ஊடகச் செய்தி – சாலையோர வியாபாரிகளுக்காக அரசு வழங்குவதாக அறிவித்துள்ள உதவி தொகை 1000ரூபாயை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்கிடு!

03 Apr 2020

 கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக வியாபாரம் செய்ய முடியாமல்  தத்தளித்துவரும்  வியாபாரிகளுக்கு  கூடுதலாக 2000 வழங்கிடு.மேலும் நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை  நாள் ஒன்றுக்கு 100 ரூ வீதம் இத்தொகையை  கணக்கிட்டு வழங்கிடு!

 

இயற்கை பேரிடர் தொடங்கி கொரோனா நோய் வரை சமூகத்தில் எது நடந்தாலும் முதலில்  பாதிப்புக்குள்ளாகுவது சாலையோர வியாபாரிகள் தான். ஊரடங்கு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், சினிமா திரையரங்கள், வழிபாட்டுத் தளங்கள் என  அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. மக்கள் கூடும் இடங்களை மையமிட்டே சாலையோர வியாபாரம் செய்து வருகிறார்கள். கொரோனா அச்சத்தின் காரணமாக மார்ச் மாதத்தின் தொடங்கத்திலிருந்தே பல நிறுவனங்கள் தனது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுப்பியது,  மக்கள் கூட்டமாக கூடும் இடங்கள் எல்லாம்  அனுமதி மறுக்கப்பட்டதால் மாநகர பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்கள் வெறிச்சோடி போயின. ஊரடங்கு காலத்தில்  உணவு பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி  சந்தைகள்  ஆகியவற்றிக்கு தடையில்லை என்றாலும் இவர்கள் வியாபாரத்தில் ஈடுபட முடியாமல் முடங்கியுள்ளனர்

மாநகர காவல்துறை, ரயில்வே காவல்துறை , அரசியல் ரவுடிகள் ஆகியோரின் மாமூல் வேட்டைக்கு மத்தியில், தினமும் 100 -200 ரூபாய் வருமானத்தில்,  தான் வாழ்க்கை  நடத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலும் பெண்கள், ஊனமுற்றோர், வயதுமுதிர்ந்தோர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பெரும்பாலானோர் வாங்கிய கடனுக்காக யாரிடமாவது தண்டல் கட்டுபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாத்தாலும் , வறுமையின் விளைபொருளான பட்டினி இவர்களை விபரீத முடிவிற்கு தள்ளிவிடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

மேலும் நாடுமுழுவதிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் மேலோங்கி வருகிறது. எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது உறுதியாக தெரியவில்லை. ஒரிரு மாதங்களுக்குப் பின் மெதுவாக இயல்பு நிலை திரும்பினாலும் , பேருந்து நிலையம் , ரயில்நிலையம் கல்லூரி,வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள் , திரையரங்கங்கள், பூங்காக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், மற்றும்  மக்கள் கூடும் இடங்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் புது விதிமுறைகள் வரக்கூடும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனாவிற்குப் பிந்தைய காலம் என்பது  பெரும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்க கூடும்.

எனவே தமிழக அரசு, போர்க்கால அடிப்படையில்  பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி  சாலையோர வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டுகிறோம்.

 

  1. அரசு வழங்க உள்ள 1000 ரூபாயை சேர்த்து மேலும் கூடுதலாக நாளொன்றுக்கு குறைந்தது 100 ரூபாய் விதமாக வழங்கிடு.
  2. இப்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் உடலுழைப்புத் தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதில் பதிவு செய்வதற்கு  உள்ள நடைமுறை சிக்கலுக்கு  எதிராக பலவிதமான கோரிக்கைகள்  ஏற்கனவே அரசுக்கும், நலவாரியத்தின் கவனத்திற்கும் நடைபாதை வியாபார சங்கங்களால்  முன்வைக்கப்பட்டுள்ளன.  ,அதாவது எல்லா சான்றிதழ் நகலிலும் Attested By gazzette officer , மற்றும் விண்ணப்பத்தில் வட்டாட்சியர் கையொப்பம் என  உடலுழைப்பு தொழிலாளர்களை  அலைக்கழிக்கும் நடைமுறை அது. ஆட்டோ மற்றும் வாகன ஒட்டும் தொழிலாளர்களுக்கு கடந்த காலங்களில் கல்வி தகுதி இருந்தது அதனடிப்படையில் விதிகளை நலவாரியம் தீர்மானிக்கிறது. இதர பிரிவினருக்கு கல்வி தகுதி என்பது கிடையாது எனவே தொழிலாளர்களுக்கு பதிவு செய்யும் முறையை எளிமையாக்க வேண்டும் என்பது தொழிற்சங்களின் நீணட கால கோரிக்கையாகும்.மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நலவாரியப் பதிவை புதுப்பிக்க வேண்டும் என்பதும் நடைமுறையில் உள்ளது.

 

எனவே இதன் அடிப்படையில் உதவித் தொகை வழங்கும் பட்சத்தில் பெரும்பாலானோர் அரசின் உதவித் தொகையைப் பெறும் தகுதி இல்லாதவர்கள் ஆகிவிடுவர். எனவே, நலவாரியத்தில் பதிவு செய்திருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு மட்டும் உதவித் தொகை என்பதைத் தளர்த்திப் பின்வரும்  ஆவணங்களின் அடிப்படையிலும் பெற வழிவகைச் செய்ய வேண்டும்

 

அ. மாநகராட்சி வழங்கியுள்ள தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை. ( Street Vendor’s Identity Card )

ஆ. அடையாள அட்டைக்கானப் புகைப்படம் எடுத்தபோது வழங்கப்பட்ட ரசீது.

இ. புதியதாக அடையாள அட்டை வழங்கக் கோரி மாநாகராட்சி  அலுவலகத்தில்  விண்ணப்பித்திருந்தால் அந்தப் படிவத்தின் நகல்

ஈ.  அங்கீகரிக்கப்பட்ட  எந்த தொழிற்சங்கத்தின் பரிந்துரையின்படி.

உ. (Food saftey & Standards Authority of India (FSSAI) உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுபாட்டு ஆணையம் வழங்கிய சான்றுதல் அடிப்படையில்

ஊ.. மாநகர காவல்துறை, போக்குவரத்துதுறை, இரயில்வே துறை விதித்துள்ள அபதார தொகைக்கான ரசீதின்    அடிப்படையில்

எ. சாலையோர வியாபாரி என்ற அடிப்படையில் வங்கி கடன், மற்றும் எந்த விதமான சான்றிதழ் வைத்திருந்தாலும் அதன் அடிப்படையில்

 

மேலே உள்ள ஆவணங்களின் அடிப்படையில்  உதவித் தொகையை வழங்கிட வேண்டுகிறோம்.

  1. கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக வியாபாரம் செய்ய முடியாமல் தத்தளித்துவரும்  வியாபாரிகளுக்கு  கூடுதலாக நாளொன்றுக்கு 100ரூபாய் வீதம்உதவி தொகை வழங்கிடு.

 

  1. மேலும் நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை நாள் ஒன்றுக்கு 100ரூபாய் வீதம் உதவி தொகையை  வழங்கிட வழிவகை செய்க.

 

  1. கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி போன்ற வியாபாரிகளை மையமிட்டே செயல்படும் வட்டிகார்களிடமிருந்து காக்கும் பொறுப்பும் அரசுக்கு இருப்பதால்,  அரசு வங்கிகள்  அல்லது கூட்டுறவுச்  சங்ககள் மூலமாக  5000ரூபாய் வட்டியில்லா கடனாக 3 ஆண்டுகளுக்கு வழங்கிடு.

 

ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை சாலையோர வியாபாரிகள் உயிர் உடலுடன் ஒட்டியிருக்க வேண்டும், ஒரு வேலை உணவாவது அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மிக குறைந்தபட்ச கோரிக்கைகளை  அரசுக்கும், இத்துறைசார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்று சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

 

– அமுது, சோசலிச தொழிலாளர் மையம்  

RELATED POST
1 comments
  1. அருமை தோழர் வாழ்த்துக்கள்

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW