பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
(ஏழைகளுக்கு பட்டினிச்சாவு, பெரும் முதலைகளுக்கு கடன் தள்ளுபடி!)
அரசின் பொது செலவீனத்தை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்காமல் நவீன நீரோ மன்னனாக பிரதமர் மோடி நாட்டு மக்களை வறுமையிலும் பசியிலும் தவிக்க விட்டுள்ளார்.
நாட்டின் உழைக்கும் மக்களுக்கு செலவு செய்தால் செலவீனம் அதிகரிக்கும், இதனால் நாட்டின் அந்நிய மூலதன முதலீட்டார்கள் நம்பிக்கை இழப்பார்கள் என கார்ப்பரேட் நலனுக்கு சாமரம் வீசுகிற மோடி அரசின் கார்பரேட் விசுவாசம் தற்போது மற்றொருமுறை அம்பலமாகியுள்ளது.
நிரவ் மோடி, விஜய் மல்லையா, வைர நகை வர்த்தகர் மெகுல் சோக்ஸி போன்ற 50 தொழில் அதிபர்கள் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 68 ஆயிரத்து, 307 கோடி ரூபாய் கடனை “கணக்கியல் ரீதியாக” (Write off) வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த தகவலில் தெரியவந்துள்ளது.
இது கடன் தள்ளுப்படி அல்ல கணக்கியல் ரீதியான தள்ளுபடி என்றாலும், வாராக் கடனை மீட்கமுடியாமல், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய முதலாளிகளின் சொத்தை பறிமுதல் செய்யாமல் மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட்களுக்கு வழங்கி வேடிக்கை பார்க்கின்ற அரசு, கார்பரேட்களின் வாராக்கடனை, செயல்படா சொத்துகளைத் தள்ளுபடி செய்ததாக கணக்கீடு ரீதியாகக் கான்பிக்க வேண்டிய அவசியம் என்ன? இதை சலுகை என்றில்லாமல் வேறெப்படி எடுத்துக் கொள்வது?
இது காங்கிரஸ் காலத்தில் கொடுக்கப்பட்ட கடன் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளிக்கிறார். இதை முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜனே கூறியுள்ளார் எனவும் ஆதாரம் தருகிறார்.
ராஜனை தற்போது சாட்சியாக காட்டுகிற பாஜக முன்பு என்ன செய்தது?
கடந்த 2015 ஆம் ஆண்டில் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆளுநராக இருந்தபோது வங்கிக்கடன் மோசடியில் தொடர்புடைய முக்கிய கார்ப்ரேட்கள் தொடர்பான ஆவணங்களை தொகுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற வரைவுக்குழுவிற்கு கடிதம் எழுதினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிற்கு ராஜன் எழுதிய முக்கிய கடித விவகாரத்தை (வயர் பத்திரிக்கைக்கு) ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. ராஜன் ராஜினாமா செய்வதற்கு முன்பாக முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற வரைவுக் குழுவிடம் வாராக் கடன் தொடர்பாக 17 பக்க விளக்கம் அளித்தார். அதில் 2015 இல் கடன் மோசடியாளர்கள் பட்டியில் குறித்து தான் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் இதுநாள் வரையிலும் இந்த பட்டியிலை அரசு வெளியிடவும் இல்லை, நடவடிக்கை குறித்த விளக்கமும் இல்லை. மாறாக விஜய் மல்லையாவை தொடந்து நீரவ் மோடி,சோக்சி என கடன் மோசடியாளர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோடுவதுதான் நடைபெற்றுவருகிறது.
தற்போது இந்த 68 ஆயிரத்து, 307 கோடி ரூபாய் கடன் கணக்கியல் ரீதியாக ரத்து செய்ததை மத்திய அரசு மறுக்கவில்லை. அதேநேரம் காங்கிரஸ் காலத்தில் கொடுத்தது என்பதுதான் அதன் ஒரு பல்லவியாக உள்ளது. அப்படியானால் ராஜனின் அந்த பரிந்துரைக்கு இதுவரை ஏன் பதில் சொல்லவில்லை?
கார்ப்ரேட்களுக்கு இவ்வளவு சலுகைகளை வழங்குகிற மோடி அரசுதான் விவசாயிகளின் விவசாயக் கடனையோ மாணவர்களின் கல்விக் கடனையோ தள்ளுப்படி செய்ய மறுக்கிறது.
இந்த சூழலில்,பெரும் பணக்காரர்களுக்கு 40 விழுக்காடு வரி விதிப்பு வரம்பை அதிகரித்து கொரோனா வரியாக அரசுகூடுதலாக வருவாயைத் திரட்ட முடியும் என 50 இளம் வரி வருவாய்த் துறைக் அதிகாரிகள் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கு அண்மையில் பரிந்துரை (சிபிடிடி) செய்தனர்.
கார்பரேட்களின் கடனை தள்ளுபடி செய்கிற அரசிடம் போய் இப்படியொரு பர்ந்துரையை வழங்கிய இந்த அதிகாரிகளின் யோசனையை இந்த அரசாங்கம் கேட்குமா என்ன? இந்த பரிந்துரையை நிராகரித்ததோடு, எவ்வாறு இப்படி ஒரு கருத்தை வெளியிடலாம் என இந்த அதிகாரிகளை மிரட்டி, சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
மக்களுக்கு சேவை செய்யலாம் என நினைத்தால் அதற்கு இந்த அரசிடம் ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் அரசின் நோக்கமோ கார்ப்ரேட்களின் நலனை காப்பது என்பதாக உள்ளது. அதனால்தான் கீழ்வரும் நடவடிக்கைகளை எடுக்க அரசு மறுக்கிறது..
- மத்திய அரசிடம் தற்போது அந்நிய செலாவணியின் கையிருப்பு மட்டுமே சுமார் சுமார் 37 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. ஊரடங்கால் தவிக்கின்ற மக்களுக்கு பொருளாதார நிவாராணம் கொடுப்பதற்கு கஜானாவில் நிதியில்லை என பொய் கூற முடியாது.
- இந்திய உணவுக் கிடங்கில் சுமார் 7 கோடி டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளது. ஆனால் இந்த உணவு தானியத்தை மக்களுக்கு இலவசமாக வழங்க மறுக்கின்றது.
- மாநில அரசுகளுக்கு GST வரி நிலுவையும் வழங்காமல்,பேரிடர் நிவாரணம் வழங்காமல் மாநில மக்களையும் வஞ்சிக்கிறது.
ஆனால் பிரதமர் என்ன செய்கிறார்.
மோடி ஒரு பேரசர் போலவும் கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை தனியொருவராக காப்பது போலவும் மாநில முதல்வர்கள் சிற்றசர்கள் போலவும் ஒரு கருத்துச் சித்திரம் மக்களிடம் உருவாக்கப்படுகிறது.
மோடி அரசின் கார்ப்ரேட் நலன் சார்ந்த பொருளாதார முடிவுகளையும், ஜனநாயக முறையற்ற ஒற்றை அடையாள பிம்ப உருவாக்கத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்துகிற ஊடகங்கள் மிரட்டப்படுகிறது. மீறியும் ஜனநாயகத்திற்கு குரல் கொடுக்கின்ற பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், மாணவர்களை ஊபா UAPA கருப்பு சட்டத்தின் மூலமாக ஒடுக்குகிறது. பாஜக ஆதரவு சாதிக் கட்சிகளும் அமைப்புகளும் மோடியின் கார்பரேட் நலன் நடவடிக்கைகளை மௌனமாக வேடிக்கை பார்க்கின்றன. மக்களின் எதிர்ப்புகளை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் மடை மாற்றுவதற்கும் முயற்சிக்கின்றன.
ஊரடங்கை திட்டமிட்டு அமல்படுத்துவதில் தோல்வி, பரிசோதனையை பரவலாக்குவதில் தோல்வி, பரிசோதனை கருவிகளின் கொள்முதலில் தோல்வி, ஊரடங்கு கால பொருளாதார நிவாரண உதவிகளில் தோல்வி, மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட நல்வாழ்வு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் தோல்வி, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தோல்வி என கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து மட்டத்திலும் மோடி அரசு மக்களுக்கு எதிராக செயல்படுவது அம்பலமாகியுள்ளது. இந்நேரத்தில் மோடி அரசின் கார்ப்ரேட் விசுவாச கடன் தள்ளுபடி அறிவிப்பை மக்கள் புரிந்துகொள்கிற நாள் வெகு தொலைவில் இல்லை.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான் ……..
– அருண் நெடுஞ்சழியன்
ஆதாரம்;
https://timesofindia.indiatimes.com/india/50-irs-officers-face-probe-for-unsolicited-hike-tax-call/articleshow/75396769.cms
பணக்காரர்களுக்கு 40 % வருமான வரி விதிக்க வேண்டும் – வரித்துறை அதிகாரிகள் சங்கம் பரிந்துரை!