ஏற்றத்தாழ்வான இந்தியாவில் ஒரு பெருந்தொற்று
அரசு கொரோனா எதிர்த்துப் போராடுவதற்கான பொறுப்பைப் பெரும்பான்மை எளிய மக்களிடம் ஒப்படைக்கின்றன. COVID-19 தொற்றுநோய் இந்தியாவை தீவிரத்தன்மையுடன் தாக்கினால், அதனால் பாதிக்கப்படப்போவது நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான எளிய மக்கள் பெருமளவில் துன்பங்களைத் சுமக்கநேரிடும். பெருமளவில் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ள இந்த நாட்டில் பணக்கார வகுப்பினர் நீண்ட காலமாக வசதியாக இருந்து வருகிறார்கள். ஆனால் இந்த தொற்றுநோயால் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும், ஏழைகள் உயிர்வாழ்வதற்கே எதிரான சூழலையும், பலவீனமான வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்திவிடும்.
வைரஸின் பரவலைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் முதலில் ‘வீட்டிலிருந்து வேலை’ , மக்களை அடிக்கடி கைகளைக் கழுவும்படி வற்புறுத்தல், சமூக விலகலை தொடர்ந்து இதுவரை இல்லாத வகையில் 21 நாள் ஊரடங்கும் ஆகும்.
சமூகப் பிளவை ஆழப்படுத்துதல்
இந்த ஊரடங்கு அவசியமானதா மற்றும் செயல்படுத்தக்கூடியதா என்பது குறித்து பொதுச் சுகாதார நிபுணர்களிடம் இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகின்றன. இந்த காலகட்டத்தில் உறுதியான வருமானம் கொண்ட பணக்காரர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும், தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி கொண்ட சுகாதாரமான இருப்பிடங்கள் கொண்டவர்கள், சுகாதார காப்பீடு மற்றும் தடையற்ற நீர் கொண்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே மொத்த ஊரடங்கு சாத்தியமானது. ஆனால் மேற்கூறிய அனைத்தும் இல்லாத எளியோரைப் பசி மற்றும் தொற்று ஆகிய இரண்டிற்கும் பலியாக்கும் ஒரு தேர்வை நாம் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?
ஊரடங்குக்கு உத்தரவிடும்போது, கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களை அரசாங்கம் நினைவில் கொள்ளவில்லையா? அவர்களில் பலர் சொந்த ஊர்களிலிருந்து பிற நகரங்களுக்குக் குடியேறியவர்கள், இவர்கள் மொத்தம் 10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் தினசரி கூலித் தொழிலாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் போன்ற சுயதொழில் செய்பவர்கள் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் தங்கள் குடும்பத்துக்கு உணவளிக்க ஏதுவாக ஒவ்வொரு நாளும் சம்பாதிக்கும் நபர்கள். தொற்று பரவாமல் தடுக்க அவர்கள் தானாக முன்வந்து பட்டினி கிடந்து தங்கள் குழந்தைகளை இறக்க விடுவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறதா? இந்த பசியின் நெருக்கடி பராமரிப்பாளர்கள் இல்லாத வயதானவர்களுக்கும், ஊனமுற்றோருக்கும் இன்னும் மோசமானது. ஒவ்வொரு நகரத்திலும் நடைபாதை அல்லது பாலங்களின் கீழ் வாழ்ந்துவரும் நூறாயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றி அரசாங்கம் மறதி நோயில் இருப்பதாகத் தெரிகிறது.
தொலைப்பேசிகளில் பதிவுசெய்யப்பட்ட குரல் ஒன்று தவறாமல் கைகளைக் கழுவும்படி கேட்டுக்கொள்கிறது. இங்கே நாம், கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் வசதி இல்லாமல் குடிசைகளில் வாழ்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறோம், மேலும் அவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கத்தள்ளப்பட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களின் நாளின் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கிற்கு (இந்த ஒழுங்கற்ற வருமானங்கள் கூட ஊரடங்கால் தற்போது கிடைப்பதில்லை) குடிநீருக்காகச் செலவுசெய்யவேண்டியுள்ளது. வழக்கமான தூய்மை என்பது அவர்களின் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்ட தொலைதூர ஆடம்பரமாகும்.
‘சமூக விலகல்’ (உடல் ரீதியான இடைவெளிக் கடைப்பிடித்தல்) மற்றும் ‘சுய தனிமைப்படுத்தல்’ என்பதும் நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. உழைக்கும் மக்களின் வீடுகளின் குறுகிய ஒற்றை அறைக்குள் வசித்து வரும் குடும்பங்களுக்கு இது எவ்வாறு சாத்தியமாகும்? வீடற்ற மக்களுக்கு நெரிசலான சுகாதாரமற்ற அரசாங்க முகாம்களில், தொற்றுநோய்களுக்கு ஏதுவான இடங்களில் தூங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஆதரவற்றோர்கள், பிச்சைக்காரர்களுக்கு, நெரிசலான சிறைகளில் கைதிகளுக்குச் சாத்தியமாகுமா? இல்லை, அசாமில் உள்ள தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இதற்கான வசதி இருக்குமா?
உண்மையில் தொற்றுநோயைக் கையாள்வதற்கான இந்தியாவின் சுகாதார அமைப்பின் திறனைக் கவனியுங்கள். பொதுச் சுகாதாரத்தில் இந்தியாவின் முதலீடுகள் உலகிலேயே மிகக் குறைவானவை, பெரும்பாலான நகரங்களில் எந்தவிதமான பொது ஆரம்பச் சுகாதார சேவைகளும் இல்லை. ஒரு ஜான் ஸ்வஸ்திய அபியான் (Jan Swasthya Abhiyan) மதிப்பீடு என்னவென்றால், இருவது லட்சம் மக்களுக்குச் சேவை செய்ய நிறுவப்பட்டுள்ள ஒரு மாவட்ட மருத்துவமனை குறைந்தது 20,000 நோயாளிகளுக்குச் சேவை செய்ய வேண்டியிருக்கும், ஆனால் அவர்கள் இதைச் செய்யப் படுக்கைகள், பணியாளர்கள் கொண்டிருக்கிறார்களா ?
சில மருத்துவமனைகளில்தான் ஒரு வென்டிலேட்டராவது உள்ளது. இந்தியாவின் பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பொதுச் சுகாதாரத்திலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளனர், இதனால் ஏழைகளுக்கான பொது மருத்துவமனைகள் முதலீடின்றி, பராமரிப்பின்றி மிகச்சிறிய சேவைகளுடன் நின்றுவிடுகின்றன. முரண்பாடு என்னவென்றால், விமானச் சீட்டுகளை வாங்கக்கூடிய மக்களால் ஒரு தொற்றுநோய் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் தனியார் சுகாதார சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் அதே வேளையில், இந்த வைரஸ் சுகாதாரப் பாதுகாப்பு குறைவாக உள்ள ஏழைகளைப் பேரழிவிற்கு உட்படுத்தும்.
பி.டி.எஸ் (PDS) இன் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ கூடுதல் தானியங்கள் உட்பட ஒரு நிவாரணத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது; ஜன-தன் யோஜனா(Jan-Dhan Yojana) கணக்குகளை வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதம் 500 ரூபாய்; கிட்டத்தட்ட மூன்று கோடி விதவைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாத ஓய்வூதியம்; மற்றும் MGNREGA(Mahatma Gandhi National Rural Employment Guarantee Act.) தொழிலாளர்களுக்குக் கூடுதலாக 2,000. சுகாதார காப்பீடு இல்லாமல், ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள் சம்பளத்திலும், 5 கிலோ தானியத்திலும் நீங்கள் உயிர்வாழ வேண்டும் என்று உங்களுக்கும் எனக்கும் கூறப்பட்டால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்!
என்ன செய்ய வேண்டும்
பெரும்பாலான அரசின் உத்திகள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான பொறுப்பை அரசை விடக் குடிமகனின் மீது திணிக்கிறது. கொரோனா தொற்றுநோய் இந்தியாவை அடைவதற்கு முன்னர் கிடைத்த சில மாதங்களில் சோதனை மற்றும் சிகிச்சைக்காக அதன் சுகாதார உள்கட்டமைப்பைப் பெரிதும் விரிவுபடுத்த அரசு மிகக் குறைவாகவே செயல்பட்டுள்ளது. உணவு மற்றும் வேலைக்கான திட்டமிடல் ; பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் வயதானவர்கள், ஊனமுற்றோர், கவனிப்பு இல்லாத குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்குச் சிறப்பு பாதுகாப்புக்கான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
இரண்டு மாதங்களுக்கு, முறைசாரா பொருளாதாரத்தில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிற்கும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற, ஊரடங்கு தொடரும் வரை மாதத்திற்கு 25 நாட்கள் குறைந்தபட்ச ஊதியத்திற்குச் சமமாக வழங்கப்பட வேண்டும், இதைத் தாண்டி இரண்டு மாதங்களுக்கு. ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கி, வீட்டிலேயே ரொக்கமாக வழங்க வேண்டும். வேலை நாட்கள் முழுவதும் குடிநீர் வசதியற்ற பகுதிகளில் தண்ணீர் வழங்கும் இலவச நீர்த்தொட்டிகள் இருக்க வேண்டும். அரசாங்கங்கள் ரேஷன் பொருட்களை இரட்டிப்பாக்க வேண்டும், இதில் புரதம் நிறைந்த பருப்பு வகைகள் இணைக்கப்படவேண்டும், மேலும் இவை இலவசமாக வீட்டு வாசல்களில் விநியோகிக்கப்பட வேண்டும். கூடுதலாக, வீடற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மற்றும் ஒற்றை குடியேறியவர்களுக்கு, உணவையோ வழங்குவது அவசரமானது, மேலும் சமூக இளைஞர் தன்னார்வலர்களின் சேவைகளைப் பயன்படுத்தி வயதானவர்களுக்கும் ஊனமுற்றோருக்கும் தங்கள் வீடுகளில் தயார் செய்யப்பட்ட உணவை வழங்க வேண்டும்.
சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த, மிகப் பெரிய குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர அனைத்து சிறைச்சாலை கைதிகளும், குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். பெண்களின் மீட்பு மையங்கள் மற்றும் தடுப்பு மையங்களில் வசிப்பவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
இலவச மற்றும் உலகளாவிய முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதார சேவையில் கவனம் செலுத்தி, சுகாதார சேவைகளுக்கான பொது செலவினங்களுக்காக இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஐ உடனடியாக ஒதுக்க வேண்டும். ஆனால் தேவை உடனடியாக இருப்பதால், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்தின் முன்மாதிரியைப் பின்பற்றி தனியார் சுகாதார சேவையை தேசியமயமாக்க வேண்டும். COVID-19 -இன் அறிகுறிகளைக் கண்டறிதல் அல்லது சிகிச்சையளிப்பதற்காக எந்தவொரு தனியார் மருத்துவமனையிலும் எந்தவொரு நோயாளியையும் திருப்பியனுப்பவோ அல்லது கட்டணம் வசூலிக்கவோ கூடாது என்று உடனடியாக ஒரு கட்டளை நிறைவேற்றப்பட வேண்டும்.
மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் வேலை மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, சுகாதார காப்பீடு மற்றும் தரமான வீட்டுவசதி ஆகியவற்றை அனுபவித்து வருகின்றனர், மற்றவர்கள் பாதுகாப்பற்ற, நிச்சயமற்ற வேலையின் விளிம்பில் வாழ்கின்றனர், சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் இல்லாத மோசமான வீடுகள், மற்றும் பொதுச் சுகாதார பராமரிப்பு எதுவும் இல்லை. COVID-19க்கு பிந்தைய இந்தியாவில் இதைச் சரிசெய்ய நாம் தீர்மானிக்க முடியுமா? குறைந்த பட்சம் இப்போதிருக்கும் நாட்டை இன்னும் நியாயமாகவும், சமமாகவும் மாற்ற முடியுமா?
- ஹர்ஷ் மந்தர்
தமிழில்: ராதா
A pandemic in an unequal India
https://www.thehindu.com/opinion/op-ed/a-pandemic-in-an-unequal-india/article31221919.ece