உலகளாவிய பெருந்தொற்றும் சோசலிசமும்
கொவி-19 தனது பிடியினை உலகின் மீது இறுக்கிக் கொண்டிருக்கும் சூழலில், சுகாதாரமும் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியும் அரசின் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கும் போக்கு, முதலாளித்துவ நடைமுறையிலிருந்து விலகலைக் காட்டுகிறது
நெருக்கடி நேரங்களில் அனைவரும் சோசலிஸ்டாக மாறுவார்கள்; சந்தை பொருளாதாரம் விலகி நின்று உழைக்கும் மக்களின் நலனுக்காக வழிவிடும், என்று ஒரு கூற்று உண்டு. எடுத்துக்காட்டுக்கு, இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில், பிரிட்டன் அரசு பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்திய காலகட்டத்தில்தான், ஒரு சராசரி தொழிலாளி முன்னெப்போதையும்விட ஊட்டச்சத்து அதிகம் பெற்றார். அதேப்போல, முறையான திட்டமிடலைக் காட்டும் வகையில், தனியார் நிறுவனங்கள் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்ய ஆணை பிறப்பிக்கப்படும்.
தற்போது பெருந்தொற்றின் தாக்கத்தால், இதுபோன்ற நிகழ்வுகளை நாம் காண்கிறோம். ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டிலும், பொது சுகாதாரமும், சில அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியும் அரசின் கைகளுக்குச் செல்வது என முதலாளித்துவத்திலிருந்து விலகிச் செல்லும் போக்கு நிகழ்கிறது. நெருக்கடி நிலையின் தீவிரத்தன்மை அதிகரிக்கையில், இன்னும் தீவிரமாக சோசலிசம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆதலால், இத்தாலிக்குப் பிறகு இப்பெருந்தொற்றின் மோசமான தாக்குதலைச் சந்தித்துள்ள ஸ்பெயின், நெருக்கடி நிலையைச் சமாளிக்க அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசுடைமையாக்கியுள்ளது. டோனல்ட் ட்ரம்ப் கூட தனியார் நிறுவனங்களை அவசரமாக தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்ய ஆணையிட்டுள்ளார். உற்பத்தியின் மீது அரசின் கட்டுப்பாட்டினை அதிகப்படுத்தும் போக்கு, தற்போதைய நிலையில் சீனாவைக் குறிப்பது மட்டுமல்ல, பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் தற்போதைய கொள்கையும் இதுதான்.
பெருந்தொற்றின் தாக்கத்திலுள்ள உலகம் சோசலிசத்தை நோக்கி திரும்புவதற்கு இரண்டாவதாக ஒரு காரணமும் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் அடிப்படையில் விஞ்ஞானக் கண்ணோட்டத்திற்கு தொடர்புடையன. அடிப்படையில், விஞ்ஞானக் கண்ணோட்டம் என்பதே சோசலிசத்தினை நோக்கிய மிகப்பெரிய நகர்வுதான். மாட்டுச் சாணமும், கோமியமும் கொரோனா வைரஸினை அழிக்கும் சக்தி உடையவை என்ற இந்துத்துவ அமைப்புகளின் மூட நம்பிக்கை கருத்துக்கள் மக்களிடம் வரவேற்பை இப்பெருந்தொற்றுக் காலத்தில் பெறுவதில்லை. இந்தக் கோட்பாடுகளை உருவாக்கி பரப்பி வருபவர்கள் கூட, இருமலின் லேசான அறிகுறி தெரிந்தால்கூட தாங்களாகவோ, அல்லது தங்களது உற்றார் உறவினர்களாலோ உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போதைய நிலையில் மூடநம்பிக்கைகள் ஆபத்தாக முடியலாம் என்பதால் அதைப் பின்பற்ற தயங்குவார்கள். நெருக்கடி நிலையினால் ஏற்படும் அணுகுமுறையின் மாற்றம் சோசலிசத்திற்கு உகந்த நிலையினை ஏற்படுத்துகிறது.
பிற நாடுகளை ஒப்பிடுகையில், நெருக்கடி நிலையால் விஞ்ஞான கண்ணோட்டத்திலும், உற்பத்தியும், பொது சுகாதாரமும் அரசின் கட்டுப்பாட்டில் வருவதிலும் இந்தியா பிந்தங்கியிருப்பது உண்மைதான். தீங்கினை விளைவிக்கக்கூடிய விரும்பத்தகாத நடவடிக்கைகள் மீதான பற்று இத்தகைய நெருக்கடி நிலையிலும் மறையவில்லை. கடந்த மார்ச் 22 அன்று, மோடி அறிவித்த ”ஜனதா ஊரடங்கின்” போது கூட, சுகாதாரப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 5 நிமிடங்கள் கைதட்டும் நிகழ்வின் போது, மோடியின் விசுவாசிகள், அந்நிகழ்வை 30 நிமிடங்களாக இழுத்தது மட்டுமின்றி, பல இடங்களில் பாத்திரங்களை சத்தம் வரும் வகையில் அடித்துக் கொண்டே பேரணியாக சென்றார்கள். இது, “சமூக தனிப்படுத்தலை” முன்னிறுத்திய ஊரடங்கின் நோக்கத்தையே சிதைத்தது.
அதுபோல, தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்ததன் மூலம், பரிசோதனை திறனை அதிகப்படுத்தியுள்ள போதிலும், தனியார் மருத்துவமனையில் செய்யப்படும் பரிசோதனைகள் இலவசம் என அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
விஞ்ஞானக் கண்ணோட்டத்தை நிராகரிக்கும் இந்துத்துவ அமைப்புகளின் விரும்பத்தகாத நடவடிக்கைகளும், தனியார் மருத்துவமனைகளின் இலாப வெறியினை கண்டுகொள்ளாத அரசின் போக்கும், இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமடையவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் நிலைமை மோசமடையக் கூடாது என நாம் விரும்பினாலும், ஒரு வேளை, இங்கு நிலைமை மோசமாகும் பட்சத்தில், இந்தியாவும் பிற நாடுகளைப் பின்பற்றி சோசலிசப் பாதையில் செல்லத் துவங்கும்.
இத்தகைய போக்குக்கு மாற்றாக, ”என் அண்டை வீட்டுக்காரன் கஷ்டப்படவேண்டும் (beggar-my-neighbour)” என்னும் கண்ணோட்டமும் இந்நேரத்தில் வளர்ந்து வருகிறது. உதாரணத்திற்கு, இப்பெருந்தொற்றிற்கு, தடுப்பு மருந்து கண்டுபிடித்த க்யூர்வக் நிறுவனத்திடமிருந்து அதற்கான காப்புரிமையை வாங்கிக் கொள்ள ட்ரம்ப் முன்வந்தது இந்த கண்ணோட்டத்தையே காட்டுகிறது. அமெரிக்காவைத் தவிர வேறு நாடுகளுக்கு இம்மருந்து கிடைக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த முயன்ற ட்ரம்பின் முயற்சியை, ஜெர்மனி அரசு புறந்தள்ளியது. அதுபோலவே, மக்களில் ஒரு சாராரை மட்டும் பாதுகாத்து, வயதானவர்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியவர்களை தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுவதும் இக்கண்ணோட்டமே. ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள், அந்நாடு பெருந்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட போதிலும் கூட தொடர வேண்டும் எனக் கூறும் ட்ரம்பின் அணுகுமுறையும் இத்தகைய எண்ணவோட்டத்தின் விளைவே.
மேற்குறிப்பிட்ட உதாரணங்கள், வசதி படைத்த வலிமையான மக்கள் பிரிவினரை பாதுகாத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களை பெருந்தொற்றின் கைகளில் விடும் முதலாளித்துவத்தின் வழமையான அணுகுமுறையையே காட்டுகின்றன. தன்னை சோசலிசவாதியாக அறிவித்துக் கொண்ட, பொது சுகாதாரத்தை அரசே ஏற்க வேண்டும் என வாதிட்டு வரும் பெர்னி சாண்டர்ஸின் தேர்தல்பின்னடைவு, மேற்குறிப்பிட்ட எண்ண ஓட்டத்தை அதிகப்படுத்தவே செய்யும்.
ஆனாலும், இத்தகைய எண்ண ஓட்டத்திற்கு இயல்பான எல்லை என்ற ஒன்று உண்டு. தற்பொதைய பெருந்தொற்றின் முக்கிய அம்சம் என்னவெனில், அதனை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள்ளோ, அல்லது குறிப்பிட்ட மக்கள் பிரிவினருக்குள்ளோ மட்டும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. ட்ரம்ப் செயல்படுத்த முயலும் இத்தகைய வறட்டுத்தனமான நடைமுறை தோல்வியிலேயே முடியும். இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம், நெருக்கடியைச் சமாளிக்க முதலாளித்துவத்தைத் தாண்டி செல்ல வேண்டும் என்ற புரிதலை மனித சமூகம் எந்த தடங்கலுமின்றி வந்தடையும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. ஆனால், இப்பெருந்தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்பவர்கள், அதிகாரத்தை நோக்கி செல்ல வேண்டும். இப்பெருந்தொற்று நீடிக்கும் பட்சத்தில் இது நிகழும் சாத்தியம் அதிகமாகும்.
தற்போதைய உலகமயமாக்கல் முதலாளித்துவத்தின் துணையில் இயங்குகிறது என்றாலும், அதன் சரிவை சரிசெய்யும் வழிமுறைகள் அதனிடம் இல்லை என்பதைத் தான் இப்பெருந்தொற்று எடுத்துக் காட்டுகிறது. உற்பத்திப் பொருட்கள் மற்றும் முதலீடு உலகமயமாகிய நிலையை முதலாளித்துவம் ஏற்படுத்தியது. ஆனால், இவை மட்டுமே உலகமயமாகியது எனக் கருதிய முதலாளித்துவம் தவறிழைத்து விட்டது. ஏனெனில், உலகமயமாக்கல் என்பது, வைரஸ் மற்றும் பெருந்தொற்றுகளையும் உலகமயமாக்கிவிட்டது.
இதுபோல, அதிக மரணங்களை உண்டாக்கிய பெருந்தொற்று வரலாற்றில் இதற்கு முன் ஒரு முறை தான் நிகழ்ந்துள்ளது. அது, 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் நோயாகும். அந்நோய் உலகம் முழுவதும் பரவியதற்குக் காரணம் அப்போது நடைபெற்ற போரில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து வந்த வீரர்கள் மத்தியில் அந்நோய் பரவியதால் தான். அந்த வீரர்கள் போர் முடிந்த பின் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு அந்த வைரஸைக் கொண்டு சென்றார்கள். அந்த போர் நடந்த வேளைகளில் தேச எல்லைகள் கடந்து, பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் SARS நோய், 26 நாடுகளில் பரவி, 800 உயிர்களைக் கொன்றது. தற்போதைய பெருந்தொற்று, அதைவிட பலமடங்கு அதிக உயிர்களைக் கொன்றுவிட்டது.
தற்போது, தேசங்கள் உலகமயமாக்கலால் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. ஆதலால், முதலாளித்துவத்தின் தற்போதைய காலகட்டத்தில் இத்தகைய பெருந்தொற்றுகள் நிகழ்வதை தடுக்க முடியாது. இதன் காரணமாகவே, இப்பெருந்தொற்றை மக்களில் ஒரு சாராரிடம் மட்டும் கட்டுப்படுத்தும் ட்ரம்ப் வகை செயல்பாடுகள் தோல்வியையே தழுவும் என உறுதியாகக் கூறலாம். சுருக்கமாகச் சொன்னால், முதலாளித்துவமானது தான் உருவாக்கிய சிக்கல்களை தன் அமைப்புகளால் சரி செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது.
இதற்கு இப்பெருந்தொற்று ஒரு எடுத்துக்காட்டு தான். வேறு பல சிக்கல்கள் நமது கவனத்தைக் கோரினாலும், நான் மூன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். முதலாவது, முதலாளித்துவ அமைப்புகளால் சரி செய்ய முடியாத உலக பொருளாதார சிக்கல். உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக்கொண்டு ஒவ்வொரு அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் உலக சந்தையை ஒழுங்குபடுத்தவேண்டும். உலகளாவிய ஒத்துழைப்பிலிருந்து நாம் எவ்வளவு தூரம் இருக்கிறோம் என்பதை, உலகத்தின் முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்கா தனது சந்தையை மட்டும் பாதுகாத்துக் கொள்ள எத்தனிப்பு நடைமுறையிலிருந்து அறியலாம். இந்த நடைமுறை, மேலே கூறியது போல பெருந்தொற்றைக் கையாள ட்ரம்ப் மேற்கொள்ளும் நடைமுறையை ஒத்ததேயாகும். இரண்டாவது சிக்கல் புவி வெப்பமடைதல். இங்கும், முதலாளித்துவம் தான் உருவாக்கிய இச்சிக்கலை தனது அமைப்புகளின் மூலம் தீர்க்க இயலாத நிலையில் உள்ளது. எனது மூன்றாவது எடுத்துக்காட்டு, “அகதிகள் பிரச்சனை” என பொதுவாக அழைக்கப்படும், முதலாளிவத்தின் போர்களாலும், சமாதான நடவடிக்கைகளாலும் பேரழிவைச் சந்தித்த மக்களைப் பற்றியது.
இச்சிக்கல்கள் முதலாளித்துவ அமைப்புமுறை அழிவை நோக்கிச் செல்வதைக் காட்டுகின்றன. இச்சிக்கல்கள் வெறும் கடந்து செல்லும் சிக்கல்கள் அல்ல: பொருளாதார சரிவு என்பது சில பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சுழற்சி முறை நிகழ்வு அல்ல. மாறாக, அது கட்டமைப்பு ரீதியான நீடித்த சிக்கல். அதுபோலவே, புவி வெப்பமடைதல் என்பது தானாக சரியாகிவிடும் வெறும் வெப்பநிலை மாற்றமல்ல. மேலும் இப்பெருந்தொற்றானது, தற்போதைய முதலாளித்துவ உலகமயமாக்கல் சூழலில், வேகமாகப் பரவும் வைரஸ்கள் பல இலட்சம் மக்களைக் கொல்லும் பேரழிவை நூற்றாண்டுக்கு ஒரு முறை அல்ல, அடிக்கடி ஏற்படுத்தும் எனக் காட்டுகிறது. மனித இனம் இந்த சிக்கல்களை எதிர்கொள்ள முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தீர்க்க இயலாதவையாக உள்ளது. இதற்கு சோசலிசத்தை நோக்கிய நகர்வு தேவை. தற்போது, “சந்தை”யையும் இலாப நோக்கத்தையும் மீறி எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் பல்வேறு நடவடிக்கைகள், தற்காலிகமானதாக இருந்தாலும் கூட இந்த நகர்விற்கான சுட்டிகள் தான்.
-பிரபாத் பட்நாயக்
தமிழில்: பாலாஜி
Pandemic and Socialism – Prabhat Patnaik
https://www.newsclick.in/Coronavirus-COVID-19-Socialism-Pandemic