இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் உத்திகள்…
கொரோனா வைரஸ் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவிவருவதாகவும் சமூக தொற்று நிலையை எட்டிவிடாமல் இருப்பதற்காக மக்கள் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.இன்று எட்டுமணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி,அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்கிறார்.
இந்த சூழ்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசும் மாநில அரசும் அலட்சியமாக செயல்படுகிறதா? தற்போது சமுதாய தொற்று உறுதியாகவில்லை அதே வேளையில் மின்னல் வேகத்தில் பரவுகிறது என்ற தமிழக அமைச்சரின் வாதத்தை ஏற்றுக்கொள்வதாக வைத்துக் கொண்டாலும்,தொற்றுக்கு எதிரான அரசின் (ஊரடங்கின் மூலமாக)சமுதாய விலக்கு நடவடிக்கைகள் மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றுமா?என்ற இரு முக்கிய கேள்விகள் நம்முன்னே எழுகிறது.
“இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிற, பொது சுகாதார அமைப்பின் (கொரோனா தடுப்பு)உத்திகள்:ஒரு கணிதவியல் ஆய்வு முறை” என்ற தலைப்பில் கடந்த பிப்ரபவி 27 ஆம் தேதியன்று,இந்திய மருத்துவ ஆய்வுக்குழுவானது தனது மருத்தவ ஆய்விதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.
இந்த கட்டுரையை இந்திய மருத்துவ ஆய்வுக்குழுவின் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆய்வுக்குழுவின் தலைவர் பலராம் பார்கவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கருத்துக்கள் மேற்கூறிய ஆய்வுக் கட்டுரையின் முடிவுகளை ஒத்திருக்கின்றன.மேலும் இன்று நாட்டுக்கு மக்களிடம் பேசிய பிரதமரும் கிட்டத்தட்ட இந்த கட்டுரையின் சாரம்சத்தை பேசுகிறார்.இந்த ஆய்வுக் கட்டுரையானது மேலே நாம் எழுப்பிய இரு கேள்விகளுக்கு கணிதவியல் ஆய்வின் விடை காண முயல்கிறது.அதே சமயம் நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற ஆய்வாகவும் இருப்பதால் இக்கட்டுரைமுன்வைக்கின்ற வாதங்களை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.
கொரோனா தொற்றை இந்தியா தவிர்த்திருக்க முடியுமா?
சீனாவிலிருந்து உலகெங்கிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது.சீனாவுடன் தொடர்புடைய நாடுகள் மூலமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவியது.உலகின் அனைத்து நாடுகளும் தங்களது விமான நிலையங்களில் சுவாசப் பிரச்சனை போன்ற கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வருகிற பயணிகளை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டது.
இந்தியா தனது விமானப் போக்குவரத்து மூலமாக உலகத்துடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளது.அவ்வகையில் வெளிநாட்டிலிருந்து கொரோனா தொற்று வருவதற்கான வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியா 17 ஆவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று வருவதற்கான அதிக சாத்தியக் கூறுள்ள நகரங்களின் பட்டியலின் முதலிடத்தில் தில்லியும் பின்னர் மும்பை,கொல்கத்தா,பெங்களூரு,சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் உள்ளன.(இந்த நகரங்கள் மட்டுமே ஆய்வாளர்களால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது)
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு
- ஜனவரி 15 ஆம் தேதிக்கு பின்னர்,சீனாவின் யூகான் மாகாணத்திலிருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு (கொரோனா)கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- ஜனவரி 15 க்கு முன்பாக சீனாவிலிருந்து வந்த பயணிகள், 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.கொரோனா அறிகுறி வந்தால் மட்டும் மருத்துவமனைக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- சீனா,தென்கொரியா,ஹாங்காங்,இத்தாலி,ஈரான்,தாய்லாந்து,ஜப்பான்,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிருந்து இந்தியாவிற்கு(21 விமான நிலையங்களில்) வந்தவர்கள் அனைவருக்கும் வெப்ப ஆய்வுக் கருவி பரிசோதனைக்கு (THERMAL SCREENING)உட்படுத்தப்பட்டார்கள். இவ்வாறு வருபவர்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தாமாகவே கொரோனா பரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டார்கள்.
- இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக பிப்ரவரி -29 ஆம் தேதிவரை இந்தியாவில் மூன்று நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தில்லி சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி,ஜனவரி15 க்கும் பிப்ரவரி 13 இடையிலே 5,700 பயணிகள் சீனாவிலிருந்தும் இதர கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்குள் வந்துள்ளனர்.அதில் 17 நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்கள். அறிகுறி தென்படாத 885 பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை!
கடந்த அக்டோபர் -2018 முதல் மார்ச் 2019 வரையிலும் சீனாவிலிருந்து சுமார் 3565 பேர் இந்தியாவிற்குள் வந்துள்ளனர்.கொரோனா தொற்றுக்கு பிறகு,சமீபகால பயண கட்டுப்பாடுகளால் இந்த எண்ணிக்கை கண்டிப்பாக குறைந்திருக்கும்.ஆனால்,அந்த புள்ளிவிவரங்கள் நமக்கு தெரியவில்லை.
- கொரோனா தொற்று பாதித்த ஒருவருக்கு அறிகுறி தென்படுவதற்கு மூன்று நாட்கள் ஆகும் எனவும் அறிகுறி காலமும் தோரயமாக மூன்று நாட்கள் இருக்கும் எனவும் அறியமுடிகிறது.
- மேலும்,கொரோனா அறிகுறி தெரியாதவர்களை விமான நிலையங்களிலேயே விரைவாக கண்டறிவதற்கு நம்மிடையே சிறந்த கருவிகளோ முறைகளோ இல்லை.வெப்பக் கருவி கொண்டு கண்டறிய முற்பட்டாலும் சுமார் 46 விழுக்காடு அளவிற்கே அதன் உறுதித்தன்மை வீதம் உள்ளது என சில ஆய்வுகள் கூறுகின்றன.
மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிற கொரோனா வைரசை கண்டறிவதில் உள்ள நடைமுறை சிக்கலின் அடிப்படையில் வைரஸ் பரவலை விமான நிலையங்களிலேயே கட்டுத்தப்படுத்த இயலாது என்ற ஆய்வு முடிவுக்கு வருகிறது.மேலும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டவர்களுக்கு நோய் தொற்று உறுதியாக,அவர்கள் அவ்வாறு இல்லாமல் போனாலும் பரவலை தவிர்க்க இயலாது எனக் கூறாமல் கூறுகிறது.
இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையிலும் கொரோனா தொற்றை தொடக்க நிலையில் கண்டறிவதில் உள்ள நடைமுறை சிக்கலின் அடிப்படையிலும் மேலும் இத்தொற்று சமுதாயத்திற்கு பரவிடாமல் இருப்பதற்கு,தனிமைப்படுத்தலை முக்கிய உக்தியாக கடைபிடிக்கப்படவேண்டும் இந்த ஆய்வு முடிவு அறிவுறுத்துகிறது.
சமுதாய விலக்கு மூலமாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட முடியுமா?
தற்போது இந்தியாவில் கொரோனா தோற்று 519 நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது 10 பேர் மரணமடைந்துள்ளார்கள். இந்தியாவெங்கும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்துவதாக இன்று பிரதமர் அறிவிக்கின்றார்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் குறித்து ஆய்வு வருமாறு,
ஊரடங்கின் மூலமாக அரசின் தலையீடு:
கொரோனா தொற்று அறிகுறி தெரியத்தொடங்குகிற முதல் மூன்று நாட்களில் ,தொற்று உறுதியானவர்களில் 50 விழுக்காட்டு மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் சுகாதார மையங்களுக்கு ஏற்படுகிற நெருக்கடிகளை தவிர்த்திடமுடியும்.
சுகாதார அமைப்பிற்கு ஏற்படவுள்ள நெருக்கடியை சுமார் 62 விழுக்காட்டிற்கு குறைக்க முடியும்.
ஒருவேளை அரசின் சமுதாய விலக்கு எனும் தலையீடு மேற்கொள்ளப்படவில்லை என்றால்,தொற்றின் எண்ணிக்கை குறைவான நேரத்தில் அதிகரித்திட நேரிடும்கீழே உள்ள படம் இதை காட்டுகிறது.
முடிவு
- கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்து அறிகுறி தெரியாமல் இந்தியாவிற்குள் வந்தவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக கண்காணித்து,அவர்கள் தனிமைப்பட்டிருப்பதை உறுதி செய்வது சுகாதார அமைப்பிற்கு கடினமான பணி என்கிறது இந்த ஆய்வு.ஆகவே தொற்று தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வருகிறது.
- அதேநேரம் கொரோனா பரவல் சமுதாயத் தொற்றாக மாறிடாமல் இருப்பதற்கு அதன் தொடர் சங்கிலியை உடைப்பதற்கு சமுதாய விலக்கு எனும் உக்தியை கடைபிடிக்கக் கோருகிறது.
என ஆலோசனை கூறுகிறது. தொற்று ஏற்பட்டவர்களில் 5 விழுக்காடு மக்களுக்கு அவசர சிகிச்சை(ICU) உதவி தேவைப்படலாம் என்றும் கூறுகிறது. மேலும் பெரும் அவசர நிலை வெடிப்பதற்கு முன்பாக கீழ்வரும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கோருகிறது.
- சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பும் பயிற்சியும் உறுதி செய்யப்பட வேண்டும்
- போதுமான அவசரகால உயிர்காக்கும் சாதனங்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
- கொரோனா பாதிப்புள்ள நபர்களுக்கு தனியான வார்டுகள் படுக்கைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- தனிமைப்பபடுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அலைபேசி மூலமாக தன்னார்வக் குழுக்களை உருவாக்கலாம்.
- அறிகுறி தெரியாத மக்களையும் கண்டறிந்து அவர்களின் தொடர் சங்கிலித் தொடர்பையும் கண்டுபிடிக்கவேண்டும்.
-அருண் நெடுஞ்சழியன்
ஆதாரம்:
Prudent public health intervention strategies to control the coronavirus disease 2019 transmission in India: A mathematical model-based approach