இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் திருமதி பிரிசில்லா சாவுக்கு தமிழக அரசே பொறுப்பு!

30 May 2020

சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியக் கண்காணிப்பாளர் நிலை – 1 ஆகப் பணியாற்றிய திருமதி பிரிசில்லா அதே மருத்துவமனையில் 27-5-2020 அன்று மாலை 9 மணி அளவில் உயிர் இழந்தார். அவரது மருத்துவ அறிக்கையில் கொரோனா தொற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி, அவருக்கு கொரோனா தொற்று இல்லை, தவறுதலாக தொற்று இருப்பதாக பதிவிட்டுவிட்டனர் என்று சொல்கிறார். ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது கொரோனா சிகிச்சைப் பிரிவில்தான்!

 1. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வருவோரில் 55 வயதுக்கு மேற்பட்டோர் இருக்கக் கூடாது என்கிறது தமிழக அரசு. காவலர்களில் 50 வயதுக்கு மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. தொழிற்சாலைகளில் 55 வயதுக்கு மேற்பட்டோர் வர வேண்டாம் என நிர்வாகங்கள் சொல்கின்றன. திருமதி பிரிசில்லாவுக்கு வயது 58. ஓய்வுப் பெற்ற நிலையில் அவசர காலத் தேவை கருதி தமிழக அரசுப் பணி நீட்டிப்பு செய்திருக்கிறது. அப்படி பணி நீக்கம் செய்யப்பட்டவரை கொரோனா சிகிச்சை அல்லாத வேறு வேலைகளில் ஈடுபடுத்தாமல் கொரோனா சிகிச்சைப் பிரிவிலேயே பணியாற்ற வைத்தது ஏன்?
 2. அவர் வயது முதியவர் மட்டுமின்றி சர்க்கரை வியாதி, சிறுநீரகப் பிரச்சனை, coronary artery disease, அல்சர்  ஆகிய நீண்ட காலப் பிரச்சனைகள் ( இந்தியா டுடே செய்தி) இருந்தும் அவரை கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற வைத்தது ஏன்? இந்த இலட்சணத்தில் சென்னையில் உள்ள 8 இலட்சம் முதியவர்களையும் அவர்களில் உள்ள 2 இலட்சம் தொற்றா நோய்(Non-communicable diseases) கொண்டவர்களையும் பாதுகாக்கப் போவதாக மாநகராட்சி ஆணையர் சொல்கிறாரே!
 3. இரண்டு முறை செய்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் வந்தப் பின்பும் அவரை கொரோனா சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளித்தது ஏன்?
 4. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தப் பின் அவரது மருத்துவ அறிக்கையில் கொரோனா பாசிட்டிவ் என குறிப்பிட்டிருப்பது எப்படி?
 5. கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் முன்னணி மருத்துவப் பணியாளர்களுக்கு உயிரிழிப்பு ஏற்பட்டால் 50 இலட்சம் ரூபாய் ஈழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதற்காக முன்னுக்குப் பின் முரணாக உண்மைகள் திரிக்கப்படுகின்றனவா?
 6. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தும் அவரை கொரோனா சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தால் அவருக்கு நோய்த் தொற்று ஏற்படக் கூடும் என்ற கவனம் இன்றி அங்கேயே வைத்து சிகிச்சை அளித்ததற்கு பொறுப்பேற்க வேண்டியவர் யார்?
 7. கொரோனா நெகட்டிவ் என்று வைத்துக் கொண்டால் அவரது மருத்துவ அறிக்கையில் கொரோனா பாசிட்டிவ் என்று பதிவிட்டதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? எந்தப் பொறுப்புக் கூறலும் இல்லாமல் ஒரு செவிலியரின் உயிரிழப்பையே கடந்து போக நினைக்கும் அரசு, சாதாரன மக்களின் உயிரிழப்புக்கா பொறுப்புக்கூறப் போகிறது?
 8. அவசர கால தேவை கருதி ஓய்வுப் பெற்றவர்கள் பணி நீட்டிப்பு செய்த போதே நமக்கு இந்த அச்சம் எழுந்தது. ஆயினும் நலவாழ்வுத் துறை அப்படி பணி நீட்டிப்பு செய்யப்படும் முதியவர்களை கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தாது என்று நம்பினோம். ஆனால், இந்த விசயத்திலும் நாம் கொண்டிருந்த நம்பிக்கைப் பொய்த்துப் போய்விட்டது. மருத்துவ மாணவர்கள், செவிலிய மாணவர்களைப் பெருமளவு கொரோனா சிகிச்சைப் பிரிவுகளில் பயன்படுத்த முடியும். ஆனால், அப்படியொரு முடிவை எடுப்பதற்கு தடையாய் இருக்கும் சக்திகள் யார்? மருத்துவ மாணவர்களாக இருப்பதில் கணிசமானோர் மருத்துவர்களின் பிள்ளைகளாக இருப்பதால் மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்தும் முடிவை எடுக்க முடியவில்லையா?

 

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மிக உருக்கமாகவும் கையறுநிலையிலும் திருமதி பிரிசில்லா அவர்களுக்கு ஓர் இரங்கல் மற்றும் கோரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம்.

 

 • கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியதால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பைக் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று கருதி அவருக்கான இழப்பீடாக 50 இலட்சம் ரூபாயை அவரது குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும். அவரது குடும்பத்தார் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
 • பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ஒருவரை கொரோனா சிகிச்சையில் பணியாற்ற வைத்தது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
 • கொரோனா நோய்த் தொற்று நெகட்டிவ் என்று வந்த பின்னும் அவரைக் கொரோனா பிரிவிலேயே வைத்து சிகிச்சை அளித்தக் குற்றத்திற்காக மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜெயந்தியை விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • பணிக்காலம் நிறைவடைந்தும் அவசர கால தேவை கருதி பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருப்போர் எவரும் கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஈடுபடுத்தப்படக் கூடாது.
 • 50 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடல் அடக்கம் செய்வோர், ஆய்வுக்கூட பரிசோதனையாளர், தூய்மைப் பணியாளர் எவரும் கொரோனா சிகிச்சை, கணக்கெடுப்பு, ஆய்வு, தூய்மை உள்ளிட்ட கொரோனா தொடர்பான எந்தப் பணியிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது.
 • சர்க்கரை நோய், மூச்சு திணறல், காச நோய் போன்ற தொற்றா நோய் கொண்டோர் எவரும் கொரோனா சிகிச்சை, கணக்கெடுப்பு, ஆய்வு தொடர்பான எந்தப் பணியிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது. அப்படி ஈடுபடுத்துவது அவர்களைத் தெரிந்தே சாவுக் குழியில் தள்ளுவதாகும்.

 

-செந்தில்,

ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

 

https://www.indiatoday.in/india/story/coronavirus-nurse-death-chennai-rajiv-gandhi-hospital-1682960-2020-05-28

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW