உடலை மாற்றி அமைக்கும் கரோனா கிருமி
கரோனா கிருமியை முன்வைத்து நம்முடைய உடல் ஒருவிதமாக மாற்றி அர்த்தப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனித உடலும் அதன் கட்டமைப்பின் வெளித் தோற்றத்தில் எல்லை கொண்டிருப்பதாக இருக்கிறது. உடலின் எல்லை சார்ந்தே ‘நான், நீ’ போன்ற வரையறைகள் சாத்தியப்படுகின்றன. உடல் அதன் உள்ளியல்பில் கொண்டிருக்கும் எல்லையைக் விரிவாக்கம் செய்ய முயல்வதே மானுடச் செயலாகிறது. அதாவது, நாம் ஒரு செயலைச் செய்வதற்கு நம்முடைய உடலின் உள்ளார்ந்த எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஒரு சிற்பம் செதுக்குவதாகட்டும், பாலியல் உறவில் ஈடுபடுவதாகட்டும், மூட்டை தூக்குவதாகட்டும் – உடல் எல்லையை விரிவாக்கம் செய்யாமல் நாம் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது. கரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது என்பது நம்முடைய உடல் எல்லையைத் திடமாகச் சுருக்கிக்கொள்வதாகிறது. அதாவது, உடல் சுதந்திரமாக இயக்கம் கொள்வதைத் தடைசெய்ய வேண்டியுள்ளது. எதைத் தொட்டாலும் சந்தேகம் கொள்வதும், வேறு வழியில்லாமல் தொட நேர்ந்தால் நம்மை ‘சுத்த’ப்படுத்திக்கொள்வதும் தற்பாதுகாப்பாக முன்வைக்கப்படுகிறது. இதை நாம் வெறுமனே நோய் தொடர்பான ஒன்றாக மட்டுப்படுத்திப் பார்க்க முடியாது.
உடலை நாம் வரையறுப்பதற்கும் சமூகத்தை வரையறுப்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை என்கிறார்கள் பல ஆய்வாளர்கள். சமூகத்தை உடல்ரீதியாகவே அர்த்தப்படுத்துகிறோம். அதாவது, நாம் உடலை அர்த்தப்படுத்தும் முறையும், சமூகத்தை அர்த்தப்படுத்தும் முறையும் ஒரே சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. பண்டைய இந்தியாவில் பார்ப்பன, பெளத்தச் சிந்தனைகள் பெருமளவுக்கு உடலையும் குடும்பத்தையும் சமூகத்தையும் ஒத்த தளத்திலிருந்தே அணுகின. எடுத்துக்காட்டாக, சம்சாரப் பொறுப்புகளிலிருந்து விடுதலை பெறுவதை அசுத்தங்களிலான இந்த உடலிலிருந்து விடுதலை பெறுவதோடு இணைத்தே பார்த்தன. ஆக, என்னுடைய அக்கறை கரோனாவை முன்வைத்து வரையறுக்கப்படும் உடல் எத்தகைய சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான். நம்முடைய உடலை நாம் சுருக்கிக்கொள்வது என்பது அடிப்படையில் ஜனநாயகச் சிந்தனைகளுக்கும் எதிரானது. சுதந்திரமான உடல் இயக்கமே சமூக அடிப்படையாகிறது. போராடுவதாகட்டும், உற்பத்தியாகட்டும், அரசை விமர்சித்து எழுதுவதாகட்டும் எல்லாமே உடலின் சுதந்திரமான இயக்கத்தோடு தொடர்புகொண்டவை. தீண்டாமை நடைமுறை ஒருவிதமாய் உடலைச் சுருக்குகிறது என்றால், சுத்தம்-அசுத்தம் அடிப்படையிலான கருத்தமைவுகள் வேறுவிதமாய் உடலைச் சுருக்குகின்றன. கரோனா முன்வைக்கும் உடலும் சுத்தம்-அசுத்தம் சார்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.
கொள்ளைநோய்களை நாம் இந்த அடைப்படையிலேயே அணுகியுள்ளோம். ஆனால், கரோனா அரசுமைய நோயாக மாற்றப்படுகிறது. இது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, புலம் பெயர்ந்த தொழிலாளிகளை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் எந்த நம்பிக்கையில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணிபுரிகின்றனர்? நாம் இந்தியக் குடிநபர் என்ற நம்பிக்கையில்தான். இந்த நம்பிக்கை இல்லாமல் இடப்பெயர்வு சாத்தியமில்லை. ஆனால், இந்த நம்பிக்கை தவிடுபொடியாக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநிலம் சார்ந்த தொழிலாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றன. இந்திய அரசு அவர்களை முற்றிலுமாகக் கைகழுவுகிறது. இப்போது அவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட்டால் பொருளாதாரம் படுத்துவிடும் என்று கவலைப்படும் அரசாங்கங்கள் அவர்களை அநாதைகளைப் போல் நடத்தியதை மறைக்கவே விரும்புகிறது. ஏனெனில், மாநிலங்கள் அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் இருப்பதுபோல் இந்திய அரசு சார்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளிகள் என்று எவரும் கிடையாது. இந்திய அரசு சார்ந்து இருப்பது இந்தியக் குடிநபர்கள்தான். ஒன்றிய அரசு அனைத்துப் புலம்பெயர்ந்த தொழிலாளிகளையும் இந்தியக் குடிநபர்களாகக் கருதியிருக்க வேண்டும். துயரம் என்னவென்றால், அந்தப் பொறுப்பிலிருந்து அது தவறிவிட்டது. இதன் விளைவாக, நிர்க்கதியான புலம்பெயர்ந்தவர்கள் தொழிலாளி என்று அடையாளப்படுத்தப்படாமல், இந்தியக் குடிநபர் என்று அடையாளப்படுத்தப்படாமல் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மருத்துவ வசதிகள் பெறுவதிலும் உணவு பெறுவதிலும் இந்தப் பாகுபாடு வெளிப்பட்டதாகக் களப்பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கரோனா மாநில எல்லைகளை திடப்படுத்தியதுபோலவே முன்னரே காணப்படும் பிற எல்லைகளையும் திடப்படுத்துகிறது. தனிமனிதர் அவரது உடல்ரீதியான எல்லையைத் திடப்படுத்தும்போது, அது குடும்ப எல்லையைத் திடப்படுத்துகிறது, கிராம எல்லையைத் திடப்படுத்துகிறது, நகர எல்லையைத் திடப்படுத்துகிறது, மாவட்ட எல்லையைத் திடப்படுத்துகிறது, மாநில எல்லையைத் திடப்படுத்துகிறது, தேச எல்லையைத் திடப்படுத்துகிறது. இதன் விளைவாக, கரோனா நோயை மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதிலிருந்து தன்னுடைய அதிகாரத்துக்கு எதிரான ‘யுத்தமாக’ இந்திய அரசு மாற்றிவிட்டது. அதனாலேயே மருத்துவர்களும் செவிலியர்களும் பிற மருத்துவப் பணியாளர்களும் முன்னனிப் படைவீரர்களாக விவரிக்கப்படுகிறார்கள். நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமே அரசின் நோக்கமாக இருந்திருந்தால் என்னுடய உடல் என்னுடையதாக இருந்திருக்கும். ஆனால், என்னுடைய உடல் என்னிடமிருந்து பறிக்கப்பட்டு அதன் மீதான முழு அதிகாரத்தை அரசு எடுத்துக்கொள்கிறது. என் உடல் மீதான என் உரிமையை நான் இழந்த பிறகு, என்னுடைய உடலையும் எனக்கு அருகில் இருக்கும் மற்றொரு உடலையும் அரசு அர்த்தப்படுத்தும் முறையிலேயே அர்த்தப்படுத்த வேண்டியுள்ளது. இதில் ‘நான், நீ’ போன்றவை அறிவறிதல் சார்ந்திராமல் தோற்றவெளி சார்ந்த ஒன்றாகிறது. இது நமது எல்லா சிந்தனை வடிவங்களிலும் பிரதிபலிக்கக்கூடியதாக மாறுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், மாநில எல்லைகள் மட்டுமல்லாமல் ஏற்கெனவே இருக்கும் சாதிரீதியான எல்லைகள், வர்க்கரீதியான எல்லைகள், மதரீதியான எல்லைகள் எல்லாம் இறுகிய தன்மையை அடைகின்றன. இஸ்லாமியர் என்பதால் மருத்துவம் பார்க்க சில மருத்துவமனைகள் மறுப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது அரசியல்ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கும் எல்லை சமூகரீதியாகவும் இறுகியதையே வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் தடித்த தேசியவாதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால் மறுபுறம் பல வேறுவிதமான எல்லைகள் இறுகிப்போகின்றன.
இந்தியாவைப் பொறுத்தமட்டில், நாம் பல வருடங்களாகப் போராடி உருவாக்கிய ஜனநாயக விழுமியங்கள் கரோனாவை முன்வைத்து அழிக்கப்படுகின்றன. நாம் இந்த நோயிலிருந்து நிச்சயமாக விடுபடுவோம். பொருளாதாரரீதியான பாதிப்புகளிலிருந்தும் நாம் நிச்சயமாக விடுபடுவோம். ஆனால், இந்த நோய் சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளிலிருந்து விடுபடப் பல காலம் எடுக்கும் என்றே தோன்றுகிறது. பொருளாதாரரீதியாக சமூகம் பின்தங்கிப்போகக் கூடாது என்ற வாதம் எவ்வளவு நியாமானதோ அதே அளவுக்கு அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் நாம் பின்தங்கிவிடக் கூடாது. இதற்கு நம் உடல் மீதான நம் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். நம் உடலை நாம் மீட்டெடுக்காமல் நம்மால் கரோனாவை முன்வைத்து உருவாக்கப்படும் சிக்கல்களிலிருந்து விடுபட முடியாது.
–சீனிவாச ராமாநுஜம்