செய்தி அறிக்கை – கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு மையம்

14 Apr 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு மையம்

                                    செய்தி அறிக்கை 3 – 14-04-2020

21 நாள் முழு ஊரடங்கு ஏப்ரல் 14 உடன் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு தொடரும் எனவும் மத்திய அரசு இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிப்பு செய்து இருக்கிறது.  இந்நிலையில் பின்வரும் கருத்துகளை முன்வைக்கிறோம்.

முழு ஊரடங்கை படிப்படியாக விலக்குதல்:

  • ஊரடங்கை விலக்கிக் கொள்வதைப் பொருத்தவரை துறைசார் வல்லுநர்கள் நாடு தழுவிய அளவிலோ மாநிலம் தழுவிய அளவிலோ முடிவெடுப்பதற்கு மாறாக மாவட்ட அளவில் நோய்த் தொற்றி இருப்பவர்களின் எண்ணிக்கை, பரவல் பற்றிய மதிப்பீடு, மருத்துவக் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஊரடங்கைப் படிப்படியாக தளர்த்துவதும் உற்பத்தி, சேவை என வெவ்வேறு துறைகளையும் படிப்படியாக செயல்பட விடுவதும் அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த 21 நாள் ஊரடங்கே திடீரென்று கட்டளையிடும் பாணியில் ஒரு வரி அறிவிப்பாக மக்களுக்கு சொல்லப்பட்டது. மே 3 வரையிலான தற்போதைய ஊரடங்கு நீட்டிப்பிற்காவது என்ன காரணத்திற்காக நீட்டிக்கப்படுகிறது, என்னென்ன காரணிகளின் அடிப்படையில் ஒரு பகுதியில் ஊரடங்கை விலக்குவதையோ தளர்த்துவதையோ அரசு செய்யவிருக்கிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

முழு ஊரடங்கின் நோக்கமும் அடைந்தவையும்:

முழு ஊரடங்கின் மூன்று முக்கிய நோக்கங்களான நோய் பரவலை தடுப்பது, பரிசோதனை மற்றும் மருத்துவக் கட்டமைப்பை பலப்படுத்துவது ஆகியவற்றில் இந்த 21 நாள் ஊரடங்கில் தமிழக அரசு அடைந்துள்ளவை குறித்து.

பரிசோதனை

  • இந்தியாவில் விரிவான பரிசோதனையை மேற்கொள்வதற்கு போதிய பரிசோதனைக் கருவிகள் இல்லை என்ற காரணம் சொல்லப்பட்டாலும் கேரளம், மகாராஷ்டிரம், தில்லி போன்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகம் மிகக் குறைந்த அளவிலான பரிசோதனையே மேற்கொண்டுள்ளது. இதனால் நோய்த் தொற்றுப் பரவலின் வீச்சுக் குறித்து முடிவுக்கு வருவற்கான அடிப்படையான தரவுகள் அரசிடம் இல்லை. போதிய தரவுகள் இல்லாததால் எந்த மதிப்பீடும் செய்ய முடியாமல் முழு ஊரடங்கை நீட்டிப்பது என்ற முடிவை எடுக்க வேண்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு ஆளோனோர் எண்ணிக்கையில் 2 ஆவது இடத்தில் இருக்கின்ற போதும் விரிவானப் பரிசோதனை மேற்கொள்ள முடியாமல் போனதற்கான காரணங்கள் என்ன? என்பதை தமிழக அரசு சொல்ல வேண்டும்.
  • முழு ஊரடங்கு இரு வாரங்கள் நீட்டிக்கப்படுகிறதென்றால் விரிவானப் பரிசோதனை மேற்கொள்வதற்கான தயாரிப்பு இப்போதாவது இருக்கிறதா? நோய்த் தொற்றுக்கு ஆளோனோருக்குத்தான் தனிமைப்படுத்தப் படுக்கையும் உயிர்வளியூட்டியும் தேவை. அதற்கு முதலில், யாருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட வேண்டும். எனவே, விரிவான பரிசோதனைக்கு திட்டமிடல் இல்லாத விடத்து தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், உயிர்வளியூட்டிகளின் எண்ணிக்கைகளைப் பெருக்குவதில் பயன் ஒன்றும் இல்லை என கருதுகிறோம். எனவே, இரு வாரத்தின் முடிவில் எவ்வளவு பரிசோதனை செய்து முடிக்கப் போகிறோம் என்ற இலக்குப் பற்றி அரசு மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும்.
  • இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய் ஆகியவற்றால் பாதிப்புகுள்ளானோர், முதியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அத்தகைய பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தி நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வேண்டுமானால் நோய்த் தொற்று உடையோரைத் தனிமைப்படுத்த வேண்டும். அப்படி தனிமைப்படுத்துவதற்கு முதலில் அவர்களை அடையாளம் காண வேண்டும். பரிசோதனை செய்யாமல் நோய்த் தொற்று உடையோரை அடையாளம் காண முடியாது. இதிலும் பரிசோதனை தான் முன்நிபந்தனையாகிறது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
  • ஊரடங்கைப் படிப்படியாக விலக்குவதற்கும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் தெளிவான திட்டமிடலும் ஓட்டையில்லாத கண்காணிப்பு வழிமுறை (Surveilance Mechanism) வேண்டும். அத்தகைய கண்காணிப்புப் வழிமுறையில் ஆக முக்கியமானது பரிசோதனையே. எனவே, இப்போதாவது பரிசோதனையை விரிவுப்படுத்துவதற்கான போதிய பரிசோதனை கருவிகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளிட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
  • தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பரிசோதனை மையங்களிலும் நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்? ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு தமிழகத்தில் எத்தனை பேருக்கும் பரிசோதனை செய்ய முடியும் என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  • தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் கொரோனா நோய் தொற்று சோதனைக்கான செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்ற அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்துதல்:

  • போதிய முகக் கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள் உள்ளன என்று அரசு சொல்லிக் கொண்டிருந்தாலும் முன்வரிசையில் நின்று பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தரமான முகக் கவசங்களைப் காசு கொடுத்து வெளியில் இருந்து வாங்கிக் கொண்டு மருத்துவமனை எடுத்துச் செல்வதை அறிய முடிகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 8 மருத்துவர்கள், 5 செவிலியர்கள், 2 முதுநிலை மருத்துவ மாணவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அரசின் கூற்று படியே கொரோனா நோய் தொற்று 2 ஆம் கட்டத்தில் இருக்கும்போதே இத்தனை மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது அச்சத்தை தருவதாக இருக்கிறது. கொரோனா பெருத்தொற்று பரவல் அதிகமானால் அதை சமாளிக்க மருத்துவ பணியாளர்களை உள்ளடக்கிய வலுவான மருத்துவ கட்டமைப்பு அவசியம். அதை கவனத்தில் கொண்டு, மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்களின் பாதுகாப்பு விசயத்தில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
  • நாள் முழுக்கப் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒப்புக்கென்று ஒரேயொரு முகக் கவசத்தைக் கொடுப்பதால் அவர்களை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துவிட முடியாது. மருத்துவமனைக்கு வெளியே பணியாற்றிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள், சமூக நலப் பணியாளர்கள், அத்தியாவசிய சேவை துறைசார் பணியாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு நாள்தோறும் புதிய கையுறைகளும், மூன்று என்ற அளவில் தரமான முகக் கவசங்களையும் கொடுக்க வேண்டும்.
  • நகராட்சி/ஊராட்சி/மாநகராட்சி நிர்வாகங்கள் பல்வேறு விதமான கழிவுகளை கையாள்கிற தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பாக செயல்படுவது எவ்வாறு என அறிவுறுத்த வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளை அடையாளம் கண்டிருப்பதும் உயிர்வளியூட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளும் வரவேற்புக்குரியவை. அதே நேரத்தில் உயிர்வளியூட்டிகளைப் பயன்படுத்துவதற்குரிய பயிற்சிப் பெற்ற மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதை பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  • முழுமையாக 21 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி மக்களின் முழு ஒத்துழைப்புக் கிட்டியபோதும் போதிய பரிசோதனைகள் செய்யப்படாததால் நோய்ப் பரவலின் நிலையறிய முடியாமல், மேலும் இரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது. கடந்த 21 நாட்களில் நேர்ந்த இத்தகைய தவறுகள் இரண்டாவது ஊரடங்கு காலத்திலும் நேர்ந்துவிடக் கூடாது என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
  • கொரோனா சிகிச்சைக்காக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த மருத்துவர் லட்சுமி நாராயண் ரெட்டி அவர்கள் 04.2020 அன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். அவரின் உடலை அப்போல்லோ மருத்துவமனை முறைப்படி அரசுக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது. இறந்தவரின் உடல் வெவ்வேறு மின் மயானங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு இன்று 14.04.2020 வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் கொரோனா நோய் தொற்றால் இறந்து போன உடல்களை அடக்கம் செய்யும் இடுகாடு/சுடுகாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றதா என பெரிய கேள்வி எழுகின்றது. எனவே, கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, அந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்த வழிகாட்டுதலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றால் இறந்து போன உடல்களை அடக்கம் செய்வதை அரசே செய்ய வேண்டும்.
  • மேலும் சிறுவணிகர்கள் உள்பட அத்தியாவசிய சேவை பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பு முகக்கவசங்கள் அணிவது நோய் தொற்று பரவுவதை தடுக்கும். எனவே இவர்களுக்கும் முக கவசங்களை அரசே வழங்க வேண்டும்.

ஊரடங்கும் சமூகப் பொருளாதார, நலவாழ்வுத் தாக்கமும்:

  • மார்ச் 25 – மார்ச் 31 வரையான முழு ஊரடங்கை கணக்கிட்டே ஆயிரம் ரூபாய் துயர்தணிப்பு உதவிகளை தமிழக அரசு அறிவித்தது. பின்னர் அது மூன்று வார ஊரடங்கு, ஐந்து வார ஊரடங்கு என்று விரிவடைந்து செல்கின்றது. அன்றாடம் உழைத்தால்தான் சோறு என்ற நிலையில் இருக்கும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் பசியாற்றி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. எனவே, ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில் இரண்டாம் கட்டமாக உரிய நிதி மற்றும் உணவுப் பொருள் உதவிகள் மக்களுக்கு விரைந்து சென்று சேர்ந்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • நீரிழிவு நோய், புற்றுநோய், காசநோய், உளவியல் சிக்கல்கள், மகப்பேறு போன்ற பல்வேறு நலவாழ்வுத் தேவைகளுக்காக தொடர்ச்சியான மருத்துவத்தை எதிர்பார்த்திருக்கும் பிரிவினரைப் பாதுகாப்பதற்கு உரிய சீரான நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் செய்ய வேண்டும்.
  • கொரோனா நோய்ப் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு நேர்வதை தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள இடைவெளி காரணமாகப் பட்டினிச் சாவுகள், தற்கொலைகள், கொரோனா அல்லாத இன்னப் பிற நோய்களினால் ஏற்படும் சாவுகள் ஆகியவற்றைத் தடுப்பதும் முக்கியம் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவானக் கோரிக்கைகள்:

கொரோனா நோய்த் தடுப்புக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் உள்ள இடைவெளிகள் குறித்து களத்தில் இருந்து பெறப்பட்டுள்ள சில பொதுவானக் கோரிக்கைகள் பின் வருமாறு.

  1. தொற்றுநோய்களின் வரலாற்றைப் பார்க்கையில் அது நிற, இன, மத வேற்றுமைகளை முன்னுக்கு கொண்டு வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. சமூகம் எளியோர் மீது பழிபோட்டு நீண்ட காலத்திற்கு களங்கம் ஏற்படுத்துவது நடந்துள்ளது. கெடுவாய்ப்பாக, கொரோனா நோய்த் தொற்று விசயத்தில் இஸ்லாமிய சமூகத்தின் மீதான வெறுப்பு அரசியலை பிற்போக்காளர்கள் வளர்த்துவிடுகின்றனர். இதை தடுப்பதில் தமிழக அரசு அக்கறை கொண்டிருப்பது ஆங்காங்கே வெளிப்படுகின்றது. ஆயினும் இன்னும் கூடுதலான கவனம் எடுத்து, சட்ட நடவடிக்கைகளின் மூலமும் களங்கப்படுத்தும் கண்ணோட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பரப்புரைகளின் மூலமும் வெறுப்பு அரசியலை முற்றாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
  2. தமிழக அரசின் கொரோனா இணையப் பக்கத்தில் அன்றாடம் வெளியிடும் தினசரி அறிக்கைகளில் தில்லி மாநாடு சென்று வந்தோர் எத்தனைப் பேர், அவர்களில் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை எத்தனை பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இன்றைக்கு எத்தனைப் பேர், மொத்தம் எத்தனை பேர் என்ற விவரங்கள் தரப்படுகின்றன. மருத்துவத் துறையின் பகுப்பாய்வுக்குத்தான் இந்த விவரங்கள் தேவையே ஒழிய வெகுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் அறிக்கையில் இவ்விவரங்களைக் கொடுப்பது வெறுப்பு அரசியல் செய்ய விரும்புவோருக்கு உதவுவதாகவே அமைந்து கொண்டிருக்கிறது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளில் இவ்விவரங்களை நீக்குவதோடு இனி வெளியிடப்படும் அறிக்கைகளில் இவ்விவரங்களைக் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
  3. தமிழக சுகாதார துறை செயலரின் அன்றாட செய்தியாளர் சந்திப்பில் ஒரே தொற்றில் பாதிக்கப்பட்டோர் எனக் கூறினாலும் பா.ச.க வின் மூத்த தலைவர்கள் எச். ராஜா, நாராயணன் திருப்பதி போன்றோர் தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கெடுத்தவர்களுக்கு கொரோனா தொற்று என தொடர்ந்து இஸ்லாமியர் வெறுப்பை கட்டமைக்கின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, தமிழக அரசு எச்.ராஜா மற்றும் நாராயணன் திருப்பதி ஆகியோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவர்கள் இது போன்ற வெறுப்பு அரசியல் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
  4. ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாமல் தமிழகத்தில் அவதியுற்று வரும் இந்தோனேசியா, தாய்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்களை கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாகவும், சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும்  கூறி தமிழக காவல்துறை வழக்குகளை பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் மீதும் வழக்குகளை பதிவு செய்துள்ளது. இது மத்திய அரசின் இஸ்லாமியர் விரோத போக்கிற்கு துணை போகிற சட்ட விரோத செயலாகும். காவல்துறையின் இந்த அத்துமீறலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இவர்களில்  தில்லி மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. கொரோனா நோயை பரப்பினார்கள் என்பது ஆதாரமற்ற குற்ற சாட்டு. எனவே உரிய ஆவணங்கள் இருந்தும் ஊரடங்கு காரணமாக சொந்த நாட்டிற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளவர்களை அவர்கள் நாட்டின் தூதரகம் வாயிலாக சொந்த நாடு செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும். மேலும் அவர்கள் மீதும் அவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என சொல்லப்பட்டவர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

  1. ஊரடங்கு உத்தரவு விதிகளுக்கு புறம்பாக  கொரோனா பெருந்தொற்று துயர் தணிப்பு நடவடிக்கையில் தன்னார்வலர் குழுக்கள், அரசியல் கட்சிகள் போன்றவை ஈடுபடுகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளால் நோய் தொற்று பரவ வழி வகுக்கும் எனக் கருதி இது போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. இது ஒரு தவறான முடிவு என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி அளித்த பதிலில் மாநில அரசுகளுக்கு இணையாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்.ஜி.ஓ க்கள் உணவும், தங்குமிடமும் கொடுத்ததை உறுதி படுத்தி உள்ளது. முறைசாரா தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள், வேறு மாநில தொழிலாளர்கள் என விளிம்பு நிலை மக்கள் பற்றிய எண்ணிக்கையோ, அவர்கள் அனைவருக்கும் உணவும், தங்குமிடமும் அளிக்கக்கூடிய எந்த வலைப்பின்னலும் இல்லாத நிலையில் தமிழக அரசின் தன்னார்வலர்கள் துயர் தணிப்பு நடவடிக்கையை தடை செய்வது மக்கள் நலனுக்கு எதிரான முடிவாக பார்க்கிறோம். இந்த தடையானது பெருமளவிலான பட்டினி சாவுகள், வன்முறைகள் ஏற்பட வழிவகுத்து விடும் என அஞ்சுகிறோம். எனவே தமிழக அரசு உடனடியாக இந்த தடையை திரும்ப பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர், அரசியல் அமைப்புகள் போன்றோரை ஒருங்கிணைத்து கொரோனா துயர் தணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
  2. நீரிழிவு, புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோயாளிகளும் முதியவர்களும் என பாதிக்கப்படக்கூடியவர்களை சென்னை மாநகராட்சி அடையாளம் கண்டு வருகிறது. இது போன்று தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதா என அறிவிக்க வேண்டும். மேலும் அப்பிரிவினருக்கு சிறப்புக் கவனம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான வழிவகைகளை அறிவித்தல் என்பதையும் அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
  3. அரசு மருத்துவமனைகளில் வழமையாக உள்ள தூய்மைப் பிரச்சனை, சுகாதாரமற்ற கழிவறை, போதிய தண்ணீர் வசதியின்மை ஆகியவை இன்னும் நீடித்துக் கொண்டிருப்பதை அங்கே தங்க வைக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள் பகிர்கின்றனர். இது கொரோனா நோய் தொற்று உள்ள நோயாளிகளை சிகிச்சைக்கு உட்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும். அரசு உடனடி கவனம் எடுத்து பெருநகரம் தொடங்கி சிறுநகரம் வரை அரசு மருத்துவமனையில் உள்ள வழமையான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவந்து தரத்தை உயர்த்த வேண்டும்.
  4. சிறைச்சாலைகள், முதியோர் இல்லங்கள், மனநல காப்பகங்கள், ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் இவற்றின் நிலை குறித்து அரசின் அன்றாட அறிக்கையில் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
  5. அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் ஏன், எதற்காக செய்யப்படுகின்றன என்பது பொது மக்களுக்கும் சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றம், பரிசோதனையின் முடிவுகள் ஆகியற்றை கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானோருக்கும் வெளிப்படையாகவும் கனிவுடன் தெரிவிக்க வேண்டும். அடித்தட்டு மக்களுக்கு சென்றுவர வேண்டும் என்ற அக்கறையுடன் செய்திப் பகிர்வை மேற்கொள்ளாததால் வெளிப்படைத்தன்மையில் ஏற்பட்டிருக்கும் இடைவெளி பீதியையும் பதற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் உளவியல் நெருக்கடிகளையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
  6. ஊடக சந்திப்பின் வழியாகத்தான் அரசு மக்களுடன் கொரோனா தடுப்பு ந்டவடிக்கைகளில் உள்ள முன்னேற்றத்தைப் பகிர்ந்து வரும் நிலையில் அந்த ஊடக சந்திப்பு வெறுமனே புள்ளிவிவர அறிவிப்பாக இருந்துவருகிறது. ஒவ்வொன்றும் ஏன், எதற்காக, எப்படி செய்யப்படுகின்றது என்ற விளக்கங்கள் இல்லை. ஊடகவியலாளர்கள் எழுப்பக் கூடிய கேள்விகளுக்கும் உரிய வகையில் விளக்கங்கள் தரப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மை இருக்கிறதோ அந்தளவுக்கு நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.
  7. தில்லி, கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் அம்மாநில முதல்வர்கள் ஊடகங்கள் வாயிலாக அன்றாடம் மக்களை சந்தித்து அந்த அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி, மக்களுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றனர். இதை ஒரு முன்மாதிரியாக எடுத்து தமிழக முதல்வரும் அன்றாடம் ஊடக சந்திப்பின் வழியாக மக்களிடம் உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
  8. மதுரையில் காவல்துறையின் அத்துமீறல் காரணமாக அப்துல் ரஹீம் என்ற 71 வயது முதியவர் உயிரிழந்தார். இது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்க இருப்பதால் காவல்துறையின் அத்துமீறல்கள் மேலும் இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கருத்தில் கருத்தில் கொண்டு அரசு காவல்துறையினரின் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்த வேண்டும்.
  9. பிணையில் விடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு (inhuman Conditions in 1382 Prisons,(2016) 3 SCC 700) ஆணைக்கு இணங்க விசாரணைக் கைதிகள் சொந்த பிணையில் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், இதுவன்றி முதியவர்கள், பெண்கள், நீரிழிவு, சுவாசக் கோளாறு போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்ற தண்டனைக் கைதிகளுக்கு இரு மாத விடுப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும், சிறையில் உள்ள எஞ்சிய கைதிகள் சமூக விலகலைப் பேணுவதற்கு, தூய்மைப் பேணுவதற்கும் ஏற்ற கழிவறை வசதிகள், தட்டுப்பாடற்ற தண்ணீர் வசதிகள், சோப் ஆகியவை உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும்.

தோழமையுடன்

மனநல மருத்துவர் சி. அரவிந்தன்

பேரா.அ.மார்க்ஸ், NCHRO

பேரா.ப.சிவகுமார்

வழக்கறிஞர் அஜிதா, சென்னை உயர்நீதிமன்றம்

சுஜாதா மோடி, New Trade Union Initiative

பரிமளா,  Forum for IT Employees

செந்தில், இளந்தமிழகம்

தொடர்புக்கு : 9551122884, 9840713315

முகநூல் : fb/ Awareness Center For Corona Preventive Action

மின்னஞ்சல் : awarecen.coronaprevact@gmail.com

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW