சிவப்பு, ஆரஞ்சு, பச்சை – மருத்துவக் கொள்கையின்றி மக்களை வதைக்கும் நடுவண் அரசு! பகுதி – 2

04 May 2020

அவசர கதியில் அறிவிக்கப்பட்ட இந்த  ஊரடங்கைத் தளர்த்துவதற்கான அளவுகோல்களைப் பற்றிய தெளிவின்றியே மூன்றாம் சுற்று ஊரடங்குவரை சென்றுவிட்டனர். ”சமூக தடுப்பாற்றல் ( herd immunity ) ஏற்படுத்துவதுதான் ஒரே வழி. அந்த  வழித்தடத்தில் உயிரிழப்புகளை எவ்வளவுக்கு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலட்சியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்று தொற்றியல் துறை சார்ந்த நிபுணர்கள் சொல்கின்றனர். மருத்துவக் கட்டமைப்பு முறிந்துவிடாமல் நோய்ப் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்கின்றனர். இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் நல்ல உடல்நலம் கொண்டவர்களையும் பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் நோயில் இருந்து மீண்டு வந்துவிடுவர். இதன்மூலம் ’சமூக தடுப்பாற்றல்’ ( herd immunity) என்ற நிலையை ஒரு சமூகம் அடையும் என்கின்றனர். ( தி வயர் இணைய தளத்திற்கு தொற்றியல் நிபுணர் மருத்துவர் ஜெயப்பிரகாஷ் முல்லியால் வழங்கியுள்ள பேட்டியின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது ) ஊரடங்கு என்பது ஓர் அரசு மேற்கொள்ளக் கூடிய எளிய தெரிவே ஒழிய தீர்வல்ல என்று அவர் சொல்கிறார்.

மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது, அதிகப்படுத்துவது அல்லது  தளர்த்துவதற்குப் பின்வரும் காரணிகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று தொற்றியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

  1. R0 என்று சொல்லப்படும் நோய்ப் பரவும் வேகம்
  2. மருத்துவக் கட்டமைப்பின் தயாரிப்பு
  3. பாதிப்புக்குள்ளாகும் பிரிவினருக்கான(vulnerable section) தனிச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள                                                                                                                                                                                                                                                              R0 – நோய் பரவும் வேகம் ( சுட்டியைக் காண்க – 2)

ஒரு நபரில் இருந்து எத்தனை பேருக்கு கொரோனா நோய்ப் பரவுகின்றது என்பதை சுட்டும் R0 என்ற காரணி 1 க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். எத்தனை நாளுக்குள் நோய் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகிறது என்பது இந்த R0 ஐ தீர்மானிப்பதற்கு போதுமானதல்ல. எடுத்துக்காட்டாக, ஒரு மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நோய்த் தொற்று 2 ஆக இருந்து இன்றைக்கு 4 என்று உயர்ந்துவிட்டால் அது இரட்டிப்பு ஆகிவிட்டது என்ற முடிவுக்குவந்து அந்த மாவட்டத்தை சிவப்பு பகுதி என்று முத்திரையிட்டுவிட முடியாது என்று துறைசார் அறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த R0 ஐ கண்டறிவதற்குப் போதுமான அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையிலான கண்காணிப்பு பொறியமைவு (Surveilance Mechanism) இருக்க வேண்டும். அவற்றில் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். ஆனால், போதிய பரிசோதனைகள் செய்யப்படாததாலும் கண்காணிப்பு பொறியமை இல்லாததாலும்  அரசிடம் நம்பத்தகுந்த தரவுகள் இல்லை. ஆகவே, தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதும் இல்லை.

மருத்துவக் கட்டமைப்பைத் தயார்ப்படுத்தல்:

மருத்துவக் கட்டமைப்பைத் தயார்ப்படுத்துவது என்றால் கொரோனா பரிசோதனை மையங்கள், பரிசோதனை கருவிகள், தனிமைப்படுத்தும் படுக்கைகள், உயிர்வளியூட்டிகள், முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள், கொரோனா மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஆகியவற்றை உறுதிசெய்யவும் எண்ணிக்கையை உயர்த்தவும் வேண்டும்.

ஐரோப்பாவில் மற்ற எந்த நாடுகளைவிடவும் ஜெர்மனி நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான ஒரு முக்கிய காரணமாக அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கான அடித்தளத்திற்கு ஜெர்மானியத் தலைவராக இருந்த பிஸ்மார்க் 1891 இல் வழியமைத்துத் தந்தார் என்று இப்போது அவர் நினைவுக்கூரப்படுகிறார். அதேநேரத்தில், வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பெருந்தோல்விக்கு இன்றைய ஆட்சியாளர்களைவிடவும் புதிய தாராளியத்திற்கு அடித்தளமிட்டு மருத்துவக் கட்டமைப்பைத் தனியார்மயப்படுத்திய வட அமெரிக்காவின் ரொனால்டு ரீகன் மற்றும் இங்கிலாந்தின் மார்க்கரட் தாட்சரையே குற்றஞ்சாட்டுகிறார் புகழ்பெற்ற மெய்யியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி. எனவே, கொரோனா ஒரு நாட்டுக்குள் நுழைந்தப் பிறகு மருத்துவக் கட்டமைப்பை ஓரளவுக்கு மேல் ஒரு நாடு பலப்படுத்திவிட முடியாது. ஏனென்றால், இது ஓரிரவில் செய்து முடிக்கக் கூடியது அல்ல.  எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை ஒரு மாதத்தில் உயர்த்திவிட முடியாது,

மருத்துவக் கட்டமைப்பு தயார் நிலையில் இருப்பதைப் பொருத்து, எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்,  எத்தனை நோய்த் தொற்றாளர்களுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்  என்பதை தீர்மானிக்க முடியும். நோய்த் தொற்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தாண்டிவிட்டால் அது மிக வேகமாகப் பரவி மருத்துவக் கட்டமைப்பை முறித்துதள்ளும் இடத்திற்கு வந்துவிடுமாகையில்  ’முழு ஊரடங்கு வேண்டும்’ என்ற முடிவை எடுக்க வேண்டும். ஊரடங்கை அமலாக்கக் கோரும் உச்சபட்ச நோய்த் தொற்று எண்ணிக்கை என்ன என்பதை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரையறுத்திருக்க வேண்டும் நடுவண் அரசு. மாறாக, முதல் சுற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு போகும்போது பொத்தாம்பொதுவாக தொற்று எண்ணிக்கை 15 என்றது; இரண்டாம் சுற்றில் இருந்து மூன்றாம் சுற்றுக்குப் போகும்போது முழுமையற்ற, காரணிகளைக் கொண்டு ஒரு மாவட்டத்தை சிவப்பு என்று வரையறுக்கிறது. மேலும், இதை மீறிவிடக் கூடாது என்று கட்டளையிடுகிறது நடுவண் அரசு.

மேலும், மருத்துவக் கட்டமைப்பு தயார் நிலை என்பது மாநிலங்களுக்கிடையே எந்தளவுக்கு ஏற்றத்தாழ்வாக இருக்கிறது என்பதற்கு பின்வரும் ஓப்பீட்டைக் காண்க.

தமிழகத்தை ஒத்த மக்கள்தொகையைக் கொண்ட மத்தியபிரதேசத்தில் ஒரு மாத ஊரடங்கிற்குப் பின்னும் மொத்தமுள்ள கொரோனா அரசு ஆய்வு மையங்கள் பத்துதான். தமிழகத்திலோ அரசு ஆய்வு மையங்கள் 34 உள்ளன. தமிழகத்தைவிட இரண்டரை மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட உத்தர பிரதேசத்திலோ அரசு ஆய்வகங்கள் 17 தான் உள்ளன.

அதே போல், அரசு மருத்துவர்களை எடுத்துக் கொண்டால் தமிழகத்தில் இருக்கும் எண்ணிக்கையில் பாதியளவுதான் மத்திய பிரதேசத்தில் இருக்கின்றனர். உத்தரபிரதசேத்தைப் பொருத்தவரை தமிழகத்தைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக மருத்துவர்கள் உள்ளனர்.  கேரளாவைப் பொருத்தவரை மிகச் சிறப்பாக கையாண்டு மொத்தம் 4 என்று எண்ணிக்கையில் இறப்பைக் கட்டுப்படுத்தியுள்ளது. தொற்று எண்ணிக்கை வெறும் 498 தான். பலகாலமாக பொது நலவாழ்வுக்கு கேரள அரசு கொடுத்துவரும் அக்கறையின் விளைவு இது.

எனவே, மருத்துவக் கட்டமைப்பில் ஒரு மாநிலம் எந்தளவுக்கு தயார் நிலையில் இருக்கிறதோ அந்தளவுக்கு கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தாக்குப் பிடிக்க முடியும். எல்லா மாநிலத்திற்கும் பொதுவான ஒரு வரையறையைக் கொடுக்கவியலாது.

பாதிப்புக்குள்ளாகும் பிரிவினருக்கான(vulnerable section) தனிச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள்

இளம்வயதினர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானால் ஒப்பீட்டளவில் மீண்டு வந்துவிடுகின்றனர். இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளின் பட்டறிவில் இருந்து 60 வயதுக்கு மேலான முதியவர்கள், ஏற்கெனவே நீரிழிவு, புற்று, சுவாசக் கோளாறு, காசநோய் போன்ற நோய்கள் இருப்போர் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானால் இறப்பு நேர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 60 வயதுக்கு மேலான முதியவர்கள் இந்தியாவில் ஒப்பீட்டளவில் குறைவு. அதே நேரத்தில் நீரிழிவு, காசநோய், புற்றுநோய் போன்ற நோய் இருப்போர் அதிகம். உயிரிழப்புக்கு வாய்ப்புள்ள மேற்சொன்ன பிரிவினரை அடையாளங் கண்டு அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமலும் அப்படி ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பதும் மிக முக்கியமான தயாரிப்புப் பணியாகும்.

இப்பிரிவினருக்கு நோய்த் தொற்றாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். இதை ஒரு காரணியாக கணக்கில் எடுத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மற்றும் தீவிரப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். ஆனால், இது குறித்த கண்காணிப்புக்கான போதிய திட்டமிடலும் இல்லை, இதைக் கணக்கில் எடுப்பதும் இல்லை.

நாடுதழுவிய ஊரடங்கும் நடுவண் அரசின் நாட்டாமையும்

இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று பரிசீலிக்காமல் மாவட்டங்களின் தொகுப்பாக நடத்த வேண்டும் என்ற காவி-கார்ப்பரேட் ஒற்றையாட்சிப் போக்கு இதுபோன்ற மருத்துவ சிக்கலிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஏற்கெனவே சொன்னதுபோல் மருத்துவக் கட்டமைப்பு தயாரிப்பு என்பது மாநில அளவில் பரிசீலிக்க வேண்டியுள்ளது. நீலகிரியின் தயாரிப்பு நிலையை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய அருகமை மாவட்டங்களின் தயாரிப்பு நிலையோடு சேர்த்துப் பரிசீலிக்க வேண்டும். நீலகிரியில் நோய்த் தொற்று அதிகமானால் கோவையில் இருக்கும் ( பரிசோதனை, சிகிச்சை) தயாரிப்பு நிலையைக் கொண்டு எதிர்கொள்ளலாம். ஏன் இப்போதுகூட, திருச்சி மருத்துவமனையில் அக்கம்பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்தோர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுச் செல்லவில்லையா? கரூர் மருத்துவமனையில் நாமக்கல், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தோர் சிகிச்சைப் பெறவில்லையா?

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் சென்னையின் தயாரிப்பு நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முடியாதா? மேலும் வாழ்க்கைப்பாடுகளுக்கும் இந்த மாவட்டங்கள் ஒன்றுக்குஒன்று அதிகமான போக்குவரத்துக் கொண்டவை. எனவே, தனித்தனி மாவட்டங்களாக கருத்தில் கொண்டு இவற்றில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா?

எங்கோ தில்லியில் இருந்து கொண்டு ’சென்னையை மூடு, காஞ்சிபுரத்தை திற’ என்று ஆணையிடுவது இந்த நோய்ப் பரவலை எதிர்கொள்ளவோ அல்லது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவோ உதவுமா?

சிக்கலின் அடிப்படை என்ன?

  •  “மோடி அமல்படுத்திய ஊரடங்கின் அடிப்படை பிரச்சனையே அது எவ்வித திட்டமும் இல்லாமல் அமல்படுத்தப்பட்டதுதான். மோடிக்கு ‘திட்டம்’ என்றால் என்னவென்றுகூட தெரியாது என்று நான் கருதுகிறேன்” என்று இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுப் பொருளாதாரத்தின் பேராசிரியராக பணிபுரியும் ஸ்டீவ் ஹான்கே பிபிசிக்கு அளித்தப் பேட்டியில் சொன்னார். திட்டமிடல் எதுவும் இல்லை என்பது அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறது நடுவண் அரசு. உண்மையில் இந்த ஒரு மாத ஊரடங்கு காலத்தில் நடுவண் அரசு மருத்துவக் கட்டமைப்பை பலப்படுத்துவதில் என்ன சாதித்துள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். தங்களுடைய திறமையின்மையையும் உண்மையான அக்கறையின்மையையும் மூடிமறைப்பதற்காகவே வெளிப்படைத்தன்மையற்ற, தெளிவற்ற வரையறைகளை முன்வைத்துக் கொண்டுள்ளனர்.
  • ”ஜெர்மன் தலைவர் ஏஞ்சேலா மெர்கல் ஒரு நல்ல தலைவருக்கு உரிய தனிச்சிறப்பான பண்புடன் இதுபோன்றதொரு சூழலை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் அது எதிர்மறையான விளைவைக் கொடுக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்”  என்று ஜெர்மன் அரசின் ஆலோசகராக இருக்கும் கொரோனா வைரஸ் நிபுணர் கிறிஸ்டியன் டிரோஸ்டன் அந்நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அதன் தலைவர் ஏஞ்சலோ மெர்கலின் தலைமைப் பற்றி கார்டியனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார். ஆனால், இந்தியாவின் பிரதமரோ எப்போதும் போலவே இதை தனது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துகிறார். இந்தியத் துணைக்கண்டத்தின் மாமன்னரைப் போல் நடந்து கொள்கிறார். படுத்துக்கிடந்த இந்தியப் பொருளாதாரத்திற்கு கொரோனாவைக் காரணமாக்கி பழியில் இருந்து தப்பித்துக் கொள்ள எண்ணினார். இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கொரோனா நெருக்கடியை அவரது காவிக் கூடாரம் பயன்படுத்திக் கொண்டது. மாநிலம் என்ற தகுதியை நொறுக்கி வெறும் மாவட்டங்களாக  இந்தியாவைக் கையாள நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் நெடுங்கனவை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். கூடவே, இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அமைச்சரவை, நாடாளுமன்றம் போன்ற அரசமைப்பு உறுப்புகளைச் செயலிழக்கச் செய்து பேரிடரின் பெயரால் நெடுநாளைக்கு நெருக்கடிகால ஆட்சியை நடத்தும் முனைப்பில் இருக்கிறார். இக்காலத்தைப் பயன்படுத்தி அரசியல் செயல்பாட்டாளர்களைச் சிறையில் அடைப்பதையும், மாநில உரிமைகளைப் பறிப்பதையும் செய்து வருகிறார்.
  • மாநிலங்கள் தாமாக மருத்துவ உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் வாங்கும் உரிமையைப் பறித்த நடுவண் அரசு,  மாநிலங்களுக்கு தேவையான பரிசோதனைக் கருவிகளைக்கூட வாங்கித் தருவதிலும் தோல்வி அடைந்துவிட்டது. மருத்துவக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான போதிய நிதியையும் நடுவண் அரசு மாநில அரசுகளுக்கு வழங்கவில்லை.

எனவே, இதுபோன்ற சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்ற வரையறைகளின் வழியாக நாடுதழுவிய ஊரடங்கு, அரசாணைகள் என அரசியல்கணக்கைப் போட்டு காலத்தை ஓட்டிக்கொண்டுள்ளது நடுவண் அரசு.

”நடுவண் அரசு சொல்லியுள்ள சிவப்பு பகுதிகள் சரியானதல்ல, எங்கள் மாநிலத்தில் வெறும் நான்கு மாவட்டங்கள்தான் சிவப்பு பகுதிகள்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேசத் தொடங்கிவிட்டார். உள்துறை அமைச்சகத்தின் கட்டளையை அந்த மாநிலம் மீறுவதாக குற்றஞ்சாட்டப் போகிறது நடுவண் அரசு. கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து மெல்ல மெல்ல எதிர்ப்புகள் எழுகின்றன. இது நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான முரண்பாடாக விரியும்.

இன்னொருபுறம் அறிவியல் வகைப்பட்ட வரையறை எதுவும் இன்றி, ‘ஈயம் பூசியது போலவும் இருக்கும், பூசாதது போலவும் இருக்கும்’ என்பது போல் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வரையறைகள் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும்.

மொத்தத்தில் நடுவண் அரசின் ஊரடங்கு பல்லவியும் தொடரும், அந்தந்த மாநிலங்களில் அறைகுறையாக அதைக் கடைபிடிப்பதும் நடக்கும் கொரோனா பரவலும் அதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும்! ’எல்லாம் நன்றாகத் தான் போகிறது’ என்ற தோற்றத்துடன் அதிகாரப்பறிப்பும் ஊடக சுதந்திரப் பறிப்பும் கொரோனா சுழற்றி அடிப்பதும் தொற்று எண்ணிக்கை, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதும் என கொரோனா காலத்தின் துயரங்களும் குழப்பங்களும் நிறைந்த படலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம்.

 

-செந்தில், சரவணன்

 

  1. https://thewire.in/health/jayaprakash-muliyil-karan-thapar-interview-coronavirus-herd-immunity
  2. https://thewire.in/government/covid-19-hotspot-districts-red-zone
  3. http://phmindia.org/wp-content/uploads/2020/04/Third-update_Final_April-12_JSA-AIPSN.pdf
  4. மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பீடு:

PHC, CHC, Doctors, beds-  National Health Profile 2019

ICU & Ventilators- https://cddep.org/wp-content/uploads/2020/04/State-wise-estimates-of-current-beds-and-ventilators_24Apr2020.pdf

Corona statewise test center- https://www.statista.com/markets/412/topic/453/medical-technology/

Corona Hospital list- From different news site, there is no official figure for this

State Population- https://m.rbi.org.in/Scripts/PublicationsView.aspx?id=18797

 

  1. http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-3/
  2. https://www.theguardian.com/world/2020/apr/26/virologist-christian-drosten-germany-coronavirus-expert-interview?CMP=share_btn_fb&fbclid=IwAR2TZZ8qMQJ5ZdgjRV3K9pswVpPPOW1i551z_3WdzhEi7-WP3Y0gREaC8H8
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW