கொரோனா கொள்ளை நோயிலிருந்தும் பிணம் திண்ணும் இலாப வெறி பேயரசுகளிடமிருந்தும் மக்களை காப்போம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின்  கூட்டறிக்கை

23 Mar 2020

கொரோனாவுக்கு எதிரான உலகு தழுவியப் போராட்டத்தில் வெல்ல வேண்டும் என்றால், இலாபவெறி என்னும் பிசாசை முதலாளித்துவ அரசுகள் கைவிடாமல் மக்களை காக்கவே முடியாது. கொள்ளை நோய் பரவுவதைக்கூட உலகத்திடம் சொல்லாமல், கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து காப்புரிமைப் பெற்று அதை வணிகமாக்குவதிலேயே அவை குறியாய் இருக்கின்றன. அடுத்தடுத்து சார்ஸ், எபோலா, கொரோனா என கொள்ளை நோய்கள் உலகை ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆண்டுக்கொரு வைரஸும் தொற்றும் பரவிக்கொண்டிருக்கிறது. வர்த்தகம் மட்டும் உலகமயம் ஆகவில்லை, வர்த்தகப் பாதைகளின் வழியாக வானூர்திகளின் வழியாக கொள்ளை நோயும், தொற்றும் உலகமயமாகி கொண்டிருக்கிறது . வர்த்தகத்தில் லாபம் பார்த்தவர்கள் நோயிலும் லாபம் பார்க்க ஹாலிவுட் வில்லன்களாக புதிய அவதாரம் எடுக்கிறார்கள். சீனாவும், அமெரிக்கவும் மாறிமாறி குற்றஞ்சாட்டிக் கொள்கின்றன. குற்றச்சாட்டினால் யாருக்கு லாபம்? செத்து மடிவது மக்கள் தானே?

ட்ரம்பும், மோடியும் கூடி குலாவிக் கொண்டிருந்தபோது பங்குச் சந்தையைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தபோது ஆர்.எஸ் எஸ். பயங்கரவாதிகளால்  டெல்லியில் இஸ்லாமிய மக்கள் மட்டும் படுகொலை செய்யப்படவில்லை. அதைவிட ஒர் கொள்ளை பேரழிவு வருவதை இரண்டு கோமாளிகளும் வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்தார்கள். பொருளாதார அறிஞர் இரகுராம்ராஜனும், மருத்துவ அறிஞர் இலட்சுமிநாராயணனும் சொன்னதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் மோடிக்கு ஒலித்தது.  இன்றோ இந்தியாவில் மூன்றாவது கட்டத்தில் நோய் தொற்றுகின்ற, வெகுமக்களை பற்றி பிடிக்கின்ற சூழலில் இருக்கிறோம். பரிசோதனை செய்வதற்கும் கூட போதுமான கருவிகளும், மருத்துவக் கட்டமைப்பும் நம்மிடமில்லை.

போதுமான நிதியை ஒதுக்காமல் பொது மருத்துவ சேவைக் கட்டமைப்பை உருவாக்காமல் தனியார்மயமாக்கியதன் விளைவை வரக்கூடிய போரழிவின் ஊடாக நாம் தெரிந்து கொள்ள போகிறோம். நல்ல மருத்துவக் கட்டமைப்பை கொண்டிருந்த சீனாவும் தென்கொரியாவும், க்யூபாவும்  முன்னுதாரம் மிக்க வகையில் கொள்ளை நோயை எதிர்க்கொண்டிருக்கின்றன. வெறும் ஆறு கோடி மக்கள்தொகை கொண்ட கொரியா மூன்று லட்சம் பேருக்கு பரிசோதனை செய்திருக்கின்ற நிலையில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாம் இதுவரை வெறும் 20,000 பேருக்குதான் பரிசோதனை செய்திருக்கிறோம். அதிலும் இப்போது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து ஒருவர் பரிசோதனை செய்துக் கொள்ள ரூபாய் 4500 கொள்ளை! இது ஒர் அவலத்தின்  சான்று.

பரிசோதித்து அறியும் முன்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற தோற்றத்துடன் மக்களுக்கு உபதேசம் செய்கிறார் மோடி. கடலில் முழ்கியிருக்கின்ற பனி மலையின் முகடை பார்த்து வருகின்ற பேராபத்தை அறியாமல், சில 100 எண்ணிக்கையை கணக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி முகட்டை பார்த்து சிரித்த இத்தாலியிலும், அமெரிக்காவிலும்தான் கொள்ளை நோய் கொரோனா இன்று ஊழித் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. சரியான மருத்துவக் கட்டமைப்பும், கொள்கையும் இல்லாமல் வெறுமனே ’மக்களை தனிமைபடுத்திக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு உற்பத்தி உள்ளிட்ட அனைத்தையும் இழுத்து மூடியிருக்கிறார்கள். பிற நாடுகளும், ஒரு மாநில முதல்வர் பிணராயி விஜயனும் மேற்கொண்ட சமூகப் பாதுக்காப்பு, வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகள்கூட மேற்கொள்ளப்படவில்லை. வெறும் கையில் முழம் போடும் பிரதமர் நமக்கு எதற்கு? ஊருக்கு உபதேசம் வேண்டாம். கொள்ளை நோயை எதிர் கொள்ள விரிவான இலவச பரிசோதணையும் பொது மருத்துவ கட்டமைப்பும் வேண்டும். எளிய மக்களை பாதுக்காக்க நிதி ஒதுக்கீடு வேண்டும்

மக்களும் விழிப்புடன் இருந்து சமூக விலக்கத்தைப் பேணி நோய்ப் பரவலைத் தடுக்க வேண்டும். பின்வரும் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கு முன் வைக்கிறோம்.

அமெரிக்காவே!

கொரோனாவால் கடும்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஈரான் மீது  விதித்திருக்கும் பொருளாதார தடையை உடனடியாக நீக்கு!

மத்திய, மாநில அரசுகளே!

  • சமூக விலக்கலும் மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அவசரத் தேவையும்  வெற்றியடைய வேண்டும் என்றால் அமைப்புச்சாரா துறைகளைச் சேர்ந்த குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாத நிவாரணத் தொகையாக ரூ 15,000/- வழங்கிடு!
  • சோப், கிருமி நாசினி ஆகியவற்றை வீடு வீடாகச் சென்று இலவசமாக வழங்கிடு!
  • அனைத்து தனியார் நிறுவனங்களையும் தமது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு ஆணையிடு!
  • கொரோனா சோதனை மற்றும் சிகிச்சையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் கட்டுப்பாட்டில் எடுத்து ஈடுபடுத்து!
  • கொரோனா சோதனை மற்றும் சிகிச்சையை இலவசமாக வழங்கிடு!
  • மக்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கிடு!
  • தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் வளங்களையும் முழுமையாக பேரிடர் மீட்பில் ஈடுபடுத்து!
  • கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையில் எந்த அளவுக்கு பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கடைபிடிக்க முடியும் என்பதையும் ஆய்ந்திடு!

தமிழக மக்களே!

  • கொரோனா நோய்ப் பரவாமல் தடுப்பதற்கான சமூக விலக்கம், தூய்மைப் பேணல் ஆகியவற்றை ஊக்கமுடன் செய்திடுவோம்!
  • அரசு மெத்தனமாக செயலாற்றி எப்போதும்போல மக்களைக் கைவிடுமானால் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட அணியமாவோம்!

 

தோழமையுடன்,

பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

துரைசிங்கவேல், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி

மருதுபாண்டியன், சோசலிச மையம்

குணாளன், சி.பி.ஐ. எம்.எல்

அரங்க குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

சித்தானந்தம் , சி.பி.ஐ.(எம் – எல்)

தமிழ்ச்செல்வன்,  சி.பி.ஐ. (எம் – எல்) ரெட் ஸ்டார்

டேவிட் செல்லப்பா, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி

பாரி , தமிழ்த்தேச இறையான்மை

தங்க குமரவேல், தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

சிதம்பரநாதன், கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ. மக்கள் விடுதலை

பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி

பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

ஏ.எஸ்.குமார், கம்யூனிஸ்ட் கட்சி

மாந்தநேயன், தொழிலாளர் போராட்ட இயக்கம்

பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி

மணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி

செல்வமணியன், தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி

சாமிநாதன், கம்யூனிச புரட்சியாளர் ஒருங்கிணைப்பு குழு

பிரபாகரன் சக்திவேல், தமிழ்த்தேசிய பாதுகாப்பு இயக்கம்

தமிழ்மகன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

தங்க குமரவேல், தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

வழக்கறிஞர் கணேசன், மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி

அருள்மொழி, மக்கள் விடுதலை முன்னணி

 

தொடர்பு எண் – 70100 84440

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW