176 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் விகடன் நிர்வாகத்திற்கு கண்டனம்! பணி நீக்கம் செய்யும் முடிவைத் திரும்பப் பெறு! இலாபத்திற்காக தொழிலாளர்களைப் பலியிடாதே!
சோசலிச தொழிலாளர் மையத்தின் செய்தி அறிக்கை
94 ஆண்டுகால பாரம்பரியமிக்க விகடன் நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தில் திடீரென்று தனது தொழிலாளர்கள் 176 பேரை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு எதிரானக் குரல்களும் பத்திரிகை துறைகளில் இருந்தும் பத்திரிகையாளர்கள் சங்கங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.
விகடன் நிறுவனம் மிகவும் இலாபகரமாக இயங்கி வரக்கூடிய ஒரு பத்திரிகை குழுமமாகும். அதில் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், மோட்டார் விகடன், அவள் விகடன், நாணய விகடன், சக்தி விகடன், விகடன் டாட் காம் என அச்சிலும் இணையத்திலும் பல கிளைகள் மட்டுமல்லாமல் விகடன் டெலிவிஸ்டாஸ், விகடன் டாக்கீஸ் என காட்சி ஊடகங்களிலும் இலாபகரமான கார்ப்பரேட் நிறுவனமாக இயங்கி வருவதற்கான காரணம் இத்தொழிலாளர்களின் கடுமையான உழைப்பே ஆகும்.
ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் விதமாக ஊடகங்களை நோக்கி அரசின் கோரக் கைகள் நீளும் போது தங்கள் நிறுவனத்தின் முதலாளிகளைக் காப்பதற்காக இந்த தொழிலாளர்களும் சேர்ந்தே போராடினார்கள். நக்கீரன் கோபால், தி இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம், தி இந்து குழுமத்தின் மாலினி பார்த்தசாரதி, விகடன் பாலசுப்பிரமணியன் என பலர் மீதான வழக்குகளின் போது இந்த தொழிலாளர்களும் பொதுமக்களும் ஊடக சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்து ஆதரவாக நின்றனர். எஸ்.வி.சேகர் ஊடகத் துறையையே இழிவுபடுத்தி பேசிய போது அதற்கு எதிராக எழுச்சியோடு போராடியதும் இந்த தொழிலாளர்களே. அரசு மற்றும் இந்துத்துவ சக்திகளுடைய கொடூரமான அடக்குமுறைக்கு ஆளானாலும் ஊடக சுதந்திரத்தைக் காப்பதும் மக்களின் பக்கம் நிற்பதும் கடமை எனக் கொண்டு சிறை சென்ற, உயிர்நீத்த பல பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். கெளரி லங்கேஷ், காஷ்மீர் புகைப்படக் கலைஞர் முஸ்டாக் அகமது போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இயற்கை பேரிடர்களின் போதும், சாதி, மத கலவரங்களின் போதும், காவல் துறை தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகளின் போதும் என பல்வேறு நெருக்கடியான தருணங்களிலும் உயிரைப் பணயம் வைத்து பத்திரிகை தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். கொரோனா மருத்துவப் பேரிடர் காலத்திலும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கிருமி தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஒருபுறம் இந்த தொழிலாளர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பைக் கொண்டு மக்களுக்கு செய்திகளை வழங்கிவரும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் நிர்வாகங்கள் கொரோனா பேரிடர் ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையைத் தன் தொழிலாளர்கள் மீது ஏற்றி வைக்கின்றன. பணி நீக்கமும், சம்பள வெட்டும் மிக சகஜமாக பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் நடந்து வருகின்றது.
கொரோனா வருகைக்கு முன்பிருந்தே நிலவிவந்த பொருளாதார மந்த நிலையின் தீவிரத்தால் எல்லாத் துறைகளும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது போல் ஊடகத் துறையும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது உண்மைதான். ஆனால், இந்த நெருக்கடிகளுக்கு முன்னான காலத்தில் கோடிக்கணக்கில் இலாபமீட்டிய கார்ப்பரேட் ஊடக குழுமங்கள், எந்த தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து அந்த இலாபத்தை ஈட்டினவோ அந்த தொழிலாளர்களின் பங்கை இந்நெருக்கடி நேரத்தில் அவர்களுக்கு கொடுப்பதற்கு மறுக்கின்றன.
விகடன் நிறுவனமும் பல்வேறு புதிய தொழில் முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நிறுவனத்திற்காக உழைத்த தொழிலாளர்களைப் பலிகொடுத்து தனது இலாபத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் முதலாளித்துவத்திற்கே உரிய பண்போடு நடந்து கொள்கிறது.
1990 களுக்குப் பிறகு எழுந்த உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கையின் வருகையால் ஊடகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் வர்க்க உணர்வு சிதைந்து சென்னைப் பத்திரிகை தொழிலாளர்களின் போராட்ட மரபும் தொடர்ச்சியற்று போனது. பல்வேறு பத்திரிகையாளர் சங்கள் தொழிற்சங்கங்களுக்கு உரிய பண்பை இழந்து கேளிக்கை மையங்களாக மாறிப்போயுள்ளன. பிற துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் கார்ப்பரேட்கள் ஊடகத் துறையிலும் குதித்துள்ளன. ஊடகத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இத்தகைய முப்பது ஆண்டுகால சூழல் சீர்கேட்டில் இருந்து ஊடகத் துறையையும் ஊடகத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமையையும் பாதுகாப்பதற்குப் போராட வேண்டிய இடத்தில் உள்ளனர். இந்த தொழிலாளர்களின் வேலை உரிமைப் போராட்டத்தில் சோசலிச தொழிலாளர் மையம் தோளோடு தோளாக நிற்கின்றது.
இன்னொருபுறம், ஊடக நிறுவனங்கள் தாம் சந்தித்து வரும் நெருக்கடியில் மீள்வதற்கு அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரியதாகும். ஊடக நிறுவனங்கள் பத்திரிகை அச்சு காகிதம் மீதான வரியைக் குறைக்கவும் அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை வழங்கவும் கோரியுள்ளன. அக்கோரிக்கையை சோசலிச தொழிலாளர் மையம் ஆதரிக்கின்றது.
விகடன் குழுமம் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். விகடன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிலர் தாம் விகடனிடம் இருந்து பெற்ற விருதைத் திருப்பிக் கொடுத்து வருவது எதிர்ப்பின் குறியீட்டு வடிவமாக வரவேற்புக்குரியதாகும். இன்னொருபுறம் சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆளுமைகள், அரசியல் ஆளுமைகள் பலரும் மெளனம் காப்பது வேதனைக்குரியதாகும். இந்த தருணத்தில் பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களின் பக்கம் நிற்க வேண்டியது மேலே குறிப்பிட்ட பிரிவினர் அனைவரின் கடமையாகும் என்பதை சோசலிசத் தொழிலாளர் மையம் வலியுறுத்துகிறது.
ஆ. சதிஸ் குமார்
பொதுச் செயலாளர்
சோசலிசத் தொழிலாளர் மையம்
9940963131