அதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் ?
அமெரிக்காவின் மினியாபோலிஸ் மாநகரத்தில் காவல்துறையின் வன்முறையால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 46 வயதான ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த 25 மே அன்று ஒரு கடையில் 20 டாலர் போலி நோட்டினை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால், அக்கைதின்போது, அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் அவரை தரையில் கிடத்தி அவரது கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியவாறு குறைந்தது ஏழு நிமிடங்கள் வரை இருந்துள்ளார். முச்சு திணறிய ஜார்ஜ் தன்னால் ‘மூச்சுவிட முடியவில்லை’ என பல முறை கூறியும், அந்த காவலர் அசையவில்லை. சில நிமிடங்கள் கழித்து ஜார்ஜ் சுய நினைவை இழந்த பின்னரும் அக்காவலர் அசையாமல் இருந்தார். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜார்ஜ் இறந்தநிலையிலேயே கொண்டுவரப்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த நிகழ்வு மினியாபோலிஸ் தொடங்கி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நிகழ காரணமாகியுள்ளது. ஜார்ஜ் கூறிய “என்னால் சுவாசிக்க முடியவில்லை”(I can’t breathe) தற்போது போராட்ட முழக்கமாக நாடு முழுவதும் பரவியுள்ளது. போராட்டத்தின் எதிரொலியாக 4 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜின் மீது தனது முட்டியால் அழுத்திய டெரெக் சாவின் மூன்றாம் தர கொலைக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்நிகழ்வு குறித்த சிவில் உரிமைகள் குறித்து விசாரிக்க எப்.பி.ஐ களமிறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த வேற்று நிறத்தவர்கள் முன்னேற்றத்திற்கான கழகம், இது “கயிறில்லாமல் நிறைவேற்றப்பட்ட பொதுக் கொலை” எனக் கூறியுள்ளது. மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, “ஒருவர் கருப்பினத்தவராக இருப்பதே அவருக்கு மரண தண்டனையாக மாறக்கூடாது. வெள்ளை காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தவர் ஒருவரது கழுத்தில் தனது முட்டியை ஐந்து நிமிடங்கள் அழுத்தியதை நாம் பார்த்தோம்… உங்களிடம் யாராவது உதவி கோரினால் நீங்கள் உதவ வேண்டும். அந்த அதிகாரி மிகவும் அடிப்படையான மனித உணர்வு அற்றவராக இருக்கிறார்”.
ஜார்ஜ் போன்று பல கருப்பினத்தவர்கள் காவல்துறையினர் வன்முறையால் உயிரிழந்துள்ளனர். உதாரணத்திற்கு, கடந்த 2014 இல், எரிக் கார்னர் என்ற கருப்பினத்தவர் ஆயுதம் ஏந்தாத போதிலும் காவல் அதிகாரி ஒருவரால் மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்தார். அவர் இறப்பதற்கு முன்னும் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என ஜார்ஜ் கூறிய அதே வார்த்தைகளை 11 முறை கூறினார். கடந்த 2016 இல் ஆல்டன் ஸ்டெர்லிங் என்ற கருப்பினத்தவர் தனது சி.டி. கடைக்கு வெளியே காவல்துறையினரால் முடக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
தற்போது நிகழ்ந்து வரும் போராட்டங்கள் கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க அரசின் எதேச்சதிகார போக்கையும் காவல்துறையின் அத்துமீறல்களையும் கண்டிக்கும் விதமாகவே நடந்து வருகின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு கருப்பினத்தைச் சேர்ந்த பதின்வயதுடைய ஒருவனை சுட்டுக் கொன்ற வழக்கில் காவல் அதிகாரி ஒருவர் விடுதலைப் பெற்றதை எதிர்த்து துவங்கப்பட்ட ”கருப்பினத்தவர் உயிர்கள் மதிக்கப்பட வேண்டும்”(Black lives matter”) என்ற இயக்கம் உலகளவில் கவனத்தை ஈர்த்தது.
அமெரிக்க சமூகத்தில் கெட்டிதட்டிப் போயுள்ள நிறவெறி பல்வேறு வழிகளில் வெளிப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்த நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள மாநகரங்களில் பெருமளவு கருப்பினத்தவர்கள் வசிக்கும் மாநகரங்கள் இடம்பெற்றுள்ளன. லூசியானா மாநிலத்தில் கொரானா வைரஸால் பலியானவர்களில் 70% வரை ஆப்ரிக்க அமெரிக்கர்கள் என அம்மாநிலத்தின் ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் கூறினார். மக்கள் தொகையில் 80% கருப்பினத்தவர்களைக் கொண்டுள்ள டெட்ராய்ட் மாநகரம் அதிக அளவு கொரானா தொற்று குவிந்துள்ள இடமாக உள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிகம் செய்யும் துறைகளில் அதிகமான கருப்பின மக்கள் வேலை பார்ப்பதால் அவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், அடிப்படையில் பொது சுகாதாரத்தில் நிலவும் நிறத்தின் அடிப்படையிலான சமத்துவமின்மையை இது காட்டுகிறது.
கொவிட்-19 குறித்து, “கருப்பின அமெரிக்கர்கள் குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிவோம். இது சமூக, பொருளாதார, இனரீதியான நீதி தொடர்பான சிக்கல். ஒரு சமூகம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது நாடு முழுவதும் உள்ள பிற சமூகங்களையும் பாதிக்கும்” என்கிறார் சிவில் உரிமைகளுக்கான வக்கீல்கள் குழுவின் தலைவர் மற்றும் இயக்குநரான கிரிஸ்டன் கிளார்க்.
2013 முதல் 2019 வரை 7666 பேர் காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 13 சதவீதம் உள்ள கறுப்பின மக்கள், வெள்ளை நிறத்தவரைவிட இரண்டு மடங்கு கொள்ளப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உலக மக்கள் தொகையில் 4.4 சதவீதம் உள்ள அமெரிக்காவில் உலகத்தின் மொத்த சிறைவாசிகளில் 22 சதவீதம் உள்ளனர். மொத்தம் உள்ள 23 லட்சம் சிறைவாசிகளில் கணிசமானோர் கறுப்பினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பெருந்தொற்றை தொடக்கத்தில் கேலி, கிண்டல் செய்த அதிபர் டிரம்ப், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தற்போது லட்சத்திற்கு மேலான உயிரிழப்புகளை அமேரிக்கா சந்தித்து வருகிறது. தற்போது கறுப்பினர் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அவர்களை ‘குண்டர்கள்’, ‘உள்நாட்டு தீவிரவாதிகள்’, ‘சூறையாடுவது தொடங்குமானால், துப்பாக்கிகள் சுடுவது தொடங்கிவிடும்’ என்று வெள்ளை மேலாதிக்கத்தோடு பாசிச பயங்கரத்தை கட்டவிழ்த்துவிட்ட முனைகிறார். இந்தாண்டு இறுதியில் வரும் அதிபர் தேர்தலில் கொரோனா மரணங்கள் மற்றும் கறுப்பின மக்களின் எழுச்சி டிரம்ப்’யை அதிகார பீடத்தில் இருந்து அகற்றுமா என்பது தான் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பு.
– பாலாஜி
https://indianexpress.com/article/explained/george-floyd-death-violent-protests-explained-6434207/
https://www.aljazeera.com/indepth/interactive/2020/05/mapping-police-killings-black-americans-200531105741757.html