பொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது

03 Jun 2020

ஃப்ரண்ட்லைன் இதழில் ‘An Empty Package’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு – பகுதி 1

 

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத, பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுத்து பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத மோடி அரசு, நோய் பீதியால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும் ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பயத்தையும் பயன்படுத்தி  இந்திய ஜனநாயகத்தை தன்வசப்படுத்தி வருகிறது.

 

நரேந்திர மோடி அரசாங்கம் ஒரு சுகாதார அவசரத்தை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மனித பேரழிவாக மாற்றியுள்ளது . கொரோனா அச்சுறுத்தலாகத் தொடங்கிய நெருக்கடி பல்பரிமாண நெருக்கடியாக மாறியுள்ளது. பொருளாதார செயல்பாடு சரிந்ததன் விளைவாக பெரும் அளவிலான வேலை மற்றும் வருமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. தெளிவற்ற மண்டலங்களின் வரையறை, கட்டுப்பாடுகள், நாட்டில் ஒரு திருகு கூட எப்போது, ​​எப்படி மாறும் என்பது குறித்த உள்துறை அமைச்சகத்தின் இறுக்கமான பிடியிலிருந்து எழும் வழிகாட்டுதல்கள், அதில் ஏற்படும் அடுக்கடுக்கான திருத்தங்கள் என எல்லா வழியிலும் குழப்பமாக மாறியுள்ள ஊரடங்கின் தற்போதைய கட்டம் சுமூகமான முடிவிற்கு வரும் சூழல் இல்லை. மாறாக ஊரடங்கை தளர்த்தும் தருவாயில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது, பொருளாதார நடவடிக்கைகளும் மந்தமாகவே உள்ளது.

 

ரூ 20 லட்சம் கோடி மதிப்பிலான “பொருளாதார தொகுப்பு” தயாரிப்பில் இருப்பதாக பிரதமர் அறிவித்தபோதே ​​மத்திய அரசு நடத்தவிருந்த நாடகத்திற்கு முன்னோட்டம் விடப்பட்டது. அவரது பல உரைகளைப் போலவே, இதுவும் ஒரு வசீகரச்சொல்லை கொண்டிருந்தது: இந்தியாவை “ஆத்மனிர்பராக” மாற்றுவதே தனது குறிக்கோள் என்றார். ஆத்மனிர்பார் என்கிற வார்த்தை “தற்சார்பு” என தவறாக மொழிபெயர்க்பட்டு வருகிறது அதன் சரியான மொழியாக்கம் ஒருவர் தனது விதியை கட்டுப்படுத்துவது என்பதாகும். நிதியமைச்சரின்  பிப்ரவரி மாத நெடுநீள பட்ஜெட் உரை நம் நினைவை விட்டு நீங்காதிருக்க எதிர்பார்த்தபடியே மே 13 அன்று அவர் நிவாரண தொகுப்பை வெளியிடத் தொடங்கினார், மேலும் ஐந்து நாட்களில் தொடர்ச்சியான பத்திரிகையாளர் சந்திப்புகளில் முழு விவரங்களையும் வெளியிட்டார். அமைச்சர் வெளியிட்டவை சிறிய தொகுப்பல்ல மாறாக ஒரு பிரம்மாண்ட சூழ்ச்சியாக இருந்தது. பிரதமர் உறுதியளித்ததை விட அதிகமாக   ரூ 20.97 லட்சம் கோடி மதிப்பிலான ஒரு பிரம்மாண்ட தொகுப்பை அவர் வெளியிட்டார். ஆனால் அந்த  பிரம்மாண்ட தொகுப்பு காலியாகவே இருந்தது.

 

நிதி அமைச்சரின் முரட்டுத்தனத்தில் பல முக்கிய குழப்பங்கள் இருந்தன. முதலாவதாக, இந்திய ரிசர்வ் வங்கி      பணப்புழக்கத்தை அதிகரிக்க இதுவரை அறிவித்து மோசமாக தோல்வியடைந்த அனைத்து நடவடிக்கைகளையும் சேர்த்து உள்ளடக்கியிருந்தது. இரண்டாவதாக, COVID அச்சுறுத்தல் தோன்றுவதற்கு வெகு முன்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செலவினங்களையும் நிதியமைச்சர் அதில் உள்ளடக்கியிருந்தார். மூன்றாவதாக, பல ஆண்டுகளாக செய்யப்படும் செலவினங்களை இப்போதே செலவு செய்யும் தோற்றத்தை அவர் ஏற்படித்தினார். நான்காவதாக, நடப்பு நெருக்கடியிலிருந்து மீள பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டும் தனியார் முதலீட்டை ஈர்ப்பதாக  கூறி பல கொள்கை அறிவிப்புகளை அவர் செய்தார். ஐந்தாவது, கடுமையான மற்றும் நெருக்கடியான சூழலின் அழுத்தத்தை பயன்படுத்தி இந்திய கூட்டாட்சி வரலாற்றில் இதுவரை செய்யாத துறைகளில் பொருளாதார இறுக்கத்தை மேற்கொள்வதாக அறிவித்தார். ஆறாவது, சில திட்டங்களை சொல்லாமலும் சில முக்கியமான திட்டங்களை ஒரு வாரம் கழித்தி மத்திய அமைச்சரவையின் மூலம் அறிவித்தும் இந்த நிவாரண தொகுப்பு அதன் உண்மையான மதிப்பை விட மிகவும் பிரம்மாண்டமானது என வீடுகளில் தொலைகாட்சி பெட்டியின் முன்னமர்ந்த மக்களை நம்ப செய்தார்.

 

தொழில்முறை பொருளாதார வல்லுநர்களிடையே மட்டுமல்லாமல் முதலீட்டு வங்கிகள் மற்றும் தரகர்களிடையேயும் பொதுவான ஒருமித்த கருத்து என்னவென்றால், “நிவாரண தொகுப்பின்”  மதிப்பு பிரதமர் அறிவித்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு மாறாக 1 சதவீதமாகவே உள்ளது. உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள், பரவலாக மாறுபட்ட கருத்துகளை கொண்டாலும், பெரும்பாலும் நிதி சார்ந்த விரிவாக்கம், அரசால் முன்னெடுக்கப்படும் செலவினங்களால் வழிநடத்தப்படுவது, தொற்றுநோய் பாதிப்பால்  ஒரே நேரத்தில் வீழ்ச்சி அடைந்திருக்கும் விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றின் சரிவை மீட்பதில் மிக முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். எவ்வாறாயினும், பல நாடுகளில் குறிப்பாக பிரிட்டன், அமரிக்க மற்றும் ஐரோப்ப பகுதிகளில் பொருளாதார மீட்பிற்கு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வழியை தேர்ந்தெடுத்த அதே நேரத்தில் நிதிக் கொள்கைகளுக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். சந்தைகளின் திடீர் சரிவால் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஏற்பட்டிருக்கு  குறுகிய கால பணத் தட்டுப்பாட்டுலிருந்தும் மந்தநிலையிலிருந்தும் தாமாக மீளும் சக்தி இல்லை என்பதை இந்த நாடுகள் அங்கீகரித்திருக்கின்றனர். எனவே, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் தீர்வுக்கும் நிதி கொள்கையிலான தீர்வுக்கும் இடையிலான தேர்வு செயற்கையானது மட்டுமல்ல, கடுமையான நெருக்கடியின் போது பொறுப்பற்றது. உண்மை என்னவென்றால், இரு வழிகளிலும், சந்தைகள் சரிந்துவிட்டதால், அரசு முன்னிலை பொருப்பேற்று பணத்தை அதன் தேவை இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் திறம்பட செயல்பட வேண்டும்.

 

மே 22 அன்று, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், நடப்பு ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) எதிர்பார்க்கப்படும் சரிவு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார், இருப்பினும் அவர் எந்த அளவையும் குறிப்பிடவில்லை. ரெப்போ விகிதத்தை (பொருளாதாரத்தில் கடன் விகிதத்தில் குறைந்தபட்ச விகிதம்)  4  சதவீதமாக குறைப்பதாக அவர் அறிவித்தார், இது முதலீட்டை ஊக்குவிக்க வாய்ப்பில்லை.  கடன்களை திருப்பி செலுத்தும் காலத்தை  மூன்று மாதங்களுக்கு நீட்டித்தார், இருப்பினும் இது  கடன் வாங்கியவர்களுக்கு  அதிக பலனை தராது. ஏனென்றால், இது அவர்களின் திருப்பிச் செலுத்தும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக காலத்தை நீட்டிப்பதால், பின்னர் ஒரு கட்டத்தில் அதிக சுமையை சுமத்துகிறது.

 

மார்ச் மாதத்தில் மோடி தனது முதல் உரையில் வாக்குறுதியளித்த பணிக்குழுவை அமைக்க நிர்மலா சீதாராமன் தவறியது என்பது எந்த ஒரு மதிப்பீடும் இல்லாத நிலையில் அவர் தேர்ந்தெடுத்த எந்த பாதையிலும் செல்ல முடியும் என்பதற்காகும். விநியோகச் சங்கிலி மற்றும் உற்பத்தி திறன் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. புவியியல், மக்கள் தொகை மற்றும் கூட்டாட்சி அரசியல் அமைப்பு ஆகியவற்றின் நுணுக்கங்களில் கவனம் செலுத்தாமல் தன்னிச்சையாக பிரிக்கப்பட் வண்ணக்குறியீட்டு மண்டலங்கள் நிலைமையை இன்னும் மோசமாக பாதித்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கைவண்ணம் தெளிவாகத் தெரிகிறது.

 

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளுக்குப் பிறகு, இயந்திர கருவிகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பெங்களூரில் உள்ள ஒரு சிறிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஃப்ரண்ட்லைனிடம் தனது நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான மூன்று முக்கிய பயனர்களாக – சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள உற்பத்தி நிறுவனங்கள், புனே-கோலாப்பூர் மற்றும் குர்கான்-மானேசர் நிறுவனங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு அவை அவரது தயாரிப்புகளில் 75 சதவீதத்தை கொள்முதல் செய்வதாக கூறினார். “இந்த மூன்று பகுதிகளில் உள்ள நிறுவனங்களும் அவற்றின் திறனில் சுமார் 7-10 சதவீதத்தில் மட்டுமே இயங்குகின்றன,” என்று அவர் கூறினார். அவரது நிறுவனம், தற்போதைய மட்டத்திலிருந்து சுமார் 25 சதவீதத்திற்கு உற்பத்தியை அதிகரிக்க முடியும்.  “ஆனால் எனது வாடிக்கையாளர்கள் மூடப்படும்போது எனது நிறுவனம் முழு திறனில் செயல்படுவதில் என்ன பயன்?” என்றார். மேலும் இந்தியாவில் “சிறு நிறுவனங்கள்” என்று கருதப்படும் ஒப்பீட்டளவில் பெரிய நிறுவனங்கள் – 50 முதல் 100 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனங்கள் “இப்போது மரண பயத்தில் உள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

சுமார் 30 தொழிலாளர்கள் பணிபுரியும் பெங்களூரில் உள்ள பீன்யா தொழிற்பேட்டையில் ஒரு சிறிய தொழில்துறை ஸ்தாபனத்தின் உரிமையாளர் ஃப்ரண்ட்லைனிடம் எம்.எஸ்.எம்.இ.க்கள் (சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) தங்கள் பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) செலுத்த கூட கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெரிய நிறுவனங்கள்  கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான தொகை குறித்த நேரத்திற்குள் செலுத்தவதில்லை, அதே நேரத்தில் சிறு,குறு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்ததாகக் தொகைக்கான வரியை  நேரத்தில் செலுத்திட வேண்டும். அது மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்கள் பொருட்களுக்கு வரி செலுத்துவதையும் தாமதப்படுத்துகின்றன எனவே சிறு,குறு நிறுவனங்கள் இரட்டை பாதிப்பை சந்திக்கின்றனர். மேலும் தனது சொந்த அனுபவத்தை விவரித்த அவர் “ஜிஎஸ்டி செலுத்த பொதுத்துறை வங்கியிடமிருந்து ரூ 25 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். இது கண்டிப்பாக அனுமதிக்கப்படவில்லை என்பது வங்கிக்குத் தெரியும், ஆனால் எனது இக்கட்டான நிலையை அவர்களும் உணர்ந்துள்ளனர்” என்றார்.

 

இந்தியாவின் தொழில்துறை திறனில் ஒரு முக்கிய பகுதியான சிறு, குறு நிறுவன துறையில் ஏற்பட்ட நெருக்கடி, இரண்டு அடிப்படை காரணங்களால் உற்பத்தியை பாதித்துள்ளது. முதலாவதாகதினசரி பணி மூலதனத்தில் ஏற்பட்டிருக்கும் பணப்புழக்க சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் நிறுவனங்கள் சரிந்து கொண்டிருக்கின்றன. இரண்டாவதாக, ஊரடங்கால் தூண்டப்பட்ட நெருக்கடிகள் அந்த நிறுவனங்கள் திவாலாகும் அச்சுறுத்தலை பெரிதும் அதிகரித்துள்ளது. சந்தைகள் மூடப்படுவது மட்டுமல்லாமல், ஊரடங்கின் தளர்வு தொடர்பான குழப்பமான சூழலில் நிறுவனங்கள் தெளிவற்ற நிலைமையில்  இயங்குவதால் அதன் தயாரிப்புகளுக்கான சாத்தியமான தேவையை மதிப்பிடுவதும் கடினமாகியுள்ளது. உற்பத்திச் சங்கிலியில் உள்ள இணைப்புகளின் பாதிப்பால் தேவையை மதிப்பிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அதன் காரணமாக சந்தை நிலைமைகளை கணிப்பதற்கான அவர்களின் திறனும் பலவீனமடைகிறது. விற்பனையாளர்கள்  திறப்பதற்கு முன்பு எவ்வாறு உற்பத்தியைத் தொடங்க முடியும் என்று பஜாஜ் ஆட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரியும் எம்.டி. யுமான ராஜீவ் பஜாஜ் கேட்டுள்ளார். உற்பத்திச் சங்கிலி அடுக்குகளின் உச்சியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவிதி அதுவாக இருந்தால், மிகச் சிறிய நிறுவனங்களின் நிலைமையைக் கற்பனை செய்வது கடினம் அல்ல.

 

பெரிய நிறுவனங்கள் சரியான, ஒப்புக்கொண்ட நேரத்தில் தொகையை செலுத்தத் தவறுவது இந்தியாவில் சிறிய நிறுவனங்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. 45 நாட்கள் வரம்பை நிர்ணயிக்கும் சட்டம் இருந்தபோதிலும், சிறிய நிறுவனங்கள் நியாயமான தொகையை பெற கூட சட்ட விதிகளை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்கின்றன. “தொழில்துறையில் இயங்கும் ஒரு சிறிய நிறுவனத்துக்கு பல வாடிக்கையாளர்கள் இருப்பதில்லை, இதனால் பெருநிறுவனங்கள் நிலுவைத் தொகையை வழங்காத போதும் அவர்களை எதிர்க்க முடிவதில்லை” என்று மேற்கூறப்பட்ட தொழிலதிபர் கூறினார். “உரிமையாளர் வணிகத்தை விட்டு முழுவதுமாக வெளியேறுவது அல்லது எப்படியாவது போராடுவது ஆகியவற்றுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

 

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் மத்திய அரசு துறைகளும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் செலுத்துமாறு நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.  இருப்பினும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசாங்கத் துறைகளும் சிறு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை விட பல மடங்குகள் அதிகமாக தனியார் நிறுவனங்கள் குறிப்பாக பெரிய நிறுவனங்கள் செலுத்த வேண்டியுள்ளதாக  சிறு தொழில்துறை சங்கங்கள்  சுட்டிக்காட்டியுள்ளது. தனியார் நிறுவனங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்த உறுதி செய்வதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு போதுமான செல்வாக்கை நிதியமைச்சர் பெற்றிருக்கவில்லை.

 

விரிவாக சிக்கல்கள்

 

நிர்மலா சீதாராமனின் தொகுப்பின் மையப்பகுதி சிறு குறு நிறுவனங்களுக்கு வங்கிகளால் கடனாக ரூ 3 லட்சம் கோடி வழங்கப்படும் மேலும் அதற்கு அரசு உத்தரவாதம் ஏற்கும் என்ற உறுதிமொழியாகும். 25 கோடி வரை நிலுவைக் கடனும், 100 கோடி ஆண்டு  வியாபாரம்  கொண்ட நிறுவனங்கள் இதற்கு தகுதி பெறும். ஆரம்பத்தில் இந்த அறிவிப்பால் ஏற்பட்ட மகிழ்ச்சி, அதைத் தொடர்ந்து வந்த திருத்திய பதிப்பால்  இல்லாமலானது. முதலாவதாக மே 20, 2020 அன்று நிவாரண தொகுப்பை அங்கீகரித்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு “நிலுவைத் கடன்” பிப்ரவரி 29 க்கு 60 நாட்கள் முன்னர் வரை நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை என “தெளிவுபடுத்தப்பட்டது”.

 

வரையறுக்கப்பட்ட அந்த தேதி  அதிர்ச்சியை அளித்தது, ஏனெனில் இது கொரோனாவால் தூண்டப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நிவாரணத்தை நிராகரிக்கிறது. ஊரடங்கால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. இதனால் தொடர்ந்து தொழிலாளர் ஊதியம் செலுத்தி, சரக்குகளை பராமரித்து, தங்கள் தயாரிப்புகளுக்கு தாமதமாக பணம் பெறுவதோடு ஊரடங்கின் சவால்களையும் எதிர்கொள்ளும் நிறுவனங்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ளன. மேலும், இந்த கடன்களுக்கு நேரடியாக அரசாங்கம் உத்தரவாதம் அளிக்காது மாறாக தேசிய கடன் உத்திரவாத அறங்காவல் நிறுவனம்  (என்.சி.ஜி.டி.சி) என்ற அமைப்பின் மூலம்  உத்திரவாதம் அளிக்கப்படும்.

 

அமைச்சரவை ஒப்புதல் வந்த பிறகு தான் மொத்தம் ரூ   3 லட்சம் கோடி என்பது சிறு குறு நிறுவனங்களுக்கு மட்டும் இல்லை என்பதும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் (என்.பி.எஃப்.சி) இதில் அடங்கும் என்பதும் தெளிவாகியது. தகுதிவாய்ந்த சிறு குறு நிறுவனங்களுக்கு இந்த கடன் 9.25 சதவீதம் என்கிற வட்டி விகிதத்திலும் நிதி நிறுவனங்களுக்கு 14 சதவீத விகிதத்திலும் வழங்கப்படும். இந்த வேறுபாட்டால் வங்கிகள் அதிக வட்டி ஈட்ட நிதி நிறுவனங்களுக்கு கடன்வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமா என்கிற கேள்விக்கு காலம் மட்டுமே பதில் சொல்லும். அசல் தொகைக்கு ஒரு வருட கால அவகாசம் அளிக்கும் அதே நேரத்தில் கடன்களை பெற  நான்கு ஆண்டுகள் அளிக்கப்படுகிறது. ஆனால் குறைந்தபட்சம் எதிர்பார்த்த திசையில் இந்த திட்டம் செல்லாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வங்கிகள் அனைவரும் அறிந்தபடி அவற்றின் பிரதான கடன் வாங்குபவர்களைத் தவிர வேறு யாருக்கும் கடன் கொடுக்க தயங்கும்.

 

அரசாங்கம் “ஆறுதல்” கடிதம் அளித்திருந்தால் உதவியிருக்கும் என்று வங்கியாளர்கள் கூறுகின்றனர். ஒரு வங்கி மேலாளர் ஃப்ரண்ட்லைனிடம் , கடன் உத்தரவாதமிருந்தாலும் கடன் வாங்கியவர் அதை செலுத்த தவறும் போது வங்கிகள் சரியான நடவடிக்கை எடுக்க கூடாதென்றோ அல்லது உத்தரவாததாரருக்கு விளக்க வேண்டும் என்றோ அர்த்தமல்ல என கூறினார். இந்த திட்டத்திற்கு அரசின் பங்களிப்பாக ரூ 41,600 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு. இருப்பினும், வங்கிகள் தங்கள் இருப்புநிலைகளில் 20 சதவீதத்தை இதற்காக ஒதுக்க வேண்டும்; இதனால் வங்கிகளின் இலாபம் குறிப்பிட்ட அளவிற்கு குறைக்கிறது.

 

நிதி அமைச்சர்களால் அறிவிக்கப்பட்ட மற்றும் ஒரு திட்டம் நிதி  நிறுவனங்களுக்கான ரூ .30,000 கோடி மதிப்புள்ள கடன்கள் திட்டம் அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுடன் இணைக்கப்பட்ட நிபந்தனைகளால் மோசடியாக மாறியது. சிக்கலான செயல்முறையாக ஒரு பொதுத்துறை வங்கியால் ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் (SPV) அமைக்கப்படும், அது வழங்கும் பத்திரத்தை ரிசர்வ் வங்கி வாங்கும் இதற்கு அரசாங்கத்தால் உத்திரவாதம் அளிக்கப்படும். பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் SPV க்கு கிடைக்கும் நிதி வங்கி சாரா மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களின் செயற்படா சொத்துக்களை வாங்க பயன்படும். இதில் சிக்கல் என்னவென்றால், இவை மூன்று மாதங்கள் வரை குறுகிய கால  பத்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டமும் எடுபட வாய்ப்பில்லை, ஏனெனில் இது  வங்கி சாரா மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களின் வாங்கும் மற்றும் விற்கும் கடன் முதிர்வுகளில் பொருந்தாது.

 

நிவாரண” தொகுப்பாக எதிர்பார்க்கப்பட்டவற்றில் மிகவும் மூர்க்கத்தனமானது எதுவெனில் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மாநிலங்களின் கட்டுக்குள்ளிருக்கும் துறைகளை கையகபடுத்துவதற்கான தளத்தை அமைத்திருப்பது. மாநிலங்களில் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு (ஏபிஎம்சி) சட்டத்தை அகற்றுவது என்பது அரசியலமைப்பில் மாநில பட்டியலிடப்பட்டுள்ள ஒரு பகுதியான விவசாயத்திற்குள் மோடி அரசு எல்லை மீறியதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. பத்திரிகையாளர் சந்திப்பில், அரசின் உயர் அதிகாரிகள் விவசாயத்தை மத்திய பட்டியலில் கொண்டு வர சட்டமேற்றப்படும் என்றும் பின்னர் மாநில சட்டங்களைவிட மத்திய சட்டங்களே மேலோங்குமென்றும் செருக்குடன் கூறினர். இதன் நோக்கம் மாநிலங்களிடமிருந்து மேலும் மேலும் அதிகாரங்களைப் பறிப்பதே என தெளிவாகி உள்ளது.

 

ஆனால் மாநிலங்களுக்கான மிகப்பெரிய அதிர்ச்சி கடைசி நாள் உரையிலிருந்தது, நிர்மலா சீதாராமன் மாநிலங்கள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி) நிர்ணயிக்கப்பட்ட மூன்று சதவீத புள்ளிகளில்  வரம்பை விட இரண்டு சதவீதம் அதிகமாக சந்தையிலிருந்து பெறலாம் என்றார். அதற்காக அவர்கள் சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென்றார்.  இந்த நிபந்தனைகளின் திணிப்பு சர்வதேச நாணய நிதியம் IMF இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்கிற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! இந்த நிபந்தனைகள் தன்னிச்சையாக மோடி ஆட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி  மாநில அளவில் கொள்கையைத் திருத்துவதற்கு “சீர்திருத்தங்கள்” என்று அழைக்கிறது. ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டத்தை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் என்று ஒரு நிபந்தனை கோருகிறது; மற்றொன்று மோடியின் தனிப்பட்ட விருப்பமான மாநில அளவில் வணிகத்தை எளிதாக்க வேண்டும் என்கிறது.

 

தொடரும்….

 

-வி. ஸ்ரீதர்

தமிழில்: சர்ஜுன்

 

https://frontline.thehindu.com/cover-story/article31658653.ece?homepage=true

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW