புலம்பெயர் தொழிலாளர் துயரம் – மோடி ஆட்சியின் சாட்சியம்

07 Apr 2020

நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது அந்தத் துயர்மிகு காட்சிகள். ஊரடங்கின் மௌனம் உடைத்து மடைதிறந்த வெள்ளம்போல் திரண்டு டெல்லி தலைநகரத்தையே ஸ்தம்பிக்கவைத்தக் காட்சி. எந்த மக்கள் தம் வறுமைப் பசியை போக்கிட விவசாயம் விட்டு, கிராமம் விட்டு வேலைத்தேடி கூட்டம் கூட்டமாய் தொழில் நகரங்களுக்குள் வந்தார்களோ அந்த புலம்பெயர் தொழிலாளர்கள், இன்று பட்டினிக்கொடுமையில் நடைபிணங்களாய் சொந்த ஊர்களுக்கே விரட்டப்பட்டுள்ள கொடுமை. மலிவான கூலிக்காக கொத்து கொத்தாய் அழைத்துவந்த ஒப்பந்ததார்களும் சுரண்டிக்கொழுத்த முதலாளிகளும் கைவிட்டுவிட்டதன் அவலம். ஊரடங்கின் 3வது நாளில் தண்ணீரின்றி உணவின்றி மூட்டை முடிச்சுகளை அள்ளிக்கொண்டு 1000கி.மீ நடக்கத் தொடங்கிய தினக்கூலிகளான ஆண்கள், பெண்கள். சிறு வயது சிறுமிகள் கடும் வெயிலிலும் கொடும் பசியிலும் எப்படி நடந்திருக்கும்? தன் தாய் தந்தையர் எவ்வளவு தூரம் அழைத்துச்செல்கிறார்கள் என்றே தெரியாமல் மூட்டைகளை சுமந்து நடக்கும் ஏதுமறியா அந்த சிறுமிகள். அப்பா, அம்மாவிடம் பணம் இல்லாததால் இனி நமக்கு பால் கிடைக்காதோ? என சோர்வுடன் தோலில் சாய்ந்துறங்கும் அந்த பிஞ்சுகுழந்தைகளின் முகங்கள். வீட்டிற்கு உயிரோடு சென்று சேருவோமா இல்லையோ என இரவுபகலாக நடந்த பல தொழிலாளர்கள் மரணத்தைத் தொட்ட அந்த நிமிடங்கள். தினம் வரும் மரணச் செய்திகள் நம் மனதை வாட்டுகிறது. அத்தனைக்கும் அடித்தளம் மோடியின் திட்டம். ஏதுமற்ற ஏழை எளிய மக்கள்மீது காவி கார்ப்பரேட் அரசு தொடுத்த பொருளாதார பேரழிவே என்பதை புலம்பெயர் மக்களின் மரணங்கள் நிரூபிக்கிறது.

பட்டினியில் மரணித்தவர்கள்

டெல்லியிருந்து தன் சொந்த ஊருக்கு  நடந்தசென்றவர்களில் இறந்தவர்கள் இதுவரை 25க்கும் மேற்பட்டவர்கள் என ஆங்கில செய்தி இணையதளங்கள் தெரிவிக்கின்றன. நம் அனைவரின் மனதையும் உலுக்கிய முதல் மரணச்செய்தி.

  • மார்ச் 28 அன்று, மத்தியப்பிரதேசம் மொரோனா மாவட்டத்தை சேர்ந்தவர் 39 வயதான ரன்வீர்சிங். டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் டோர்டெலிவரி வேலைசெய்து வந்திருக்கிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றன. 700 கி.மீ தொலைவிலுள்ள மத்தியப்பிரதேசத்தை நோக்கி நடக்கும்போது தன் மனைவியோடு போனில் பேசியிருக்கிறார். அப்பொழுது, “பஸ், ரயில், வேன் எதுவும் இல்லை, நடந்துதான் வருகிறேன். 200கி.மீ தாண்டிவிட்டேன். வந்துவிடுவேன்என்று போனில் உரையாடிக் கொண்டே நடந்துகொண்டிருந்தபோது கடுமையான வயிற்றுவலி வர, அதை, தன் மனைவியிடம் கூறியிருக்கிறார். உடனே மனைவி ஆம்புன்ஸ் வாகனத்திற்கும், காவல்நிலையத்திற்கும் தொடர்புகொண்டிருக்கிறார். தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் கணவருக்கு போன் செய்திருக்கிறார் அழைப்பு சத்தம் மட்டுமே கேட்டிருக்கிறது. இடையில் தண்ணீரின்றி, உணவின்றி நீண்ட தூரம் நடந்ததில் மாரடைப்பு எற்பட்டு ஆக்ரா அருகே மரணித்திருக்கிறார் ரன்வீர் சிங். ரன்வீரைக் கொன்றது மோடி அரசு. அவரின் மனைவி குழந்தைகளை நிர்கதியாக்கியது மோடி அரசுதான் என்பதை யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை.
  • மார்ச் 28 அன்று தெலங்கானா மாநிலம், சூர்யப்பேட்டை மாவட்டத்தில் கட்டுமானத்துறையில் வேலை செய்துவந்த 31 புலம்பெயர் கூலித்தொழிலாளர்கள் ஊரடங்கு அறிவித்தபின் சொந்த ஊரான கர்நாடகா மாவட்டம் ரெய்ச்சூரை நோக்கி ட்ரக்கில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் 18மாத குழந்தை உட்பட 4 ஆண்கள், 3 பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மற்றவர்கள் உஸ்மானியா மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
  • மார்ச் 29 அன்று, அரியானாவில் நடந்துசென்ற 4 பேர் தொடர்வண்டி விபத்தில் மரணமடைந்திருக்கிறார்கள்.
  • ராஜஸ்தானில் 26 அன்று, 11 மாத குழந்தை ராகுல் பசியால் மண்ணை அள்ளித்தின்று இறந்த கொடுமை,
  • மார்ச் 27 அன்று, அஸ்ஸாமில் பேருந்து இல்லாத காரணத்தால் தாய், தன் 4வயது உடல்நலமில்லா குழந்தையை மருத்துவமனைக்கு கால்நடையாகவே தூக்கிச்செல்லும்போது வழியிலேயே இறந்துவிட, துடித்த அத்தாயின் அழுகுரல்.
  • பீகாரில் போஜ்பூர் பகுதியில் தன் 8வயது குழந்தை மருத்துவமனையில் இறந்துவிட எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால் தந்தை தன்கையில் தூக்கிச் சென் சுடுகாட்டில் புதைத்த கொடுமை,
  • ஏப் -03 அன்று மத்தியப் பிரதேசத்தில் வேலைசெய்துவந்த கூலித் தொழிலாளி, தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞன் 350 கி.மீ கால்நடையாக நடந்தே வந்து பசியில் தெலங்கானா அருகில் இறந்துவிட்டார்.

இன்னும் எத்தனையோ மரணங்கள், வாழ்வின் ரணங்கள் கொரானோ பெயரில் மறைக்கப்பட்டிருக்கின்றன. மத்தியப்பிரதேசத்திற்கு திரும்பிச்சென்றவர்கள் மட்டும் இதுவரை 1.5லட்சம் பேர். மற்ற மாநிலங்களுக்குச் சென்று சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? அந்த மக்கள் என்ன ஆனார்கள்? எத்தனைப்பேர் வீடுசென்று சேர்ந்தார்கள்? பிஞ்சுக்குழந்தைகளின் நிலை என்ன? என்பதுகுறித்து எதுவும் தெரியவில்லை. வீடு திரும்பியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் போகவே, ட்ரக்கில் வந்த பொருட்களை கிராம மக்கள் பறித்துச் சென்றிருக்கிறார்கள். அடுத்தடுத்து வறுமையால் எத்தனை குடும்பங்கள் தற்கொலைக்குள் தள்ளப்படுமோ என்பதை நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது. அதேபோல் வடமாநிலங்களிலிருந்து தென் மாநிலங்கள் நோக்கி, குறிப்பாக தமிழகம் நோக்கி வந்துகொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து செய்தி இல்லை. மத்திய மாநில அரசுகளோ வாய் மூடி மௌனம் சாதிக்கிறது. இவர்களின் பாதுகாப்பிற்கும், அன்றாடத் தேவைகளுக்கும் மோடியும் மாநில அரசும் உத்தரவாதம் அளித்திருந்தால் இப்படியொரு கொடுந்துயரத்தை தேர்ந்தெடுத்திருப்பார்களா இந்த மக்கள்?. சீனா, இத்தாலி, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளிலுள்ள இந்தியர்களுக்கு விமானத்தை அனுப்பி அழைத்துவரும் மத்திய அரசு, உள்நாட்டிலுள்ள அடித்தட்டு புலம் பெயர் மக்களுக்கு ஒரு பேருந்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் 500,1000 கி.மீ நடக்கவைத்து மனிதத்தன்மையற்றமுறையில் நடந்துகொண்டது.

அதேபோல் சென்னை நகரத்தில் ஊரடங்கு அறிவிப்பிற்குபின் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்முழுக்கக் காத்திருந்தனர். தமிழக அரசின் மெத்தனப்போக்கால் கோபம்கொண்ட அத்தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கிய பின்னர்தான் அவர்களுக்கான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. கோவையில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வேனில் சென்றபோது தமிழக காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தி, ஓட்டுனர்மீது கடத்தல் வழக்கு பதிவுசெய்து அனைவரையும் தனி முகாமில் அடைத்துவைத்துள்ளது. இந்தியா முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு  மக்கமீது அதிகாரவர்க்கமும் காவல்துறையும் இத்தகைய அத்துமீறலை, அராஜகத்தை கடைபிடிப்பது தொடர்கதையாகியிருக்கிறது. அதேபோல் ஊரடங்கு பெயரில் நாடு முழுவதும் அத்தியாவசியப்பொருட்கள் வாங்க வெளியேவரும் பொதுமக்களை காவல்துறையின் அடக்குமுறை அதிகரிப்பதை பார்க்க முடியும். கொரானா பெயரில் குறிப்பாக இஸ்லாமியர் மக்களை குறிவைத்து காவி பாஜகவின் ஊதுகுழலான தினமலர், பாலிமலர் உள்ளிட்ட பல தமிழக ஊடகங்கள் விஷப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்கிறது, உரிமை மீறல் தொடர்கிறது. நம் அனைவரின் மௌனமும் அதற்குத் துணைசெய்கிறது.

 

மக்கள் வாழ்வாதாரத்திற்கான முன் ஏற்பாடு ஏதுமின்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட மோடியின் 21நாள் ஊரடங்கு அறிவிப்பு குறித்து விமர்சனம் எழவில்லை. பொது சுகாதாரக்கட்டமைப்பு, மருத்துவ வசதி போன்ற அடிப்படைக் கட்டமைப்பில் தோல்வியைத் தழுவியுள்ள மத்திய அரசை விமர்சனத்திற்கு உட்படுத்தவில்லை. ராணுவத்திற்கும் ராக்கெட் ஏவுகணைக்கும் மக்கள் பணத்தை செலவு செய்யும் அரசை கேள்விகேட்கவில்லை. 1 கோடி முகக்கவசம் வாங்கியதாகச் சொன்னார் விஜய பாஸ்கர். அது என்னாயிற்று? மருத்துவ பணியாளர்களுக்கு ஏன் வழங்கவில்லை? என்கிற கேள்வி எழவில்லை. மாறாக, வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் இவர்களைப் பார்த்துதான், ‘‘நோயைப் பரப்புகிறார்கள், தடுத்து நிறுத்துங்கள், கைதுசெய்யுங்கள்‘‘ என சீற்றத்துடன் சீறிப்பாய்கிறது ஒரு கூட்டம். “மத்திய. மாநில அரசுகள் மக்கள்மீது அக்கறைசெலுத்துகிறது, நல்லாட்சி நடத்துகிறது என்று கிரீடம் சூட்டுகிறார்கள்.

 

உயர்தட்டு வர்க்கத்தினர் வாழும் நகர்ப்புற வாழ்க்கை, ரெசிடென்டியல் ஏரியா, கேட்டடு கம்யூனிட்டி எனப்படும்  பிரிவினர் வாழும் அடுக்குமாடிகள், அழகிய தோட்டங்கள், பூங்காக்களுக்கிடையில் அமைதியான வாழ்க்கை, எந்தவித இடையூறுமின்றி நெரிசலின்றி வேகமாக செல்லும் மேம்பாலங்கள், ஷாப்பிங் மால்கள். ரெஸ்டாரெண்ட்டுகள், விஐபி பங்களாக்கள், ரிசார்ட்டுகள் ஸ்மார்ட் சிட்டிகள் அனைத்தும் இந்த வட மாநில உழைப்பாளிகளின் வியர்வையில் உருவானது என்பதை மறந்துவிட்டார்கள். தமிழகத்திலும் டில்லி போன்றே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டிருந்தவர்களைப் பார்த்து கொந்தளித்த அதே குரல்கள், அத்தியாவசியப் பொருட்களுக்காக வெளியில் செல்லும் மக்களைப் பார்த்து குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் கொரோனாவைக் கட்டுப்படுத்த வழிசெய்ய வேண்டிய அரசும் காவல்துறையும் சூழலை சட்டம் ஒழுங்கு சிக்கலாக மாற்றியிருக்கிறது. அன்றாடத் தேவைகளுக்காக வெளியில் வரும் மக்களை குற்றவாளிகளாக்குகிறது. அரசே குழம்பிப்போய் ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பை மாற்றி மாற்றி வெளியிட்டுவருகிறது. மக்கள் எவ்வாறு குற்றவாளிகளாவார்கள்?. வசதிபடைத்தவர்களுக்கு விஐபிகளுக்கு அரசியல் வாதிகளுக்கு அனைத்தும் வீடுதேடி செல்லும். அவர்கள் வெளியே வராமல் பாதுகாப்பாக இருந்துகொண்டு எளியவர்களைப் பார்த்து வீட்டில் இருங்கள் என்று சொல்ல முடியும். ஆனால், அன்றாடங்காய்ச்சி மக்களோ வெளியில் வந்துதா பொருள் வாங்கியாகனும். ஆட்சியாளர்களுக்கு ஒத்து ஊதும் ஊடகங்களின் அறிவுரைகளுக் கிடையில்தான் இத்தகைய ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் உண்மைநிலை மறைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்து இருக்கும் தமிழர்களுக்கும் இது பொருந்தும்.

இந்து, இந்துக்கள் என்று கூச்சலிட்ட பாஜக, சங்பரிவார், ஆர்எஸ்எஸ் சங்கிகளோ இருக்கும் இடம் தெரியவில்லை. மதவெறி அரசியலுக்கு இம்மக்களை பயன்படுத்திய இந்த உண்மையான தேசப்பற்றாளர்கள்? எங்கே ஓடி ஒளிந்தார்கள்? பட்டினியால் கொல்லப்பட்ட புலம்பெயர் இந்து மக்களுக்கு என்ன செய்தார்கள் இந்தக் காவிகள்? இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஊரடங்கின்போது வெளியில் வருபவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று சொல்வதும், பெண்களை பலாத்காரம் செய்வதும், குண்டுவைத்துவிட்டு முஸ்லிம்கள் மேல் பலிபோடுவதும், ராமர் கோயில் கட்டுவதும், சீதை ராமனோடு வாழ்ந்தாரா? ராவணன் தொட்டாரா? என்பதை ஆய்வு செய்வதும், டெல்லி வன்முறைபோல் மதக்கலவரம் செய்வதும் கொரானோவிற்கு மாட்டுக் கோமியத்தை மருந்தாக குடிக்கச் சொல்வதும்தான் தெரியும். உணவின்றி நடக்க சக்தியின்றி சென்று சேர்ந்த தொழிலாளிகளை பாஜக ஆட்சி ஆளும் உத்தரபிரதேச யோகி அரசோ மக்கள்மீது கிருமிநாசினியைத் தெளித்து அழைத்துச்செல்கிறது. எவ்வளவு மோசமான மனித உரிமை மீறல், மனித இனத்திற்கு ஏற்பட்ட அவமானம்? இத்தகைய துயரத்திற்குப்பின்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம், உரிமைகள் பற்றி இன்றும் வாய்திறக்கவில்லை என்பதை பார்த்தால் மோடியின் மன்னிப்பு அம்மக்களை ஏமாற்றும் உத்தியே எனத் தெரிகிறது. இவ்வளவு நடந்தும் காவி கார்ப்பரேட் மோடி அரசை நோக்கி வலுவான எதிர்ப்புகள் இல்லாமல்போனது ஏன்? புலம்பெயர் தொழிலாளர்கள் மனிதர்களில்லையா?

 

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள்

 

90களுக்குப்பின் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார மாற்றங்கள், கிராமப்புற விவசாய நெருக்கடி, உலகமயத்தின் விளைவாய் வறுமையிலும், வேலையின்மையாலும் எண்ணற்ற மக்கள் கூட்டத்தினர் நாடு முழுவதுமே வேலைத்தேடி அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இல்லாத இடம் இல்லையென்றே சொல்லலாம். உள்ளூர் தொழிலாளிகளை உழைப்பிலருந்து விலக்கிவிட்டு, குறைந்த கூலிக்கு கடினமாக உழைக்கும் வெளியூர் தொழிலாளிகளை இறக்குமதி செய்வதுதான் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் நோக்கம். அவ்வாறு இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளிகள் இருப்பார்கள். ஆனால், மத்திய அரசோ 4.14 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்கிற பொய்யான புள்ளிவிவரத்தை கூறுகிறது. தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் இருக்கக்கூடும். ஆனால் அரசின் நலவாரிய ஆவணத்தில் 3.51 லட்சம் மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மற்ற தொழிலாளர்கள் தொழிலாளி பட்டியலுக்குள் கொண்டுவரப்படவில்லை. இவர்களை அழைத்துவரும் ஒப்பந்ததாரர்களும், முதலாளிகளும் இதை அனுமதிப்பதில்லை. கட்டுமானம், அமைப்புசாரா துறைகளில், அமைப்பாக்கப்பட்ட துறைகளில் ஒப்பந்த தினக்கூலித் தொழிலாளிகளாக வேலைசெய்கிறார்கள்.

கடினமானதொரு கட்டுமானத்துறைசார்ந்த வேலைகளில் தினம் மரணிக்கும் இத்தொழிலாளிகளின் இறப்பு வெளிச்சத்திற்கு வராமலேயே கடந்துவிடுகிறது. வாழ்கின்ற வேலைசெய்கின்ற இடங்களில் கேட்பாரற்ற அகதிகள் என்ற பட்டத்தையும் குற்றவழக்குகளையும் இவர்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. 1980களில் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். இன்றும் அதிகம் பேர் அங்கு வேலை செய்துவருகிறார்கள்.  மும்பை தாராவியில் இருக்கும் பெரும்பான்மையான மக்கள் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டு மக்கள்.

 

1979ல் கொண்டுவரப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்டம் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. சமூக நல ஆட்சியைத் தந்திருக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் திராவிட கட்சிகளோ, ஆட்சியில் இருக்கும் போதோ இவர்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்கான சுகாதாரம், உத்தரவாதமான வீடு குழந்தைகளுக்கு அங்கன்வாடி பள்ளிகள், காப்பகம், அரசின் நலத்திட்டங்கள் போன்ற அடிப்படை உரிமைகள் கிடைக்காத புறக்கணிக்கப்பட்ட சமூகமாக  வாழ்கிறார்கள். உழைப்பை உறிஞ்சிவிட்டு செக்கைப்போல் தூக்கிவீசப்பட்ட கோடிக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மக்களுக்கு தென்னிந்தியாவிலோ, தமிழகத்திலோ கேட்பதற்கான வலுவானதொரு நம்பிக்கைக் குரல் இல்லை என்றே சொல்லமுடியும். மந்தைகள் போல் ஓட்டிவந்து கூடாரத்திற்குள் அடைக்கப்படும் இவர்கள் எவ்வாறு குற்றவாளிகளாவார்கள்?

 

புலம்பெயர் தொழிலாளர்களும் வந்தேறிஅரசியலும் 

 

மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை நாடுவிட்டு நாடு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது. அன்று உணவிற்காக மட்டும் இடம்பெயர்ந்தார்கள், இன்று தன் வாழ்க்கையை நடத்திச்செல்ல உழைப்பிற்காக இடம்பெயர்கிறார்கள். உலகளவில் நடைபெறும் போர்களும், பொருளாதார நெருக்கடிகளும், சுற்றுசூழல் பாதிப்புகளும் உள்நாட்டிலிருந்து துரத்தப்பட்ட லட்சக்கணக்கான அகதிகளை உருவாக்கியிருக்கிறது. நாடுவிட்டு நாடு இடப்பெயர்வு என்பது இன்றைய முதலாளித்தவ நெருக்கடி காலத்தில் அதிகரித்திருக்கிறது. முதலாளித்துவம் குறைவான கூலி, அதிக உழைப்புச்சுரண்டல், அதிக லாபம் எங்குகிடைக்கிறதோ அங்கிருந்து மனிதக்கூட்டத்தை இறக்குமதி செய்துகொள்கிறது. ‘வந்தேறிகள்’’ என்கிற பட்டத்தையும் மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள் என்கிற மனித உரிமை மீறலான கருத்துக்களை பரப்பி இனவாத அரசியல் வளர்ந்துவருவதை காண்கிறோம். இவர்களின் உழைப்பை சுரண்டிக்கொழுக்கும் பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளை கேள்விக்குட்படுத்துவது இல்லை. மாறாக இந்த உழைப்பாளிக்கூட்டத்தின்மீது வெறுப்பைக் கொட்டுவதும், இந்தப் பார்வை சமூகத்தில் என்ன விளைவை உருவாக்கும்? என்பது குறித்து     துளியும் கவலையின்றி அரசியல் செய்வோரை காண்கிறோம். இவ்வுலகத்தில் ஒரு மனிதன் எங்கும் வாழ உரிமையிருக்கிறது. இருக்கும் இடத்தில் அவர்களுக்கான அடிப்படைகளை பூர்த்திச்செய்து வாழ வைப்பதில்தான் உயர்ந்த ஜனநாயகமும் மனிதஉரிமையும் அடங்கியிருக்கிறது. இதுதான் மனிதநாகரிக சமூகத்தின் அடையாளம். தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள் என்பதற்கு அர்த்தம். இதனை உணரத் தவறினால் நமது இலட்சியத்தில் தோல்வியைத் தழுவுவோம் என்பது நிச்சயம்.

 

உலகம் முழுவதும் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி பலவீனத்தை மறைப்பதற்கு அதிகாரத்தை தக்கவைப்பதற்கு ஆளும்வர்க்க சக்திகள் வலதுசாரிகள், பாசிஸ்டுகள், ஒற்றை சர்வாதிகாரிகள் என்கிற வரிசையில் ஒன்றுசேர்கிறார்கள். மோடியும் எடுபிடி எடப்பாடியும் ஒன்று சேர்கிறார்கள். பொருளாதார நெருக்கடியை ஊரடங்கு பெயரில் மூடி மறைக்கிறார்கள்.  அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளை வாழவைத்துக் கொண்டிருக்கும் மோடி, அமித்ஷா கும்பலால் விளிம்புநிலை மக்கள் கடைகோடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க வெடித்த மக்கள் எழுச்சியை திசைமாற்றி கட்டுப்படுத்தி முடக்கிவைக்கவும் இந்தக் கொரானா பீதி மோடி அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது.  இந்த பீதி பரப்புரையில் மக்களை மூழ்கடித்து முடக்கிவைத்துவிட்டு கைத்தட்டி, விளக்கேற்ற சொல்கிறது. ஒற்றை மைய அதிகாரத்திற்கு மக்களை பழக்கப்படுத்தி பாசிச நோக்கி நகர்த்துகிறது. காவி பாசிச கும்பலின் ஊரடங்கிற்குள் உள்ள அரசியலை உணர்வோம். புலம்பெயர் தொழிலாளியைத் தோழனாக்குவோம், தோல்கொடுப்போம்! மோடியின் சூழ்ச்சியை உடைப்போம்!

 

– ரமணி, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW