‘வளைகுடா’ வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியும், உடனடி கோரிக்கைகளும்

10 May 2020

உனக்கென்னப்பா வெளிநாட்டில் வேலை பார்க்குற’ என்கிற எள்ளல் குரல்களும், எல்லாம் ஃபாரின் காசு எனும் எகத்தாளமும், வெளிநாட்டில் வேலைபார்க்கும் இந்தியர்கள் சந்திக்காத சூழலே இருக்காது. புள்ளி விவரங்களின் படி, உயர்கல்வி கற்று உயர் பதவிகளில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒட்டுமொத்த விகிதத்தில் வெறும் 14% பேர் மட்டுமே. மீதமுள்ள நடுத்தரப் பதவிகளிலும், பணிகளிலும், கீழ்நிலை, துணை நிலைப் பணிகளிலான, லேபர் பணிகளான கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என இவர்களே இந்திய வெளிநாட்டுப் பணியாளர்களாக இருக்கின்றனர்.
பணிபுரிபவர்களைத் தாண்டி சிறு  தொழில் செய்பவர்கள், உணவகங்கள், பலசரக்கு கடைகள், ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் வைத்திருந்தவர்கள், தனித்திறன் தொழில் புரிந்தவர்கள் என அத்தனை பேரின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது கொரோனா.

2017-ம் ஆண்டின் கணக்கின்படி வெளிநாட்டில் இருந்து அதிக பணம் பெற்ற நாடுகளில், 6,900 கோடி டாலருடன் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 4 லட்சத்து, 55 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் ஆகும். அவ்வகையில் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களால் இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி இருப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அந்நியச் செலாவணி  எவ்வளவு அதிகம் இருக்கிறதோ, அந்த அளவு, அந்த நாடு செல்வ மதிப்பில் உயர்ந்து நிற்கிறது.

இன்றைக்கு இந்தியாவில் இருந்து பணிக்காக, புலம் பெயர்ந்தோர் அதிகம் இருக்கும் போது மற்ற நாடுகளை விட தாயகத்திற்கு அதிக பணம் அனுப்பும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. தற்போது உலகப் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் வேளையில் வெளிநாட்டு வேலைகளும், ஊதியமும் குறைந்து இந்தத்தொகை உள்நாட்டிற்கு வரும் அளவு குறைந்திருக்கிறது. ஆக இந்திய அரசு தனது சொந்த மக்களுக்கு வாழ்வளிக்காத நிலையில் வெளிநாட்டில் வேலை செய்யும் மக்கள் தமது நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பைக் கூட்டி வருகிறார்கள். இந்த எண்ணிக்கையில் குறிப்பிடும்படியான வளைகுடா வாழ் இந்தியர்களில் மலையாளிகளும் தமிழர்களுமே அதிகம். பல லட்சம் இந்தியர்கள் வசிக்கும் வளைகுடா நாடுகளில் நம்மவர்களே பிரதானம். இப்போது இவர்கள் தான் ஏதிலிகளாக (அகதிகளாக) ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா சூழலால் பெருநிறுவனங்களிலும், சிறு நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த அனைவரின் வேலைகளும் பறிபோகும் நிலை உள்ளது. பெரிய நிறுவனங்களோ கடந்த இரண்டு மாதங்களாக சம்பளத்தின் பெரும் பகுதியை குறைத்துத் தருகிறது. சிறு நிறுவனங்களோ சம்பளத்தையே நிறுத்திவிட்டது.
இன்னும் சில பெருநிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிந்த அனைத்து வெளிநாட்டினரையும் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது.

தொழில் புரிந்து வந்தவர்கள் வங்கிகளில் வாங்கியக் கடன்களை திரும்பச் செலுத்த முடியாமலும், லாக்டவுன் காலத்தில் தொழிலும் தொடர முடியாமல் பெரும் நஷ்டத்தில் விழி பிதுங்கி இருப்பவர்கள் என கிட்டத்தட்ட ஏதிலிகளாக இருக்கும் நிலையை கொரோனா உண்டாக்கிவிட்டது.

அவரவர் நிலைக்கு தகுந்தவாறான பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது. பணியிழந்தவர்களின் வாழ்வாதாரம், தொழில் இழந்தவர்களின் வாழ்வாதாரம், கட்டிடத் தொழிலாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் என பணியிழந்தவர்கள், சம்பளம் இல்லாமல் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தட்டுப்பாடிலும் கடும் மன உளைச்சலிலும் இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தான், தற்போது அரசாங்கம் நாடு திரும்புபவர்களின் பட்டியலைக் கேட்ட போது பெருவாரியாகப் பதிவு செய்தவர்கள்..

இப்படிக் கடும் மன உளைச்சலில் இருக்கும் வளைகுடா வாழ் இந்தியர்களை மீட்பதற்கு .. மெகாத் திட்டம்.. 64 விமானங்கள்.. 5 லட்சம் இந்தியர்கள்.. Mass Evacuation.. Mass Repatriation என்றெல்லாம் விளம்பரப்படுத்தப் படுகிற இந்த மீட்பு நடவடிக்கையை அரசு கையாளும் முறை அக்கறையால் நடத்தப்படுவதாக அறிய முடியவில்லை.

சராசரியாக வளைகுடா நாடுகளில் இருந்து கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் விமான நிலையங்களுக்கும் பயணிக்க.  ஒரு வழிப்பயணச் சீட்டின் விலை 6000 ரூபாயிலிருந்து 8000 ரூபாயே ஆகும். குறிப்பாக துபாய் – மஸ்கட் போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களிலிருந்து சென்னை வரைக்குமான பயணக் கட்டணம் குறைந்த அளவு 5900 ரூபாயிலிருந்தே துவங்குகிறது.  ஆனால் தற்போது மே 9 மற்றும் 12 அன்று மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கும், சென்னைக்கும் இயக்கப்படும் விமானப் பயணத்திற்கு இந்திய மதிப்பில் 14000 ரூபாயை பயணச்சீட்டின் விலையாக நிர்ணயித்திருக்கிறது. அதே போல் துபாய் / அபுதாபியிலிருந்து கேரளம் செல்வதற்கு 15000 ரூபாயும் அதைச் செலுத்த முடிபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது, சாகும் நேரத்திலும் சாவதற்கு டோக்கன் போட்டு சாகடிப்பதாகத் தெரிகிறது. இது எல்லா பிறநாடுகளுக்கும் பொருந்தும். கட்டணப்பட்டியல் அனைத்தும் சராசரியான காலத்தில் பயணம் செய்ய ஆகும் கட்டணத்தை விட இரட்டிப்பாகவே வசூலித்து வருகிறது.
இதைவிடக் கொடுமை விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொரோனாவினால் கேன்சல் ஆன பழைய டிக்கெட்டை (அவர்கள் refund செய்யாத டிக்கெட்டைக் கூட) இந்த மீட்பு நடவடிக்கை விமானத்திற்கு பயன்படுத்த முடியாதாம். நண்பர் ஒருவர், கடந்த மாதம் முன்பதிவு செய்து வைத்திருந்த டிக்கெட். விமான நிறுத்தத்தால் கேன்சல் ஆகி, இப்போது தனக்கு டிக்கெட் வேண்டி தொடர்பு கொண்ட போது, தற்போதைய விமானப் பயணப் பட்டியலில் பெயர் இருக்க வேண்டுமெனில் மீண்டும் பணம் கட்ட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி அவர் மீண்டும் 14000 ரூ கட்டிய பிறகே அவருக்கு இடமளித்திருக்கிறது.

அதுவும் போக, பயணம் செய்யும் அனைவரும் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில், அதற்கும் ஒரு நாளுக்கு 3000 ரூ முதல் 5000 ரூ வரை கட்டணம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த பயணிகளின் சொந்த ஊர் திரும்புதலுக்கு ரயில் கட்டணத்தையும் வரையறுத்து அறிவித்த மத்திய அரசு, சோனியா காந்தி அவர்கள் அந்தக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்று சொன்னவுடன், வேகவேகமாக அந்தக் கட்டணங்களின் 85% ஒன்றிய அரசும் மீதம் 15% மாநில அரசும் ஏற்கும் என்று அறிவித்தது.

இதையெல்லாம் “மீட்பு நடவடிக்கை” என்று பெயர் சொல்வதே அரசுக்கு இழுக்கானது. ஆனால் இந்திய அரசோ இதற்கு வந்தே பாரத்’ என்று பெயரை வைத்து விட்டது.

சொந்த மக்களை அவர்களுடைய சொந்தக் காசில் அழைத்து வருவதற்கு அரசாங்கம் ஒரு பெயர் வைப்பதெல்லாம் எந்த நாட்டிலும் நடக்குமா என்று தெரியவில்லை. இந்த வந்தே பாரதம் என்பது அரசாங்கம் மக்களுக்குத் தரும் அதிசயமான ஒரு சலுகை போல எல்லா அமைச்சர்களால் கொண்டாடப்படுகிறது.

மத்திய அரசின் PM Cares Fund ல் வந்த பணம் எதற்கு உபயோகிக்கப்படுகிறது ? அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய GST நிலுவைத் தொகையையும் வழங்காமல், கேட்கப்படுகின்ற நிவாரணத் தொகையும் வழங்காமல், துயருற்றிருக்கும் மக்களிடமே மீண்டும் மீண்டும் பணம் வசூலிப்பது எவ்வகையில் ஏற்றுக் கொள்ள இயலும்..?

இது ஒரு ‘நடவடிக்கை’ என்ற வகையில் பாராட்டினாலும் கூட, அடுத்தக் கட்ட வாழ்வாதாரத்துக்கே  பெரும் மன உளைச்சலில் அல்லல்படும் கடைநிலைப் பணியாளர்களால், சம்பளம் வராமலும், கடன் வாங்கி பணி சேர்ந்தவர்களும், தாங்கள் வாங்கும் மாத சம்பளம் வைத்தே குடும்பத்தின் நிலையைக் கடைத்தேற்றும் நிலையில் உள்ளவர்களிடமும், நீ ஊருக்கு திரும்பி வர விரும்பினால் 15000 ரூ இருந்தால் வா என உரைப்பது கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்கப்போகும் மாட்டிடம் அதன் மடியில் எவ்வளவு பால் கரக்கமுடியும் எனப் பார்க்கும் மாட்டின் உரிமையாளன் மனநிலை தான் அரசுக்கும் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

இந்திய அரசால் தொடங்கப்பட்டிருக்கிற இந்த மீட்பு நடவடிக்கைகளில், கீழுள்ள கோரிக்கைகளை வலியுறுத்துகிறது “ஒமான் தமிழ் குழுமம்”

கோரிக்கைகள் ;

# அழைத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது..!!!

#கட்டாயத் தனிமைப்படுத்துதலுக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது..!!!

#வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களின் தற்காலிக இருப்பிடம், உணவு மற்றும் அவர்களின் பாதுகாப்பை அந்தந்த நாட்டின் இந்தியத் தூதரகம் மூலம் அவர்களின் பயணம் உறுதியாகும் வரை உறுதிப்படுத்த வேண்டும்…!!!

#வெளிநாட்டில் தொழில் புரியும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு துணை நிற்க வேண்டும்…!!!

#பேரிடரால் வேலையிழந்தவர்களின் NRI கடன்கள் தற்காலிகமாக வசூலிப்பதை நிறுத்தி, மீண்டும் பணிக்குத் திரும்பியப் பிறகே அவர்களிடம் கடன் வசூலிக்கப்பட வேண்டும்..!!!

– மாரி இள செந்தில்குமார், ஒமான் தமிழ் குழுமம்
+968 94695197

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW