பொருளாதாரத்தின் ஆரோக்கியம் முதன்மையானது, நிதி பற்றாக்குறை அல்ல – ரகுராம் ராஜன்
பொருளாதாரத்தை மீண்டும் படிப்படியாக திறப்பதை குறித்து அரசு யோசிக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.
நீண்ட காலம் இந்தியாவில் ஊரடங்கு தொடர்ந்திருக்க முடியாது என்றும் உயிர்களை காப்பாற்ற வேண்டிய அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டியது மிகவும் முக்கியமாகும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டிருந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு மேலும் 18 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கிற்கு உத்தரவிட்டது. இது பெருமளவில் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக் கூடும், மேலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் மிகப் பெரிய அளவில் பாதிப்படையக் கூடும்.
இந்தியா ஊரடங்கு உத்தரவை காலவரையின்றி நீட்டிக்க முடியாது.. நாம் மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் ஒரு சேர பார்க்க வேண்டியுள்ளது என்று 2008 பொருளாதார நெருக்கடியை அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம், மீள்வது குறித்து மிகவும் அவநம்பிக்கையுடன் உள்ளேன் என்று எச்சரித்துள்ளார் ராஜன். அரசு படிப்படியாக பொருளாதாரத்தை திறப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும், மேலும் அரசின் முதல் கவனம் அடிப்படைப் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இருக்க வேண்டும் என்றார்.
நிதி தொகுப்பு (fiscal package )வழங்குவதற்கு திட்டமிடும் போது கவனமுடன் இருக்க வேண்டும். நிதி தொகுப்பினால் வட்டி விகிதம் உயரவோ ரூபாய் மதிப்பு வீழந்து விடவோ கூடாது. இதை திட்டமிடும் போது அரசு மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் அணைவருக்கும் நல்ல உணவும் நல்ல மருத்துவ வசதியும் கிடைத்திட உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். “ஏழைகள் அனைவருக்கும் உணவளிக்கப்படுவதை உறுதி செய்வது மிகவும் விலை உயர்ந்ததல்ல” என்றும் அவர் கூறினார்.
“என்ன நடவடிக்கை எடுத்தாலும் நிதி பற்றாக்குறை மோசமடையவே செய்யும்” என்று கூறினார். எனினும் நடுத்தர காலப் பகுதியில் நிதி ஒழுங்கினை உறுதி செய்ய முடியும் என்பதையும் அரசாங்கம் சமிக்ஞை செய்ய வேண்டும். சில சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே பலவீனமான நிலையில் உள்ளதாகவும் அவை நீண்ட நாள் தாக்குபிடிக்க முடியாது என்றும் ராஜன் எச்சரித்தார். பலவீனமான நிலையில் உள்ள நிறுவனங்களையும் கவனத்தில் கொண்டு அவை இந்த ஊரடங்கு காலத்தை தாக்குப்பிடித்து மீன்டும் திறக்கப்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிதி பற்றாக்குறையை சமாளிப்பதைக் காட்டிலும் அடிப்படை பொருளாதாரத்தை மீட்பதில் தான் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்
அரசாங்கம் முன்னுரிமை பட்டியலை தயார் செய்து அதன்படி “தேவையானதை” செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் வேலை குறைப்பு குறைவாக இருக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் மிதமான ஊதியத்தில் இருந்தாலும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் என்று அவர் நம்புவதாக கூறினார். ரிசர்வ் வங்கி இறுதியில் சந்தையிலிருந்து தான் கடன் வாங்க வேண்டியிருக்கும் என்றும், வங்கிகள் தற்போது துணிந்து கடன் கொடுக்க முன்வராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரிசர்வ் வங்கியில், வைத்திருக்கும் வங்கிகளின் இருப்புத் தொகை முன் எப்போதையும் விட மிக உயர்ந்ததாக ரூ.7 லட்சம் கோடிக்கும் மேலாக செலுத்துகின்றன. ரிசர்வ் வங்கி வலியுறுத்தினாலும் வங்கிகள் துணிந்து கடன் வழங்குவதற்கு தயங்குவதையே இது குறிக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு கடன் வழங்குவதால் வரும் வருமானத்தை விட கடன் கொடுக்காமல் பாதுகாப்பான இடங்களில் பணத்தை வைத்திருப்பதானல் வரும் வருமானம் மிகக் குறைவாக இருந்தாலும், வங்கிகள் கடன் கொடுக்க விரும்புவதில்லை . ரிசர்வ் வங்கி நேரடியாக கடன் வழங்க முடியாது. எனவே சில துறைகளுக்கு கடன் வழங்க வங்கிகளை வழியுறுத்தலாம்.
கோவிட்-19 காரணமாக பணவீக்க சூழ்நிலையை விட பணமதிப்பிழப்பு சூழ்நிலையையே இந்தியா காணக்கூடும் என்றும், இந்தியாவில் பணவீக்க இலக்கை உறுதி செய்வதில் பிரச்சனை இருக்காது என்றும் அவர் நம்புகிறார். OPEC + நாடுகள் செய்ய விரும்பும் எண்ணெய் விநியோக வெட்டுக்கள் மிகச் சிறியவை, மேலும் மெதுவாகவே மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பக் கூடும் என்பதால் கச்சா எண்ணெய் விலை சிறிது காலத்திற்கு குறைவாகவே இருக்கும். எப்படி பார்த்தாலும் எண்ணெய் விலை குறைவதை தடுக்க வாய்ப்பில்ல என்று ராஜன் கூறினார். மேலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள நிதி நிறுவனங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உலகளவில் தலைவர்களுக்கு மத்தியிலான ஒருங்கிணைப்பு சற்று மோசமடைந்து உள்ளதாகவும் வரக்கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த தசாப்தத்தின் மிக முக்கிய நிகழ்வாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார் .
தமிழ்: லீனஸ்