இலங்கை, தாய்லாந்து அளவிற்கு கூட இந்தியாவில் பொது சுகாதார கண்காணிப்பு இல்லை – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 1
டாக்டர் டி. ஜேக்கப் ஜான் பிரபலமான வைராலஜிஸ்ட் மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவில் பரவத்தொடங்கியதிலிருந்து, டாக்டர் ஜான் பொது சுகாதாரக் கண்காணிப்பு, சோதனைத் திறன் மேம்படுத்தல் மற்றும் முடிவெடுப்பதில் அரசாங்கங்களின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்காகக் குரல் கொடுத்து வருகிறார். The Wire பத்திரிகைக்காக அவர் வழங்கியுள்ள கருத்துக்களைக் காண்போம்
- சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, மே 22 காலை 9:00 மணிக்கு, இந்தியாவில் 118,447 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் இருந்தன, இது சீனாவை விட 42% அதிகம். வாராந்திர அடிப்படையில் கணக்கிடப்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் தினசரி சராசரி வாரந்தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் கடுமையாவது போல் தெரியவில்லையா?
சீனாவின் கணக்குகள் மிகுந்த எச்சரிக்கையுடன் எடுக்கப்பட்ட ஓன்று. சீனாவில் தொற்று எண்ணிக்கை 90,000 க்கும் குறைவாக உள்ளது, இது மொத்த மக்கள் தொகையில் 0.007% க்கும் குறைவாகும். தொற்றுநோய் முடிவுக்கு வர சுமார் 50-60% பேர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். மார்ச் 26 அன்று தி இந்துவில் நாங்கள் எழுதிய ‘சீன புதிர்’ என்கிற கட்டுரை இது பற்றி விளக்குகிறது. வூஹான் அல்லாத சீனாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட ஆரம்பக்கட்ட பாதிப்புகளை கணக்கிடாமல் டிசம்பரில் ஹூபே மாகாணத்தைத் தாக்கியதுபோதுதான் என்ன நடக்கிறது என்பதை சீனா உணர்ந்ததாக நம்பப்படுகிறது. எனவே வுஹான் ‘தொடக்கம்’ அல்ல, அது ‘இறுதி’.
மே 22 ல், இந்தியாவில் 124,794 நோய்த்தொற்றுகள் உறுதியாகியிருந்தன, இது நம் மக்கள் தொகையில் 0.0093%. மே 20 க்குள், இந்தியா 2,279,324 மாதிரிகளை பரிசோதித்து 95,622 நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்தது. அதாவது மொத்த மக்களத்தொகையில் 0.017% பரிசோதிக்கப்பட்டதில் 1 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கையை வைத்து ஒட்டுமொத்த பரவலை கணக்கிட எந்த வழிமுறையும் இல்லை. இந்தியாவின் எதார்த்த பாதிப்புகளை கணக்கிடுவது கடினம், நோய்த்தொற்றுகளின் உண்மையான எண்ணிக்கை ஏற்கனவே 10 லட்சம் (10 மடங்கு) முதல் 90 லட்சம் (100 மடங்கு) வரையும் இருக்கலாம்.
PCR சோதனையின் நம்பகத்தன்மை 50% மட்டுமே, அதனால் நாம் உறுதிப்படுத்தும் நோய்த்தொற்றுகளுக்கு சமமான எண்ணிக்கையை தவறவும் விடுகிறோம். இதனடிப்படையில் அதிகபட்ச எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினால் பாதிப்பு 20 லட்சம் முதல் 1.8 கோடி வரை.
பரிசோதனையின் நோக்கம் நோய்த்தொற்றின் தாக்கத்தைத் தீர்மானிப்பது அல்ல, தொடர்புகளைக் கண்டறிவது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நோய்த்தொற்று ஏற்பட்ட 3-4 வாரங்களுக்குப் பிறகுதான் ஒரு நபர் இறக்கக்கூடும். அதாவது, [நான்கு வார இடைவேளையை கருத்தில் கொண்டு], 153 நோய்த்தொற்றுகளுக்கு 36 இறப்புகள் (23.5%); 531 நோய்த்தொற்றுகளுக்கு 52 இறப்புகள் (9.8%); 876 நோய்த்தொற்றுகளுக்கு 87 இறப்புகள் (9.9%); 1,228 நோய்த்தொற்றுகளுக்கு 104 இறப்புகள் (8.5%); மற்றும் 1,611 நோய்த்தொற்றுகளுக்கு 127 இறப்புகள் (7.9%). இறப்பு விகிதம்7.9% முதல் 9.9% வரை உள்ளது, சராசரியாக 9.025%
இந்த எண்ணிக்கைகள் நம்பகத்தன்மை கொண்டவை, இவை தொற்றுக்கு உள்ளாகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்தவர்களில் எண்ணிக்கை என்பதால் ‘தொற்றுபாதிப்பு-இறப்புகள்’ என்பது உறுதி.
இந்த எண்ணிக்கை உலக எண்ணிக்கையை விட மிகவும் அதிகம். உலகளவில் இந்த இறப்புகள் 1 முதல் 5% வரையுள்ளது, சராசரியாக 3.75%.
ஒவ்வொரு 100 நோய்த்தொற்றுகளுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை தொற்று-இறப்பு விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகளவில் 10%, இத்தாலியில் 14%. இந்தியாவில், தொற்று-இறப்பு விகிதம் 27% இருக்கலாம் ( சராசரி இறப்பு விகிதம் 9% * 3, 3 என்பது திருத்தும் காரணியாகும்)
- ‘சமூகபரவல்’ கட்டத்தை இந்தியா எட்டவில்லை என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஆனால் 120,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இதை நம்பமுடியுமா? உங்கள் பார்வை என்ன?
‘சமூகம் பரவுதல்’ என்பது மருத்துவமனை மூலம் அல்லாமல் ஏற்படும் பரவுதலை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. சமூகப்பரவல் என்பது ஒரு கருத்து, அது அறிவியல் அல்ல.
எந்தவொரு புதிய தொற்றுநோயும் முதலில் ‘இறக்குமதி’ செய்யப்படுகிறது, அது ‘இறக்குமதி-தொடர்புடையது’. இறக்குமதியான அந்த தொற்று மேலும் ஒருவருக்கு பரவினால் அது ‘உள்ளூர்ப் பரவல்’ ஆகிறது. இதுவே சமூகப்பரவல். உள்நாட்டில் பரவும் வைரஸ் குறித்து மக்களை கவனமாக இருங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என எச்சரிப்பதே இதன் நோக்கம்.
இந்தியாவில், சமுகப்பரவலை அரசாங்கம் ஒப்புக் கொண்டால், அதைத் தடுக்கத்தவறியதையும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அரசு அஞ்சுகிறது என கருதுகிறேன். ‘சத்யமேவா ஜெயதே‘, நேர்மை, பொய்யான மரியாதைக்கு மேலானது . உண்மையான மரியாதை நேர்மையில் வெளிப்பட வேண்டும்.
உண்மையான வேறுபாடு இறக்குமதி-தொடர்புடைய மற்றும் சமூகப்பரவலுக்கு இடையில் உள்ளது. அரசாங்கம் கருதுவது என்னவென்றால், நோய்த்தொற்று பரவியத்தற்கான மூலம் (Source) இல்லாத நிலையையே சமூகப்பரவலாக வரையறுக்கின்றது. அதனால்தான் சென்னையில் மார்ச் 18 அன்று மூலம் தெரியாத ஒரு தொற்று இருப்பதாக நான் கூறினேன்.
சமுகப்பரவல் இல்லை என்றால், மக்கள் நோய்த்தொற்றுப் பரவும் அபாயத்தைக் குறைத்து மதிப்பிடுகிவார்கள் மற்றும் பாதுகாப்பைக் குறைப்பார்கள். சமுகப்பரவலைத் தொடர்ந்து மறுப்பது அரசாங்க அதிகாரிகளின் வசதிகளுக்காக. இது உண்மை இல்லை மற்றும் இந்திய நலனுக்கு உகந்ததல்ல.
- Mint இதழுக்காக அளித்த பேட்டியில், எய்ம்ஸ் டெல்லியின் இயக்குனர் ரன்தீப் குலேரியா, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தோற்று பாதிப்பு உச்சம் வரும் என்று கூறினார். வரும் ஆறு வாரங்கள் எல்லாம் மோசமாகிவிடும் என்று அர்த்தமா?
தன்னிச்சையாக, வேறுபட்ட கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி, ஜூலை வாரங்கள் முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை உச்சநிலை ஏற்படும் என்று நாங்கள் கணித்துள்ளோம்.
நான் முன்பு கூறியது போல், பரிசோதனைகள் என்பது தொற்றுநோயின் அளவை அளவிடவோ அல்லது கண்காணிக்கவோ அல்ல, அவை தொடர்புகளைக் கண்டறிவதற்க்காகவே. தொற்றின் உண்மையான தாக்கத்தை பரிசோதனைகளின் எண்ணிக்கையை வைத்துமட்டும் அளவிட முடியாது. உதாரணமாக, நோய்த்ததொற்றின் முடிவுகள் சோதனைகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகின்றன. மும்பை மற்றும் சென்னையில் 12% வரையிலும் பிற எல்லா இடங்களிலும் சுமார் 4-5% வரையும் நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அதாவது நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது சோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது, சமூகத்தில் மொத்த தொற்றின் பாதிப்பை குறிப்பதல்ல.
- கொரோனா பரவலின் உச்சம் ஜூலைக்குப் பின்னர் வராது என்பதில் உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது? இதை கேட்க காரணம் டெல்லி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து பீகார் திரும்பும் புலம்பெயர்ந்தோரிடையே பாதிப்பு விகிதம் இரட்டிப்பாகும். உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களுக்கு திரும்பி வருபவர்களுக்கும் இது பொருந்தும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆகவே அதிகமான புலம்பெயர்ந்தோர் வீட்டிற்குச் செல்லும்போது, வைரஸின் பரவல் அதிகரிக்கக்கூடும், இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வரை உச்சத்தை தள்ளுமா?
(மே 20 வரை, பீகாரில் 6.1 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பியுள்ளனர். மே மாத இறுதிக்குள், இது 25-30 லட்சம் வரை எட்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் ஜா மே 22 அன்று எகனாமிக் டைம்ஸிடம் தெரிவித்தார்.)
ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர்திரும்புவது பரவலை ஏற்படுத்துமென கணக்கிட்டாலும் அதனால் உச்ச நிலை அடைவது ஓன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு மட்டுமே தள்ளிப்போகும். ஆனால் அது நாங்கள் குறிப்பிட்டுள்ள ஆறு வார வரம்பிற்குள் வரும் என கருதுகிறோம். எனவே இது உச்சத்தைத் தாமதப்படுத்தாது.
- கொரோனாவின் பாதிப்பு ஜூன்-ஜூலை மாதங்களுக்குப் பின்னர் இருக்கலாம் என்பதற்கான இரண்டாவது காரணம், ஊரடங்கு மிகவும் கணிசமாக தளர்த்தப்பட்டுள்ளது. சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன, ரயில்களும், விமானங்களும் இயக்கப்படுகின்றன. இது நோய்த்தொற்றின் எண்ணிக்கையை உயர்த்துவதோடு பாதிப்பின் உச்சத்தைப் பின்னுக்குத் தள்ளுமா?
நீங்கள் சொல்வது சரி, அது உச்சகட்ட பாதிப்பைப் பின்னுக்குத் தள்ளக்கூடும், ஆனால் இங்கு நாம் குறிப்பிடும் ‘பின்’ என்பது முன்னுக்குத் தள்ளுவதே ஆகும், பின்னுக்கு அல்ல (தாமதமான உச்சகட்ட பாதிப்பை முன்னோக்கி தள்ளுவது). தொற்றுநோயின் உச்சகட்ட நிலையை அடைவதற்கு தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 40 கோடி முதல் 55 கோடியை எட்டக்கூடும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடும் அளவைப்பொறுத்து உச்சகட்டத்தை அடைவதற்குத் தேவையான காலமும் குறையும்.
- நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கையில், நான்கு முறை ஊரடங்கு சாதித்தவை என்ன? தொடர் ஊரடங்குகள் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் என்று நம்பினோம், ஆனால் அது நிச்சயமாக நடக்கவில்லை. கொரோனா பரவல் இத்தாலி, சீனாவில் 40 நாட்களுக்குப் பிறகு வீழ்ச்சியடைந்து வருவதைக் காண்கிறோம், ஆனால் இந்தியாவில் நிலமை அப்படி இல்லை.
முதல் ஊரடங்கு மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை இருந்தது. ஊரடங்கினால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட ‘நச்சு விளைவுகள்’ எதிர்பார்த்தபடி இருந்தன, ஆனால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அதன் நன்மை எதுவும் இல்லை அல்லது கணக்க்கில் கொள்ளும்படி இல்லை. இந்த காலக்கட்டத்தில் தொற்று எண்ணிக்கை 20 நாட்களில் 536 முதல் 11,487 ஆக 20 மடங்கு அதிகரித்தது. மீண்டும் ஏப்ரல் 15 க்கு அப்பால் ஊரடங்கிணை நீட்டிப்பதன் மூலம் மேலும் பொருளாதாரத்தை மோசமாக்குவது விவேகமற்றது.
ஏப்ரல் தொடக்கத்தில் ஊரடங்கிற்கு ஒரு மாற்றை நான் முன்மொழிந்தேன்: முதல் ஊரடங்கிற்குப் பின்னர் மீண்டும் ஊரடங்கினை நீட்டிப்பதற்குப் பதிலாக, அனைவரையும் முகக்கவசம் அணியச்செய்தும் பொது விழிப்புணர்வு வழங்குதல் மூலமும், அடிப்படை சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் போது வைரஸின் பரவலைக் குறைத்திருக்கலாம்.
- பத்திரிகையாளர் சந்திப்புகளில், சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவின் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதத்தில் இருந்து ஆறுதலடைகிறார், இந்தியாவில் அது 41% ஆகும். ஆனால் 32,486 இறப்புகளுடன் இத்தாலியின் குணமானோரின் விகிதம் 59% ஆகவும், 27,940 இறப்புகளுடன் ஸ்பெயினில் 70.3% குணமானோரின் வீதமும் உள்ளது. எனவே தெளிவாக அதிக குணமானோரின் விகிதம் எந்த விதத்திலும் இறப்புகளின் எண்ணிக்கையில் தாக்கம் கொடுப்பதில்லை என்பது சரியா?
குணமானோரின் விகிதங்கள் மிகவும் பயனுள்ளதாக இல்லை. இந்தியாவில் ‘தொற்றுபாதிப்பு-இறப்புகள்’ 8-9% இருப்பதைக் கண்டோம். எனவே, குணமானோரின் விகிதம் 91-92% ஆக இருக்க வேண்டும். குணமானோரின் விகிதம் கணக்கிடப்படும் முறை நமக்கு நோயாளிகளிடமிருந்தோ அல்லது இறந்தவர்களிடமிருந்தோ நோயின் அபாயங்கள் குறித்து எந்த விளக்கமும் தரவில்லை.
குணமானோரின் எண்ணிக்கை = மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை -இறப்புகள். இது ஒரு மாறும் விகிதமாகும், இதிலிருந்து தொற்றுநோயின் அளவு அல்லது தீவிரத்தை புரிந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இது ஒரு புள்ளிவிவரம் மட்டுமே.
8.நமக்கு ஆறுதலையும் உறுதியையும் தரும் வேறு சில புள்ளிவிவரங்களும் உள்ளன. நம் இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 0.2 ஆனால் உலக சராசரி 100,000 பேருக்கு 4.2 ஆக உள்ளது. உலகளாவிய பாதிக்கப்பட்டோர் 100,000 பேருக்கு 62 பேர், இந்தியாவில் இந்த விகிதம் 100,000 பேருக்கு 7.9 பேர் ஆகும். இறுதியாக, பாதிப்புக்குள்ளானோரில் 6.4% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும், இதில் 0.5% பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் தேவை, உலகளவில் இதன் விகிதம் 3%. இதற்கு காரணமாக இந்தியாவில் வைரஸின் வீரியம் குறைவாக இருப்பதா அல்லது இந்தியர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது காரணமாக இருக்கலாமா?
நான் மேலே சுட்டிக்காட்டிய படி, 100,000 பேருக்கு தொற்றுபாதிப்பு விகிதம் அல்லது இறப்பு விகிதத்தைக் கண்டறிய நமக்கு எந்த வழியும் இல்லை. சோதனை முறைகளை நாம் மக்கள் தொகை அடிப்படையிலான புள்ளிவிவரங்களுக்காக வடிவமைக்கவில்லை. பிற நாடுகளைப்போல, இந்தியா பொது சுகாதார கண்காணிப்பை கடைபிடித்து இறப்பிற்கான குறிப்பிட்ட காரணத்தை அளவிடக்கூடிய முறையைப் பின்பற்றவில்லை. எனவே இத்தகைய ஒப்பீடுகள் நம்மை நாமே ஏமாற்றும் வேலை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் 6.4% என்னும் விகிதம் நம்பகத்தன்மை வாய்ந்தது: நோய்த்தொற்றுக்கு ஆளான 100 பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய 20 பேரில், 10 பேர் தாமாக குணமடைந்துவிடுகின்றனர், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர், அதில் 1-5 (சராசரி 3.75) பேர் வெண்டிலேட்டர் இருந்தபோதிலும் இறக்கின்றனர். உலகம் முழுவதும் இதன் போக்கு இதுபோலவே இருக்கிறது.
ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகமான இளைஞர்களின் மக்கள்தொகை விகிதம் காரணமாக இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்க வேண்டும். பின்னர் ஏன் இந்தியாவில் அதிக இறப்புகளைக் கொண்டிருக்கிறோம்?
- நம் இறப்பு விகிதம் எவ்வளவு துல்லியமானது? டெல்லியில், நகராட்சி நிறுவனங்கள் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை அரசு அறிவிக்கும் எணிக்கைக்கு இரண்டு மடங்காகக் கூறுகின்றன. நாட்டின் பல்வேறு இடத்திலும் இதுவே நடக்கிறது. கிராமப்புற பகுதிகளில் இந்நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். எனவே உண்மையான கொரோனா இறப்பு விகிதம் நமக்கு தெரியுமா?
பல மாநிலங்களில், எழுதப்படாத விதி என்னவென்றால் ‘கொரோனா வைரசால் இறந்தாலும் மரணத்திற்குப் பிந்தையதை சோதனையைத் தவிர்த்தல். சக்கரை நோய், இதய நோய் என ஏதேனும் நோயுடன் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டால், இறப்புக்கான காரணத்தை சக்கரை நோய் அல்லது இதய நோய் என ஆவணப்படுத்துதல்’.
இந்தியாவில் சுகாதார மேலாண்மை அமைப்பு பெரும்பான்மையான இறப்புகளையும் இறப்புகளுக்கான காரணங்களையும் பதிவு செய்வதில்லை என்பதே உண்மை. கடந்த நாற்பது ஆண்டுகளாக இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இணையான சுகாதார கண்காணிப்பை நான் பரிந்துரைத்து வருகிறேன்.
2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இதே காலக்கட்டத்தில் இருந்த எந்தவொரு நோய்க்கான தகவலையும் 2020 உடன் ஒப்பிட்டு நிமோனியா இறப்பு 2020ல் முந்தய ஆண்களுடன் எவ்வளவு வேறுபடுகிறது என்பதைப் பார்ப்பதற்காக சுகாதார அமைச்சகம் அல்லது ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்திடம் (Integrated Disease Surveillance Project) இதற்கான தகவலை கேட்டோமானால், அவர்களிடம் எந்த பதிலும் இல்லை. 21ம் நூற்றாண்டுக்கு நம் சுகாதார மேலாண்மை அமைப்பினை வளர்த்தெடுப்பதற்கு முன்னர் 20ம் நூற்றாண்டின் சுகாதார மேலாண்மை அமைப்புத் தேவை.
- புள்ளிவிவரங்களிலிருந்து விலகி மற்ற உண்மைகளிலிருந்து விவாதிப்போம். மருத்துவமனைகளில் சுவாச அல்லது இன்ஃப்ளூயன்ஸா போன்ற நிலைமைகளில் நோயாளிகளின் அதிகரிப்பு அல்லது இதுபோன்ற நிலைமைகளுக்கு மருந்துகள் வாங்குவது அதிகரிப்பு என்று எதுவும் இல்லை என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த அறிக்கைகள் துல்லியமானவையா? அவ்வாறு இருந்தால், நாம் இப்போது விவாதித்த புள்ளிவிவரங்களை அவை உறுதிப்படுத்துகின்றனவா?
இந்த கணக்குகளை நான் ஆராயவில்லை என்பதால் என்னால் பதிலளிக்க முடியாது . ஆனால் 50 வயதிற்குட்பட்டவர்களில் COVID-19 இறப்பு மிகக் குறைவு என்பதிலிருந்து நாம் ஆறுதல் பெறலாம். இந்திய மக்களில் 82% பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள். இந்தியாவின் மக்கள் தொகையில் 18% மட்டுமே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள், இந்த விகிதம் இத்தாலியில் 50%ஆகும்.
இந்த 18% பேரில், 16.2% பேர் COVID-19 ஆல் பாதிக்கப்படாமலிருக்கலாம். தோராயமாக மீதம் 5% பேருக்கு சுகாதார பராமரிப்பு தேவைப்படும். இந்தியாவில் 10% ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டிருந்தால், 50 வயதுக்கு மேலுள்ள இந்த 5% பேரில் இல் 10%, அதாவது 0.5% பேருக்கு, மருத்துவ பராமரிப்பு தேவைப்படும். இந்த மாற்றங்களைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு எந்த அமைப்புக்காவது திறன் உள்ளதா?
பிரச்சனை என்னவென்றால், கடந்த காலத்தை விட்டுவிடலாம், வரவிருக்கும் மாதங்களில் நமக்குத்தேவையான சுகாதாரத் தேவைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். வரும் நாட்களுக்கு இந்தியா முழுமையாக தயாரா? என்பதுதான் நாம் ஆராய வேண்டிய கேள்வி.
தமிழில்: ராதா
‘Why Was the Lockdown Extended Beyond April 15?’: Dr T. Jacob John