புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020

17 May 2020

புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது!

சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள், கட்சிகளின் கூட்டறிக்கை

பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள  இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 50 நாட்களாக அவர்கள் கைக்குழந்தைகளுடன் வெறுங் கால்களிலும் சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சிகளைப் பார்த்துவருகிறோம். கொரோனா பேரிடரின் போதும் பெருமுதலாளிகளுக்கு 68,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் நடுவண் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் மிக மோசமாக புறக்கணித்தது.

முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும்  தொழிலாளர்களைக்  காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடெங்கிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்த வரலாற்றுத் துயர்மிக்க நடைபயணத்தில் மட்டுமே சுமார் 300 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமடைந்துள்ள செய்திகள் வந்துள்ளன. இன்றும் மரணங்கள் நின்றபாடில்லை. இரயில் விபத்திலும் சாலை விபத்திலும் புலம்பெயர் தொழிலாளர்கள் சாவது நாட்டின் அன்றாட செய்தியாக இருக்கிறது. வேலையும் இல்லாமல், உணவும் தண்ணீரும் இல்லாமல், நோய்த் தொற்று அபாயம் என்ற அச்சத்துடன் சொந்த ஊர்களுக்கு  செல்லமுடியாமலும் தவிக்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை நாளுக்குநாள் மோசமாகிவருகிறது.

முதல், இரண்டு சுற்று ஊரடங்கு காலத்தில் நடுவண் – மாநில அரசுகளோ புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டுங்காணாமல், பொத்தாம் பொதுவாக வீட்டிற்குள் முடங்கியிருப்பதையே வலியுறுத்தி வந்தன. பல்வேறு தரப்பிலும் இருந்து எழுந்த எதிர்ப்பிற்குப் பின்புதான் நடுவண் அரசு மூன்றாம்சுற்று ஊரடங்கின் தொடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதித்து இரயில்போக்குவரத்துக்கான ஏற்பாட்டை அறிவித்தது. ஆனால் இரயில் கட்டணத்தைத் தொழிலாளர்களே கொடுக்க வேண்டும் என முதலில் அறிவிப்பு வெளியிட்டது.  வெறுங்கையோடு இருக்கும் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பொறுப்பைக்கூட நடுவண் அரசு ஏற்கத் தவறியது. தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தைக் காங்கிரசு கட்சி ஏற்கும் என்ற அறிவிப்பு வந்தவுடன் பயணக் கட்டணத்தில் 85 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்கும் (இதுவும்கூட ஒருவித ஏமாற்று என்பது வேறு கதை) என்றும் 15 விழுக்காட்டை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்பும் விசயத்தில் நடுவண் அரசு, மாநில அரசு, எதிர்க்கட்சி என மக்களைப் பந்தாடும் விளையாட்டு நடந்தது. இதில் மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநில அரசுகள் கொரோனாவின் பெயரால் புலம்பெயர் தொழிலாளர்கள் தம் மாநிலத்திற்கு வருவதற்கு ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் உற்பத்தியைத் தொடங்கவேண்டும் என்பதால் இவர்களை ஊருக்கு அனுப்புவதில் பெருநிறுவன முதலாளிகள் தடைபோடத் தொடங்கினர். “வேலையும், வருமானமும் இல்லாதபோது ஊருக்கு போகவேண்டும் என தொழிலாளர்கள் கூறிவந்தார்கள், தற்போது வேலை உள்ளபோது தொழிலாளர்கள்  ஏன் செல்ல வேண்டும். “  என கட்டுமானத் துறை  முதலாளிகள் சங்கமும்(CREDAI)  ரியல் எஸ்டேட் முதலாளிகளும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்த  எண்ணுகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றாலும் தமிழகத்தில் உள்ள மனித வளத்தைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியும். ஆனால், மிக குறைந்த கூலியில் புலம்பெயர் தொழிலாளர்களை ஓட்டச் சுரண்டுவது போல் உள்ளூர் தொழிலாளர்களைச் சுரண்ட முடியாது. முதலாளிகளின் இந்த இலாப வெறிக்கு துணை செய்வதற்காக ஒவ்வொரு மாநில அரசுகளும் இரயில்களை தாமதப்படுத்துவது, தொழிலாளர்களை மிரட்டுவது, ’தொழிலாளர்களை அழைக்க வேண்டாம்’ என அந்தஅந்த மாநில முதல்வர்களிடம் வேண்டுகோள் விடுப்பது எனப் பலவகையான அட்டூழியங்களைச் செய்து வருகின்றன. இதற்கு தமிழக அரசும் விதிவிலக்கல்ல.

15 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில் மிக குறைந்த எண்ணிக்கையையே கணக்கில் காட்டுகிறது தமிழக அரசு. சில ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். குறிப்பாக, சென்னை குருநானக் கல்லூரியில் அசாமைச் சேர்ந்த தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 5000 க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப் பட்டுள்ளனர். வேளச்சேரி, போரூர், பெருங்களத்தூர், மறைமலைநகர், இருங்காட்டுக்கோட்டை, ஈசிஆர், பல்லாவரம், மாதவரம், ஒரகடம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட  பகுதிகளில் ஏராளமானவர்கள் உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே சுமார் 2 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கக் கூடும். இவர்களுக்கான இரயில்கள் என்று பார்த்தால்,  ஒரு ரயிலில் 1200 பேர் என்று கணக்கிட்டால், இவர்கள் எல்லோரும் சொந்த ஊர் செல்ல விரும்பும் பட்சத்தில் 2 இலட்சம் பேருக்கு சுமார் 160 இல் இருந்து 200 இரயில் பயணம்வரை தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் எந்தஎந்த மாநிலத்தை சேர்ந்தோர் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்ற  கணக்கெடுப்பைக்கூட நடத்தி முடித்ததாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 8000 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் 11 ஆம் தேதியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டது. மீதமுள்ளவர்கள் ஒருவாரத்திற்குள் அனுப்பிவைக்கப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. தற்போது ஐந்து நாட்கள் கழித்து 16 ஆம் தேதியிட்ட செய்தி அறிக்கையில் 55,473 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்குள்  புலம்பெயர் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்துபோய் மீண்டும் தங்கள் கால்களை நம்பி நடக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு பகுதியினர் சாரை, சாரையாக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் நோக்கி நடக்க தொடங்கிவிட்டார்கள். 50 நாட்களாக இந்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடுவண் – மாநில அரசுகள் மறுக்கின்றன.

இது மிகுந்த கண்டனத்திற்குரியது. தொழிலாளர்கள் மீதான சுரண்டல் என்பதையும் தாண்டி அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதாகும். தனக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒருவர் உணரும்போது கோடி ரூபாய் கொடுத்தால்கூட அவர்களைத் தங்க வைக்க முடியாது. அவர்கள் நடந்தாவது சொந்த ஊர் செல்வோம் என்ற முடிவை எடுக்கிறார்கள் என்பதே மேலே சொன்ன கூற்றுக்கான இரத்த சாட்சி.

கொரோனாவின் பெயரால் கொத்தடிமைத் தனத்தை நாங்கள் வேடிக்கைப் பார்க்க வேண்டும் என்று தமிழக அரசு எதிர்ப்பார்க்கிறதா? புலம்பெயர்தொழிலாளர் சொந்த ஊர் செல்வதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இரயில் பயண ஏற்பாடுகளை செய்யவில்லை  என்றால் இந்த மனிதப் பேரவலம் தொடர்ந்து கொண்டே போகும். நாட்டிலுள்ள நகரங்களின் வானுயரக் கட்டிடங்களிலும் சாலைகளிலும் பேருந்துகளிலும் இரயில்களிலும் இரயில் தடங்களிலும் உயிர்த்துடிப்புடன் இருந்துகொண்டிருப்பது இந்த தொழிலாளர்களின் உழைப்புத்தான். அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் வரலாற்று அநீதியாக இது அமைந்துவிடும் என்று சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, தமிழக அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான பயண ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதில் தமிழக அரசுக்கு துணை செய்வதற்கு தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரையும் உள்ளடக்கிய குழுக்களை அமைக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் பணிசெய்த இடத்தில் தரப்படாமல் இருக்கும் சம்பள பாக்கி கொடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். செண்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்துக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு உணவையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

 

பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

பேராசிரியர் எச். ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

ராஜீ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

பேராசிரியர் அ.மார்க்ஸ், தலைவர், NCHRO

கொளத்தூர் தா.செ. மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

நெல்லை முபாரக், மாநிலத் தலைவர், எஸ்.டி.பி.ஐ

தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

நித்தியானந்த் ஜெயராமன், சூழலியல் செயற்பாட்டாளர்

கோவை இராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்

அரங்க. குணசேகரன், பொதுச் செயலாளர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

  1. முகம்மது சேக் அன்சாரி, மாநிலத் தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,

நாகை திருவள்ளுவன், தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி

வ.கீதா, எழுத்தாளர்

துரை சிங்கவேல், தலைவர், மக்கள் சனநாயக குடியரசு கட்சி

ஜெ.சிதம்பரநாதன், பொதுச்செயலாளர், CPML மக்கள் விடுதலை

பேராசிரியர் சிவக்குமார்

பேராசிரியர் லட்சுமணன், MIDS

தமிழ்நேயன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் கட்சி

அருண்மொழிவர்மன், தலைவர், மக்கள் அரசு கட்சி

ஏ.எஸ். குமார், இடது தொழிற்சங்க மையம்

கருப்பையா, தலைவர், தலித் விடுதலை இயக்கம்

குணாளன், சி.பி.ஐ. எம்.எல்

தமிழரசன், தலைமைக் குழு உறுப்பினர், தமிழ்த்தேச குடியரசு இயக்கம்

சுஜாதா மோடி, New Trade Union Initiative

சித்தானந்தம், சி.பி.ஐ.(எம் – எல்)

பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

செல்வமணியன், தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி

தமிழ்ச்செல்வன்,  சி.பி.ஐ. (எம் – எல்) ரெட் ஸ்டார்

பிரபாகரன் சக்திவேல், தமிழ்த்தேசிய பாதுகாப்பு இயக்கம்

மாந்தநேயன், தொழிலாளர் போராட்ட இயக்கம்

சந்திரிகா, மேக்னா, வெங்கட் – தொழிலாளர் கூடம்

மா.சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்

ஜே.வி. ஸ்டாலின், முற்றம்

மருதுபாண்டியன், சோசலிச மையம்

மாதவ் கட்டா, பதிப்பாளர்

பாரி, செயலர், தமிழ்த்தேச இறையாண்மை

ஆர்.ஆர். சீனிவாசன், சூழலியல் செயற்பாட்டாளர்

இராமானுஜம், எழுத்தாளர்

சண்முகானந்தம், சூழலியல் எழுத்தாளர்

பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி

 

 

தொடர்பு: 9941931499

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW