கொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்(?) , சட்ட விதிமீறல்கள்! முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா?
கடந்த மூன்று நாட்களாக கிடுகிடுவென தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கும் நிலையில் வழக்கமான நிர்வாகப் பதிவுகளில் உள்ள முரண்பாடுகளைத் தெளிவுபடுத்தக் கோருகிறோம்.
- https://stopcorona.tn.gov.in இது தமிழக அரசு கொரோனாவுக்கு தொடங்கியுள்ள இணைய சுட்டி. https://stopcorona.tn.gov.in/daily-bulletin/ இதில் அன்றாடம் கொரோனா தொடர்பாக எத்தனை பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது, எத்தனை பேர் புதிய நோயர்கள், எத்தனை பேருக்கு பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளது என்பவை பதிவிடப்படுகிறது. நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் இந்த இணையம் சிறிது நேரம் down செய்யப்பட்டு பின்னர் மீண்டும் up செய்யப்பட்டது. Up ஆனதற்கு பிறகு ஏப்ரல் 2, மார்ச் 30, 31 தேதிக்கான bulletin கள் இல்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து ஏப்ரல் 2 ன் bulletin வந்துவிட்டது. ஆனால் இந்த கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் ஏப்ரல் 3 , மதியம் 1:19 வரை மார்ச் 30, 31 க்கான bulletin கள் மீண்டும் ஏற்றப்படவில்லை என்பதற்கான screenshot.
மாலை 4:25 மணி அளவில் மார்ச் 30, 31 க்கான bulletin கள் பதிவேற்றப்பட்டுவிட்டன. ஏற்கெனவே இருந்த bulletin இப்போது மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கும் இடையில் ஏதாவது update செய்யப்பட்டதா? என்பதை அறியமுடியவில்லை. இரு நாட்கள் கழித்து இந்த bulletin களில் update செய்யும் தேவை என்ன? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
- மார்ச் 30, மார்ச், 31, ஏப்ரல் 1, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் தான் கிடுகிடுவென கொரோனா நோயர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. அதுவும் அவையாவும் தில்லி தப்லீக் ஜமாத் சென்று வந்தோரை ஒட்டிய முடிவுகளாகும். புதிய நோயர்கள் விவரம் பின்வருமாறு – மார்ச் 30 – 17, மார்ச் 31 – 57, ஏப்ரல் 1 – 110 , ஏப்ரல் 2 – 75 . ஒவ்வொரு நாளும் எத்தனை புதிய நோயர்கள், மொத்த பரிசோதனை எண்ணிக்கை மற்றும் எத்தனை பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருப்பு (samples under process) என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 09 இல் இருந்து பதிவேற்றப்பட்ட bulletin களில் ஒரே ஒரு நாள் மட்டும் வெறும் 8 வரி பதிவு உள்ளது. மற்றபடி எல்லா நாட்களிலும் விரிவான விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மட்டும் ‘எத்தனை பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பு’(samples under process) என்ற விவரம் தரப்படவில்லை. இது தற்செயலான நிர்வாக விடுபடலா? ஏனெனில் இந்த இரண்டு நாட்களை ஒட்டிவரும் அடுத்தடுத்த நாளில் தான் அதிகபட்சமாக 110, 75 என புதிய நோயர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் 184 பேர் தில்லி ஆன்மீக மாநாடு சென்று திரும்பியோர் ஆவர்!
- ஏப்ரல் 1 அன்று மதிய வேளையில் ஊடகத்தை சந்தித்த வருவாய் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தில்லி சென்றவர்களில் சுமார் 400 பேர் தில்லியில் இருப்பதாகவும் மீதமுள்ள சுமார் 700 பேரில் 600 பேரை அடையாளம் கண்டிருப்பதாக சொன்னார். அடுத்த இரண்டு மூன்று மணிநேரங்கள் கழித்து ஊடகங்களிடம் பேசிய நலவாழ்வு துறை செயலர் பீலா இராஜேஷ் தில்லி சென்று திரும்பிய 1103 பேரும் தாமே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர் என்று தெரிவித்தார். இரண்டு மூன்று மணி நேர இடைவெளியில் இரு வேறு அதிகாரிகள் ஒரே பொருள் குறித்து முன்பின் முரணாக இருவேறு விவரங்களைக் கொடுப்பதற்கு காரணம் என்ன? தகவலை மையப்படுத்துவதில் உள்ள இடைவெளியா?
- மார்ச் 21 அன்றே தில்லி மாநாடு சென்று வந்தவர்களிடம் நோய் தொற்று இருப்பதை தமிழக அரசு தெரிவித்துவிட்டதாக ஸ்கரால் செய்தி குறிப்பு சொல்கிறது. மேற்படி bulletin களைப் பார்க்கும் பொழுது அதை உறுதி செய்யவும் முடிகிறது. ஏனென்றால் 5 வது மற்றும் 6 வது நோயர்கள் ஈரோட்டில் இருந்த தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு பேர் வயது 69, வயது 75 மார்ச் 21 அன்று நோய்த் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கு முன்னதாக 18 ஆம் தேதி அன்று தில்லியில் இருந்து சென்னை திரும்பிய 25 வயது இளைஞருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தில்லி மாநாடு ஒரு cluster ஆக இருக்கக் கூடும் என்பதை மார்ச் 21 அன்றே எளிதில் ஊகித்திருக்க முடியும். அதே போல, தில்லி மாநாடு சென்று வந்தோரில் இந்தோனேசியாவை சேர்ந்த எட்டு பேருக்கு நோய்த் தொற்று இருப்பது மார்ச் 21 அன்று தெலங்கானாவில் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர், விசித்திரமாக அவர்கள் எட்டுபேருக்கும் நோய்த் தொற்று இல்லை என்று இரண்டாவது பரிசோதனை முடிவு வெளிப்படுத்தியுள்ளது. தெலங்கானா அரசும் இது குறித்த விவரங்களை மார்ச் 21 அன்றே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. மார்ச் 28 அன்றுதான் தில்லியில் உள்ள தப்லீக் ஜமாத்தில் இருந்தவர்களுக்குப் பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளனர். இதிலிருந்து மார்ச் 21 அன்றே தகவல் பெறப்பட்டதாயினும் மத்திய அரசு நாடு முழுக்கவுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பி தில்லி மாநாடு சென்று திரும்பியோரைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய செயலுக்கு உந்தவில்லை என்பது புலனாகிறது. இருப்பினும், மார்ச் 21 அன்றே தில்லி மாநாட்டில் இருந்து வந்தோருக்கு நோய்த் தொற்று இருப்பது குறித்து தமிழக அரசு தெரிவித்தப் பிறகு இது குறித்த ஆலோசனைகள் எதையாவது மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுத்ததா? அது எழுத்துப்பூர்வமானதெனில் அதை தமிழக அரசு தனது கொரோனா வலைதளத்தில் வெளியிடுமா? ஏனெனில் இதே இணையத்தில் சனவரி 20 அன்று பிரதமர் அலுவலகம் மாநிலங்களுக்கு அனுப்பிய கொரோனா எச்சரிக்கை சுற்றறிக்கை பதிவேற்றப்பட்டுள்ளதால் மத்திய அரசு கொரோனா தொடர்பாக மாநிலங்களுக்கு அனுப்பும் சுற்றறிக்கை அனைத்தும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தில்லி ஆன்மீக மாநாடு குறித்த சுற்றறிக்கை ஏதேனும் மத்திய அரசு அனுப்பி இருப்பின் அதை பதிவேற்றக் கோருகிறோம்.
https://thewire.in/government/delhis-nizamuddin-hotspot-coronavirus
- மார்ச் 21 அன்றே தமிழக அரசு மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டியிருக்கும் நிலையில், மார்ச் 25 அன்று மட்டும் தில்லி சென்று வந்தோர் மற்றும் அவர்களது தொடர்புகளில் ஏழு பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ர் தில்லி மாநாடு சென்று வந்தோர் அனைவரும் பரிசோதனைக்கு முன் வருமாறு முதல்வ அழைப்புக் கொடுப்பதற்கு மார்ச் 31 வரை ஏன் காலதாமதம்? இதில் மத்திய அரசின் வழிகாட்டுதல் ஏதேனும் வருமென்று காத்திருந்தீர்களா? எது எப்படியோ, கடந்த மார்ச் 31, ஏப்ரல் 1, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் தில்லி மாநாடு சென்று வந்தோருக்கு மட்டும் விரைவாகப் பரிசோதனை செய்தமை பாராட்டுக்குரியது. ஆயினும் அதை மார்ச் 26 இல் இருந்தே தொடங்கியிருக்க முடியும் என்று கருதுகிறோம். இது குறித்த கேள்வி ஒன்றை ஏப்ரல் 2 அன்று ஊடக சந்திப்பின் போது ஒருவர் எழுப்பிய போது நலவாழ்வுச் செயலர் பீலா இராஜேஷ் தட்டுத் தடுமாறி பதிலளித்ததைக் காண முடிகிறது. எனவே, அரசு இதில் ஏதேனும் காலதாமதமான முடிவு எடுக்கப்பட்டதா? என தெளிவுப்படுத்த வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டிருப்போர், வெளிநாடு சென்று வந்தோர் போன்றவர்களில் சிலரது பெயர்கள் தொடக்கத்தில் வெளியிடப்பட்டு வலைதளங்களில் உலவக் கண்டோம். ஆனால், நோயாளிகளின் பெயர்கள் வெளியிடப்படுவதை நாம் காணவில்லை. அப்படியிருக்கும் போது தில்லி மாநாடு சென்று வந்து நோய்த் தொற்று உறுதியானோரின் பெயர்கள், தொலைபேசி எண்கள் ஒரு பட்டியலாக இணையத்தில் உலவவிடப்பட்டுள்ளது. இப்படி தனிநபர் தகவலை வெளியிட்டது சட்டப்படி குற்றம். இது யாரால் வெளியிடப்பட்டது என்று அரசு விசாரணை மேற்கொள்கிறதா? அதிகாரிகள் மட்டத்தில் இத்தகைய தவறு நேர்ந்திருக்கக் கூடும் என்றால் இதற்குப் பொறுப்புக் கூற போகிறவர் யார்? முதல்வரா? நலவாழ்வு அமைச்சரா? நலவாழ்வுச் செயலரா?. மேலும் தங்களுடைய தகவலுக்காக – முன்பின் தெரியாதவர்கள் நோயாளிகளைத் தொடர்பு கொண்டு கிண்டல் செய்வது நடந்து வருகிறது! அவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அப்படி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
- ஊரடங்கு தொடங்கிய போது இணையத்தில் பொய்யான தகவலைப் பரப்புவதாக பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. மதுரையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் ஒருவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்துப் பின்னர் அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார். சிலர் மீது வழக்குப் பதிந்திருக்கிறோம் என்று காவல்துறையிடமிருந்து தொலைபேசியில் அழைக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தில்லி ஆன்மீக மாநாடு சென்று வந்தோர் ‘கொரோனா ஜிகாத்’ செய்வதாகவும் அவர்கள் வேண்டுமென்றே நோயைப் பரப்புவதாகவும் முகநூல், வாட்ஸ் அப்பில் பதிவுகளும் வீடியோக்களும் உலா வருகின்றன. இவை அறிவியலுக்கு முரணானது. மனிதநேயத்திற்கு எதிரானது. ஒருவர் அம்மைப் போட்டுவிட்டால் அவர் வீட்டில் உள்ள ஓரிவருக்காகவது தொற்றாமல் அது முடிவுக்கு வருவதில்லை. அப்படித்தான் கொரோனாவும். ஆனால், ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு நோய்ப் பரவுவதை ஒரு குற்றமாகவும் ஒரு திட்டமிட்ட செயலாகவும் பரப்பப்படும் செய்திகள் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பது ஏன்? இதில் எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனைப் பேர் கைது செய்யப்பட்டு காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை பேருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது? எத்தனைப் பதிவுகள், வீடியோக்கள் சைபர் குற்றப்பிரிவால் நீக்கப்பட்டுள்ளன?
- ஒட்டுமொத்த இந்தியாவின் பரிசோதனைத் திறனை நாளொன்றுக்கு 10000 என்ற அளவுக்கு உயர்த்த முயல்வதாக மார்ச் 22 அன்று ICMR சொல்லியிருந்தது. மார்ச் 23 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தின் சுட்டியில் உள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் படி நாளொன்றுக்கு தமிழகத்தில் 60 பரிசோதனைகள் செய்ய முடியும் என்று கட்டுரையாளர் சந்தியாவிடம் நலவாழ்வுச் செயலர் பீலா இராஜேஷ் சொல்லியுள்ளார். ஏப்ரல் 1 அன்று பீலா இராஜேஷ் நாளொன்றுக்கு 5000 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும் என்று ஊடகங்களிடம் சொன்னார். ஏப்ரல் 2 அன்று மொத்தம் 12,000 test kits இருப்பதாகவும் ஒரு பரிசோதனை மையத்தில் 100 வரை பரிசோதனை செய்ய முடியும் என்று சொன்னார். இப்போதுவரை, கொரோனா இணையத்தில் சொல்லியுள்ளபடி தமிழகத்தில் அரசு, தனியார் சேர்த்து மொத்தம் 17 (11 + 6) பரிசோதனை மையங்கள் உள்ளன. அத்தனையிலும் screening test, confirmatory test இரண்டையும் செய்ய முடியும் என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொன்றிலும் தலா 100 என்றால் மொத்தத் திறன் 1700 வருகிறது. ஏப்ரல் 1 அன்று செயலர் பீலா இராஜேஷ் சொன்னதற்கும் ஏப்ரல் 2 அன்று அவர் சொன்னதற்கும் முரண்பாடு இருப்பதாக தெரிகிறது. எத்தனை பரிசோதனை மையங்கள் இப்போது செயல்பாட்டில் உள்ளன? அதில் எந்தெந்த மையங்களில் screening test, confirmatory test இரண்டையும் செய்ய முடியும்? ஒவ்வொன்றிலும் நாளொன்றுக்கு எத்தனை பரிசோதனைகள் செய்ய முடியும்? தமிழகத்தின் மொத்த ஒரு நாள் பரிசோதனை திறன் என்ன?
https://www.thelede.in/tamil-nadu/2020/03/23/why-indias-covid-19-numbers-are-misleading
- நோயாளிகளின் பரிசோதனை முடிந்து முடிவுகள் தெரிந்த பின் பரிசோதனை அறிக்கை நோய்த் தொற்று உறுதியானாலும் ஆகாவிட்டாலும் பரிசோதனை செய்யப்பட்டவரிடம் கொடுக்கப்படுகிறதா? இன்னும் குறிப்பாக, கடந்த மூன்று நாட்களில் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதா?
முடிவாக, கொரோனா திட்டமிட்டுப் பரப்பப்படுவதாக செய்யப்படும் பரப்புரையும் நோயாளிகள் பெயர், தொலைபேசி எண்கள் இணையத்தில் வெளிவந்தது தெள்ளத்தெளிவான சட்டமீறல். அரசு அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எண்ணிக்கை, புள்ளிவிவரங்கள், தங்கள் அறிக்கைகள் மட்டுமே மக்களுக்கு கிடைக்கக் கூடிய விவரங்களாகும். தில்லி தப்லீக் ஜமாத் நோய்த் தொற்றின் பின்புலம் இருக்கும் நிலையில், எண்ணிக்கை, புள்ளி விவரங்களில் நிலவும் முன்பின் முரண்பாடுகள், இடைவெளிகள் நிர்வாகப் பிழைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். முதியோரையும் நீரிழிவு நோய், நுரையீரல் பிரச்சனை உள்ளோர், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் போன்ற vulnerable sections ஐ இலட்சக்கணக்கில் கொரோனா கொள்ளையிட்டுப் போய்விடக் கூடாதென்பதற்காக உலகம் முன்னெடுத்திருக்கும் மாபெரும் மனிதநேய நடவடிக்கைப் இது. அதன் பகுதியாகவும் இந்தியாவும் தமிழகமும் இந்நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இந்த ஊரடங்கு நிலையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரானப் போரில் மக்களின் உயிரும் பாதுகாப்பும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது விசயத்தில் தமிழக அரசு மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைப் பொய்த்துப் போய்விடக்கூடாது என்ற பதற்றத்துடன் மேற்படி கேள்விகளுக்கானப் பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்.
– செந்தில், இளந்தமிழகம்
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் வைத்துக்கொண்டு இந்த ஆயி அதிமுக தற்போதைய நிர்வாகிகளும் மத்திய அரசு பாஜாகா நிர்வாகிகளும் ஆடிய ஆட்டங்களை நாம் பார்த்தோம் தனிக் கட்சித் தலைவி மருத்துவ அறிக்கை இறப்பு குறித்து ஒரு விசாரணை கமிஷன் அமைத்து இன்று வரையில் ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு அதனை உறுதி செய்ய எண்ணம் இல்லாத அரசியல் சித்து விளையாட்டுகள் கொண்டவர்கள் பாஜக ஆர்எஸ்எஸ் அதிமுக காரர்கள் அவர்களிடம் இந்த டில்லி தப்லீக் ஜமாத் சேர்ந்த நபர்களின் மருத்துவ அறிக்கையில் எந்த நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பதுதான் நிதர்சனம் அதுதான் தங்களின் கட்டுரையின் வாயிலாக அறியவருகிறது நன்றி
ஆதரங்களை இன்னும் தொகுத்து RSSன் தொங்குசதையான மத்திய
பிஜேபி அரசு கொரோன் நோய்த்தொற்றை கையாலத்தெரியாது செய்த குளறுபடிகளையும் இந்த பார்ப்பனிய கும்பலின் சதிக்குஉடந்தையாக எடப்பாடி அரசு இந்த பித்தலாட்டங்களைச் செய்கிறது என்பதையும் நேரடியாக குற்றம்சாட்ட ஏன் தயங்க வேண்டும்?