நிரம்பி வழியும் கொரோனா வார்டுகள் – பாதிக்கப்பட போவது யார்?

05 May 2020

சென்னையில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு என தமிழக அரசால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட வருவாய்த் துறைச் செயலர் திரு இராதாகிருஷ்ணன் (இ.ஆ.ப.) நேற்று ஊடகங்களிடம் பேசும் போது, எவ்வித அறிகுறியும் இல்லாத நோயர்களை மருத்துவமனையில் பராமரிக்க வேண்டியதில்லை, மாறாக கோவிட் பராமரிப்பு மையங்களில்( covid care centre)  தங்க வைக்கலாம் என்று மிகவும் கஷ்டப்பட்டு விளக்கிக் கொண்டிருந்தார். ஊடகவியலாளர்களும் ஏன் மருத்துவமனையில் இடமில்லையா? என்று கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தனர்.  இதன் பின்னணி என்ன?

நோயர்களை மெல்லிய, மிதமான, தீவிரப் பாதிப்புக்குள்ளானோர் என வகைப்படுத்தி கோவிட் பராமரிப்பு மையங்கள் ( covid care centres), நலவாழ்வு மையங்கள் ( covid health centres), கோவிட் மருத்துவமனைகள் ( covid hospitals) ஆகியவற்றில் சிகிச்சை அளிக்குமாறு நடுவண் நலவாழ்வு அமைச்சகம் வழிகாட்டி இருந்தது. பின்னர், ஏப்ரல் 7 அன்று நோயர்களை மிக மெல்லிய( very mild) பாதிப்புக்குள்ளானோர் என்றொரு நான்காவது வகையினமாகப் பிரிந்து அவர்களை அவர்கள் வீட்டிலேயே  பராமரிக்கவும் வழிகாட்டியிருந்தது.

தமிழக அரசு கொரோனா நோயர்களை மெல்லிய, மிதமான, தீவிர என்று மூன்றாக வகைப்படுத்தி அதில் மெல்லிய பாதிப்புக்குள்ளானோரை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளிலும் ( isolation wards) மிதமான மற்றும் தீவிர பாதிப்புக்குள்ளானோரை தேர்வுசெய்யப்பட்ட தீவிர சிகிச்சை மையங்களிலும் பராமரிப்பதென்று முடிவெடுத்திருந்தது. ( பார்க்க – Clinical Management Guidelines for Covid 19  – https://stopcorona.tn.gov.in/sop/ )

கொரோனா சிகிச்சைக்கு என்று தனியான அல்லது பிரத்யேகமான மருத்துவமனைகளை ஏற்படுத்துமாறும் உலக நலவாழ்வு மையமும் நடுவண் நலவாழ்வு அமைச்சகமும் வழிகாட்டியிருந்தாலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் பிரத்யேக மருத்துவமனைகளை உருவாக்கவில்லை. ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளில் ஒரு கட்டிடத்தையோ அல்லது ஒரு வார்டையோ ஒதுக்கி சிகிச்சை அளித்து வருகின்றன. சென்னையில் இராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமாந்தூரார்கள் மருத்துவமனைகளில் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தண்டையார்பேட்டையில் தொற்று நோய் சிகிச்சை மருத்துவமனையிலும் சிகிச்சை தந்து வருகின்றது அரசு. திருச்சி, தஞ்சை, சேலம், கரூர் என பல்வேறு மாவட்டங்களிலும் நான் அறிந்தவகையில் அரசு மருத்துவமனைகளில் ஒரு பிளாக்கையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ ஒதுக்கித்தான் இன்றுவரை சிகிச்சை அளித்து வருகின்றது தமிழக அரசு.

தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஆயிரக்கணக்கில் தயாராக இருக்கிறது என்று அரசு சொன்னாலும் அவற்றை இதுவரைப் பயன்படுத்தவில்லை. மெல்லிய, மிதமான, தீவிர பாதிப்பு A, B, C என நோயர்களை வகைப்படுத்தினாலும் எல்லோரையும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் வைத்து சிகிச்சை அளித்து கொண்டிருந்தது. எண்ணிக்கை குறைவாக இருந்தவரை  இது வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது சென்னையில் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறைத் தாண்டியதும் எல்லா நோயர்களையும் மருத்துவமனையில் வைத்து பராமரிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் கோவிட் பராமரிப்பு மையங்கள் ( Covid Care Centres) என்ற சொல்லையே அதிகாரிகள் உச்சரிக்க தொடங்கியுள்ளனர்.

இப்போது கண்டறியப்பட்ட நோயர்கள் மட்டுமின்றி தொடக்க முதலே கண்டறியப்பட்டவர்களிலும் 85% க்கும் குறையாதவர்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தவர்கள்தான். எனவே, அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதால் கோவிட் பராமரிப்பு மையங்கள் என்ற மருத்துவமனை அல்லாத இடங்களில் பராமரிக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது. உண்மையில் இதற்கு முன்னர் தில்லி சென்று வந்தோராகட்டும், ஊடகவியலாளர்களிடம் ஏற்பட்ட தொற்றாகட்டும் அவர்களிலும் அறிகுறி இல்லாதோரை இப்போது பராமரிப்பதுபோல் கோவிட் பராமரிப்பு மையங்களில் வைத்துத்தான் பராமரித்திருக்க வேண்டும். இதனால், என்ன கெட்டுவிட்டது? என்று அரசு கேட்கக்கூடும்.

அரசு மருத்துவமனையில் ஒரு வார்டையோ அல்லது பிளாக்கையோ ஒதுக்கி அங்கே எல்லா கொரோனா நோயர்களை வைப்பதால் இரண்டு தீமைகள் உண்டு.

  1. அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோரைக் கொண்டு போய் சேர்த்து கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாற்றுவதன் மூலம் கொரோனா வார்டுக்கு வெளியே இருக்கும் பிற நோயாளிகளையும் மருத்துவப் பணியாளர்களையும் நாம் ஆபத்துக்கு உள்ளாக்குகிறோம்.
  2. நம் நாட்டில் 82% புறநோயாளிகளாக தனியாரிடம் சிகிச்சை பெறுகின்றனர். அதே நேரத்தில் சுமார் 50% மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பார்ப்பதற்கு அரசு சேவையை சார்ந்திருக்கின்றனர். அப்படி அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் அடித்தட்டு உழைக்கும் மக்களே ஆவர். இந்த நாற்பது நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிக்கான சேர்க்கைகளை மருத்துவர்கள் தவிர்த்து வந்தனர். ஊரடங்கு காரணமாகவும் கொரோனா அல்லாத வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பெற வேண்டியவர்கள் மருத்துவமனைகளுக்கு வருவதை தள்ளிப் போட்டும் தவிர்த்தும் வந்தனர். நேற்றுக்கூட வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த தாய் – சேய்  பற்றிய செய்தி ஒன்று செய்திதாளில் வந்தது.  புற்றுநோய், காசநோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், மன நலச் சிகிச்சை எனப் பல்வேறு நோய்களுக்காகவும் பல்வேறு உபாதைகளுக்காகவும் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களும் அங்கே தங்கி சிகிச்சைப் பெற வேண்டியவர்களும் பெருமளவில் துன்புற்று வருகின்றனர். இன்னும் பல மாதங்களுக்கு கொரோனாவுடனான போராட்டம் தொடரப் போகிறதென்றால், முறையான கோவிட் பராமரிப்பு மையங்கள், கோவிட் நலவாழ்வு மையங்கள், கோவிட் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வில்லை என்றால் எல்லா சுமையும் அரசு மருத்துவமனைகளில் விழுந்து அதனால் அடித்தட்டு உழைக்கும் மக்களே இழப்புகளை சந்திக்க நேரிடும்.

என்ன செய்ய வேண்டும்?

  1. மெல்லிய, மிதமான, தீவிர பாதிப்பு என மூன்றாக கொரோனா நோயர்களை வகைப்படுத்த வேண்டும். இப்போது இது நடந்துவருகிறது.
  2. மெல்லிய பாதிப்புக்குள்ளானோரை கோவிட் பராமரிப்பு மையங்களில் வைத்தே சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • தற்போது சென்னையில் மாநகராட்சி பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வணிக வளாகம் ஆகியவற்றில் படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால், அங்கே எண்ணிக்கையில் 10 பேருக்கு 1 என்ற அளவிலேனும் சுகாதாரமான  கழிப்பறைகளை ஏற்படுத்துவது கடினமான காரியமாக இருக்கும். குறைந்தபட்சம் அங்கே தற்காலிக கழிப்பறைகளை ஏற்படுத்த முயல வேண்டும். அல்லது, தனியார் ஆண், பெண் விடுதிகள், லாட்ஜூகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவப் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோவிட் பராமரிப்பு மையங்களாகப் பயன்படுத்த வேண்டும்.
  • ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று குணமாகிச் சென்றவர்களைக் கொண்டு தன்னார்வலர் குழுக்களை அமைத்து அவர்களுக்கு ஒரு குறைந்தபட்ச சன்மானத்துடன் இதுபோன்ற கோவிட் பராமரிப்பு மையங்களில் ஒரு மாதத்திற்கு தொண்டாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கலாம். இது மருத்துவப் பணியாளர்களை இம்மையங்களில் ஈடுபடுத்துவதால் ஏற்படக்கூடிய புதிய தொற்றைத் தடுக்கும்.
  1. மிதமான பாதிப்புக்குள்ளானோரை கோவிட் நலவாழ்வு மையங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். தற்சமயம் நலவாழ்வு மையங்கள் ( Covid health centre) என்ற நடுவண் நலவாழ்வு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படியான ஒரு ஏற்பாடே தமிழக அரசிடம் இல்லை. ஆனால், நோய்த் தொற்று இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் பொழுது மருத்துவமனையில் நோயாளிகள் குவிவதைத் தடுக்க, மிதமான பாதிப்பு என்ற வகையினரை பராமரிப்பு மையங்களைவிட சற்று கூடுதலான மருத்துவக் கண்காணிப்புக் கொண்ட கோவிட் நலவாழ்வு மையங்களில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை எழும்.
  2. கோவிட் மருத்துவமனைகளைப் பொருத்தவரை ஓரிரவிலோ ஒரு வாரத்திலோ நம்மால் சீனத்தைப் போல் புதிய மருத்துவமனைகளை கட்டியெழுப்ப முடியாதுதான் என்றாலும் ஓரிரு மாதங்களில் சில நூறு படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளைக் கட்ட முடியும். காசநோய்க்கென்று சானிடோரிடயத்தில் ஆங்கிலேயர் கட்டி மருத்துவமனை இன்றளவும் நிலைத்து நின்று பலனளித்துக் கொண்டிருக்கிறது. தண்டையார்பேட்டையில் தொற்றுநோய்க்கு என்று பிரத்யேகமாக கட்டப்பட்ட மருத்துவமனை இன்றைக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆறு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புதிய வைரசினால் மனித சமூகம் பாதிப்புக்குள்ளாவது இனிதொடரும் என மருத்துவ உலகம் எச்சரிக்கின்றது. எனவே, கொரோனா போனால் அடுத்தொரு வைரஸ் வரத்தான் போகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படியான கட்டமைப்புகளை உடனடியாக உருவாக்க முடியாது என்றாலும் தொடங்கும் பொருட்டு சென்னை, கோவை , திருச்சி, சேலம், தஞ்சை, மதுரை ,நெல்லை என மண்டல அளவிலேனும் தொற்று நோய் சிகிச்சைக்கு என்று சிறப்பு மருத்துமனைகள் கட்டுவதை தொடங்க வேண்டும்.

இராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் , ஓமாந்தூரார் என எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அது கொரோனா அல்லாத பிற நோயர்களின் சிகிச்சைக்கு தடையாகவே இருக்கும். ஓமாந்தூரார் மருத்துவமனையில் தற்சமயம் கொரோனா சிகிச்சைக்கு என்று 500 படுக்கைகள் உள்ளன. தீவிரப் பாதிப்புக்கு உள்ளானோருக்கு மட்டும் இங்கே சிகிச்சை அளிப்பது என்று முடிவெடுத்துக் கொண்டால், 10%  நோயர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் என்று மதிப்பிட்டோமாயின் சென்னையில் தொற்று எண்ணிக்கை 5000 த்தை தொடும்வரை ஓமாந்தூரார் மருத்துவமனையைக் கொண்டே சமாளிக்கலாம். ஏனைய மருத்துவமனை வளாகங்கள் தங்குதடையின்றி அடித்தட்டு மக்களின் அன்றாட நோய்த் தீர்வுக்குப் பயன்படும். அங்குள்ள மருத்துவப் பணியாளர்களுக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுக் கொண்டிருப்பதால் சென்னையைப் போல் பிற நகரங்களிலும் சிறு நகரங்களிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். எனவே, கோவிட் பராமரிப்பு மையங்கள் ( Covid care centres) கோவிட் நலவாழ்வு மையங்கள் ( Covid health centres), பிரத்யேகமான கோவிட் மருத்துவமனைகள் (dedicated Covid hospitals) என்ற ஏற்பாட்டை நோக்கி தமிழக அரசு செல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக இத்தனை படுக்கைகள், இத்தனை உயிர்வளியூட்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் மேற்படி மூன்று வகையான ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை இருக்கின்றன என்பதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவித்தால் பதற்றமும் குழப்பமும் இன்றி தெளிவுவோடும் நம்பிக்கையோடும் மக்கள் அரசுக்கு ஒத்துழைக்கவும் செய்வார்கள், உதவவும் செய்வார்கள்.

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW