பெரும் பணக்காரர்கள் மீது ‘கொவிட் சொத்து வரி’ ஏன் விதிக்க வேண்டும் ?
இந்நாட்டின் 953 பெரும் பணக்காரக் குடும்பங்களின் மீது 4% விதிக்கப்படும் வரி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் GDP 1% அரசுக்குக் கிடைக்கும் – அரசு தற்போது அறிவித்துள்ள தொகையைவிட இது அதிகம்
கொவிட் பெருந்தொற்று, அரசுகள் எவ்வாறு தங்கள் இதயத்தைத் தொலைக்காமல் இச்சிக்கலை எதிர்கொள்ளும் என்பது குறித்த பல ஆய்வுகளை நம்முன் கொண்டுவந்துள்ளது. இது, அறிவிற்ற அணுகுமுறைகளையும், கடினமான இதயத்தையும் பல்வேறு அரசுகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் வரவேற்கத்தக்கதாகும்.
ஐரோப்பா இப்பெருந்தொற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த மிகவும் விவேகமான, மனிதாபிமான அடிப்படையிலான பரிந்துரைகளை “ஐரோப்பிய கொவிடுக்கான பதில் நடவிடிக்கைகளை நிதியளிக்க ஒரு முற்போக்கு ஐரோப்பிய சொத்து வரி” என்ற கட்டுரையில் கெமிலி லண்டாய்ஸ், எம்மாணுவேல் சேய்ஸ் மற்றும் கப்ரியேல் சுஸ்மன் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர். அவர்களது கட்டுரையை இவ்விணைப்பில் காணலாம்
அவர்களது பரிந்துரையை எளிமையாக இப்படி முன்வைக்கலாம். ஐரோப்பிய அரசுகள் “கொவிட் கடன் பத்திரங்கள்” வழங்க வேண்டும். அதன் மூலம் எழும் கடனை அடைக்க, மக்கள் தொகையிலுள்ள 1% பெரும்பணக்காரர்களின் சொத்துக்கள் மீது வரி விதிக்க வேண்டும். இத்திட்டமானது, சமத்துவத்தை முன்வைக்கும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத வரி விதிப்பையும், பண வீக்கத்தை அதிகப்படுத்தாத வகையில் கடனை அடைக்க வழிசெய்யும்.
இந்த வரி விதிப்பின் அதிகரிக்கும் படிநிலைகள் தொடர்பான திட்டம், அவர்களது கட்டுரையின் பெட்டி 1இல் விளக்கப்பட்டது, பின்வரும் அட்டவணையில் உள்ளது.
அட்டவணை 1: ஐரோப்பிய கொவ்ட்-19 சொத்து வரிக்கு முன்வைக்கப்படும் அலகுகள்(யூரோக்களில்)
சொத்து அடிப்படையிலான பிரிவுகள் | வரம்பு
(யூரோக்கள்) |
கூடுதல் வருவாய் மீதான வரி விகிதம் |
முதல் 1% முதல் 0.1% கோடிஸ்வரர்கள் |
2 மில்லியன் 8 மில்லியன் 1 பில்லியன் |
1% 2% 3% |
1 யூரோவிற்கு 83.30 என இருக்கும் இந்திய ரூபாய் மதிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், மேலே உள்ள யூரோ எண்கள் இந்திய ரூபாயில் பின்வரும் அட்டவணையில் குறிப்பிட்ட அளவைத் தொடும்.
அட்டவணை 2: ஐரோப்பிய கொவ்ட்-19 சொத்து வரிக்கு முன்வைக்கப்படும் அலகுகள்(ரூபாய்களில்)
சொத்து அடிப்படையிலான பிரிவுகள் | வரம்பு
(ரூபாய்கள்) |
கூடுதல் வருவாய் மீதான வரி விகிதம் |
முதல் 1% முதல் 0.1% கோடிஸ்வரர்கள் |
16.67 கோடி 66.64 கோடி 8,330 கோடி |
1% 2% 3% |
லண்டாய்ஸ் மற்றும் அவரது சகாக்கள் இவ்வாறு கூறுகின்றனர், ”இத்தகைய வரியானது, ஐரோப்பிய ஜி.டி.பியில் 1.05% ஒவ்வொரு வருடமும் விதிக்கும்”. இதுபோன்ற ஒரு திட்டம் இந்தியாவில் எப்படி இருக்கும்? இக்கட்டுரையில் அணுகியிருக்கும் பின்னட்டைப் பயிர்ச்சி இதுதான்.
இதற்குச் செல்லும் முன், இந்தியாவில் செல்வத்தின் மீது வரி கிடையாது: கடந்த 2016-17 ஒன்றிய பட்ஜெட்டில் சொத்து வரி ஒழிக்கப்பட்டது. இக்கட்டுரையில் வழங்கப்படும் எண்கள் பொருள் கொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டுமெனில், குறைந்தபட்ச அளாவிலேனும், அவசரகால, ஒரு முறை நடவடிக்கையாகவாவது சொத்து வரி விதிக்கப்படும் என நாம் கருதிக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக வீடுவாரியாக எவ்வாறு செல்வம் பிரிந்து கிடக்கிறது என்பதைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? குறைந்தபட்சம் 1961-62லிருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும், எவ்வாறு சொத்து மற்றும் கடன் ஆகியவை, சொத்து வகுப்புகளிடையே பிரிந்து கிடக்கின்றன என்பது குறித்த கணக்கெடுப்புத் தகவல், தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் அனைத்திந்திய கடன் மற்றும் முதலீடு பற்றிய கணக்கெடுப்புகளிலிருந்து நமக்கு கிடைக்கின்றன. இத்தகவல் கடைசியாக தொகுப்பட்டது 2012-13 ஆம் ஆண்டில். அதன்படி சொத்து பிரிந்து கிடப்பதில் அதிகப்படியான சமமின்மை நிலவுகிறது.
ஆனால், பல நாடுகளில் சொத்து கணக்கெடுப்புகளில் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும், இந்த கணக்கெடுப்புத் தகவல் வழக்கமாக சமமின்மையை குறைத்துக் காட்டும் என்று. பெரும் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை குறைத்துக் காட்டுவதும், கணக்கெடுப்புகள் பெரும் பணக்காரர்களிடம் மிகை மாதிரிகள்(over-sample) எடுக்காததும்தான் காரணம். பெரும் பணக்காரர்கள் அதிக சொத்து குவித்துள்ளதாலேயே என்னைவிடவும் உன்னைவிடவும் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார் எர்னெஸ்ட் ஹெமிங்வே. அவ்வாறு வேறுபட்டவர்களாக இருக்க எவ்வளவு செல்வத்தைக் குவிக்க வேண்டும் என்ற கணக்கை, நாம் ஏற்கெனவே கண்டதுபோல், அதிகாரப்பூர்வ சொத்து கணக்கெடுப்புகளின் மூலம் சரியாக அறிந்து கொள்ள முடியாது. ஆதலால், உண்மை நிலையை அறிந்து கொள்ள ஊடகங்கள் அளிக்கும் தகவல்களை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை, அதுபோன்ற ஆதாரமற்ற மிக முக்கியமான தகவல் கிடைக்கும் இடம் ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருண் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் (IIFL Wealth Hurun India Rich List) வெளியிடும் ஆண்டறிக்கை. கடந்த 2012 இலிருந்து ஒவ்வொரு ஆண்டும், இப்பட்டியல், 1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துடையவர்களின் நிகர் மதிப்பினை(கடனில்லா சொத்துக்கள்) இப்பட்டியல் வெளியிட்டு வருகிறது.
ஹுருண் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2019 பற்றிய செய்தி அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
”… ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருண் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2019 என்பது 953 நபர்களின் தரவரிசையை அவர்களது நிகர் மதிப்பின்படி பட்டியலிட்டு காட்டுகிறது. தனியார் சொத்துக்களை கணக்கெடுக்கும் விரிவான, சரிபார்க்கப்பட்ட பட்டியலாக இது இருக்கிறது…இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சராசரி சொத்து மதிப்பு 5,278 கோடி ரூபாயாகும்…”
மிகவும் தோராயமாக, ஒரு வீட்டிற்கு ஐந்து நபர்கள் என கணக்கிட்டால், இந்தியாவின் மக்கள் தொகை என மதிப்படப்பட்டுள்ள 130 கோடி மக்களுக்கு 26 கோடி வீடுகளாகிறது. ஹுருண் பணக்காரர்கள் பட்டியலிளுள்ள 953 குடும்பங்கள் என்பது, மொத்த வீடுகள் எண்ணிக்கையில் வெறும் 0.00037% என வைத்துக் கொள்ளலாம். இது மிகவும் சொற்பமான எண்ணிக்கை ஆகும். இந்த மிகச் சிறிய எண்ணிக்கையிலான 953 குடும்பங்கள், சராசரியாக ஒரு குடும்பம் ரூ.5,278 கோடி குவித்துள்ளதாக வைத்துக் கொண்டால், மொத்த சொத்துக்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.50.3 இலட்சம் கோடி ஆகும்(953 * 5,278 கோடி).
நிகழ்கால விலைவாசியைக் கணக்கில் கொண்டால், இந்தியாவின் நிகழ்கால ஜி.டி.பி ரூ.190.5 இலட்சம் கோடி ஆகும். ஆக, மொத்த வீடுகளின் எண்ணிக்கையில் வெறும் 0.00037% இருக்கும் ஹுருண் பணக்காரர்கள் பட்டியல், இந்தியாவின் மொத்த ஜி.டி.பியில் 26.4%க்கு நிகரான சொத்து மதிப்பைக் கொண்டுள்ளது தெளிவாகிறது (ரூ 50.3 இலட்சம் கோடி/ரூ190.5 இலட்சம் கோடி).
மேலே காட்டப்பட்டுள்ள அட்டவணை 2இன்படி, பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் மீது 4% கூடுதல் வருவாய் மீதான வரி (ரூ.1000 கோடி உச்ச வரம்பை இது உள்ளடக்கியது) விதிக்கப்படுவது நியாயமானதேயாகும். ஹுருண் அறிக்கையில் கிடைக்கப்பெறும் விரிவான தகவலின்படி, முதல் 10 பணக்காரர்களுக்கான உச்சவரம்பு, ரூ.71,500 கோடி ஆகும். அவ்வறிக்கையில் காணப்பெறும் அட்டவணை 1இன் அடிப்படையில், கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவணை 3ஐ காணவும்.
அட்டவணை 3: ஹுருண் பணக்காரர்கள் பட்டியல், 2019இன் முதல் 10 பணக்காரர்களுடைய நிகர் மதிப்பு
தரவரிசை | சொத்து (கோடி ரூபாய்களில்) |
1 2 3 4 5 6 7 8 9 10 மொத்தம் |
3,80,700 1,86,500 1,17,100 1,07,300 95,500 94,100 88,800 76,800 76,800 71,500 1,294,100 |
அட்டவணை 1 இல் குறிப்படப்பட்டுள்ளதைப் போல, இங்கு அதிகரிக்கும் வரி அமைப்பை ஏற்படுத்த முடியும். முதல் 10 பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் வருவாய் மீதான வரியாக 6%மும், ஏனைய 943 குடும்பங்கள் மீது 3% வரியும் விதிக்கலாம். இது நமது கணக்குளை மேலும் சிக்கலாக்கலாம் என்பதால், தற்போதைக்கு, பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் கூடுதல் வருவாய் மீதான வரியாக 4% விதிக்கலாம் என வைத்துக் கொள்வோம்.
அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 26.4% எனப் பார்த்தோம். எனவே, 26.4%த்தில் 4% என்பது, ஜி.டி.பியில் 1%த்திற்கு சற்று அதிகமாக வருகிறது. இதுவே, இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வரி ஆகும்.
இப்பெருந்தொற்றை சமாளிக்க அரசு அறிவித்துள்ள “பொருளாதார உதவி” என்பது ஜி.டி.பியில் 1%த்தைவிட குறைவாகும். இதனுடன் சேர்த்து, ஏற்கெனவே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட பிரதமர் கிசான் மற்றும் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையும் சேர்த்து அறிவித்தது. தற்போது நிகழும், பெருங்கொடுமையில் உழலும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் அரசு, கொவிட் உதவித்தொகையை இரட்டிப்பாக்கும் ஒரு எளிய மறுசீரமைப்புத் திட்டத்தினை செயல்படுத்தாமல் இருக்குமா?
2012 இலிருந்து 2019க்கு இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் மட்டும், ஹுருண் பணக்காரர்கள் பட்டியல் 100இலிருந்து 953ஆக வளர்ந்துள்ளது. இந்தியா டாலர் மதிப்பிலான கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் இரண்டு நாடுகளை ஒப்பிட்டால் மட்டுமே பின்தங்கியுள்ளது. அரசு மட்டும் அதைப்பற்றி சிந்திக்குமேயெனில், மிகவும் எளிமையாக கைக்கெட்டும் தூரத்தில் உள்ள பழம் கிட்டும்.
ஆனால் இன்றைய நிலைமை என்ன ?
- சொத்து வரி ஒழிக்கப்பட்டது
- பெருநிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டது
- எய்ம்ஸ் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் கட்டாயமாக பிடிக்கப்பட்டது மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு பணம் திரட்டப்படுகிறது (“PM-CARES”).
அபத்தமான முறைகளிலிருந்து கோர வழிமுறைகளைச் சென்றடையும் பாதை எளிதுதான். நாம் அபத்தமான வழிமுறைகளுக்குப் பழகி விட்டோம். இப்போது, கோர வழிமுறைகளை நோக்கிய நகர்வை மேற்கொள்ள வைக்கப்படுகிறோம்.
– எஸ். சுப்ரமணியன்
தமிழில்: பாலாஜி