அம்மா உணவகத்தில் உணவுப் பற்றாக்குறை – சென்னை மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு.

25 Apr 2020

தமிழகத்தில் மொத்தமுள்ள 658 அம்மா உணவகங்களில் 407 சென்னை மாநகராட்சியில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 7 இலட்சம் பேர் அம்மா உணவகத்தில் உண்பதாக தமிழக அரசு புள்ளிவிவரம் தந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் கூட்டம் அதிகரித்திருப்பதால் அம்மா உணவகப் பணியாளர்களின் அன்றாட வேலைச் சுமையும் இரு மடங்காகியுள்ளது.

வடபழனி திருநகரை ஒட்டியுள்ள அம்மா உணவகத்தில் ஊரடங்கு நேரத்தில் காணப்படும் நிலைமை பின்வருமாறு. இந்த உணவகத்தில், மாலை நேரத்தில் கூட்டத்தை ஈடுகொடுக்கும் அளவுக்கு சப்பாத்தி சுட முடியாத நிலைமை இருந்து வந்தது. அதனால், சில நாட்களில் இட்லி கொஞ்சமும் சப்பாத்தி கொஞ்சமும் அல்லது சில நாட்களில் இட்லி மட்டும் என்ற நிலைமை இருந்து வந்தது. ஆயினும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் உணவுப் பற்றாக்குறை என்ற நிலைமை சில நாட்களுக்கு முன்புவரை ஏற்படவில்லை. மேலும் ஊரடங்கு என்பதால் உணவுப் பொட்டலமாக வாங்கிச் செல்ல வேண்டும் என்பதுதான் அரசின் வழிகாட்டல். அவ்வகையில் வீட்டுக்கு ஒருவர் பாத்திரத்துடன் வந்து தமக்கு தேவையான அளவுக்கு உணவைப் பெற்று வந்தனர். எடுத்துக்காட்டாக, காலை மற்றும் மாலை வேளைகளில் 20 இட்லி, 8 ஜோடி சப்பாத்தி என்ற அளவுக்குகூட பெற்றுச் செல்ல முடிந்தது.

 

இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் ஆங்காங்கே அம்மா உணவகத்தில் கொடுக்கப்படும் உணவைக் கட்டணமின்றி கொடுப்பதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தனர். அம்மா உணவகத்தைக் கொண்டு அதிமுக அரசியல் செய்ய வேண்டாம், தமிழக அரசே அம்மா உணவகத்தில் கட்டணமின்றி உணவுக் கொடுக்க முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கோரினார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் கட்டணம் இன்றி உணவளிக்குமாறு முதல்வர் ஆணையிட்டார். ஏப்ரல் 23 முதல் ஊரடங்கு அமலில் இருக்கும்வரை அம்மா உணவகத்தில் கட்டணமின்றி உணவு வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையிட்டிருந்தது.

இந்நிலையில் அம்மா உணவகத்தின் பயன்பாட்டாளர்கள் மேலும் அதிகமாகியுள்ளனர். திருநகரை ஒட்டியுள்ள அம்மா உணவகத்தில் கடந்த இரண்டு நாட்களாக, இந்த ஊரடங்கு காலத்தில் வழக்கமாக வந்து கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையைவிட இரண்டில் இருந்து மூன்று மடங்கு அதிகமாக வருகிறார்கள். அதாவது நாளொன்றுக்கு காலையில் 700 இட்லி சுட்டுக்கொண்டிந்தவர்கள் இப்போது 1500 இட்லி சுடுவதாக அம்மா உணவகப் பணியாளர்கள் சொல்கின்றனர்.

கூட்டம் அதிகரித்திருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று, ஊரடங்கு காலம் நீடித்துக் கொண்டு இருப்பதால், முதல் வாரத்தில் சேமிப்புகளோடு இருந்தவர்கள்கூட அடுத்தஅடுத்த வாரங்களில் வெறுங்கையர்கள் ஆனதால் அம்மா உணவகத்தை நோக்கி வரக்கூடும். இரண்டு, ஊரடங்கு நீடித்துக் கொண்டிருப்பதால், கையில் இருக்கும் பணத்தை முடிந்தளவுக்கு சேமித்து வைத்துக் கொண்டு அன்றாட உணவை அம்மா உணவகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கருதியிருக்கக் கூடும். எது எப்படியோ கூட்டம் இரு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துவிட்டதால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

காலையில் 9 மணி அளவிலும் மதியம் 1:30 மணி அளவிலும் மாலை 7 மணி அளவிலும் உணவு தீர்ந்துவிடுகிறது. எனவே, முன்கூட்டியே சென்றால்தான் உணவுக் கிடைக்கும் என்பதால் ஒரே நேரத்தில் அதிகமான பேர் அம்மா உணவகத்தில் கூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த உணவகத்தை நோக்கி வருவோரில் நான்கில் ஒரு பங்கினராவது உணவு தீர்ந்துவிட்டது என திரும்பிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையை சமாளிப்பதற்கு, ’ஒவ்வொருவருக்கு இவ்வளவுதான் கொடுப்போம்’ என்ற முடிவை எடுத்துவிட்டனர். எடுத்துக்காட்டாக, காலை ஒரு நபருக்கு 5 இட்லி, மதியம் இரண்டு படி சோறு – அதாவது ஒரு சாம்பார் – ஒரு தயிர் அல்லது ஒரு சாம்பார் – ஒரு கருவேப்பிலை சாதம், மாலை மூன்று ஜோடி சப்பாத்தி என்று அளவுக் குறைக்கப்பட்டுவிட்டது. எனவே, மூன்று பேர் கொண்ட ஒரு வீட்டில் இருந்து ஒருவர் உணவு வாங்க வரும் போது அவருக்கு கிடைக்கக் கூடியது 5 இட்லி மட்டும்தான்.

இதை சமாளிக்க வேண்டுமென்றால் ஆளுக்கு ஒரு பாத்திரத்துடன் அந்த வீட்டில் உள்ள மூன்று பேரும் வந்தால் ஒரளவுக்கு உணவு கிடைக்கக் கூடும்.  காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்குகூட வாரத்திற்கு இரு முறை மட்டும் வீட்டை வீட்டு வெளியே வரவும், அதுவும் யாராவது ஒருவர் மட்டும் வரவும் என்று அரசு பரிந்துரைத்திருக்கும் நிலையில், அம்மா உணவகத்திற்கு ஒரு வீட்டில் உள்ள அனைவரும் வந்தால்தான் உணவு கிடைக்கும் என்றால் இது சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவோ அல்லது ஊரடங்கை கறாராக கடைபிடிக்கவோ உதவுமா?

ஓசி சோறு உண்பவர்களுக்கு வயிறு நிறையப் போட வேண்டுமா? என்றுகூட அமைச்சர் பெருமக்களும் அதிகாரிகளும் கருதக்கூடும். இப்படி கருதுவது தவறு என்பதை விளக்கும் மூன்று காரணங்கள் பின்வருமாறு.

முதலாவது, நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கு என்ற முடிவை அரசுதான் எடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இம்முடிவு ஒட்டுமொத்த சமூக நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அரசு சொல்கிறது. ஓட்டுமொத்த சமூக நலன் பொருட்டான ஊரடங்கினால் உழைப்பில் ஈடுபட முடியாமல் போய் வெறுங்கையர்களாக ஆக்கப்பட்ட  மிகவும் ஏழ்மையானோரே அம்மா உணவகங்களை நாடி வருகின்றனர். ஊரடங்கை அமலாக்கியது அரசு என்ற வகையில் ஊரடங்கின் விளைவாய் வெறுங்கையர்கள் ஆக்கப்பட்டவர்களுக்கு உணவை உறுதிசெய்ய வேண்டியதும் அரசே.

இரண்டாவது, அரசு நலத்திட்டங்கள் எதுவும் ஆட்சியாளர்களின் சொந்தப் பணத்தில் நடைமுறைக்கு வருவதில்லை. அதாவது ஆட்சியாளர்களின் அல்லது முதல்வரின் அப்பன் வீட்டு காசிலிருந்து செய்யப்படும் திட்டங்களல்ல என்றுகூட சொல்லலாம்.. அது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்படுவதாகும். அதுமட்டுமின்றி நிலவுகின்ற முதலாளித்துவ சுரண்டல் அமைப்பில் உழைக்கும் மக்களிடம் இருந்து சுரண்டப்பட்ட உபரியில் இருந்து ஒரு சிலதுளிகள் மீண்டும் உழைக்கும் மக்களுக்கு செலவிடப் படுகிறது. இதுகூட, பட்டினியின் வெப்பம் தாங்காமல் புரட்சி என்னும் எரிமலை வெடித்துவிடக் கூடாது என்பதற்காக முதலாளித்துவம் மக்கள் நலத் திட்டங்களை நடப்பில் வைத்துக் கொண்டிருக்கிறது. எனவே, அம்மா உணவகத்தில் குறைந்த செலவில் உணவு கொடுத்தாலும் கட்டணமின்றி கொடுத்தாலும் அங்கு உணவு உண்ண வரும் உழைப்பாளிகளின் உழைப்பால் விளைந்த, அவர்களுக்கு உரித்தான வளத்தில் இருந்து கொடுக்கப் படுவதே ஆகும்.

மூன்றாவது, அடுத்த பல தலைமுறைகளுக்காக பன்னூறு, பல்லாயிரம் கோடிகளை சேர்த்து வைப்பது போன்ற இடம் கிடையாது வயிறு. அடுத்த நாள் தேவைக்காக இன்றே உண்டு விடுவோம் என்று அங்கே சேர்த்து வைத்துக் கொள்ள முடியாது. வயிறு கொள்ளும் மட்டும்தான் ஒருவர் உண்ண முடியும்.

எனவே, கட்டணமின்றி உணவு வழங்கத் தொடங்கியதில் இருந்து எழுந்திருக்கும் உணவுப் பற்றாக்குறை சிக்கலை சென்னை மாநகராட்சி உடனடியாக தீர்க்க வேண்டும். ஏற்கெனவே, இரு மடங்கு உணவு தயாரிப்பு அம்மா உணவகங்களில் நடந்து கொண்டிருப்பதால், அங்கேயே இன்னும் கூடுதலாக உணவு தயாரிப்பது நடைமுறையில் இயலாத ஒன்று. நான்கைந்து அம்மா உணவகங்களுக்கு ஒரு தற்காலிக உணவு தயாரிப்புக் கூடத்தை ஏற்படுத்தி  அங்கிருந்து உணவு தயாரித்து அம்மா உணவகங்களுக்கு அனுப்புவதுதான் இயலக் கூடிய ஒன்று.

-கார்த்திக்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW