதுவும்கூட குறைவுதான். இந்தியா முதலிடத்தை சில நாட்களில் எட்டிவிடும். தமிழகம் முழுவதும் இந்நாள்வரை 38,716 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

சென்னையில் மரணம் இரு மடங்கிற்கும் மேல் என்று இரு நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப்ஃ இந்தியா செய்தி வெளியிட்டது. நாங்கள் எதையும் மறைக்க முயலவில்லை என்கிறது அரசு. இதுவரை சென்னையில் 27,398 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  இதில் சிகிச்சைப் பெற்று விடுவிக்கப்பட்டோர் 13,808 , இறந்து போனவர்கள் 279 மற்றும் தற்சமயம் சிகிச்சையில் இருப்போர் 13,310 என்கிறது தமிழக அரசின் அறிக்கை.  அதாவது இதன் கூட்டுத் தொகை 27,397 ! இப்படி எண்ணிக்கை விளையாட்டில் கணக்கு காட்டுவது, எல்லாம் சரியாகத் தான் போகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் விஜய பாஸ்கர் தலைமையிலான நலவாழ்வுத் துறை தேர்ச்சிப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

அன்றாடம் சராசரியாக 2000 பேர் வரை தொற்றுக்கு ஆளாகிறார்கள், 20 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற நிலையில் தமிழகம் இருக்கிறது. அடுத்தடுத்த மாதங்களில் எண்ணிக்கைப் பன்மடங்காகி உச்சம் தொடும் என்று கணிக்கப்படுகிறது. முதல்வர் தொடக்கத்தில் சொன்னது போல் ஒருவர் கூட உயிரிழக்காமல் தடுப்போம், மூன்று நாட்களில் தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாகும், உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இறப்பு விகிதம் குறைவு என்பதெல்லாம் வெறும் கற்பனைக் கூச்சல்களாக ஆகிவிட்டன. சமூகப் பரவல் இல்லை என்று இன்னும் கிளிப்பிள்ளைப் போல் சொல்லிக் கொண்டிருப்பதும் மக்கள் வேடிக்கையாகப் பார்த்து வருகின்றனர். தனக்கு தெரிந்த யாரோ ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது  என்ற நேரடி அனுபவத்தை எல்லோரும் பெற்று வருகின்றனர். இன்னும் ஆறு மாதங்களில் தனக்கு தெரிந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழக்க நேரிட்டது என்ற அனுபவத்தைப் பெறக் கூடும்.

இந்தியாவில் வெயில் அதிகம்,  வைரஸ் வீரியம் குறைவு, இயல்பாகவே சுகாதாரமற்ற சூழலில் வாழ்வதால்  இந்திய மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம், கப சுரக் குடிநீர் குடித்தால் வராது, ஹோமியோ மருந்து ஆர்சனிக் ஆல்பம் சாப்பிட்டால் வராது என்பதெல்லாம் இனி பழங்கதைகள் ஆகிவிட்டன. எல்லா நாடுகளைப் போல் இங்கும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து நல்வாழ்வுக் கட்டமைப்பை முறித்துப் போடக் கூடும் என்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

 

அஞ்சுவதஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

 

அதே நேரத்தில், வெறும் அச்சம், பீதியூட்டல், தொற்று எண்ணிக்கை உச்சம் தொட்டது என பிரேக்கிங் நியூஸ் போடுதல், முகநூலில் பரப்பரப்பு ஊட்டுதல் போன்றவற்றால் இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாது.

அறிவு அற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கலாகா அரண்.

ஒரு நாட்டில் வறுமையும் அறியாமையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியே இருப்பது.  சீனா, அமெரிக்காவைப் போல் இலட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை செய்து கிருமித் தொற்றியவர்களைப் பிரித்தெடுக்கக் கூடிய செல்வ வளம் நம்மிடம்( தமிழ்நாடு) இல்லை. சுவீடன், தென் கொரியா போல் பரிசோதனை, மக்களின் விழிப்புணர்வுடன் கூடிய பங்கேற்பு, பொதுமுடக்கத்திற்கு மாறாக புதிய வாழ்க்கை முறைக்கு சமூகத்தைப் பழக்குவித்தல் ஆகிய வழிமுறைகளைத் தான் நாம் கையாண்டாக வேண்டும்.

இப்போது நாம் செய்ய வேண்டிய சில முக்கியமான விசயங்கள்:

1.நோய்த் தொற்றை அல்ல மரணத்தை சுழியம் ஆக்குவதை நோக்கி:

நோய்த் தொற்று எண்ணிக்கையின் பொருட்டு பீதியடைந்து கொண்டிருக்காமல் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியப் பிரிவினர் ( முதியவர்கள், சர்க்கரை நோய், புற்று நோய், உயர் இரத்த அழுத்தம், காச நோய், சுவாசக் கோளாறு நோய்கள் ஆகியவற்றைக் கொண்டோரை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றுவது. ஒருவேளை தொற்று ஏற்பட்டால் உயிரிழக்காமல் காப்பாற்றுவது. மொத்தத்தில் உயிரிழப்பை சுழியம் ஆக்குவது என்பதை நோக்கி பாடுபடத் தொடங்குவது.  பாதிப்புக்குள்ளாக கூடிய பிரிவினரை நோக்கி மருத்துவக் கட்டமைப்பு, வளங்கள், கண்காணிப்பு ஆகியவற்றை மடைமாற்றுவது என்று உத்தியில் மாற்றம் தேவை.

2.கொரோனா பெருந்தொற்று தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றுதல்

சென்னை மாநகரில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அமைத்த குழுவில் அதன் தலைவர் முன்னாள் சுகாதாரத் துறை செயலர் இராதாகிருஷ்ணன் மற்றும் எஞ்சியவர்கள் அனைவரும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆவர். நோய்த் தொற்றுக்கு எதிரானப் போராட்டத்தில் அரசு கைகொண்டுள்ள ’சட்டம் ஒழுங்கு அணுகுமுறைக்கு’ இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  இதுவொரு மருத்துவ பேரிடர் என்ற புரிதலையும் அணுகுமுறையையும்  நடுவண அரசும் சரி மாநில அரசும் சரி தொடக்கம் முதலே கொண்டிருக்க வில்லை. கிருமித் தொற்றியவர்களின் தொடர்பறிவதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தின் உளவுப் பிரிவு காவலர் பேசுகிறார். தொலைபேசியில் இருந்து வந்து சென்ற அழைப்புகளை வைத்து தொடர்புகளைக் கண்டறிகிறார்களாம்! களம் எங்களுடையது, கவலை உங்களுக்கு எதற்கு என்று அரசின் விளம்பரம் வந்தது. வீட்டில் இருப்பது ஒன்று மட்டும் தான் மக்கள் செய்ய வேண்டியது என்று அரசு கருதிக் கொண்டிருந்தது.

மக்கள்தான் மெய்யான செயல்வீரர்கள். மக்களிடம் அறியாமைக்கும் அச்சத்திற்கும் பதிலாக விழிப்புணர்வும் தெளிவும் இருந்தால் ஒழிய பெருந்தொற்று சிக்கலை எதிர்கொள்ள முடியாது.  சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி திரு இராதாகிருஷ்ணன் சொன்னது போல் ஒரு மக்கள் இயக்கத்தால் மட்டும்தான் இந்த பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். குண்டாந்தடிகளாலும் ட்ரோனர்களாலும் காவல்துறை உயர் அதிகாரிகளாலும் அச்சம் ஊட்டுவதாலும் இதை கட்டுக்குள் கொண்டுவர முடியாது. இரண்டாவது 2021 சட்டமன்ற தேர்தலை கணக்கில்வைத்து எதிர்கட்சிகளை, மக்கள் இயக்கங்களை, சமுதாய நிறுவனங்களை கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கு பங்கேற்கவிடாமல் செய்தது. தொடக்கம் முதலே மக்களைக் குற்றவாளி ஆக்கும் அரசின் அணுகுமுறை மக்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஆக்குவதற்கு வழிவகுத்தது.  அரசை நம்பி மக்கள் வெளிப்படையாக நடந்து கொள்ள முடியாமல் செய்தது.

ஆகவே சென்னையின் 20 ஆயிரம் தெருக்களில் அணைத்து தரப்பும் பங்கேற்கக்கூடிய மக்கள் குழுக்களை அமைத்து ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துவதுதான் நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எளிமையான வழியாக இருக்கமுடியும்.

 

-செந்தில்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW