பொருளாதார நிவாரணம்: செய்ய வேண்டியது என்ன? – பகுதி 1

21 Apr 2020

கொரோனா கொள்ளை நோய்ப் பரவலை கட்டுப்படுத்த அமலாக்கப்பட்ட முதல் சுற்று ஊரடங்கு உத்தரவில் பொதுவாக யாருக்கும், இரு வேறு கருத்துக்கள் இருந்திருக்கவில்லை. அதேநேரம் முன்தயாரிப்பின்றி அமலாக்கப்பட்ட ஊரடங்கால் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் கால் நடையாக நடந்துசென்றதும் அதில் சிலர் மடிந்த துயரத்தையும், தினக் கூலி தொழிலாளர்களுக்கு போதிய பொருளாதார நிவாரணம் வழங்காமல் நாட்டின் விளிம்பு நிலை மக்களை கைவிட்டதையும் யாருமே நியாயப்படுத்திடமுடியாது.

ஆனால் இதுகுறித்தெல்லாம் அக்கறைப்படாத மோடி அரசு,மே-3 வரையிலான இரண்டாம் சுற்று ஊரடங்கை அறிவித்தது.இந்த கட்டத்திலாவது பொருளாதார நிவாரண அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில்,நாட்டு மக்களுக்கு ஏழு ஆலோசனைகளை கூறியதோடு தனது வரலாற்றுக் கடமையை முடித்துக் கொண்டார்.ஊரடங்கு காலத்தில்,விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தாமதிக்கின்ற ஒவ்வொரு நாளும் நாட்டில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கின்ற வாய்ப்புகள் உயர்ந்துகொண்டுள்ள நிலையில்தான் செயற்கைத்தன ஆடம்பர பேச்சால்  மக்களை தியாகம் செய்யக் கோருகின்றார்.

பாஜக ஆளுகிற உத்திர பிரதேச மாநிலத்தில்  இலவச ரேஷன் பொருள் வாங்க வரிசையில் நின்ற பெண்ணொருவர் மயங்கி விழுந்து இறந்துள்ள செய்தியானது, ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்த விளிம்பு நிலை மக்களுக்கு பொருளாதார ரீதியாக அரசு உதவிடாவிட்டால் கொரோனா மரணத்தை விட வறுமையால் நாட்டு மக்கள் இறக்க நேரிடுகிற ஆபத்தை முன்னுணர்த்தியுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரண்டாம் நாளான,கடந்த மார்ச் 26  அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார சலுகைகளை அறிவித்தார்.

இங்கு யாரும் கையில் பணமில்லாமல், உணவில்லாமல் பசியில் துடிக்கக்கூடாது என்பதற்காக பல திட்டங்களை அறிவிக்க உள்ளோம்’ என்ற பீடிகையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பிற்குப் பின் நிதி அமைச்சர் காணாமல் போய்விட்டார்.மோடி அரசு அறிவித்துள்ள பொருளாதர நிவாரணமானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) சுமார் 0.8 விழுக்காடாகும்.

ஆனால் அமெரிக்கா, ஜப்பான்   போன்ற நாடுகள் தங்களது  நாட்டின் மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 விழுக்காடு முதல் 20% விகுக்காடு வரை பொருளாதார நிவாரணமாக அறிவித்துள்ளன. G20 நாடுகள் அறிவித்துள்ள பொருளாதார நிவாரணத் தொகையை(GDP விழுக்காட்டில்) கீழ்வரும் அட்டவணை சுட்டிக் காட்டுகிறது.

 

மோடி அரசு அறிவித்துள்ள நிவாரண சலுகைகளானது,விளிம்பு நிலை மக்களின் வருமான இழப்பை ஈடுகட்டுவதற்கு சுத்தமாக போதாது. ஊரடங்கின் ஒவ்வொரு நாளும் இந்தியாவில்  சுமார் 40,000 கோடி பொருளாதார இழப்பீடு ஏற்படுவதாகவும், 21 நாள் ஊரடங்கில் நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக 7-8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது  எனவும் இந்தியாவின் தொழில்துறை கூட்டமைப்பு FICCI கூறியதுள்ளது.மேலும் சுமார் 4 கோடி  மக்கள் வேலையிழக்கலாம் எனவும் இந்த அமைப்பின் தலைவர் சுட்டிக் காட்டுகிறார்.

  1. உள்நாட்டு உற்பத்தியில் 10% ஒதுக்குதல்இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 210 லட்சம் கோடி ஆகும். இதில் மத்திய அரசு குறைந்தபட்சம்  சுமார் 16 முதல் 22 லட்சம் கோடியாவது நிவாரண சலுகைகளை அறிவிக்கவேண்டும் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ASSOCHAM  கோரிக்கை விடுகிறது . அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7 விழுக்காடு முதல் 10 விழுக்காடு ஒதுக்கவேண்டும் என்கிறது. இவ்ஒதுக்கீட்டின் மூலம் கொரோனா மருத்துவ செலவுகள், மக்கள் நலத்திட்டங்கள், வரி சலுகை மற்றும்  வங்கி கடன், வட்டி விகிதம் குறைப்பு ஆகிய நடவடிக்கையை மேற்கொள்வவேண்டியுள்ளது. இந்திய அரசின் நிதி பற்றக்குறை (fiscal deficit) மார்ச் மாதம் வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் GDP’இல் சுமார் 3.8% ஆக இருந்துள்ளது. இது திட்டமிடப்பட்ட  3.3% தை விடவும் அதிகமாகும். கடந்த மூன்று வருடங்களாக இந்த இலக்கை இந்திய அரசால் எட்டமுடியாத சூழலில் கொரோனா பாதிப்புகளிருந்து மீள உள்நாட்டு உற்பத்தியில் 10% ஒதுக்கினால்  அந்நிய முதலீட்டாளர்கள் அதிருப்திக்கு உள்ளாக்கும், பங்குச்சந்தை நெருக்கடிக்குள்ளாகும், இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் என்பதை இந்திய  அரசு எதிர்கொள்வதற்கு ஒரு கொள்கை நிலைப்பாடு தேவைப்படுகிறது. நிதி மூலதனத்தின் நலணா அல்லது நாட்டு மக்களின் நலணா என்பதே அந்த கொள்கை நிலைப்பாடு.
  2. கொரோனா மருத்துவ செலவுகள் மற்றும் சுகாதார கட்டமைப்பு: நலவாழ்வு மற்றும் சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் உள்ளதால் அணைத்து செலவுகளையும் மாநில அரசே சுமக்கவேண்டிய நிலை உள்ளது. மத்திய அரசு அணைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து சுமார் ரூ 11000 நிதி வழங்கியது, தமிழகத்திற்கு வெறும் ரூ 510 மட்டுமே. தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் கொரோனா மருத்துவ செலவுகளுக்காக   ரூ 3000 கோடி கேட்டிருக்கிறார் மற்றும் அணைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ ஒரு லட்சம் கோடி ஒதுக்கவேண்டும் வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு ஒப்பீட்டளவில் மேம்பட்டு இருக்கும் நிலையில் பல வட மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது, ஊரநடங்கை தொடர்ந்து நீடிப்பதின் முக்கிய காரணமும் இதுவே. தற்போது சுமார் 18000 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது, பல ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என்ற நிலை வந்தால் அதற்க்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு மருத்துவமனை, படுக்கை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவர், செவிலியர்கள் என அனைத்திலும் பற்றாக்குறை ஏற்படும். மற்றும் மருத்துவ பணியாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே உள்ளனர், அவர்களது பனி நிரந்தரமாக்கவேண்டும்  வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக கண்டுகொள்ளப்படவில்லை. எனவே மத்திய அரசு குறைந்தது  ஒரு லட்சம் கோடி அணைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உடனடியாக வழங்க வேண்டும்.
  3. உணவு பாதுகாப்பு: தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் நாட்டு  மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புகளை விட வறுமையால் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகமாகும் சூழல் நிலவுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் செயல்படும் பொது விநியோக திட்டத்தின் கீழ் தற்போது பத்து கோடி மக்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. மேலும் நகர்ப்புறங்களில் லட்சக்கணக்கான புலம்பெறத்தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அரசு வழங்கும் இலவச தானியங்கள் இவர்களுக்கு சென்றடைவது இல்லை. இப்பிரிவினர் தான் முதலில் பட்டிக்கொலைக்கு ஆளாகநேரிடும். தாராளவாத பொருளாதார அறிஞர்கள் அமிர்தியா சென், ரகுராம் ராஜன் மற்றும் அபிஜீத் பேனர்ஜி ஆகியோர் இது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் உணவு சேமிப்பு நிறுவனமான FCI (Food Corporation of India) இடம் அடுத்த ஒரு வருடத்திற்கான தானியங்கள் சேமிப்பில் உள்ளன. மொத்தம் 8.62 கோடி டன் தானியங்கள் (அருசி: 3 கோடி டன், கோதுமை: 2.75 கோடி டன், நெல்: .2.87 கோடி டன்). மத்திய அரசு அடுத்த மூன்று மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ அருசி/கோதுமை இலவசமாக வழங்கும் என்று அறிவித்துள்ள நிலையில்  உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய பொது விநியோகத்தை அனைவருக்குமானதாக  மாற்றி அமைக்கவேண்டும் (Universal PDS), இதன் பொருள் குடும்ப அட்டை இல்லாத மக்களையும் இந்த திட்டத்தில்  உடனடியாக கொண்டுவரவேண்டும்.  அரசின் கொள்முதல் அதிகரிக்கும்போது பொது சந்தையில் விற்கப்படும் தானியங்களின் விலை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது, இதன் மூலம்  விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பது கவனத்துக்குரியது.
  4. ஏழை மக்களுக்கு நிதி உதவி: பிரதம மந்திரி விவசாய உதவி தொகை திட்டத்தில் (PM-KISAN) 8.69 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ. 6000 பணம் அளிப்பது என்ற திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ. 2000’ யை இந்த மாதம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தொகை வெகு குறைவானது மட்டுமின்றி விவசாய கூலி தொழிலாளர்கள், நகர்ப்புற அமைப்புசாரா தொழிலாளர்கள், சிறு குறு வியாபாரிகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் எவரும் இதில் அடங்குவதில்லை. தமிழக அரசு ஒரு வாரம் ஊரநடங்கை கணக்கில் வைத்து அருசி ரேஷன் அட்டை உள்ளவர்கள் சுமார் ஒரு கோடி குடும்பத்திற்கு ரூ.1000 அளித்தது. மேலும் சுமார் பத்து லட்சம் பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய நிதியிலிருந்து  ரூ,1000 மற்றும் உணவு பொருட்ட்கள் அறிவித்தது. 40  நாள் வரை நீட்டிக்கப்படும் ஊரடங்கு மற்றும் அதற்ககு பின்னான பொருளாதார சுமையை எவ்விதத்தில் அரசு ஈடுகட்டும் என்பதற்கு இதுவரை பதிலில்லை. இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறைத்து காட்டப்பட்டு வந்துள்ளது, 2011 கணக்கின்படி சுமார் 30% அதாவது 40 கோடி மக்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில் நாட்டில் உள்ள சுமார் 30 கோடி குடும்பங்களில் அடித்தட்டில் உள்ள 50 %  அதாவது 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5000 உடனடியாக வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.  மன்மோகன் சிங்  தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரவல்லுனர் குழு  தங்கள் பரிந்துரையை அளித்துள்ளது, பிரதமந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தில் வங்கி கணக்கு திறந்தவர்கள் (சுமார் 38 கோடி வங்கி கணக்குகள் இதுவரை திறக்கப்பட்டுள்ளது) மற்றும் பிற பென்ஷன் திட்டத்தில் உள்ள அனைவருக்கும் ரூ.7,500 கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. மோடி அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் கூறுவது நாட்டின் 75 % குடும்பங்களுக்கு அடுத்த 6 மாதத்திற்கு தலா ரூ 2,000 வழங்கவேண்டும். இந்த தொகை சுமார் 2.7 லட்சம் கோடி ஆகும்.  இவ்வுதவித்தொகை என்பது அடித்தட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு மட்டுமின்றி சந்தையில் உற்பத்தி – நுகர்வு சமநிலை  மூலம் நாட்டு பொருளாதாரம் மீண்டெழும் என்று கருதுகின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள ஆசியா போன்ற நாடுகளில் Universal Basic Income  (குறைந்தபட்ச வருமான திட்டம்) என்ற வழிமுறையில் மக்களையும், சந்தை நுகர்வையும் ஒருசேர மீட்டெடுக்கும் முயற்சியே ஆகும். மக்களுக்கு உதவித்தொகையை கொடுக்கும் அதே வேலையில் விவசாயம், உணவு, நல வாழ்வு உள்ளிட்ட அணைத்து அத்தியாவசிய தேவைகளில் அரசின் மானியங்களை எவ்விதத்திலும் குறைக்க அல்லது  ரத்து சேயும் முயற்சியை அனுமதிக்ககூடாது.

தொடரும்…

– அருண் நெடுஞ்சழியன்

 

https://economictimes.indiatimes.com/news/economy/policy/coronavirus-crisis-india-inc-seeks-economic-package-from-centre/articleshow/75049929.cms?from=mdrhttps:

https://www.statista.com/statistics/1107572/covid-19-value-g20-stimulus-packages-share-gdp/

//www.thehindubusinessline.com/economy/agri-business/fci-stocks-come-in-handy/article31175966.ecehttps:

//thewire.in/food/covid-19-lockdown-food-pds-indiahttps:

//www.businesstoday.in/current/economy-politics/april-january-fiscal-deficit-increases-128-5-percent-of-revised-budgeted-target/story/397140.html

https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/india-inc-stands-by-lockdown-extension-call-seeks-stimulus-package-to-rebuild-economy/articleshow/75137894.cms

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW