ஊடகச் செய்தி – ஐ.டி ஊழியர்கள் மன்றம் (Forum for IT Employees-FITE)

19 Apr 2020

மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் 20 க்கு பிறகு ஐ.டி & ஐ.டி சார்ந்த நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஒட்டி ஐ.டி ஊழியர்கள் சந்திக்கக்கூடிய சில முக்கிய பிரச்சினைகள் குறித்து ஐ.டி ஊழியர்கள் மன்றம்(Forum for IT Employees-FITE) மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறது.

ஐ.டி நிறுவனங்கள் தங்களின் பெரும்பாலான கிளைகளை நாடு முழுவதும் உள்ள சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தான் வைத்திருக்கின்றன. வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் இந்த சில நகரங்களில் பணி புரிகின்றனர். மார்ச் 25 முதல் தொடங்கிய முதல் ஊரடங்குக்கு பிறகு பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வீட்டிலிருந்தே பணிபுரிய தொடங்கி விட்டனர். ‘வீட்டிலிருந்து பணிபுரியும்’ வசதியுடன் ஐ.டி துறையும் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இன்றி தங்களுடைய தொழிலை நடத்திக்கொண்டு இருக்கிறது. கேப் ஜெமினி என்ற நிறுவனமும் ஊழிர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்து இருக்கிறது.

சில தொழில் துறைகள் இயங்க அனுமதிக்கும் வழிகாட்டுதல்கள் குறித்து 15.04.2020 அன்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு வெளியிட்டது. அந்த உத்தரவில் ஐ.டி மற்றும் ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என அறிவித்து உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அதே உத்தரவில் பேருந்து, டாக்ஸி, ரயில் போன்ற பொது போக்குவரத்துக்கான தடை தொடர்வதாகவும் அறிவித்து இருக்கிறது. இது முதல் உத்தரவிற்கு முற்றிலும் முரணானது ஆகும். மேலும், நிறுவனங்களால் அனைத்து தொழிலாளர்களுக்கு சொந்த போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வாய்ப்பில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். 80% மேலான ஊழியர்கள் பேருந்து, ரயில், வாடகை வாகனங்கள், சொந்த வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். அனைத்து ஐ.டி நிறுவனங்களும் மைய குளிரூட்டப்பட்ட கட்டிடங்களில் இயங்குகின்றன என்பதும் அனைவரும் அறிந்ததே. எனவே, இந்த சூழலில் ஐ.டி நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பது என்பது ஐ.டி நிறுவனங்கள் கொரோனா தொற்று மைய புள்ளியாக மாறும் வாய்ப்பை அளித்துவிடும். மேலும் ஐ.டி நிறுவனங்கள் குவிந்து இருக்கின்ற சென்னை,மும்பை,புனே,டெல்லி போன்ற அனைத்து நகரங்களும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

எனவே, கொரோனா பெருந்தொற்று நோய் காலத்தில் ஐ.டி நிறுவங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்ற வழிகாட்டுதல் ஏற்கத்தக்கது அல்ல என கருதுகிறோம். மேலும் வீட்டில் இருந்து பணிபுரியும் வசதியுடன் ஐ.டி துறை பெரிய அளவில் எந்த பாதிப்பும் இன்றி இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஐ.டி நிறுவனங்களை மீண்டும் இயங்க அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநில, மாவட்ட நிர்வாகங்கள் முடிவு எடுப்பதே ஊரடங்கை திறம்பட நடைமுறைப்படுத்த சரியான அணுகுமுறையாக இருக்கும் என பரிந்துரைக்கிறோம்.

ஐ.டி ஊழியர்கள் மன்றம் சார்பாக பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

  • 50% ஊழியர்களுடன் ஐ.டி நிறுவனங்கள் இயங்கலாம் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
  • பணி ஒதுக்கப்பட்டவர்(Bench), பணி ஒதுக்கப்படாதவர்(Work Allocated) என எந்த ஐ.டி தொழிலாளரையும் கட்டாயப்படுத்தி பணியில் இருந்து விலகச் செய்வதை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்.
  • புதிய தொழிலாளர்களுக்கு ஏற்கனவே பணி நியமன ஆணை கொடுத்த ஐ.டி நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் பணி நியமனத்தை இணைய வழியே உறுதி படுத்த வேண்டும்.
  • அனைத்து நிறுவனங்களும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  • கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் ஐ.டி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்
  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், பண உதவி வழங்கி அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

பரிமளா

தலைவர்,
ஐ.டி ஊழியர்கள் மன்றம் (Forum for IT Employees-FITE)
தமிழ்நாடு
பதிவு எண்: 3598/CNI
9840713315 | fiteorganization@gmail.com | fb: FITE – Forum for I.T. Employees

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW