வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு எடப்பாடிப் பழனிச்சாமியின் அரசு மட்டும்தான் ஆளாகுமா? – எதிர்க்கட்சித் தலைவருக்கு திறந்த மடல்

31 May 2020

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தடுக்கத் தவறியதற்கு அப்போது ஆட்சிக் கட்டிலில் இருந்த திமுக மட்டும் பொறுப்பாகப் போவதில்லை. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் பொறுப்புத்தான். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து வரப்போகும் விழிப்புற்ற தலைமுறை ஒன்று இருபெரும் கட்சிகளையும் கூடவே தமிழக மக்களையும் இந்தப் படுகொலையைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும். அதைப் போலவே கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்தால் அந்தப் பழி அதிமுக அரசை மட்டும் சேரப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் எத்தகையப் பாத்திரம் வகித்தன என்பதும் வரலாற்றில் எடைபோடப் படும்.

நேற்றைய ஊடக சந்திப்பில் கேரள முதல்வர் பிணராய் விஜயன், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் கேரள அடைந்திருக்கும் வெற்றி ஒட்டுமொத்த கேரள சமூகத்திற்கும் உரித்தானது என்று சொன்னார்.( This success can be attributed to the Kerala society as a whole. – பார்க்க நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டி). இது ஒரு செழுமையான அரசியல் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.

அதே நேரத்தில், தமிழகத்தில் நிலைமை தலைகீழானது. எந்த வெற்றியையும் தனது அரசின் அல்லது முதல்வரின் ( கலைஞர், ஜெயலலிதா) சாதனையாகவும் தோல்விக்கு மக்கள் மீதோ அல்லது வேறு யார் மீதோ பழிபோடுவது என்பது ஆட்சியில் இருப்பவர்களின் பாணியாக இருக்கும். அரசின் ஒரு நடவடிக்கையின் வெற்றியைக் கண்டுங்காணாமல் விடுவதும் தோல்விக்கு அரசை முழுப் பொறுப்பாக்குவது என்பதும் நமது எதிர்க்கட்சிகளின் பாணி. பெரும்பாலும் அரசு தோல்வியடைய வேண்டும் என்பது பிரதான எதிர்க்கட்சியின்  அடிமன விருப்பமாக இருப்பதையே கண்டு வந்துள்ளோம். எந்த நேரத்திலும் தமிழக மக்களின் நலன் பொருட்டு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றுபட்டு நிற்கும் தேசிய கலாச்சாரம் என்பது தமிழர்களின் அரசியலில் இல்லாமல் போனதற்கு திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் அதன் தலைமைகளுமே பொறுப்பு.

40 நாட்களுக்கு முன்பு திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை முகநூல் நேரலையில் பேசிய போது, ஒருவேளை தமிழக அரசு கொரோனா நோய்த் தடுப்பில் வெற்றியடையுமாயின் அந்த வெற்றி தமிழக மக்களுக்கும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கும் உரியதே ஒழிய அரசுக்கு உரியதல்ல என்றார். அவரது உரையின் அழுத்தம் என்பது எப்படியும் ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறனாக அது மாறிவிடக் கூடாது என்றிருந்ததே ஒழிய கொரோனா நோய்த் தடுப்பில் தமிழகம் வெற்றிப்பெற வேண்டும் என்றிருக்கவில்லை. இப்போது கேள்விக்கிடமின்றி தமிழக அரசு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடையவில்லை என்பதால் எதிர்க்கட்சியின் பதற்றம் குறைந்திருக்கக் கூடும். இது தமிழ்நாட்டு அரசியல் கலாச்சாரத்தின் துயரந் தோய்ந்த யதார்த்தமாக இருக்கிறது.

கொரோனா நோய்த் தடுப்புப் பற்றி முதல்வரின் புரிதல் எப்படி இருந்தது என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் போதுமானதாகும். கொரோனாவினால் ஒருவர்கூட உயிரிழக்காமல் அம்மா அரசு மக்களைப் பாதுகாக்கும் என்று சட்டமன்றத்தில் அவர் பேசினார். பிறிதொரு தருணத்தில் இன்னும் மூன்று நாட்களில் நோய்த் தொற்று எண்ணிக்கைப் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று பேசினார். அந்த அளவுக்குத்தான் பெருந்தொற்றின் தீவிரம் பற்றிய புரிதல் அவருக்கு இருந்தது. எதிர்க்கட்சிகளுக்கும்கூட இதில் சிறப்பான புரிதல் இருக்கவில்லை என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். சட்டமன்றக் கூட்டத்தொடரை முடிக்க வேண்டும் என்று எச்சரித்ததாக சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர், அந்த நேரத்திலேயே அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக எழுப்பவில்லை. அதன்பின்னர், பல நாட்கள் கழித்துத்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு சொன்னார். (தமிழக அரசு இப்போதுவரை நடத்தவில்லை என்பது வேறு செய்தி). இதைவிட பரிதாபமாக கொரோனாவினால் உயிரிழப்போருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளின் முந்தைய கூட்டத்தில் கலந்துபேசி அறிவிக்கப்பட்டது. உயிரிழப்பு மிக குறைவாக இருக்கப்போகிறது என்று கருதியிருப்பர் போலும். அதுவும் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடியபோதுங்கூட ஒரு கட்சிக்கும் இது பொருத்தமற்ற கோரிக்கை என்று தோன்றாதது வியப்புக்குரியதே.

இதுவரை செய்யத் தவறியவைப் போகட்டும். இனி என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஏனென்றால், கொரோனா நோய்த் தடுப்பு என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்றைக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டும், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதும் ஏனைய மாவட்டங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதுமாக தோற்றமளித்தாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரநகர நோய்ப் பரவல் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரிக்கும். தமிழகத்தின் கிராமங்கள் வரை மூலை முடுக்கெல்லாம் நோய்ப் பரவலை நாம் சந்தித்தே ஆக வேண்டும். கொரோனா நோய்த் தடுப்பில் மிக முக்கிய கால கட்டத்திற்குள் நாம் இப்போதுதான் அடியெடுத்து வைக்கிறோம். வெகுசீக்கிரம் தடுப்பு மருந்தோ நோய்த் தீர்வு மருந்தோ வந்துவிட போவதில்லை.

திமுகவின் தேர்தல் ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ள திரு பிராசாந்த் கிஷோர் ’தி வயர்’ இணையதளத்தில் ஊடகவியலாளர் கரன் தாப்பருக்கு அளித்த பேட்டியில், கொரோனா பெருந்தொற்று நேரத்தில் எதிர்க்கட்சிகள் எத்தகைய பாத்திரம் ஆற்ற வேண்டும் என்று விளக்கியிருந்தார். அதன் செயல்வடிவமாகவே திமுக அறிவித்து செயல்படுத்தி வரும் ”ஒன்றிணைவோம் வா” அமைந்துள்ளது. ஆனால், அது இல்லாதவர்களுக்கு உணவளிப்பது என்ற தொண்டு நிறுவனத்தின் மட்டத்திற்கு எதிர்க்கட்சியின் பாத்திரத்தை கொண்டு சென்றுவிட்டது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் உண்மையான பொருளில் தமிழக அரசுடன் பல்வேறு மட்டங்களில் ஒன்றிணைந்து பெருந்தொற்று நெருக்கடியை எதிர்கொள்வதற்கு வினையாற்ற முடியும். அப்படி வினையாற்ற வேண்டும். ஏனெனில், நமது மருத்துவக் கட்டமைப்போ அல்லது அரசு இயந்திரக் கட்டமைப்போ அல்லது நிதி ஆதாரங்களோ அல்லது நடுவண் அரசின் பங்கேற்போ எதுவும் ஒரு மாநில அரசு மட்டுமே தனித்து இந்த நெருக்கடியை  எதிர்கொள்ளும் வாய்ப்பை வழங்கவில்லை. எனவே, உணவளிப்பது, கோரிக்கை மனுக்களைப் பெறுவது என்பதைத் தாண்டி சரியானக் கோரிக்கைகளை முன்வைப்பது, உண்மையான பொருளில் அரசுக்கு துணை நிற்பது என எதிர்க்கட்சிகள் ஆற்ற வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமைகள் இருக்கின்றன.

ஆகவே, எதிர்க்கட்சித் தலைவருக்குப் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

கோரிக்கைகள்:

1.ஒரு கோரிக்கைப் பட்டியலையும் தம்மால் இயலக் கூடிய உதவிகளையும் பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து வகையிலும் உதவுவதாக தெரிவிக்க வேண்டும்.

2.எதிர்க்கட்சிகள் வார்டு அளவிலான தொண்டர் குழுக்களை அமைத்து விழிப்புணர்வு, கண்காணிப்பு ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்.

  • முதியவர்கள், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், காச நோய், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய் உடையோரைப் பாதுகாப்பதுதான் இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் இலக்கு. இந்த செய்தி கீழ்மட்டம் வரை கொண்டுசெல்லப்படுவதும் அத்தகையோருக்கு நோய் அறிகுறி ஏற்படின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதும் மிக முக்கியமானது. இது உயிரிழப்பைக் குறைப்பதற்கு உதவும். எதிர்க்கட்சிகள் அமைக்கக்கூடிய ’தொண்டர் குழு’ உள்ளூரலவிலான உயிரிழப்பை மட்டுப்படுத்தும் உன்னத நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.
  • கேரள அரசு நோய்த் தடுப்பு நடவடிக்கையில் அடைந்த வெற்றிக்கான மூன்று முக்கிய காரணங்களில் ஒன்று ‘களங்கப்படுத்தலை தவிர்த்தது’ ( Zero Stigmatisation). ஆனால், தமிழகத்திலோ தலைகீழாக எவ்வளவுக்கு நோய்த் தொற்Ru குற்றமாக்கப்பட முடியுமோ அவ்வளவுக்கு குற்றமாக்கப்பட்டுவிட்டது. களங்கப்படுத்தலுக்கு எதிரான தீவிரமான விழிப்புணர்வு பரப்புரை முன்னெடுக்கப்பட வேண்டும்.

3. தனியார் மருத்துவமனைகள் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட வேண்டும். எந்த நோயாளிக்கு மருத்துவமனைப் படுக்கைகள் தேவை என்பதை அரசுதான் முடிவு செய்து ஒதுக்க வேண்டும்.

4. தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும் என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட வேண்டும்.

5. கொரோனா பரிசோதனைக் கோரி அரசு மருத்துவமனை செல்பவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். பரிசோதனை விரிவாக்கப்பட வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டவர்களில் அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை செய்தாமலே வீட்டுக்கு அனுப்பும் விடுவிப்புக் கொள்கை(discharge policy) கைவிடப்பட வேண்டும். முன்பிருந்ததுபோலவே, பரிசோதனை செய்தது நெகட்டிவ் வந்தால்தான் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

6. அறிகுறியில்லை என்ற காரணத்தின் பெயரில் வீட்டிலேயே தனிமைப்படுத்தச் சொல்லும் கொள்கையை அரசு கைவிட வேண்டும். நோய் அறிகுறியில்லாத கிருமி தொற்று உள்ளவர்கள் ( asymptomatic positives) கொரோனா பராமரிப்பு மையங்களில்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கிருமித் தொற்றியவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு  Covid dedicated Care Centres (கோவிட் பராமபரிப்பு மையங்கள்) பெருமளவு தமிழக அரசுக்கு தேவை. கட்சி அலுவலங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுக்காமல் எதிர்க்கட்சியை சேர்ந்த முதலாளிகள் நடக்கக்கூடிய கலை, பொறியியல், மருத்துவக் கல்லூரி விடுதிகள், லாட்ஜ்கள், பணி செய்யும் ஆண்-பெண் தங்கும் விடுதிகள், மாணவர் விடுதிகள், உல்லாச விடுதிகள்(Resorts) ஆகியவற்றை மண்டல வாரியாக கொடுக்க முன்வர வேண்டும். இது கோவிட் பராமபரிப்பு மையங்களை அமைக்கும் சுமையை அரசுக்கு குறைக்கும்.  இல்லாதோருக்குப் புண்ணியத்திற்காக உணவளிக்கும் ஒரு பண்பாட்டு அம்சம் மக்களிடம் இருப்பதால் மத நிறுவனங்கள், பெரு வணிக முதலாளிகள், பெருநிறுவனங்கள், பெரும்பணக்காரர்கள் கோவிட் பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உணவளிப்பதற்கு முன்வருவார்கள். இதுபோன்ற உதவியைச் செய்வதற்கு ஒருங்கிணைப்புப் பணிகளில் எதிர்க்கட்சிகள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.

7. அரசு மருத்துவமனைகளை Covid dedicated hospitals கோவிட் மருத்துவமனைகளாகப் பயன்படுத்தி கொரோனா அல்லாத பிற நோயாளிகளின் சிகிச்சைக்கு கதவடைப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஒரு சில மருத்துவமனைகள் தவிர பெரும்பாலனவை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். குறைந்தது 500 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனைக் கட்டுமானங்களை குறைந்தபட்சம் அரசு இப்போது அறிவித்துள்ள 8 மண்டலங்களிலும் உருவாக்க வேண்டும்.

8.சென்னை மாநகராட்சி குடிசைப் பகுதிகளில் நோய்ப் பரவும் அபாயம் உள்ள இடங்களில் வாழக்கூடியவர்களைத் தனிமைப்படுத்தி ஏழு நாட்கள் தங்க வைத்து விடுவிடுக்கும்பொழுது 1000 ரூ இழப்பீட்டுத் தொகை கொடுக்க தமிழக அரசு முன் வந்திருப்பதுபோல் தமிழகமெங்கும் கொரோனா நோய்த் தொற்றி தனிமைப்படுத்தப்படும் ஏழை, எளிய மக்கள் பிரிவினருக்கு 1000 ரூ இழப்பீட்டுத் தொகை கொடுக்க அரசு முன்வர வேண்டும். இது கிருமித் தொற்றை மறைப்பதைக் குறைப்பதற்கு பெரிதும் உதவும். பொருளியல் நடவடிக்கைகள் திறந்துவிடப்பட்ட நிலையில் ஏழை,எளிய மக்கள் தனக்கு கிருமித் தொற்று இருந்தால் அதன் பொருட்டு தனிமைப்படுத்திக் கொண்டால் ஏற்படும் பொருளாதார இழப்பை எண்ணி மறைக்க முயல்வர். அது வாழ்வின் யதார்த்தம். இதை குறைப்பதற்கு ஏழை,எளிய மக்களுக்கு மட்டுமாவது இழப்பீடு வழங்கும் கொள்கை முடிவு பெரிதும் உதவும்.

9. மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்த நடுவண் அரசிடம் மாநில அரசு கேட்டுள்ள நிதியை வழங்குமாறு வலியுறுத்தி அவசர போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்த முன்வர வேண்டும். பாசக அல்லாத கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை அணுகி ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு அணியமாக வேண்டும். பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்பு உடைகள், படுக்கை வசதிகள் இல்லாமல் கையறு நிலையில் நின்றுவிடும் நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது.

10. 60 நாட்கள் ஊரடங்கால் சிதைந்துவிட்ட மக்களின் வாழ்வை மீட்பதற்கு வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 13 கோடி குடும்பங்களுக்கு மூன்று மாத காலத்திற்கு தலா 6000 ரூ வழங்க வேண்டும் என்பதை நடுவண் அரசிடம் வலியுறுத்தி நாடு தழுவியப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

11. புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்துப் பதிவு செய்திருந்தாலும அதைப் பொருட்படுத்த வேண்டாம் என வெளிப்படையாகவே பெருநிறுவன மற்றும் கட்டுமான முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் பேசுகிறார். இதை எதிர்க்கட்சிகள் கண்டித்து சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு அனுப்பப்படுவதை வலியுறுத்த வேண்டும்.

12.  நிலைமை சீரடையாத நிலையில் கல்விச் சூழலுக்குள் மாணவர்களைக் கொண்டுவராமல் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ஜூன் 15 அன்று நடத்துவதற்கு தமிழக அரசு முனைப்புக் காட்டிவருகிறது. இது ஏழை,எளிய மாணவர்களை வஞ்சித்து பத்தாம் வகுப்போடு படிப்பைப் பாதியில் நிறுத்துவதற்கு வழிவகுக்கும். நிலைமை சீரடையும் முன்பும் 15 நாட்களுக்கு கல்விச் சூழலுக்குள் மாணவர்கள் கொண்டு வரப்படுவதற்கு முன்பும் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தக் கூடாது என்று தமிழக அரசைக் கோர வேண்டும்.

 

-செந்தில்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW