கொரோனா தொடர்பான அன்றாட அறிக்கைகளைத் தமிழில் தர இயலாதா?

12 Apr 2020

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு நாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடங்களையும் சிறைச்சாலைகளையும் பார்த்தால் அந்நாட்டு அரசு தன் குடிமக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை மதிப்பிட்டுவிட முடியும் என்று சொல்வர். ஓர் அரசின் வெளிப்படைத்தன்மையை மதிப்பிடுவதற்கு அவ்வரசு தனது அலுவல்களை மக்களின் மொழியில் பகிர்கிறதா? என்பதும் ஓர் அளவுகோல். சனநாயகம் என்ற நோக்குநிலையில் கல்வி, வழிபாடு, நீதிமன்றம் என வாழ்வின் அனைத்து துறைகளிலும் மக்கள் மொழிக்கு இருக்கும் இடம்தான் உண்மையில் மக்களுக்கு இருக்கும் இடமாகும்.  தமிழகத்தைப் பொருத்தவரை மொழியுணர்வு, மொழிப்பற்று என்பதெல்லாம் மக்களின் சனநாயகம் என்ற சாறம் நீக்கப்பட்டு வடிவ அளவிலானதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான், 1965 இல் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழர்கள், 2019 இலும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்துவதற்கு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அதுபோலவே, அரசின் இணையதளத்தில் கொரோனா தொடர்பான அறிக்கைகளை தமிழில் காண முடியவில்லை.

https://stopcorona.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் போனால் முகப்புப் பக்கம் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதன் வலது மூலையில் ’தமிழ்’ என்ற பொத்தான் இருக்கிறது. அதை அழுத்தினால் தமிழ் பக்கம் வருகிறது. எனவே, இதன் வடிவமைப்பே ’தமிழ்’ தெரிவு(optional) என்ற அளவில் இருக்கிறது.

 

  1. ஆலோசனைகள் என்ற பகுதியின் கீழ் ஒலி வழி தகவல்கள், காணொளிகள் தமிழில் உள்ளன. ஆனால், சுவரொட்டிகளில் வெகுசில மட்டுமே தமிழில் உள்ளன. ஏனையவை ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நெறிமுறைகளும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. இது மருத்துவப் பணியாளர்கள் படிப்பதற்கான நெறிமுறை.  அவர்களில் எத்தனை பேர் ஆங்கிலம் அறிந்திருப்பர் என்று தெரியவில்லை.
  2. முக்கிய தகவல்கள் என்ற பகுதியின் கீழ் தமிழக அரசு, மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் அறிக்கைகளும் பிற தகவல்கள் என்ற தலைப்பின் கீழ் சில அறிக்கைகளும் உள்ளன. இதில் தமிழக அரசின் அறிக்கைகளில் 50 % மட்டும் தமிழில் இருக்கின்றன.மத்திய அரசின் அறிக்கைகளும் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கைகளும் அவர்கள் அனுப்பியபடியே ஆங்கிலத்தில் உள்ளன. தமிழ் பக்கத்தில்  அவற்றை மொழிப் பெயர்த்து கொடுத்திருக்கலாம்.
  3. வெகுமக்களின் கவனத்திற்கு உரியது தினசரி அறிக்கைகளையாவது தமிழில் கொடுத்திருக்கலாம். இந்த அறிக்கையில்தான் அன்றாட பரிசோதனை விவரங்கள், தனிமைப்படுத்தப்பட்டிருப்போர், நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டோர், மாவட்ட அளவிலான எண்ணிக்கை ஆகியவைக் கொடுக்கப்பட்டுள்ளன. மார்ச் 9 இல் இருந்து ஒவ்வொரு நாளும் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. இதுவரை சுமார் 33 அறிக்கைகள் வந்துள்ளன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட தமிழில் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், இந்த தினசரி அறிக்கைகள் கேரள அரசின் கொரோனா இணையத்தில் மலையாளத்தில் கொடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில், இதை தமிழில் கொடுப்பதற்கு 10 நிமிடத்திற்கு மேல் நேரம் எடுக்காது. அந்த அறிக்கை ஒரு template தான். அன்றாடம் எண்ணிக்கையை மட்டும் மாற்றி வெளியிட்டுவிடலாம். ஆனால், தமிழக அரசுக்கு அது ஒரு முக்கியமான விசயமாக தெரியவில்லைப் போலும்.

கேரள அரசு எப்படி கூடுதல் பரிசோதனைகள் செய்துள்ளதோ, எப்படி நோயாளர் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோ, எப்படி புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு மையங்களில் 3 இலட்சம் பேரைப் பேணிப் பாதுகாத்து வருகிறதோ அதேபோல் கேரள மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று விவரங்களை மலையாளத்தில் கொடுப்பதிலும் தமிழகத்திற்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

டிஜிட்டல் இந்தியா, இணைய பரிவர்த்தனை, நேரடி பணப் பட்டுவாடா, ஆரோக்கிய சேது இணைய சேவை என பொருளாதார நடவடிக்கைகளிலும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதிலும் அரசு காட்டும் அக்கறையை மக்களிடம் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கும் காட்டினால் நன்றாக இருக்கும்.

குறைந்தபட்சம் அன்றாட அறிக்கைகளையாவது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தமிழில் கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

சொல்லவே அசிங்கமாக இருக்கிறது, இருந்தாலும் அதுதானே யதார்த்தம்.

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW