விசவாயு மரணங்கள் – மாசுக்கட்டுப்பாடும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எங்கே போயிற்று ?

08 May 2020

நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட விசவாயுக் கசிவால் இதுவரை குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர், ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் இருந்து சுமார் 10,000 மக்களை அப்புறப்படுத்தியுள்ளது ஆந்திர அரசு.

என்ன நடந்தது?

கடந்த 1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் என்னும் நிறுவனம் 1978 ஆம் ஆண்டு யூ.பி குழுமத்தின் மெக்டொவல் அண்ட் கோ. லிமிட்டட் நிறுவனத்துடன் இணைந்தது. பின்னர், கடந்த 1997, ஜூலை மாதம், ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தென்கொரிய நிறுவனமான எல்.ஜி. கெம் வாங்கியது. பின்னர் அந்நிறுவனத்திற்கு எல்.ஜி. பாலிமர்ஸ் என பெயர் மாற்றப்பட்டது. பிளாஸ்டிக் மற்றும் செயற்கை நார் தயாரிக்கும் இந்நிறுவனம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள ஆர்.ஆர். வைகுண்டபுரம் பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில், ஞெகிழி உற்பத்தி செய்யப் பயன்படும் ஸ்டைரீன் எனப்படும் திரவம் சேமிப்புத் தொட்டியிலிருந்து கசிந்து, சுற்றியுள்ள பகுதிகளில் பரவத் தொடங்கியது. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியே ஓடத் துவங்கினர்.  பலர் வீதிகளிலேயே மயங்கி விழத் தொடங்கினர்.

இவ்விசவாயுக் கசிவால், எட்டு வயது பெண் குழந்தை உட்பட 13 பேர் வரை இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. தேசியப் பேரிடர் மீட்புப் படை வரவழைக்கப்பட்டு, நேற்று மதியம் சுமார் 2:30 மணி அளவில்தான் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப் பட்டுவிட்டதாகவும், காற்றில் கலந்துள்ள விசவாயுவை மட்டுப்படுத்திவிட்டதாகவும் ஆந்திர அரசு அறிவித்தது

எல்.ஜி. கெம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டைரீன் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டியுடன் இணைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பிரிவில் ஏற்ப்பட்ட  கோளாரால் இவ்விபத்து நிகழ்ந்ததாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வி. வினய் சந்த் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு(07-05-2020) 12 மணி அளவில் மீண்டும் விசவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், விசாகப்பட்டினம் நகரத்திற்கு முக்கிய  குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேகாத்திரி கெட்டா நீர்த்தேக்கம் எல்.ஜி. கெம் நிறுவன வளாகத்திலிருந்து வெறும் 2 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளதால் குடிநீர் மாசுபடும் நிலையும் உருவாகியுள்ளது.

அரசின் பதில் நடவடிக்கைகள் என்ன?

ஆந்திர மாநில அரசு, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தலா ரூ. 1 கோடி தருவதாக அறிவித்துள்ளது. விசவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டி ஆய்வு நடத்தியதோடு, தேசிய பேரிடர் மீட்புப் படையை அனுப்பி வைத்தது. இவ்விபத்து குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இவ்விபத்து குறித்து இன்று(08/05/2020) விசாரிக்கும் எனவும் அறிவித்துள்ளது.

யார் பொறுப்பு?

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில், தென் கொரிய நிறவனமான எல்.ஜி. பாலிமர்ஸ் விரிவாக்கம் செய்ய ஆந்திரப் பிரதேச மாசு கட்டுப்பாடு வாரியம் எவ்வாறு அனுமதி அளித்தது  என்று இந்திய அரசின் முன்னாள் செயலாளர் மருத்துவர் இ.ஏ.எஸ் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திர முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாசு கட்டுப்பாடு வாரியம் மாநில அரசிடம் இருந்தோ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தோ அனுமதி பெறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா காலத்தில் அனைத்து ஆலைகளும் மூடப்பட்ட நிலையில் ஞெகிழி (பிளாஸ்டிக்) தயாரிக்கும் நிறுவனமான எல்.ஜி. பாலிமர்ஸ் அத்தியாவசிய நிறுவனம் என வகைப்படுத்தப்பட்டு எவ்வாறு இயங்க அனுமதி அளிக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆந்திர மாநிலத்தில் இதுவரை 30-40 விபத்துகள் நடந்துள்ளதாகவும் அதனால் பொதுமக்களும் தொழிலாளர்களும் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அவ்விபத்துகளுக்குக் காரணமான நிறுவனத்தினரோ அல்லது அரசு அதிகாரிகளோ இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை பெருக்குவதற்கு விதி மீறல்களில் ஈடுபடுவதும், அதன் காரணமாக இது போன்ற விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகியுள்ளது. மருத்துவர் இ.ஏ.எஸ் சர்மா சுட்டிக்காட்டியதைப் போல, இதுபோன்ற விபத்துகள் நடக்கும் வேளையில், குறிப்பிட்ட நிர்வாகத்தினரைக் காப்பாற்றவே செய்கின்றன. ஒரு வேளை மக்கள் போராட்டங்களாலோ அல்லது பொது அழுத்தத்தாலோ வழக்குகள் போடப்பட்டாலும், அவை ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை எடுத்துக் கொள்ளலாம். ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் தூத்துக்குடி மக்களுக்கு புற்று நோய் உட்பட பல ஆபத்துகள் உண்டாகின்றன என்பதற்கு பல சான்றுகள் கிடைத்து பிறகும், மாசுபடுத்தலில் ஈடுபட்ட ஆலையை மக்கள் கோரிக்கையை ஏற்று மூடுவதற்கு பதிலாக, போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தமிழக அரசு. மத்திய அரசின் தேசிய பசுமை தீர்ப்பாயமோ, துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ஏற்பட்ட அழுத்தத்தால் அவ்வாலாயை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்தது.

இவ்வாறாக, இலாப நோக்கில் விதிகளை மீறும் பெரு நிறுவனங்களுக்குப் பல்லக்கு தூக்குவதையே மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு செய்து கொண்டிருக்கின்றன.

கொரோனா பெருந்தொற்றால் 50,000க்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்ட நிலையிலும், பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கும் இவ்வேளையிலும், சுற்றுச்சூழலை பாதிக்கும் பல திட்டங்களுக்கு அவசர கதியில் ஒப்பதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணத்தால் சரியான ஆய்வு மேற்கொள்ள முடியாத நிலையும், பாதிப்புள்ளாகும் மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க இயலாத நிலையும் நிலவுகிறது. இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகள் மூலமாக முக்கியமான பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஒரு பக்கம், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெருநிறுவனங்களின் விதி மீறலை கண்டு கொள்ளாமல் இருப்பதும், மறுபக்கம் சட்டங்களை வளைத்தும், நிகழும் பெருந்தொற்று சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான, மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய திட்டங்களை மக்கள் தங்கள் கருத்தை முன்வைக்க விடாமல் செயல்படுத்த அனுமதி அளித்து வரும் மத்திய – மாநில அரசுகளே இவ்விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்.

-பாலாஜி

 

https://thewire.in/the-sciences/vizag-plant-gas-leak 

http://www.lgpi.co.in/

https://newsmeter.in/how-did-appcb-grant-consent-to-lg-polymers-eas-sarma-asks-ap-govt/

https://scroll.in/article/961214/indias-environment-ministry-is-in-a-hurry-to-clear-191-projects-amid-coronavirus-crisis

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW