கொரோனா தடுப்பு ஊரடங்கை அமுல்படுத்த துணை இராணுவ படை தேவையற்றது, வருகையை நிறுத்து! புலம்பெயர் தொழிலாளர் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்து! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை – 30-3-2020.
கொரோனா கொள்ளைநோய் தடுப்பு நடவடிக்கைகளில் சமூக விலக்கம், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதை பெரும்பாலான மக்களும் ஏற்று சுயக்கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் கடைபிடித்து வருகிறார்கள். மேலும் ஊரடங்கு அமல் படுத்தி விட்டு மக்களிடம் அத்தியாவசிய பொருட்களை தேவைகளை அரசு கொண்டு சேர்க்காததால் மக்கள் கூட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை பற்றி அக்கறை கொள்ளாமல் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்த பொழுதே விழித்துக் கொள்ளாத அரசுகள், நெருக்கடி வந்தவுடன் அவசர கோலத்தில் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக மக்கள் மீது அடக்குமுறைகளை சுமத்தி வருகிறார்கள். அதுபோலத்தான் தமிழக அரசின் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக காவல்துறையை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எதிர்கொள்வது போல கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியது. பல்வேறு இடங்களில் வயது வேறுபாடின்றி இளைஞர்களும் பணிக்கு செல்லும் மருத்துவர்களும் பத்திரிகையாளர்களும் உணவு கூடை எடுத்துச்செல்லும் பணியாளர்களும் தாக்கப்பட்டு கடும் விமர்சனம் எழுந்ததால் தமிழக அரசின் உத்தரவின் பேரில் சென்னை காவல் ஆணையர் விசுவநாதனிடம் இருந்து காவல்துறையினர் லத்தியை பயன்படுத்தக்கூடாது, மக்களிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை போல அணுகக்கூடாது, விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி பணியாற்றவேண்டும் என்ற அறிவுறுத்தல் வந்தது. ஆனால் இப்பொழுது அதைவிட ஒரு மோசமான செயலாக ஏப்ரல் முதல் வாரத்தில் ஊரடங்கை அமல்படுத்த துணை இராணுவப் படைகள் தமிழகத்திற்கு வருகை தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றது. தமிழக காவல்துறைக்கே மருத்துவ சிவில் விவகாரங்களில் நடந்து கொள்ள வேண்டிய அறிவுரை தேவைப்பட்ட சூழலில் துணை இராணுவ படைகளுக்கு என்ன வகையான கண்ணோட்டம் இருக்கும்? அது மக்கள் மத்தியில் தேவையற்ற பதட்ட சூழலையும் வன்முறையையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே மத்திய அரசு அனுப்பினாலும், தமிழக அரசு கோரி இருந்தாலும் அது தமிழகத்திற்கு தேவையற்றது எனவே அதன் வருகையை உடனடியாக நிறுத்துமாறு கோருகிறோம். இதற்கு மாற்றாக அனைத்து கட்சிகளையும் இயக்கங்களையும் செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கிய விழிப்புணர்வு சேவை குழுக்களை உருவாக்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் மருத்துவ சேவையையும் கொண்டு செல்ல வேண்டும் எனக் கோருகிறோம்.
இரண்டாவது இன்றைக்கு இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டு சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ததப் பட்டிருக்கிறது. இதற்கு காரணம் மத்திய மாநில அரசுகளின் தவறான உத்தரவுகளும் எளிய தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றி அக்கறையற்ற, மக்கள் விரோத, மேட்டுக்குடி சார்ந்த திட்டமிடல்களும் தான். இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் நகரங்களில் சாரைசாரையாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். கொள்ளை நோய்க்கு முன்பாகவே கொள்ளை அரசின் பட்டினிச் சாவுக்கு 22 பேர் தங்களைப் பலி கொடுத்துள்ளார்கள். தெருவில் அலையவிட்ட மோடி எவ்வித வெட்க உணர்வும் இன்றி அம்மக்களிடம் பொய் மன்னிப்பு கோருகிறார். அடிமாட்டு விலைக்கு பட்டியில் அடைத்து வேலை வாங்கிய பெருமுதலைக் கும்பல் ஏழை மக்களை தீப்பற்றிய பாதங்களோடு நெடுஞ்சாலைகளில் நடக்க விட்டிருக்கிறது. தன் பங்கிற்கு கோயம்பேட்டிலிருந்து கிராமத்திற்கு கொரானாவை ஏற்றிவிட்ட கிராமத்து விவசாயி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னை செண்ட்ரலிலும் கோவையிலும் சாலையை மறித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இருப்பிடத்துக்கு உணவு என வாயில் படி அளந்து கொண்டிருக்கிறார், ஈரானில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவ தொழிலாளர்களை காக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மத்திய மாநில அரசுகளே!திக்குத் தெரியாமல் நடந்த ஏழைகளின் பாதங்கள் மட்டும் சுட்டு இருக்காது. தலைமுறைக்கும் அவர்கள் நெஞ்சில் அந்த வடு இருக்கும். எச்சரிக்கையாய் நடந்துகொள்ளுங்கள்! புலம்பெயர் தொழிலாளர் வாழ்வாதாரத்தை, இருப்பிடத்தை, கிராமத்துக்கு செல்வதற்கான போக்குவரத்தை, உணவை, நீங்கள் ஒதுக்கியதாக சொன்ன பணத்தை உத்தரவாதப் படுத்துங்கள். சுயமரியாதையோடு நடத்துங்கள். டெல்லியின் அதிகார பீடத்திலிருந்து கிராமத்தை நோக்கி நடந்து செல்லும் அவனது புறமுதுகை பார்க்கிறீர்கள். அவலட்சணமாக இல்லையா? உங்கள் ஆடம்பரத்தை நினைத்துப் பாருங்கள். டிரம்பும் மோடியும் ஏழைகளை மறைத்து சுவர் எழுப்பி கைகுலுக்கியதை நினைத்துப் பாருங்கள். ஆபாசமாக இல்லையா? இது மக்கள் மீது அக்கறையற்ற உங்களின் திட்டமிடலை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, வக்கற்ற அரசின் கொள்கைகளையும் அம்பலப்படுத்திதான் அவன் பாதை நீண்டு செல்கிறது.
*ஊரடங்கு அமல் படுத்த தமிழகத்திற்கு தேவையற்ற துணை ராணுவ படை வருகையை நிறுத்து!
*புலம்பெயர் தொழிலாளர் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்து!
தோழமையுடன்,
பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
துரைசிங்கவேல், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி
மருதுபாண்டியன், சோசலிச மையம்
குணாளன், சி.பி.ஐ. எம்.எல்
அரங்க குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
சித்தானந்தம் , சி.பி.ஐ.(எம் – எல்)
தமிழ்ச்செல்வன், சி.பி.ஐ. (எம் – எல்) ரெட் ஸ்டார்
டேவிட் செல்லப்பா, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி
பாரி , தமிழ்த்தேச இறையான்மை
பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி
பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
மாந்தநேயன், தொழிலாளர் போராட்ட இயக்கம்
பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி
மணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி
செல்வமணியன், தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி
தமிழரசன்,தமிழ்த் தேச குடியரசு இயக்கம்,
பிரபாகரன் சக்திவேல், தமிழ்த்தேசிய பாதுகாப்பு இயக்கம்
தமிழ்மகன், தமிழ்த்தேச மக்கள் கட்சி
தங்க குமரவேல், தமிழக மக்கள் விடுதலை இயக்கம்,
வழக்கறிஞர் கணேசன், மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி
அருள்மொழி, மக்கள் விடுதலை முன்னணி
தொடர்பு எண் – 70100 84440