ஒர் உலகளாவிய பெருந்தொற்று உலகமயமாக்கலின் பின்னடைவிற்கு வலுவூட்டுகிறது.

31 Mar 2020

கொரோனா நோய் தொற்று உலகெங்கும் பரவும் வேளையில் தொழில் நிறுவனங்கள் சீனாவில் தயாராகும் பொருட்களுக்கான மாற்று வழியை தேடுகின்றனர், வலது சாரிய கட்சிகள் திறந்த எல்லைகளுக்கு எதிரான தங்களது பிரச்சாரத்தை தீவிர படுத்துகின்றன.

 

கொடிய நோய் கிருமி எல்லைகளைத் தாண்டி பரவுவதற்கு வெகு முன்பாகவே, தேசங்களுக்கிடையே ஆழமான இணைப்புகளால் உருவாக்கபட்டுள்ள ‌இந்த உலகம், உலகமயமாக்கல் குறித்து மறுபரிசீலனை செய்ய துவங்கிவிட்டது.

 

தீவிர தேசியவாதியான டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவை தவிர்த்து அமெரிக்க தொழிற்சாலைகளில் பொருட்களை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிரிட்டன் ஆங்கில கால்வாயின் இருபுறமும் சுங்க வரியை கிட்தட்ட புதுப்பித்ததன் மூலம் முக்கிய வர்த்தக உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

 

சிரியா, ஆப்கானிஸ்தான், மத்திய அமெரிக்கா போன்ற உலகின் மிகவும் ஆபத்தான  இடங்களிலிருந்து தப்பிச் செல்லும் அகதிகள் பல வளர்ந்த நாடுகளில் குடியேற்றத்திற்கு எதிரான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில், எல்லைகளை மூடுவதற்கான வாக்குறுதிகளுடன் வாக்குகளை வென்ற தீவிர வலதுசாரிக் கட்சிகளின் அந்தஸ்தை அது உயர்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மெக்ஸிகோவின் எல்லையில் சுவர் கட்டும் பணியில் ஈடுபடிருக்கிறார் , இஸ்லாமியர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கவும் முயன்று வருகிறார்.

 

சீனாவை மையாக கொண்டு பரவிய கொரோனா வைரஸ் தற்போது குறைந்தபட்சம் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பரவி 30,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதோடு உலகளாவிய ஒருங்கிணைப்பிற்கெதிரான கருத்துக்களை தீவிரப்படுத்தியுள்ளது.

 

அது தொழிற்சாலையின் பொருள் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள், மூலப்பொருட்கள் முதலியவற்றை கண்டங்கள் மற்றும் கடல்களை தாண்டி கொண்டு வந்து சேர்க்கும் சர்வதேச விநியோக முறையில்  குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நிறுவனங்கள் பாதிப்புகள் அதிகமில்லாத நாடுகளில் உள்ள மாற்று தயாரிப்பாளர்களை நாடுகின்றனர்.

 

இந்த நோய்த் தொற்று ஐரோப்பாவின் வலதுசாரிக் கட்சிகளுக்கு திறந்த எல்லைகள் குறித்து எச்சரிக்கை எழுப்ப ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.  இது கோடிக்கணக்கான மக்களை தங்கள் சமூகங்களுக்குள்ளும், தங்கள் வீடுகளுக்குள்ளும் கூட அடைத்து வைத்து, உலகமயமாக்கல் உண்மையில் ஒரு சிறந்த கொள்கை தானா? என்று சிந்திப்பதற்கான சூழலை ஏற்படுத்துகிறது.

 

“இது திறந்த எல்லைகள் பற்றிய அனைத்து அச்சங்களையும் வலுப்படுத்துகிறது” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உலகமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுத்துறை பேராசிரியர் இயன் கோல்டின் கூறினார். 2014ல் இவர் எழுதிய “எ பட்டர்ஃப்ளை டிஃபெக்ட்” (The Butterfly Defect: How Globalization Creates Systemic Risks, and What to Do About It) என்கிற புத்தகத்தில் ஒரு பெருநோய்த்தொற்று தாராளமயமாக்கலுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாமென அனுமானித்திருந்தார்.

 

மேலும் அவர் “வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குறிப்பான சமூகங்களுடன் மட்டுமே பரிவர்த்தனையில் ஈடுபட விரும்புகிற  மறுகருத்துருவாக்கம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

கோல்டினின் மதிப்பீட்டின்படி, கொரோனா வைரஸ் என்பது ஒழுங்குபடுத்தப்படாத, அற்பமாக இணைக்கப்பட்ட உலகமயமாக்கலின் குறைபாடுகளை வெளிப்படுத்தும் மற்றுமொரு சான்று என்கிறார். 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி முதல் காலநிலை மாற்றம் வரை சாதாரண மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அதிகாரிகளை நம்பி பயனில்லை  என்பதை உணர்ந்துள்ளனர்.  அதன் விளைவாக அரசியல்வாதிகள் அனைத்து நியாயமான பிரச்சினைகளுக்கும் தீர்வாக  வர்த்தக பாதுகாப்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட எல்லைகள் போன்ற எளிமையான தீர்வுகளை கையாள்கின்றனர்.

 

இப்போது கொரோனா வைரஸ் பயம் இந்த சூழலை இன்னும் மோசமாக்கியுள்ளது. எந்தவொரு சுவரும் ஒரு தொற்றுநோயையோ, காலநிலை மாற்றத்தையோ அல்லது எதிர்காலத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் வேறு ஏதேனும் பெரிய அச்சுறுத்தலையோ தடுக்கும் அளவிற்கு உயர்ந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, எனவே இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று கோல்டின் கூறினார்.

 

உலகமயமாக்கலின் முடிவு என்பது வெகு தொலைவில் உள்ளது.  நவீன யுகத்திற்கு தேவையான கணிணி முதல் ஆட்டோமொபைல்கள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்யும் வணிக இணைப்புகள் பல்வேறு மக்களையும் வேவ்வேறு செயல்முறையின் ஒருங்கிணைப்பையும் உள்ளடக்கியது. அதை முற்றிலும் உள்ளூர்மயமாக்குவது என்பது இப்போது  கற்பனை செய்ய முடியாததாகவே உள்ளது. கொரோனா  வைரஸ் எல்லைகளை மதிக்கவில்லை அதை எதிர்கொள்வதற்கே உலகமயமாக்கலின் உள்கட்டமைப்பான சர்வதேச ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.

 

எனினும் சர்ஜிக்கல் மாஸ்கின் அதிகப்படியான தேவை, ஐயர்லாந்து முதல் ஜப்பான் வரையுள்ள பள்ளிகூடங்களின் மூடல், விமான நிறுவனங்களின் சேவை நிறுத்தம், வர்த்தக நிகழ்வுகளின் ரத்து, பங்கு சந்தையின்‌ வீழ்ச்சி, பல கோடிக்கணக்கான பெருளாதார இழப்பு போன்ற நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ள அச்சம் உலகமயமாக்கலின் எதிர்கால போக்கை மாற்றக்கூடும்.

 

இதன் வெளிப்படையான பாதிப்பு  வர்த்தகத்தில் ஏற்படும்.  இந்த நோய்த் தொற்று சீனாவை உலக உற்பத்திக்கான ஒற்றை ஆதாரமாக கொண்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது, இது ஏற்கனவே சீன-அமெரிக்க வர்த்தக யுத்தத்தின் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.

 

அமெரிக்க அதிபர் சமீபத்தில் வெளிநாட்டில் பொருட்களை தயாரித்து அதை அமெரிக்காவில் விற்பனை செய்வது என்பது அமெரிக்க தொழிலாளர்கள் வஞ்சிக்கபடுவதற்கு நிகரானது என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது கோடிக்கணக்கான டாலர்களை வரியாகவும் விதித்துள்ளார். இதன் விளைவாக ஆடை உற்பத்தி முதல் தொழில்நுட்பம் வரை அனைத்து நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என நம்பினார்.

 

சீன-அமெரிக்க வர்த்தக யுத்தத்தினால் உறுதியளிக்கப்பட்ட வேலை வாய்புகள் உருவாகவில்லை, மாறாக அமெரிக்காவின் உற்பத்தியில் மந்தநிலை ஏற்பட்டது. சில பன்னாட்டு நிறுவனங்கள் அதன் தொழில் உற்பத்தியை சீனாவிலிருந்து வியட்நாம் , பங்களாதேஷ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு மாற்றிவிட்டன.

 

அண்மையில் டிரம்ப் அரசின் மூத்த வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவர்ரோ வெளியிட்ட “டெத் பை சைனா” Death by China என்கிற புத்தகத்தில் அமெரிக்க அதிகமான தொழிற் உற்பத்தியை அமெரிக்காவிலிருந்து வெளியேற அனுமதித்து விட்டது என்பதை கொரோனா தொற்று நினைவூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். ” அதில் அதிகபடியானது சீனாவில் உள்ளது, அதை நாம் மீட்டெடுக்க வேண்டும்” என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.

 

உற்பத்தி உலகில் பலர் இது போன்ற வாதங்களை அரசியல் உள்நோக்கதுடனான பொருளாதாரக் கொள்கை என நிராகரிக்கின்றனர். என்னவாயினும் அமெரிக்கர்கள் அதிக அளவில் தையல் இயந்திரங்கள் முன்னமர்ந்து ஆடைகள் தைப்பதோ மின்னணு உபகரணங்களை உருவாக்குவதோ தற்சமயம் நிகழ சாத்தியமில்லை. ஆனால் சீன தொழிற்சாலைகளிலிருந்து குறைந்த ஊதிய நாடுகளுக்கு ஏற்படும்  உற்பத்தி மாற்றம் துரிதப்பட வாய்ப்புள்ளது.

 

“வர்த்தகப் போரிலிருந்து மக்கள் சீனாவின் உற்பத்தியை மட்டுமே அதிகம் நம்பி இயங்க முடியாது என்பதை புரிந்து கொண்டுள்ளனர்” என்று  முக்கிய சர்வதேச நிறுவனங்களுக்காக ஆடை, மின்னணு இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் ஹாங்காங்கை மையமாக கொண்ட கிமாவின் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி செபாஸ்டியன் பிரீட்டோ கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து வியட்நாம் மற்றும் பங்களாதேஷில்  கிமாவின் ஆய்வுகள் ஏறக்குறைய 50% அதிகரித்துள்ளன என்கிறார்.

 

இந்த நோய்தொற்று உலகின் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் சீனாவை பெருமளவு நம்பியுள்ளன, அங்கு ஏற்படும் நெருக்கடி கிட்டத்தட்ட உலகின் எல்லா இடங்களிலும் சிக்கலாக மாறும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.  கிடங்குகளிலுள்ள சரக்குகள் தீர்ந்தபின் வருங்காலங்களில் பாகங்களின் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று பரவலாக பொருளாதார வல்லுநர்கள்  கருதுகின்றனர்.

 

ஃபிட்ச் ரேட்டிங்ஸின் (Fitch Ratings) மதிப்பீடுகளின்படி, இந்தியா மற்றும் ஜப்பான் உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள்  பயன்படுத்தும் மின்னணு பாகங்களில்  60 சதவீதத்தை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றனர் . அமெரிக்க உற்பத்தியாளர்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் மின்னணு பாகங்களில் பாதியை சீனாவிலிருந்து பெறுகின்றனர்.

 

உலகின் ஐந்தாவது பெரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய், சீனாவில் தயாரிக்கப்படும் பாகங்களின் பற்றாக்குறையால் கடந்த மாதம் தென் கொரியாவில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியது. ஜப்பானில் உற்பத்தியை நிறுத்தியதின் பின்னணியாக உதிரிபாகங்கள் பற்றாக்குறை  என்று நிசான் தெரிவித்தது. வியட்நாம்  தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள சீன பாகங்களின் பற்றாக்குறையினால் நிண்டென்டோ (Nintendo) தனது பிரபல கேமிங் கன்சோலான “ஸ்விட்சை” அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதத்தை எதிர்கொள்கிறது.

 

இத்தாலியில், கொரோனாவை கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகள் மிலனுக்கு தெற்கே உள்ள தொழில்துறை சமூகங்களை தனிமைப்படுத்தினர். இது உலகளாவிய விநியோகச் சங்கிலியின் சிக்கல்களை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்தாலி, கார் பாகங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதன் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பாதிப்பு ஜெர்மனியிலும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் உணரப்பட வாய்ப்புள்ளது.

 

இதன் மூலம் பொருளாதார வல்லுநர்கள் உலகமயமாக்கல் இயல்பாகவே ஆபத்தானது அல்ல மாறாக முறையான மேற்பார்வையற்ற சந்தையே இத்தகைய சிக்கல்களை உருவாக்கின்றன என்கின்றனர்.

 

உலகளாவிய விநியோக சிக்கலின் முக்கிய காரணியாக தற்போது அதிகபடியாக நடைமுறையிலிருக்கும் உடனடி உற்பத்தி முறையே அறியப்படுகிறது. தேவையான பொருட்களை கிடங்குகளில் சேமித்து வைத்து இக்கட்டான சூழலில் அதை பயன்படுத்துவதற்கு மாறாக நவீன உற்பத்தி முறை தேவையான பொருட்களை உடனுக்குடன் பெறுவதற்காக கடல் மற்றும் ஆகாய வழி போக்குவரத்தை சார்ந்துள்ளது.

 

மோசமான கடன்களை ஈடுசெய்ய போதுமான தொகையை இருப்பு வைக்காமல் வங்கிகள் பெரும்பணத்தை கடனாகக் கொடுக்கின்றன என்பதை நிதி நெருக்கடிகள் நிரூபித்ததைப் போலவே பூகம்பங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பிற ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் உலகளாவிய உற்பத்தி எவ்வாறு இயங்குகிறது என்பதை கொரோனா தொற்று உணர்த்தியுள்ளது.

 

உலகளாவிய பொருளாதாரம் பங்குதாரர்களின் நலன்களை மட்டுமே முதன்மையாக கொண்டு குறுகிய கால இலாபங்களுக்காக நீண்டகால அபாயங்களை கருத்தில் கொள்ளாததன்  நேரடி விளைவே தற்போதைய இடர்பாடுகள்.

 

“பங்குகளை விற்பது கடுமையானது. சந்தை நிலவரங்கள், காலாண்டு அறிக்கைகள், பொருளாதார ஆய்வாளர்களின் அழுத்தங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். குறைந்த லாபமிருந்தாலும் தடையற்ற செயல்பாடுகள் இருக்கும் என்று கூறி பங்குகளை விற்க முடியாது” என்கிறார் ஆக்ஸ்போர்டு நிபுணர் கோல்டின்.

 

அரசியல் வட்டாரத்தில் அந்நிய குடியேற்றத்தை எதிர்பவர்களின் எச்சரிக்கையை நியாபடுத்தும் ஆதாரத்தினை கொரோனா தொற்று அளித்துள்ளது.

 

பன்னெடுங்காலமாக மக்களும் பொருட்களும் எல்லைகளைத் தாண்டி சுதந்திரமாகச் செல்லும்போது பொருளாதாரமும் சமூகமும் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாய் அமையும்  என்கிற மைய நம்பிக்கையால் நிர்வகிக்கப்படுகிற ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன புலம்பெயர்ந்தோரின் வருகை அந்த சிந்தனையை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது. எல்லைகளை முத்திரையிடுவதாக வாக்குறுதிகளுடன் தீவிர வலதுசாரிக் கட்சிகள் மைய நீரோட்ட அரசியலில் உருவெடுத்தள்ளனர்.

 

நவ நாஜி இயக்கத்தினை வேராக கொண்ட ஸ்வீடன் டெமாக்ரட்ஸ், ஹிட்லரின் அரசியல் மொழியை கொண்ட அல்டர்னெட் ஃபார் டெமாக்ரசி, ஃபிரான்ஸின் நேஷ்னல் ஃபரன்ட அனைத்தும் பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. இத்தாலியின் லீக் கட்சியின் தலைவர் மேட்டியோ சால்வினி அந்நிய குடியேற்றத்தை இத்தாலிய இன அழிப்பிற்கான முயற்சியென கூறியதோடு நோய்த் தொற்று காலத்தில் இத்தாலியின் எல்லைகளை மூடாத அரசாங்கத்தையும் கடுமையாக சாடியுள்ளார்.

 

ஒரு சிலர் கொரோனா நோய்த் தொற்றை உலகமயமாக்கலுக்கு முடிவுரை எழுதும் தருணமாக கருதினாலும் வேறு சிலர் நவீன வான்வழி பயணமும் மனித இனம் சுற்றுலாவின் மேல் கொண்டுள்ள கட்டுப்படுத்த முடியாத விருப்பமுமே நோய்த்தொற்று பரவுவதற்கு முக்கிய காரணமென சுட்டிக் காட்டியுள்ளனர்.

 

“உலகமயமாக்கல் என்றால் என்ன என்பதற்கான அறிகுறியே இது” என்கிறார் பிரஸ்ஸல்ஸில் உள்ள  ஆராய்ச்சி நிறுவனமான ப்ரூகலில் பணியாற்றும்  பொருளாதார வல்லுனரும் துணை இயக்குநருமான மரியா டெமர்ட்ஸிஸ். மேலும் அவர்  “மக்கள் எப்போதும் பயணம் செய்ய விரும்புவார்கள்அவர்கள் எப்போதும் வர்த்தகம் செய்ய விரும்புவார்கள்.  சுவர்களைக் கட்டுவது இதற்கு தீர்வாகாது . இன்னும் அதிகமான ஒத்துழைப்பும் தெளிவான தகவல்களுமே இப்போதைய தேவை” என்கிறார்.

 

‘நியூயார்க் டைம்ஸிற்காக பீட்டர் எஸ் கார்மென் எழுதிய கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்ப்பட்டது’

 

தமிழில்: சர்ஜுன்

 

A Global Outbreak is Fueling the Backlash to Globalisation – New York Times – Peter S.Goodman

https://www.nytimes.com/2020/03/05/business/coronavirus-globalism.html – march 5, 2020.

குறிப்பு: கொரோனா – உலகமயமாக்கல் – தேசியவாதம்  குறித்த விவாதத்திற்காக இக்கட்டூரை வெளியிடப்படுகிறது.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW