தொழிலதிபர்கள் கேட்டவுடன் தளரும் ஊரடங்கு! தமிழக அரசின் கொள்கைதான் என்ன?

24 Apr 2020

மார்ச் 23 –  மார்ச் 24 மாலை 5 மணியிலிருந்து மார்ச் 31 வரை ஊரடங்கு என முதல்வர் அறிவித்தார்.

மார்ச் 24: இரவு 8 மணிக்கு நள்ளிரவு 12 மணியில் இருந்து ஏப்ரல் 14 வரை இந்திய அளவில் ஊரடங்கு என பிரதமர் மோடி அறிவித்தார்.

தமிழக அரசு உடனே இதை ஏற்றுக் கொண்டது!

ஏப்ரல் 7: தமிழக அரசு 13 வகை ஆலைகள் பராமரிப்புப் பணிகளுக்காக இயங்கலாம் என்று அரசாணை வெளியிட்டது. பின்னர் அதே நாளில் அந்த அரசாணை திரும்ப பெறப்பட்டது.

ஏப்ரல் 13: ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

ஏப்ரல் 14: மே 3 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மோடி அறிவித்தார். மே 20 அன்று சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்கள் அடிப்படையில் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார்.

ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்திருந்த முதல்வர், மே 3 வரை நீட்டிக்கும் மோடியின் அறிவிப்பை  அப்படியே ஏற்றுக் கொண்டார்!

ஏப்ரல் 15: நடுவண் நலவாழ்வு அமைச்சகம் ( MOFHW) சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மாவட்டங்களையும் அதை கண்டறிவதற்கான வழிகாட்டுநெறிகளையும் வெளியிட்டது. அதன்படி தமிழகத்தின் 22 மாவட்டங்கள் சிவப்புப் பகுதியாகவும் தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் ஆரஞ்சு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றளவில், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நோய்த் தொற்று அறியப்பட்டோர் ஒருவர்கூட இல்லை என்பதால் அவை பச்சைப் பகுதிகளாகும்.

ஏப்ரல் 15: நடுவண் உள்துறை அமைச்சகம் ஆரஞ்சு மற்றும் பச்சைப் பகுதிகளில் மே 20 முதல் பல்வேறுவிதமாக பொருளியல் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்து ஆணை வெளியிட்டது. அதன்படி சிற்சில தொழில்துறைகள், ஐடி துறை ஆகியவை 50% பணியாளர்கள் உடன் இயங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 16: தமிழக நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் தலைமையில் ஊரடங்கைப் படிப்படியாக விலக்குவது குறித்த வழிகாட்டுநெறிகளை வகுப்பதற்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில், வருவாய், சட்டம், நலவாழ்வு, தொழில்துறை, சிறுகுறுதொழில், வீட்டுவசதி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி, போக்குவரத்து ஆகிய துறைகளின் செயலர்கள், காவல்துறை இயக்குநர்,  இந்திய மருத்துவக் கழகம், தனியார் செவிலியர் சங்கம், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு(சிஐஐ), இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு(ஃபிக்கி) ஆகியவற்றின் பிரதிநிதிகள்,  சென்னை மாநகராட்சியின் முன்னாள் நலவாழ்வு அதிகாரி குகானந்தம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் ஆகியோர் அடங்கிய 18 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

(இதே நோக்கத்திற்காக கேரள அரசு ஒரு நிபுணர் குழு அமைத்திருந்தது. ஆனால், அது அமைக்கப்பட்டதோ ஏப்ரல் 4!)

ஏப்ரல் 18: மேலும் மூன்று நபர்கள் இக்குழுவில் இணைக்கப்பட்டனர் – வருவாய் நிர்வாக ஆணையர், தேசிய தொற்றியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர், தமிழ்நாடு சிறுகுறு தொழில்துறைகளின் கூட்டமைப்பு(TANSTIA). கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் தொற்றியல் துறை சார்ந்த ஒருவர் நிபுணர் குழுவில் தேவை என்பதை இப்போதுதான் தமிழக அரசு புரிந்துகொண்டுள்ளது.

ஏப்ரல் 20: இக்குழு தனது இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் கொடுத்தது. ஆனால், இக்குழுவின் அறிக்கை வெளிப்படையாக மக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

( கேரள நிபுணர் குழு கேரள அரசுக்கு தனது பரிந்துரைகளை வழங்கிய நாள் ஏப்ரல் 6. அவ்வறிக்கை வெளிப்படையாக மக்களின் பார்வைக்கு கொடுக்கப்பட்டது.)

ஏப்ரல் 20: அன்றைய நிலையில், நடுவண் அரசின் வழிகாட்டு நெறிக்கு உட்பட்டு ஊரடங்கு தளர்வுக்கு தகுதியுடைய ஆரஞ்சு, பச்சை மாவட்டங்கள் தமிழகத்தில் இருந்தன. மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர்.  ஊரடங்கில் எந்த தளர்வும் இருக்காது என்றும் அனைத்து மாவட்டங்களிலும் மே 3 வரை ஊரடங்கு உள்ளது உள்ளபடி தொடரும் என்றும் முதல்வர் அறிவித்தார். இதற்கு எடுத்துக்காட்டாக தில்லி, பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைச் சுட்டிக்காட்டுகிறார் முதல்வர். ஆனால், என்ன காரணிகளின் அடிப்படையில் அரசு இந்த முடிவை வந்தடைந்தது என்பதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்கவில்லை. நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து நோய்த் தொற்று குறைந்தால் வல்லுநர் குழுவின் ஆலோசனையினைப் பெற்று நிலைமைக்கு ஏற்றாற் போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்கிறது முதல்வர் ஊடகச் செய்தி.

ஏப்ரல் 23: தொழிலதிபர்களுடன் முதல்வர் வீடியோ கான்பரன்சிங்கில் பேசினார். இதில் டி.வி.எஸ். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், ராம்கோ குழுமத்தின் வெங்கட்ராம ராஜா, சிஐஐ யின் தமிழ்நாடு தலைவர் அரி தியாகராஜன், முருகப்பா குழுமத்தின் வெள்ளையன் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர். படிப்படியாக ஆலைகளை இயக்கத் தொடங்க வேண்டிய தேவையை அவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளனர். டிவிஎஸ் சீனிவாசன், ஊரடங்கு நீடித்தால் ஏராளமான நெருக்கடிகளைத் தொழில்துறை சந்திக்க வேண்டிவரும். வங்கிகளில் இருந்து கடன் பெறுவதிலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும்  சிக்கல் ஏற்படும் என்று சொல்லியுள்ளார்.

ஏப்ரல் 23: வருவாய் நிர்வாக ஆணையர் நடுவண் அரசின் வழிகாட்டுதல்படி ஊரடங்கைத் தளர்த்துமாறு பரிந்துரைத்ததன் அடிப்படையில் தமிழக அரசு ஊரடங்கை சிவப்பு மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத ஆரஞ்சு, பச்சைப் பகுதிகளில் தளர்த்தும் முடிவை அறிவித்தது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், நடுவண் – மாநில அரசு அலுவலங்கள்( அவசரப் பணிக்காக மட்டும்) ஆகியவை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக தலைமைச் செயலரின் அறிக்கை வந்துள்ளது. அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு, சிமெண்ட், பெயிண்ட் போன்ற இராசயன ஆலைகள், இரும்பு ஆலைகள், கண்ணாடி ஆலைகள், டயர் தயாரிப்பு ஆலைகள், காகித ஆலைகள் போன்ற 10 ஆலைகள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் நிறுவுதல் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.

ஏப்ரல் 24: சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் போன்ற மாநகராட்சிகள் நான்கு அல்லது மூன்று நாள் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு இன்று வந்துள்ளது.

ஊரடங்கு அறிவிப்பு தொடங்கிய நாள் முதல் இன்றைக்கு வரை தமிழக அரசுக்கு இருக்கும் குழப்பத்தை மேற்படி தேதிகளில் நடந்தவற்றைப் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். தமிழக அரசு ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஏதாவது கொள்கையை வகுத்து வைத்துள்ளதா? அதில் தொடர்ச்சி இருக்கிறதா? அது குறித்து வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கிறதா?

அரசின் பேச்சைக் கேட்டு ஒரு மாதமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு, ’அரசு என்ன கொள்கை வைத்திருக்கிறது? அரசின் திட்டமிடல் என்ன? எடுக்கும் முடிவுகளுக்கான காரணங்கள் என்ன?’ ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது. வெளிப்படைத்தன்மை என்பது ஆட்சியாளர்களின் சலுகை அல்ல, பொறுப்புக்கூறலின் பகுதி, அரசின் கடமை.

-செந்தில்

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW