குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்புப் போரில் களப்பலியான பெருங்காமநல்லூர் ஈகியர் நூற்றாண்டு
நமது வரலாற்றில் இலக்கியத்தில் பதியப்படாத பேசப்படாத சனங்களின் கதைகள், கொடுங்கோன்மை எதிர்ப்பு ஈகங்கள், ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பானவை மட்டுமல்ல, எழுத்தாக்க நூலாக்க ஆவணமாக்க முயற்சி நடைபெற்ற கடந்த நூற்றாண்டிலும் ஆயிரம் இருக்கிறது. அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் பெருங்காமநல்லூர் படுகொலை.
வரலாறு எழுதப்படாததின் துயரம் ஒன்று இரண்டு அல்ல, சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியில் நேர்பட்டவைகள் குறித்த அறிவு சங்கிலி அழிந்துபோய், சமூக குழுக்கள் தன் வரலாறு குறித்தே தகுதி உள்ளவை வாழும் என்ற போட்டியில் தன்னை எழுதிக் கொள்கின்றன, தன்னை ஆண்டவர்கள் அழித்தவர்கள் கொடுங்கோன்மை புரிந்தவர்கள் என்ற கதைகளையெல்லாம் மறந்து வீர கதைகளை மட்டும் எழுதிக் கொள்கின்றன. இப்பொழுது அரசியலில் ஆள்பவர்களோ, கோட்பாட்டு ரீதியாக சமூகத்தை ஆள்பவர்களோ தங்களின் சமூகநீதி வழியாக மட்டுமே ஒட்டுமொத்த சனங்களின் வரலாற்றையும் எழுதி, ஒட்டுமொத்த சனங்களையும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்துகிறார்கள். அதற்காகவாவது நமது தமிழ் சமூகத்தின் வட்டாரப் பரப்புகளில், திணைகளில் புதைந்து கிடக்கிற மக்களின் கதைகள் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டு எழுதப்பட்டு நவீன வரலாறுகள் வரையப்பட வேண்டும். பிளவுபட்ட சமூகங்களின் நவீன அரசியல் தேவைகளுக்காக மட்டும் வரலாற்றை எழுத முடியாது, அது அபத்தமானது, அது சண்டையிட்டு முரண்பட்டு அச் சமூகங்கள் மீள் இணக்கம் காண கூட வழிவகுக்காது, வரலாற்றை நேர்பட எழுத முயற்சிப்போம்.
பெருங்காமநல்லூர் படுகொலை, பெருங்காமநல்லூர் மண்ணின் குடிகளின் மீது காலனிய கொடுங்கோன்மை எழுதிய ரத்தசரித்திரம், சூரியன் மறையாத சாம்ராஜ்யம் அடங்கா குடிகளை அழிப்பதற்காக உலகெங்கும் கொண்டு வந்தது ஒரு குடியுரிமை திருத்த சட்டம், அதுதான் குற்றப்பரம்பரை சட்டம். தமிழகத்திலும் 40க்கும் மேற்பட்ட சாதிக் குழுக்களின் மீது அச்சட்டத்தை திணித்தது 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் அந்தக் கொடுநெறியிலே வதிபட்டார்கள் மக்கள். குற்றப் பரம்பரையாக பட்டியலிடப்பட்ட குலங்கள் சூரியன் மறையத் தொடங்கிய உடன் வதைமுகாம் போல காவல் நிலையங்களுக்கு வந்து கைரேகை இடவேண்டும், இதை எதிர்த்து பெரும் கிளர்ச்சியை தொடங்கியவர்கள் தான் காலனிய அரசால் ஒடுக்கப்பட்ட பெருங்காமநல்லூர் பிரன்மலை கள்ளர் குடிகள், அவர்களைத்தான் 1920 ஏப்ரல் மூன்றாம் தேதி ஆயுதப்படை கொண்டு 20 பேரைக் கொன்று ரத்த வேட்டையாடியது காலனிய அரசு, இந்த ஆண்டு அந்த ரத்த சுவடின் நூற்றாண்டு, நாம் நினைவு கூற வேண்டும், உழைக்கும் மக்களின் வரலாற்றை எடுத்துச் செல்வதற்காக கட்டாயம் நாம் நினைவு கூற வேண்டும், மக்களின் படுகொலைகளைப் போலவே அவைகளின் வரலாறும் மண்ணில் புதைந்து விடுகின்றன, அதிகார வர்க்கங்களின் தேவைகளுக்காக தலைவர்கள் கடவுளர்களாக மாற்றப்பட்டு விடுகின்றனர், புதிய ஆளும் வர்க்கம் கடவுளர்களை தங்கக் கவசம் பூட்டி தனதாக்கிக் கொள்கிறது, மக்கள் பக்தகோடிகளாக மாற்றப்படுகிறார்கள், ஆகவே மக்கள் வரலாற்றை நாம் நினைவு கூற வேண்டும் நேர் செய்ய வேண்டும்.
தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஜெயந்திகளில் பங்கேற்கின்றன, பல்வேறு சாதி தலைவர்களுக்கு மணி மண்டபங்கள் கட்டி கொடுத்திருக்கின்றன, ஆனால் இதுபோன்ற மக்கள் வரலாற்றுக்கு எப்பொழுதும் நினைவஞ்சலி செலுத்தியதில்லை, ஆனால் கவனம் பெற தொடங்கியவுடன் தமிழக அரசு பெருங்காமநல்லூருக்கு நினைவு அஞ்சலி செலுத்த மதுரை மாவட்ட ஆட்சியரை அனுப்பியிருக்கிறது, இதுவும் ஒரு வகையிலான வாக்கு வங்கி அரசியலின் சாதி கணக்குதான், இப்பொழுது இதை விட ஒரு மோசமான சூழல் உருவாகி கொண்டிருக்கிறது, இந்துத்துவ பாசிச கும்பல் சாதிகளை கைப்பற்றும் சமூக பொறியமைவு என்ற உத்தியை கையில் எடுத்து, சாதி தலைவர்களை கொண்டாடுவதன் வாயிலாக மக்களை கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது, எனவே இந்த நேரத்தில் நாம் மக்கள் வரலாற்றை கையிலெடுத்து பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் அதை ஒரு படைக்கலமாக முன்னிறுத்த வேண்டும், வறுமையிலும் வெறுமையிலும் உழன்று கிடக்கும் கிராமத்து உழவனிடம் நாம் வரலாற்றை எடுத்து செல்லவில்லையென்றால், பாசிசம் வெற்றிடத்தை எழுதி நிரப்பும், பெருங்காமநல்லூர் ஈகியரை நினைவுகூர்வோம்! மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு நினைவெழுச்சியாக மாற்றுவோம்!
-பாலன்