தொடரும் பட்டினிக்கொலைகள் – இரண்டாம் கட்ட ஊரடங்கு ஏதுமற்றவர்களின் எழுச்சியாக மாறட்டும் !

17 Apr 2020

மோடி அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு முதல் கட்டம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், அனாதையாக்கப்பட்ட அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வாதாரத் துயரத்திற்கு முடிவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டினிகொலைகளுக்கு முடிவில்லை. 1000 கி.மீ ஊர் நோக்கி நடப்பவர்களின் நடைபயணத்திற்கு முற்றுப்புள்ளியில்லை. மருத்துவம் பார்க்க வழியின்றி உடல்நிலை சரியில்லாமலும் பட்டினியிலும் தினம் தினம் சாவும் பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலத்திற்கு ஓய்வில்லை.  மார்ச் 24 தொடங்கி இன்று ஏப்ரல் 15 வரை வட மாநிலம் தென்மாநிலம் நோக்கி வழிநெடுக செல்லும் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. காவல்துறையின் வன்முறையால் புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படும் கொடூரத்திற்கு முடிவில்லை. மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. ஆனால் முதல் கட்ட ஊரடங்கு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக மாறியிருக்கிறது என்று உண்மை நிலவரத்தை மூடிமறைத்து தனக்கு தானே புகழாரம் சூட்டிக்கொள்கிறார் மோடி.

ஊரடங்கின் கட்டுப்பாட்டை பற்றியும், முகக்கவசத்தைப் பற்றியும் இந்தியப் பெருமையைப் பற்றியும் மட்டுமே பேசி நாட்டு மக்கள் மீதான தன் பொறுப்பற்றத்தனத்தை வெளிப்படுத்திவிட்டு சென்றுள்ளார். மக்கள் நலன் சார்ந்த மருத்துவ சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து பேசவில்லை. மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து வாய் திறக்கவில்லை. கட்டுமானம், வீட்டுவேலை, தினக்கூலி, விவசாயிகள், விவசாயக் கூலிகள், மீனவர்கள், தொழிலாளிகள் ஆகிய அனைவருக்குமான குறைந்தபட்ச நிவாரண நிதி  குறித்து பேசவில்லை. ஆனால் அனைவரும் தன் உத்தரவிற்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற அதிகாரத்தை  நிலைநாட்டுவதில் மட்டும் முனைப்பு காட்டுகிறார் பாசிஸ்ட் மோடி. முதல்கட்ட ஊரடங்கு பசி, பட்டினிகொலைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. இன்னொருபுறம் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கை உடைத்து வீதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனைத் தீர்க்க முயற்சிக்காத மத்திய அரசு எந்தக் காரணமுமின்றி இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3வரை தொடரும் என அறிவித்திருக்கிறது. மாநில அரசுகளோ கட்டுப்பட்டு மௌனியாக இருக்கின்றன. அடித்தட்டு ஏழை எளிய மக்களும் புலம்பெயர் தொழிலாளர்களும் சோற்றுக்கு வீதிக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.

 

மறைக்கப்பட்ட பட்டினிக்கொலைகள்

இதுவரை நோயினால் இறந்துள்ள உயிர்கள் மட்டும்தான் அரசின் பட்டியலில் காட்டப்படுகிறது. பசியால் பலியாக்கப்படும் பல நூறு உயிர்கள் பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள் அரசுக்கு உயிராகத் தெரியவில்லை என்பதால் அது பதிவாகவில்லை. கொரானா நோயும் வாழ்வாதார நெருக்கடியும் குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கூடுதலாக பாதித்திருக்கிறது. ஊரடங்கால் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடிகள் பல குடும்பங்களில் சண்டையை அதிகரித்திருக்கிறது. தற்கொலைகள் நிகழ்ந்திருக்கிறது. பெற்றத் தாயே தன் குழந்தையை தூக்கிவிசும் கொடூரமான துயரச்செயலுக்கு இட்டுச்சென்றிருக்கிறது. பல  தாய்மார்கள் குழந்தையை பறிகொடுத்தவர்கள் அழுதுபுலம்பி ஆற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியை மோடி அரசு சொல்லவில்லை. இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிப்பிற்கு பின் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் அரசின் அலட்சியத்தால் இறந்துள்ளனர். பட்டினியால் வறுமையால்,  மருத்துவமின்றியும் காவல்துறை தாக்குதலிலும் மரணித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையிலான முதல் கட்ட ஊரடங்கின் மரணித்தவர் சில விவரங்கள்.

 

வேலையின்றிபசிக்கொடுமையில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 53 பேர்
காவல்துறையின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 7 பேர்
நெடுஞ்சாலையில் நடந்தே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்கள் 35 பேர்

 

மது இல்லாததால் தற்கொலை செய்துகொண்டவர்கள் 40 பேர்
கொரானா வைரஸ் பயத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 39பேர்

 

வேறு காரணத்திற்காக 21 பேர்
கேரளாவில் மட்டும் 100 மணிநேரத்திற்கு 7பேர் என்கிற வீத்ததில் மதுவின்றி உயிரிழந்துள்ளனர்.

 

மார்ச்30.2020 மேகாலயாவை சேர்ந்த அல்டரின் லிங்தோ என்ற 22 வயது தொழிலாளி ஆக்ராவில் தான் வேலைசெய்து வந்த உணவகத்தில் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அல்டரின் விட்டுச்சென்ற கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது. அவற்றில் உணவகத்தின் உரிமையாளர்மீது குற்றம் சாட்டியிருக்கிறார். உணவக உரிமையாளர் உ.பி பாஜக அமைச்சர் உதய் பான் சிங் இன் நெருங்கிய உறவினர் ஆவர். காவல்துறை கைப்பற்றிய அல்டரின் எழுதிய கடிதம்,

“எனது பெயர் அல்டரின் லிங்தோ. நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தேன். எனது தாய் – தந்தை இறந்துவிட்டனர்.  எனது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக நான் எனது வீட்டைவிட்டு வெளியேறினேன். நான் ஆக்ராவில் உள்ள சாந்தி உணவகத்தில் பணிபுரிந்து வந்தேன். அதனை மூடிவிட்டார்கள். நான் செல்வதற்கு வேறு இடம்  இல்லை. உணவகத்தின் உரிமையாளர் என் மீது அனுதாபப்படவில்லை. மாறாக என்னை வெளியேறச் சொன்னார். நான் அவர்களிடம் உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நான் வேறு எங்கும் செல்வதற்கு இடமில்லை. எனக்கு தற்கொலையை தவிர வேறுவழியில்லை. எனக்கு ஒரேயொரு உதவி செய்யுங்கள் எனது உடலை என் சொந்த ஊருக்கு அனுப்பிவையுங்கள், அங்கே நான் நிம்மதியாக இருப்பேன்.  கடவுளி பெயரால் இதை மட்டும் செய்யுங்கள். ஏனென்றால் நான் இன்று உயிரோடு இருக்க மாட்டேன். நான் விளையாட்டாக சொல்லவில்லை. வீட்டு உரிமையாளர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார் ஏன் என்றால், அவரின் மாமனார் ஒரு அமைச்சர்.“

மார்ச் 28: மும்பை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நரேஷ் சின்டே 55, என்பவர் உடல்நலமில்லாத நபர்களை ஏற்றிக்கொண்டுசென்ற போது 3000 அபராதம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தி, புனே காவல்துறை அதிகாரி வெங்கடேசம் தாக்கியத்தில் ஓட்டுநர் இறந்துவிட்டார்.

மார்ச் 29: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரோஷன் லால் லக்ஷ்மிபூர் மாவட்டம். தலித் இளைஞன் 29, கொரானா இல்லாதபோதும் இருக்கிறது என துன்புறுத்தி தனிமையில் இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார் காவல்துறை கான்ஷ்டபில் அனூப் குமார் சிங். லத்தியால் தாக்கியதில் கை உடைபட்டதில் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டார். தன் இறப்பிற்கு காவல் அதிகாரி அனூப்சிங் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துள்ளார்.

ஏப்ரல் 11: சிவகங்கை திருப்புவனம் அருகே சக்குடி பேருந்துநிலையத்தில் தங்கியிருந்த 80வயது முதியவர் ஊரடங்கால் உணவுகிடைக்காமல் உயிரிழந்துள்ளார்.

ஏப்ரல் 11: மகேஷ் ஜெனா 20 வயது இளைஞன், புலம்பெயர் தொழிலாளி ஊருக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தால் மகாராஷ்டிராவிலிருந்து மிதிவண்டியிலேயே 1700கி.மீ பயணம் செய்து தன் சொந்த ஊரான ஒரிசாவிற்கு சென்று சேர்ந்துள்ளார்.

ஏப்ரல் 11: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பேருந்தின்றி நடந்துசெல்லும்போது குழந்தை வழியிலேயே இறந்துவிட்டது. ஆம்புலன்ஸ் தொடர்புகொண்டும் பல மணிநேரம் பயனின்றி போகவே குழந்தை இறந்திருக்கிறது.

ஏப்ரல்12: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்பவன் சுக்லா என்கிற விவசாயி அறுவடை செய்யவாய்ப்பின்றி காய்ந்து சறுகான கோதுமை கதிர்களைப் பார்த்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்

ஏப்ரல் 12: பீகார், ஜெகன்னாபாத்தைச் சேர்ந்த தம்பதி உடல்நலமில்லாத தன் 3 வயது குழந்தையை எடுத்துகொண்டு 48கி.மீ தொலைவு நடந்தே செல்லும் போது குழந்தை இறந்துவிட்டது. ஆம்புலன்ஸ் வராததே தன் குழந்தை இறப்புக்கு காரணம் எனக்கூறி தாய் கதறியழுதுகொண்டே நடந்துவந்தார்.

 

ஏப்ரல்12: உத்தரப்பிரதேசம், பதோதி பகுதியைச் சேர்ந்த மஞ்சு யாதவ், மிர்துள் யாதவ் ஆகியோருக்கு 5 குழந்தைகள். ஊரடங்கால் வாழ்க்கை நெருக்கடிக்குள்  தள்ளப்பட்டதில் பசிக்கொடுமைக்கு வழிதெரியாமல், தாய் மஞ்சு யாதவ் தன் 5 குழந்தைகளையும் அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் தூக்கிவிசியுள்ளார். காவல்துறை  இதனை கணவன் மனைவி சண்டையாக வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, ஏழை எளியோர் வீடுகளில் குடும்ப தகராறு மற்றும் வன்முறையை அதிகரிக்கிறது. வறுமையின் விளைவாய் நடந்த இந்த வன்முறையை பல  ஊடகங்கள் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ‘இந்த சம்பவம் பசி, பட்டினியால்’ நடக்கவில்லை என்பதை நிறுவிட காவல் துறை இவர்கள்  வீட்டில் இருந்த உணவை புகைப்படம் எடுத்து வெளியிட்டது.

ஏப்ரல்12 : பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ராஜீவ் 22, என்ற இளைஞர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைசெய்து வந்திருக்கிறார். ஊரடங்கு என்பதால் வேலையின்றி, உணவின்றி ஊருக்குச்செல்ல பேருந்துமின்றி கஷ்டப்பட்ட ராஜீவ் வேறுவழி தெரியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

ஏப்ரல் 13: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைக்குச் சேர சென்னை வந்திருக்கிறார். வேலை கிடைக்காமல் போகவே, அந்நேரத்தில் ஊரடங்கும் அறிவிக்கவே தங்க இடமின்றி, உணவின்றி சாலையோரம் 3 நாட்களாக தங்கியிருந்திருக்கிறார். விளைவு, மனநலம் பாதிப்படைந்து அருகில் இருந்த முதியவரை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்.

ஏப்ரல் 13:  கோயமுத்தூரை சேர்ந்த 35 வயது பெர்னாண்ட், சிலிண்டர் டெலிவரி வேலை செய்துவந்தவர்.  ஊரடங்கால் கடந்த 2 வாரமாக மது கிடைக்காமல் போகவே, கை சுத்தம் செய்யும் கிருமிநாசினியைக் குடித்து இறந்திருக்கிறார்.

இதுதான் மோடி சொல்லும் ஒளிர்கிற இந்தியா. கைத்தட்டல், விளக்கேற்றலின் பின்னுள்ள உண்மை.  சுத்தம், சுகாதாரம், சத்தான உணவின்றி குப்பை கூழங்களுக்கு இடையில் தினம் நோய்களோடு சண்டையிட்டு தங்கள் வாழ்க்கையை நடத்தும் விளிம்பு நிலை மக்கள், அன்றாடம் இறப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கண்ணீர் கொரானா நோய் கண்டல்ல, பசி எனும் கொடிய நோய் கண்டுதான். நீரு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருக்கும்  ஏதுமற்ற ஏழைகளின் கோபம் எத்தனை நாள் அரசால் அடக்கிவைத்துவிட முடியும்? வாட்டும் பசியையும், மரண வலியையும் போக்கிடாத அரசின் உத்தரவை எத்தனை நாட்களுக்கு கேட்டிருப்பார்கள் இழப்பதற்கு ஏதுமில்லாத எளிய மக்கள்?.

 

வெடித்தெழும் போராட்டங்கள்

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”  என்றார் கவிஞர் பாரதி. 21 நாள் ஊரடங்கு எதிர் கலகத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது. இன்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் உணவு கலகத்தையும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் தொடங்கிவைத்திருக்கிறார்கள் புலம்பெயர் மக்கள்.

மார்ச் 29:  ராஜஸ்தான் மாநிலத்தில் உணவின்றி தவித்த மக்கள் உணவு ட்ரக்கை வழிமறித்து பொருட்களை பறித்துச்சென்றனர்.

ஏப்ரல்12   குஜராத் மாநிலம் சூரத்தில் இரவு ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த  ஊர்களுக்கு  அனுப்பக்கோரி வீதியில் இறங்கி, பேருந்துகளை கொழுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற குஜராத் அரசு நடவடிக்கை எடுக்காமல் போராடிய 80 பேரை ஊரடங்கை மீறியதாகக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

 

ஏப்ரல் 12 :   டெல்லி காஷ்மீரி கேட் அருகே முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். உணவுப்பற்றாக் குறையாலும் தரமில்லா உணவை வழங்குவதாகவும் பராமரிப்பாளர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை தொழிலாளர்களை தாக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து தப்பித்து வெளியேறிய 4பேர் அருகில் உள்ள யமுனா நதியில் குதித்துள்ளனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். உடல் கிடைக்கவே முகாமில் உள்ள மற்ற தொழிலாளர்கள் கொதித்தெழுந்து அந்த முகாமை தீயிட்டுக்கொழுத்தியுள்ளனர். 6 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

 

ஏப்ரல்13 : திண்டுக்கல் மாவட்டத்தில் தங்களுக்கான உணவை ஏற்பாடுசெய்து கொடுக்கக்கோரி பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.

ஏப்ரல் 13:  மும்பையில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் மக்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி ரயில்நிலையம் முன் ஒன்றுதிரண்டனர். அவர்களுக்கான மாற்று ஏற்பாட்டை செய்து பாதுகாப்பாக அனுப்பிவைக்க வேண்டிய மகாராஷ்டிரா அரசு, பொறுப்பைத் தட்டிக்கழித்து திரண்டிருந்த மக்கள் மீது தடியடியை நடத்தியது. அதே நேரத்தில் மும்பையில் வருகிற 18ஆம் தேதி போராட்டம் நடைபெறும். நான் பேருந்தை ஏற்பாடு செய்வேன் அனைவரும் அவரவர் ஊருக்குச் செல்லலாம் என அழைப்புவிடுத்த  தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வினய்  கைதுசெய்யப்பட்டார்.

 

ஏப்ரல்14: கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான கேன்டீன் மூடப்பட்டதால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

ஏப்ரல்14:  சூரத் நகரில் மீண்டும் 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தை துவங்கினர். உ.பி, பீகார், ஒடிஷா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஜவுளி ஆலைகளில் வேலை செய்துவந்தனர். ஊரடங்கை தொடர்ந்து ஆலை முதலாளிகளால் கைவிடப்பட்டு ஊதியம் ஏதுமின்றி உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கையேந்தி  நிற்கும் சூழலில் மீண்டும் மே 3 வரையான ஊரடங்கு நீடிப்பை  எதிர்த்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவேண்டும் என்ற முயற்சியில்  சாலைகளை மறித்தனர்.

 

ஏப்ரல்16: சிவகங்கையில் அரசு மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் போராட்டம்; மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை துப்புரவு செய்யும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

 

இதுபோல் இன்னும் ஏராளமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிறது. இவை வெளிவந்த செய்தி. வெளிவராத பல சம்பவங்கள் உண்டு. மே 3வரை ஊரடங்கை மத்திய மாநில அரசுகள் அதிகரித்திருக்கின்ற இந்த சூழலில், இத்தகைய மக்களின் மௌனம் உடைத்த கோபக் குரல், கடல் அலைபோல் ஆர்ப்பரித்து அடங்க மறுக்கட்டும். பாசிச எதிரிகள் வீழ்ந்ததே வரலாறு என பறைசாற்றட்டும்.

 

-ரமணி

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW