கொரோனாவைக் காரணம்காட்டி தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவ அரசிற்கு எதிராக….தொழிலாளர் வர்க்கத்தின் தொடர்ச்சியான, போர்க்குணமிக்க மற்றும் தீர்க்கமான போராட்டத்திற்கு தயாராகுவோம் !!

22 May 2020
  • தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து மற்றும் நீர்த்துப்போக செய்தது
  • தொழிலாளர் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியது
  • கடுமையான நெருக்கடிக்கு புலம்பெயர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை உட்படுத்தியது
  • தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்தது
  • போதிய வேலை வாய்ப்பினை உருவாக்காமலிருப்பது
  • பட்டினி சாவினை கண்டு கொள்ளாமலிருப்பது
  • தொழிலாளர்களுக்கு தேவையான சமூக, பொருளாதார மற்றும் உடல்நலப் பாதுகாப்பினை உறுதி செய்யாதிருப்பது.

                          ஆகியவற்றிற்கு எதிராக!!

  • கொரோனாவைக் காரணம்காட்டி தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவ அரசிற்கு எதிராக!! 
  • 22 மே 2020 அன்று நடக்கும் நாடு தழுவிய போராட்டத்தில் ஒன்றிணைவோம்!!
  • தொழிலாளர் வர்க்கத்தின் தொடர்ச்சியான, போர்க்குணமிக்க மற்றும் தீர்க்கமான போராட்டத்திற்கு தயாராகுவோம் !!

 

தோழர்களே,

ஏறக்குறைய 44 தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை ரத்து செய்வதற்காக 4 தொழிலாளர் சட்ட முன்வரைவு மோடியால் இறுதி செய்யப்பட்டிருந்த நேரத்தில் கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பரவ தொடங்கியது.

இப்போது கொரோனா பெருந்தொற்றைக் காரணம்காட்டி, மோடி அரசாங்கமும் பல்வேறு மாநில அரசாங்கங்களும் கொரோனாவுக்கு எதிராக அல்லாமல் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக ஒரு போரை நடத்திக்கொண்டிருக்கின்றன.

கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்கள் மூலம் வென்றெடுத்த தொழிலாளர் உரிமைகளையும் மற்றும் குறிப்பாக மே 1  போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்து வென்றெடுத்த 8 மணிநேர வேலை உரிமையையும்  ஒரே நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

 தொழிலாளர் உரிமைகள் மீதான மாநில அரசுகளின் தாக்குதல்கள்:

மத்திய அரசு மூன்று அவசர காலச்சட்டம் மூலம் மத்திய அரசு தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படியை  ஜூலை 2021 வரை முடக்கியுள்ளது. மறுபுறம் மாநில அரசு தொழிலாளர் நல சட்டங்களை ரத்து செய்ய அல்லது வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது குறித்து ஆணை பிறப்பித்துள்ளது.

உத்தரபிரதேச அரசு, அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு  ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு (1000 நாட்கள்) தொழிலாளர் சட்டங்களில் இருந்து விலக்கு  அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

குறைந்தபட்ச ஊதிய சட்டம், தொழிற்சங்க சட்டம், தொழில்துறை தகராறு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், உபரிச் சம்பளம் சட்டம் (Bonus act ), மாநிலங்களுக்கு இடையே  புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம், உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டம், வருங்கால வைப்பு நிதி சட்டம், மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம் ஆகிய சட்டங்களை ரத்து செய்யும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

மத்திய பிரதேசத்தில், தொழில்துறை தகராறு சட்டத்தின் பிரிவு 25 ஐத் தவிர அனைத்து விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 க்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ் நடத்தப்படும் ஆய்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

100 க்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய பிரதேச தொழில்துறை வேலைவாய்ப்பு (நிரந்தர ஆணை) சட்டம் மற்றும் குறிப்பிட்ட கால வேலை வாய்ப்பு சட்டம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பதிவுகளுக்கு (ஏறக்குறைய 13) பதிலாக ஒரு பதிவேட்டை பராமரிக்க வழி வகை செய்யும் ஏற்பாடு வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளுக்கு தொழிற்சாலை ஆய்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் குறைந்தது 1200 நாட்களுக்கு நீடிக்கும் புதிய திட்ட பணிகளுக்கு தொழிலாளர் சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும்  வேலை நேரம் 12 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என்றும் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தொழிற்சாலைகள் சட்டத்தின் 51,52,54,56 பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . மேலும்  வேலை நேரம் 12 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜஸ்தான், அசாம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஒரிசா மற்றும் பாண்டிச்சேரி (யூனியன் பிரதேசம்) போன்ற பிற மாநிலங்களும் தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை நீடித்துள்ளது.

தொழிலதிபர்களுக்கு 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு

பிரதமர் மோடியால் வாக்குறுதி கொடுக்கப்பட்ட 20 லட்சம் கோடி நிதி தொகுப்பில் பெரும்பான்மையான தொகை அரசின் உத்திரவாதத்துடன் வங்கியில் பெறப்படும் கடன் தொகையாகவே உள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு பெரும் தொழிலதிபர்கள் தங்கள் சொந்த உத்தரவாதத்துடன்  வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியும் திருப்பிச் செலுத்தவில்லை என்பதை கண்கூடாக கண்டுள்ளோம். இறுதியில் அரசாங்கம் அந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. தற்சமயம் அரசு உத்திரவாதம் கொடுப்பதால் மறுமுறையும் பெரும் தொழிலதிபர்கள் கடனை திருப்பி கட்டாமல் போகக் கூடும், அவ்வாறு நிகழுமாயின் அக்கடன் தொகை முழுவதும் பொது மக்கள் மீதே சுமத்தப்படும்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி  (பி.எஃப்) கணக்கில் முதலாளிகளின் பங்களிப்பைக் குறைப்பது தொழிலாளர்கள் மீதான தாக்குதலாகும். இந்த நிதி தொகுப்பில் ஊரடங்கு காலத்தில் வழங்கப்படாத சம்பளத்தைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை. உழைக்கும் தொழிலாளர்களுக்கு இந்த நிதி தொகுப்பில் கிட்டத்தட்ட எந்த நிவாரணமும்  இல்லை. தற்பொழுது அரசின் முழு கவனமும் முதலாளிகள் இலாபம் ஈட்டுவதில் எந்த தங்குதடையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதிலேயே உள்ளது. பெருமுதலாளிகள் தங்கள் தேவைக்கேற்ப தொழிலாளர்களை வேலைக்கு  அமர்த்துவதும் தேவை முடித்ததும் அவர்களை தூக்கி எறிவதற்கு ஏற்ற சூழலை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் முழு பொருளாதார பாதிப்பும் எளிய தொழிலாளர்களின் மீதே திணிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பெரும்பான்மையான மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களின் தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்வது அல்லது முதலாளிகளுக்கு ஏற்றவாறு திருத்துவதில் முனைப்பு காட்டுகின்றன. இதில் அனைத்து அரசாங்கங்களும், அது பாஜக ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் ஆனாலும் சரி அல்லது பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆனாலும் சரி தொழிலாளர்களின் உரிமைகளை நீர்த்து போகச்செய்வதிலே முனைப்புடன் பணியாற்றுகின்றன.

அதிவேக தனியார் படுத்தல்:

தற்போதைய ஏகாதிபத்திய செயல்முறையில் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவை தற்சார்பு என்ற கோட்பாட்டின் பெயரில் மூடி மறைக்கபட்டுள்ளது, நிதி அமைச்சரின் 5 கட்ட நிதி தொகுப்பு உரையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் தனி கவனம் செலுத்தியுள்ளது. சுரங்கத் துறையின் தனியார்மயமாக்கல், 74% வரை பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு, 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்குதல், விண்வெளி துறையில் தனியார் முதலீடு, அணுசக்தித் துறையில் அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனம்  (PPP மாதிரி) போன்றவை இந்திய மக்களின் வியர்வை மற்றும் இரத்தத்தில் உருவான பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி-அதானி உள்ளிட்ட தனியாரிடம் ஒப்படைக்கும் மோடி அரசாங்கத்தின் கொள்கையை மட்டுமே பிரதிபலிக்கின்றன.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் அதிகரிக்கும் அரசின் சர்வாதிகாரம்:

கொரோனா நேரத்தில், அரசு தன் சர்வாதிகாரத்தால் பெரும் முதலாளிகளுக்கு சேவை புரிய முனைப்புடன் செயல்படுகிறது. கொரோனா நெருக்கடியால் உழைக்கும் மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வேலை இழந்து, சேமிப்பை இழந்து, வீட்டு வாடகை கொடுக்க வழி இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் பரிதவிக்கும் உழைக்கும் ஏழை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்காமல் அரசு அவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது.

இதுவரை அரசு எடுத்த நடவடிக்கைகள் வேலை இழப்பை அதிகரிக்கும், வேலை பாதுகாப்பை ஒழிக்கும், தொழிற்சாலை பாதுகாப்பு விதிகளை நீர்த்துப்போகச் செய்யும்,  தொழில்துறை விபத்துக்களை அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. எந்தவொரு சட்ட பாதுகாப்பும் அற்று பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் பல்வேறு போராட்டங்களின் வழியே வென்றெடுத்த உழைக்கும் மக்கள் உரிமைகளையும் இழக்க நேரிடும், குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் பெரும்  பாதிப்புக்கு உள்ளாவர். சட்டத்தின்மூலம் உறுதிப்படுத்தப்பட்ட  உரிமைகளையும் இழக்க நேரிட்டு வேறு வழியில்லாமல் பொங்கி எழும் உழைக்கும் மக்களை அரசு தன் பெருகிவரும் சர்வாதிகாரத்தைக் கொண்டு ஒடுக்கும்.. மறுபுறம் கொரோனாவை காரணம் காட்டி அரசு ஆரோக்கிய சேது செயலி போன்றவற்றின் மூலம் தன் கண்காணிப்பை அதிகரித்து வருகிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக அரசு கண்காணிப்பைப் பெருக்கி வருகிறது.

உற்பத்தியில் கொத்தடிமைத் தொழிலாளர் நிலையின் துவக்கம்

முதலாளித்துவ சுரண்டலின் சங்கிலிகள் தொழிலாளர்கள் மீது பலப்படுத்தப்பட்டு வருகின்றன, வேலைநேரம் நீட்டிக்கப்பட்டு வருகிறது, மேலும் உற்பத்தி மற்றும் இலாபத்தின் தேவைக்காக அவர்கள் வீடுகளுக்குதிரும்பிச் செல்வதற்கான சுதந்திரம் கூட பறிக்கப்படுகிறது. தொழிலாளர் சட்டங்கள் இருந்தும் கூட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான அமைப்பாகி தொழிற்சங்கங்களை கட்டி எழுப்புவது  தற்போதைய சூழலில் மிகவும் கடினமாக உள்ளது. இத்தகையதொரு சூழலில், தொழிலாளர் நலச் சட்டங்கள் விலக்கப்பட்டாலோ நீர்த்துப் போகச் செய்யப்பட்டாலோ தொழிலாளர்களின் நிலை என்னவாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்தால், உற்பத்தித் திறன் அதிகரிக்கும் , வேலைவாய்ப்புகள்  பெருகும் என்பது போன்ற வாதத்தை முன் வைத்து, தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளது. இந்த வாதம் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களாலே மறுக்கப்பட்ட வாதமாகும். இதன் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையே பறிக்க முயல்கிறது அரசு. இது மீண்டும் நிலப்பிரபுத்துவ முறைக்கு மீண்டும் இட்டுச் செல்வதாக உள்ளது.

ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் நெருக்கடி:

கொரோனா நெருக்கடி வர்க்க அநீதியையும் அமைப்பின் உணர்வற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது . மிகத் தெளிவாக, அரசின் கொள்கைகள் இந்திய மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் இலாபத்தைக் காப்பதை நோக்கியே உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. நம்மை சுற்றி நிறைய புகைப்படங்கள் காணக் கிடைக்கின்றன – உணவில்லாமல் பட்டினி கிடக்கும் இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தமது வீடு திரும்ப வேறு வழியில்லாது ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு திரும்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைக் காவல்துறையினர் மூர்க்கமாக அடிக்கின்றனர், இரயில்- பேருந்து- சரக்கு வண்டி அவர்கள் மீதேறி நசுக்குகின்றது. இந்த ஊரடங்கு காலத்திலும் அவர்கள் வேலை இழக்காது முழு சம்பளத்தை வழங்க அரசு உறுதி செய்திருக்க வேண்டும். அவர்கள் வீடு திரும்ப போக்குவரத்து வசதியினை இலவசமாக செய்து கொடுத்திருக்க  வேண்டும். மாறாக, அரசும் முதலாளித்துவ வர்க்கமும் அவர்களை கண்ணியமாகவும் மனித மாண்புடனும் நடத்தத் தவறியுள்ளன. மேலும், மத்திய தொழிற்சங்க மையங்களின் இயலாமையும் சமரசப் போக்கும்கூட அவர்களின் இந்த நெருக்கடிக்கு காரணமாகும். தொழிலாளர்கள் அமைப்பு ரீதியான பலமோ முதலாளிகளிடம் பேரம் பேசுவதற்கான சக்தியோ இன்றி உள்ளனர். நிலவிவரும் சமூகப் பாகுபாடு இதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. விளிம்பு நிலையில் உள்ள மனிதர்கள்தான் இதனால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இன்று மிகவும் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களில் பெரும்பாலோர் பெண்கள், தலித் மற்றும் பழங்குடி மக்கள் ஆவர்.

 

தொழிலாளர்களின் மரணம் இலாப முறையின் கொடுமையை அம்பலப்படுத்துகிறது

 அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு ஏறத்தாழ 500 தொழிலாளர்களைக் காவு வாங்கியுள்ளது. தமது வீடுகளுக்கு செல்ல விரும்பிய தொழிலாளர்களை, தொழில்துறை உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதற்காக வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தியுள்ளது அரசு. இதற்கு எதிராக தொழிலாளர்கள் போராடிய பிறகே, சில இரயில்களை இயக்க முன் வந்தது அரசு.ஆனால் அதற்கும் பயணக் கட்டணத்தை வசூலித்தது அரசு. நிலவுகின்ற இலாப நோக்கினை முன்நிறுத்துகின்ற அமைப்பில் தொழிலாளர்கள் தூக்கி எறியப்படலாம் என்பதையே நிகழந்த விபத்துகள் காட்டுகின்றன. தொழிலாளர்களைக் கொண்டு அதிக லாபத்தை எவ்வாறு  பெருக்கலாம் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது  இந்த அரசு.

 

தேசியவாதம் மற்றும் சுயசார்பு என்ற பெயரில் ஆளும் சக்திகள் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவை புரிகின்றன

இவை அனைத்தையும் தேசிய நலன் மற்றும் சுயசார்பு என்ற பெயரில் செய்கிறார்கள். ஒருபுறம் தொழிலாளர்களை தேசியவாதம் அல்லது சுயசார்பு என்ற பெயரில் ஏமாற்றிக் கொண்டு மற்றொருபுறம் பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதம் அனுமதித்துள்ளது. ஒருபுறம் கால்நடையாக வீடு திரும்பிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை அடித்து நொறுக்கும் அரசு, மற்றொருபுறம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள பணக்காரர்களை மீட்க விமானத்தை அனுப்புகிறது. தன் மக்களுக்கு தேவையான அடிப்படை சுகாதார வசதிகளை மறுத்துவிட்டு மற்றொரு புறம் ட்ரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தின் மீதான தாக்குதல் போலி தேசியவாதத்தின் பெயரிலும் மதப்பிரிவினை மற்றும் வெறுப்பைத் தூண்டுவதன் பெயரிலும் அரங்கேறி வருகிறது.  இதனால் தொழிலாளர்கள் பிரிந்து அவர்கள் மீதான தாக்குதல் இன்னும் தீவிரமடைகிறது. போலி தேசியவாதம், அதீத நாட்டுப் பற்று மற்றும் மத வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டு உரிமைகள்  பறிக்கப்பட்டு வரும் தொழிலாளர்களை திசைதிருப்பி வருகிறார்கள்.

 

முதலாளிகளுக்கு பக்கபலமாக நீதிமன்றங்கள்

 புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையைக் கேட்பதற்குகூட உச்சநீதிமன்றம் தயாராக இல்லை. முதலாளிகள் மேற்கொள்ளும் சம்பளக் குறைப்பினை நீதிமன்றம் நியாயப்படுத்துகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பி செல்வதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யக்கோரி தொடர்ந்த பொதுநல வழக்கை மிகவும் தரக்குறைவான பதிலைக் கூறி, பொதுநல வழக்கு தொடர்ந்தவர் மீது அபராதம் விதித்துவழக்கினை தள்ளுபடி செய்துள்ளது .மோடி அரசாங்கம் அளித்த பொய்யான தகவல்களை அப்படியே ஏற்றுக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ததில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் அரசு-சார்பு நிலையும் தொழிலாளர்களுக்கு எதிரான நிலையும் அம்பலாமாகியுள்ளது.

 

மாசாவின் அழைப்பு:

Mazdoor Adhikar Sangharsh Abhiyan (MASA) பல்வேறு மாநில அரசாங்கங்கள் கொரோனா நெருக்கடி என்ற பெயரில் பிறப்பித்த தொழிலளர்களுக்கு எதிரான அவசரச் சட்டங்களை / ஆணைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மாசா வலியுறுத்துகிறது. கொரோனா நெருக்கடி காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் விதமாக நடவடிக்கைகளை உடனடியாக மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இதன்படி தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பையும் முழு சம்பளத்தையும் உறுதிசெய்தல், அனைவருக்குமான சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்தல் ,மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டத் திருத்தத்தை முறையாக அமல்படுத்தி புலம்பெயர் தொழிலாளர்களின்உரிமைகளை உறுதி செய்வது, வீடு திரும்புவதற்கான போதுமான இலவச போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தல், ஆலைகளில் தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வது, தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கும் அகவிலைப்படி வழங்குதல் (DA) ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இது போக செயலி மற்றும் மின்னணு கண்காணிப்பினை  கைவிடுதல் வேண்டும் .

 மத்திய தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிராக 2020 மே 22 அன்று நாடு தழுவிய எதிர்ப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது. அரசின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகள் எந்த அளவுக்கு ஆபத்தானவையாக உள்ளது என்றால் , பிஜேபி-ஆர்எஸ்எஸ் இன்  தொழிற்சங்க அமைப்பான பி.எம்.எஸ் கூட மே 20 அன்று தனது சொந்த அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களின் அழுத்தம் காரணமாக போராட்டத்தை அறிவிக்கும் அளவிற்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

2020 மே 22 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினத்தின் திட்டத்தை மஜ்தூர் ஆதிகர் சங்கர்ஷ் அபியான் (மாசா) முழுமையாக ஆதரிக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்களை முதலாளித்துவ மற்றும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்  வர்க்கத்தின் தொடர்ச்சியான, போர்க்குணமிக்க மற்றும் தீர்க்கமானப் போராட்டமாக மாற்ற தொழிலாளர் வர்க்கத்தை மாசா அழைக்கிறது.

 இன்று, தொழிலாளர் எதிர்ப்பு தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் கோபம் வெவ்வேறு நிலைகளில் வெளிவருகிறது.ஆனால் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ-அரசாங்கம் நடத்திவரும் யுத்தத்தை, தொழிலாளர் வர்க்கம் அதற்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் மூலம் மட்டுமே பதிலளிக்க வேண்டியிருக்கும். இது அமைதியாக இருக்க வேண்டிய நேரம் அல்ல. நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தையும் முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கும் குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது, இல்லையெனில் தொழிலாளர் வர்க்கம் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அடிமைத்தனத்திற்குத் தள்ளப்படும்.நாம் அனைவரும்  ஒன்றுபட்டு அரசாங்கங்களின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு பொருத்தமான பதிலடியைக் கொடுப்போம்.அப்போதுதான் நாம் உழைக்கும் மக்கள் மீதான சுரண்டல்-அடக்குமுறை-பட்டினி-வேலையின்மை ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைந்த ஒரு சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்,

 

சோசலிச தொழிலாளர் மையம் – MASA

9940963131 / 9994094700

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW