தலைக்கு மேல் வெள்ளம் – தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும், கட்டணமின்றி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்!
இந்தியாவின் முக்கிய பெருநகரங்கள் கொரோனா கிருமித் தொற்றின் குவிமையம் ஆகியுள்ளன. மே 26 அளவில் தில்லியில் 14,465 பேரும், மும்பையில் 31792 பேரும், சென்னையில் 10,563 பேரும் கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், எல்லா நகரங்களின் நிலைமையும் மும்பையின் நிலைமையை நோக்கியே சென்றுக் கொண்டிருக்கிறது எனலாம்.
மும்பையிலோ தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன. மூச்சுத் திணறலுக்கு உள்ளாகியிருக்கும் ஒருவரை இடமில்லாத காரணத்தால் ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்துச்சென்று இறுதியில் ஒரு மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் அவர் உயிர் பிரிந்து போவது நடக்கத் தொடங்கிவிட்டது. சென்னையிலும் அந்த நிலையை அடைவதற்கு வெகுநாட்கள் இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் போதிய படுக்கைகள் இல்லாத நிலையைத் தான் நாம் மருத்துவக் கட்டமைப்பு முறிந்துவிழுதல் என்று சொல்கிறோம். ஒருவர் நோய்த் தீர்வுப் பெற்றோ அல்லது இறந்தோ அந்த படுக்கை காலியாகும் வரை இன்னொருவர் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படும். இந்தக் காத்திருப்பில் வசதி படைத்தோருக்கு வாய்ப்புகளும் வசதியற்றோருக்கு துடிதுடித்த மரணமும் கிடைக்கப்பெறும். இது ஏற்கத்தக்கதல்ல.
எடுத்துக்காட்டாக, சென்னையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளான ஓர் இணையரின் கதை இது. ’படுக்கைகள் இல்லை’ என்ற காரணத்தால் ஓமாந்தூரார், இராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் என ஒவ்வொரு மருத்துவமனையாக அவர்கள் பந்தாடப்பட்டார்கள். கடைசியில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் அளவிற்கு தமக்கு வசதி இல்லை என்று அவர்கள் சொல்லியுள்ளனர். ’செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்’ என்று அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. இதற்கு உடன்பட்டு அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்குப் போயுள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவப் பாதுகாப்பு உடைக்காகவும் இரத்தப் பரிசோதனைக்காகவும் பணம் கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் 83,000 ரூ கட்ட வேண்டும் என்று சொல்லியுள்ளது. தங்களுக்கு அவ்வளவு வசதியில்லை என்று அவர்கள் சொல்லிப் பார்த்தும் பயனில்லை. ஒருவழியாக தெரிந்தவர்களைத் தொடர்புக் கொண்டு கடன் வாங்கி கட்டிவிட்டுத்தான் அப்பல்லோவிடம் இருந்து தப்பி வந்துள்ளனர்.
முதலாவது பிரச்சனை, கிட்டத்தட்ட சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கோவிட் மருத்துவமனைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தி வரும் ஏழை, எளிய மக்கள் கொரோனா அல்லாத வேறு நோய்களுக்காக அங்கே தங்கி சிகிச்சைப் பெறுவதற்கு தடையாக அமைந்துள்ளது என்பது பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுவிட்டது. ஆனால், அரசு காது கொடுத்து கேட்பதாய் இல்லை.
இன்னொருபுறம், அரசு தனது வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கோவிட் மருத்துவமனைப் பட்டியலில் பில்ரோத், காஞ்சி காமகோடி, காமாட்சி, மியாட், வி.எச்.எஸ்., நோபல், பிரைம் இந்தியன் ஆகிய மருத்துவமனைகளின் பெயர்கள் உள்ளன. கோவிட் நலவாழ்வு மையங்களில்( Covid health Care Centre) சி.எஸ்.ஐ. கல்யாணி, காவேரி, ஜெம், பிரசாந்த் ஆகிய மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவையன்றி இன்னும் சிலவும் கோவிட் சிகிச்சையில் ஈடுபட்டிருக்கக் கூடும். ஆனால், அரசின் வலைதளத்தில் பதிவேற்றப்படாமல் இருக்கலாம். ஆயினும், சென்னையில் தனியார் மருத்துவமனைகள் இவ்வளவுதான் இருக்கின்றனவா? மருத்துவ சுற்றுலாவுக்கு பெயர் போன இடம் சென்னையாயிற்றே!
மராட்டிய அரசு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 80% படுக்கைகளை தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. அத்துடன், உச்சபச்ச கட்டண வரம்பையும் நிர்ணயம் செய்துள்ளது. நாளொன்றுக்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைக்கு ரூ 4000, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைக்கு ரூ 7500 மற்றும் உயிர்வளியூட்டியுடன் கூடிய படுக்கைக்கு ரூ 9000 என விலை நிர்ணயம் செய்துள்ளது. மராட்டிய அரசின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, இந்த 80% விழுக்காட்டுப் படுக்கைகளில் காலியாக இருக்கும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும். இப்போது நிர்ணயிக்கப்பட்ட தொகையில் மருத்துவர் கட்டணம், மருந்து, உணவு, படுக்கை கட்டணம், செவிலியர் கட்டணம் ஆகியவை உள்ளடக்கப்படும். கோவிட் பரிசோதனை, விலையுயர்ந்த மருந்துகள், சி.டி.ஸ்கேன் ஆகியவை இக்கட்டணத்தில் அடங்காது. பாதுகாப்பு உடைகள், ஸ்டண்ட்கள், பலூன்கள் போன்றவற்றிற்கு அதன் மதிப்பில் 10% விழுக்காட்டிற்கு மேல் கட்டணம் பெறக் கூடாது. இந்த கட்டண நிர்ணயம் என்பது கோவிட் 19 சிகிச்சைக்கு மட்டுமின்றி ஏனைய சிகிச்சைகளுக்கும் பொருந்தும். எஞ்சிய 20% படுக்கைகளுக்கு மருத்துவமனைகள் தமது வழக்கமான கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ள 80% படுக்கைகளின் சிகிச்சைக்கும் எஞ்சியுள்ள 20% சிகிச்சைக்கும் எவ்வித பாகுபாடும் காட்டப்படக் கூடாது.
அரசின் மருத்துவக் காப்பீட்டின் கீழ் வரும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்போதுகூட மேற்படி கட்டண உச்சவரம்பைக் கடைபிடிக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டின்கீழ் வராத மருத்துவமனைகளைப் பொருத்தவரை ஒவ்வொரு குறிப்பான சிகிச்சைகளுக்கும் கட்டண உச்சவரம்பை அரசு நிர்ணயித்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஆஞ்சியோகிராபிக்கு ரூ 12,000 , சுக பிரசவத்திற்கு ரூ 75,000 , டயாலிசிசுக்கு ரூ 2500, கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ 25,000.
மகாராஷ்டிரா இன்றியமையாத் தேவைகள் சட்டம் 2005 இன் (MESMA 2005) கீழ் மே 22 ஆம் நாள் அன்று இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்த அரசாணை நடைமுறையில் இருக்கும்.
சென்னையைப் பொருத்தவரை அப்பல்லோ, ராமசந்திரா, மியாட், சிம்ஸ், மலர், எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி, எம்.எம்.எம். என நூற்றுக்கணக்கான படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளின் ஏராளமாக உண்டு. கோவிட் சிகிச்சைக்கு மட்டுமின்றி கொரோனா அல்லது நோய்களுக்கான சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நோக்கி வரும் நோயர்களுக்கு அங்கே இடம் இல்லை என்றால் இந்த் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இந்த 60 நாட்களில் தனியார் மருத்துவமனைகள் தாமாக முன்வந்து இந்த பெருந்தொற்று காலத்தில் தாம் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வில்லை. அதுமட்டுமின்றி, நெஞ்சுவலி என்று மருத்துவமனைக்கு சென்றால்கூட சளி இருக்கிறதா?, காய்ச்சல் இருக்கிறதா? எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நோயாளிகளைத் திருப்பி அனுப்புகிறார்கள். பல மருத்துவமனைகள் செயல்படாமல் இருக்கின்றன. அரசின் ஆணைகளுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை.
உலக நலவாழ்வு மையம் கொரோனா பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் கட்டணம் பெறக்கூடாது என்று பரிந்துரைத்துள்ளது. கொரோனாவுக்கான பரிசோதனை கட்டணம் இன்றி செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.. அந்த செலவை அரசே ஏற்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. தமிழக அரசும் பரிசோதனைக்கான செலவை தாம் ஏற்றுக் கொள்வதாக சொல்லியிருப்பினும் தனியார் பரிசோதனை மையங்கள் அதிகபட்சக் கட்டணமான 4500 ரூ பெற்றுக் கொண்டுதான பரிசோதனை செய்து வருகின்றன. அறிவிப்புகள் அறிவிப்புகளாகவே, இருக்க, பெருந்தொற்றின் போது வசூல் வேட்டை தொடர்கின்றது.
அரசு இனியும் காலந்தாழ்த்தக் கூடாது. யாருக்குப் படுக்கையைக் கொடுப்பது? யாருக்குப் படுக்கை இல்லை என்பது? – இதுதான் கொரோனா ஏற்படுத்தும் மனித பேரவலம். சிகிச்சை அளிக்க முடியாமல் ஒருவர் மெல்லச் செத்துப் போவதைத் தடுப்பதற்குத்தான் இவ்வளவு அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஏழை,எளியோர், கருப்பர்கள், இனச் சிறுபான்மையினர்தான் அதிகம் இறந்துப்போய் உள்ளனர். நம் நாடும் இதற்கு விதிவிலக்காக இருக்கப் போவதில்லை.
சென்னையில் இருக்கக் கூடிய அனைத்து படுக்கை வசதிகளும் யாருக்கு தேவையோ அவர்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். அதாவது மெல்லிய(mild), மிதமான(moderate), தீவிர(severe) நோய் அறிகுறி இருப்போரில் தீவிர நோய் அறிகுறி இருப்போருக்கு மட்டுமே மருத்துவமனைப் படுக்கைகள் கொடுக்கப்பட வேண்டும். இதை தனியார் மருத்துவமனைகளிலும் உறுதிசெய்ய வேண்டும். எனவே, ஒவ்வொரு தனியார் மருத்துவமனை படுக்கையும் அரசின் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும். ஏழை, பணக்காரர், சாதி,மத,இன, பால் வேறுபாடின்றி முதலில் வருவோருக்கு முதலில் ஒதுக்கீடு (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் படுக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கிருமி தொற்றுக்கு ஆளாகும் வசதி படைத்தவர்கள் எந்த அறிகுறியும் இல்லாத போதும் அச்சத்தின் காரணமாக தனியார் மருத்துவமனைப் படுக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் இருந்து பணம் கிடைக்கும் என்பதால் அந்த மருத்துவமனை நிர்வாகமும் அவர்களுக்குப் படுக்கையை ஒதுக்கி கல்லா கட்டிக் கொண்டிருக்கும். தீவிர சிகிச்சை தேவைப்படுவோரில் ஏழை, எளிய மக்கள் படுக்கைகள் இல்லாமல் காத்துக் கிடந்து செத்துப் போகும் நிலை ஏற்படும்.
சுனாமி போல் கொரோனா நமது மருத்துவக் கட்டமைப்பைத் தாக்குவதற்கு மிகச் சில நாட்களே இருக்கின்றன. உடனடியாக, தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும், கொரோனா நோய்த் தொற்றுக்கானப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க வேண்டும். தலைக்கு மேல் வெள்ளம் போகப் போகிறது. தனியார் மருத்துவமனைகளின் இலாப வெறிக்குப் பல்லக்கு தூக்காமல் இந்தக் இக்கட்டான நேரத்தில் தமிழக அரசு மக்கள் நலனை முதன்மைப்படுத்த வேண்டும்.
-செந்தில்
1, https://indianexpress.com/article/cities/mumbai/maharashtra-takes-80-beds-in-private-hospitals-caps-charges-for-treatment-6421705/
2. https://stopcorona.tn.gov.in/list-of-dch-dchc-dccc/