யெஸ் வங்கி திவால்: வங்கித்துறை ஊழலும் சூறையாடும் முதலாளித்துவமும்
இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் ரூ. 50,000 வரையே பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனையும் கடும் நெருக்கடியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியானது, யெஸ் வங்கியை தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.யெஸ் வங்கியின் 49 விழுக்காட்டை ஸ்டேட் வங்கி வாங்கியுள்ளது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிக்கலுக்கு காங்கரஸ் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்கிறார்.பிரதமரோ வழக்கம் போல நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது என பேசுவதை நிறுத்தியபாடில்லை!
மோசமான நிர்வாக மேலாண்மைதான் காரணமா?
யெஸ் வங்கியின் வீழ்ச்சிக்கு,கார்ப்பரேட் கடன் குறித்த அதன் கொள்கையும்,கடன் நிர்வாக மேலாண்மையும் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை மறுப்பதிற்கில்லை. அதேநேரம் சிக்கல்களுக்கான அனைத்து காரணங்களையும் யெஸ் வங்கி நிறுவனர்களில் ஒருவரும், வங்கியின் முன்னாள் தலைவருமான ராணாகபூர் என்ற ஒற்றை மனிதர் மீது சுமத்துகிறபோது சிக்கலின் முழு பரிமாணத்தையும் நாம் காண இயலாமல் போய்விடுகிற வாய்ப்புள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையும் இதை நோக்கியே நகர்த்தப்படுகிறது.ஏனெனில் நாட்டின் பொருளாதார அமைப்பு சிக்கலை தனி நபர் சிக்கலாக மாற்றுவது எளிதானது!
காங்கிரஸ் ஆட்சியாளர்கள்தான் காரணமா?
வாராக் கடன்களால்,யெஸ் வங்கி அவதிப்பட காரணம், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் வழங்கப்பட்ட கடன்கள்தான் காரணம் என செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலடி தருகிற வரையில், யெஸ் வங்கியின் வாராக் கடன் நிலுவையானது,பாஜக ஆட்சி காலத்தில்தான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் டிவிட்டர் பதிவிடுகிறார்.
மோடி ஆட்சிக்கு வருகிறபோது சுமார் 55,000 கோடியாக இருந்த யெஸ் வங்கியின் வாராக் கடன் தற்போது தற்போது சுமார் 2,41,000 கோடியாக உயர்ந்துள்ளது என பதிலளித்துள்ளார்.
கடந்த 2018 ,நவம்பரில் செல்லாக்காசு அறிவிப்பை மோடி மேற்கொண்டபோது,இந்திய வங்கித்துறையில் இருந்து இந்த அறிவிப்பை ஆரவாரத்துடன் வரவேற்ற முதல் நபர்,யெஸ் வங்கியின் ராணாகபூர் தான்.
தற்போது பாஜக அரசின் நிதிக் கொள்கையை கடுமையாக விமர்சிக்கின்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்,அவரது கட்சியின் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்தும் அதற்கான மீட்பு முயற்சிகள் குறித்தும் கள்ள மௌனம் காத்து வருவதை காண்கிறோம்.இதற்கான காரணம் எளிமையானது,இந்தியாவில் எந்த கட்சி ஆளும் கட்சியாக வந்தாலும்,வங்கித்துறைக்கும் சூறையாடும் முதலாளிகளுக்குமான உறவில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.இரு கட்சிகளுமே,உலகமயம் ,தனியார்மயம்,தாராளமய பொருளியல் கொள்கையை ஆராதிக்கின்ற கட்சிகள்.இந்திய சூறையாடும் முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன்களை காத்து பேணுகிற கட்சிகள். வங்கி ஊழல்கள் வெளிப்பட பிறகு, இவ்விரு கட்சிகளும் மாறி மாறி கடுமையாக தாக்கிக் கொண்டு தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்வதும் தற்போது வாடிக்கையாகிவிட்டது.
வங்கித்துறை ஊழலும் சூறையாடும் முதலாளித்துவமும்
அரசுக்கும் ஆளும் வர்க்கமாக உள்ள இந்திய சூறையாடும் முதலாளித்துவத்திற்குமான உறவின் விளைபொருளே வாராக் கடன் சிக்கலும் வங்கி திவால் சிக்கலுக்கும் காரணம் என்ற அடிப்படை முரண்பாட்டில் இருந்தே இந்த சிக்கலின் அனைத்து பரிமாணங்களையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
“யெஸ் வங்கியின் விவகாரம் என்பது நேற்றோ இன்றோ நடந்தது இல்லை. வங்கியின் செயல்பாடுகளை 2017-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியானது கண்காணித்து வருகிறது. ரிஸ்கான கடன் வழங்குதல் மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக அந்த வங்கியானது சிக்கலுக்குள்ளானது. இதைக் கண்டறிந்து வங்கியின் நிர்வாகத்தை மாற்றியமைக்கும் படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.” என பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூறுகிற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,யெஸ் வங்கியின் செயல்பாடுகளில் இருந்து ஆளும்கட்சியையும் அரசையும் கவனமாக விலக்கியும் தனித்தும் காட்டிக் கொள்கிறார்.
வங்கி மேற்கொள்கிற “ரிஸ்க்கான கடன்” முடிவில் இருந்து அரசியல் உறவை அறவே பிரித்துவிட்டார்.அதாவது வங்கி,ஆளும் கட்சி மற்றும் சூறையாடும் முதலாளிகள் ஆகியவற்றிற்கு இடையிலான பொருளாதார உறவை இங்கு நிதி அமைச்சர் மூடி மறைத்துவிடுகிறார்.வங்கிக்கும் முதலாளித்துவ வர்க்க்கதிற்கு இடையிலான பொருளாதார உறவை,ஆளும் கட்சி அல்லது ஆளும் அரசு என்ற அரசியல் உறவே ஓட்ட வைக்கிற பசையாக இருக்கிற போது,நிதி அமைச்சரின் பேச்சுக்களுக்கு நடைமுறையில் எந்த உண்மையும் இல்லாமல் போகிறது.உதாரணம் சிலவற்றைப் பார்ப்போம்.
- .யெஸ் வங்கியின் திவால் சிக்கலில் இருந்து தள்ளி நிற்கிற பாஜக, ,யெஸ் வங்கியில் அதிக கடன் பெற்ற கார்பரேட்களான அனில் அம்பானியிடம் இருந்தோ யெஸ்ஸல் குழுமத்திடமிருந்து தள்ளி நிற்கவில்லையே? மோடியின் உற்ற நண்பர்கள் என காங்கிரசால் விமர்சிக்கப்படுகிற அனில் அம்பானி குழுமமும் சரத் சந்த்ராவின் யெஸ்ஸல் குழுமமே யெஸ் வங்கியின் வாராக் கடன் தொகையில் சிக்க வைத்த இரு முக்கிய தொழிலதிபர்களாக உள்ளனர்.இதே அனில் அம்பானிக்காக பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெச்ஏஎல்(பொதுத்துறை ) நிறுவனத்துக்கு வழங்க இருந்த ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மோடி அரசு கைமாற்றிவிட்டது.அதுவும் அரசு முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக்கி ஒப்பந்தம் போட்டது.
- இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் (Letter of Undertaking)போலி உத்தரவாதக் கடிதம் மூலமாக மட்டும் சுமார் ரூ.11,300 கோடியை நீரவ் மோதி மோசடி செய்தது.
- பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு(PMC) வங்கியின் ரூ. 4355 கோடி மோசடியில் ஈடுபட்டது.யெஸ் வங்கி போலவே, பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கியும்,வாராக் கடன் கணக்கை மறைத்தே ரிசர்வ் வங்கியை ஏமாற்றியது.வங்கி அல்லாது நிதி நிறுவனத்திற்கு யெஸ் வங்கி கடன் கொடுத்தது போல பி.எம்.சி வங்கியும் எச்.டி.ஐ.எல் நிறுவனத்திற்கு தாராளமாக கடன் கொடுத்தது. பின்னர் பி.எம்.சி வங்கியின் தலைவர் வர்யம் சிங், நிர்வாக இயக்குமர் ஜாய் தாமஸ் ஆகியோருக்கும் எச்.டி.ஐ.எல் நிறுவனத்திற்குமான ஊழல் உடன்படிக்கை அம்பலமானது.ஆனால் சாமானிய குடிமக்களோ தங்களது சேமிப்பை இழந்துவிட்டு ரோட்டில் நிற்கின்றனர்..
- ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயலாளர் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரும் சேர்ந்து வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் வழங்கிய ஊழலை இங்கு மறந்துவிட முடியுமா?
உலகமய சகாப்தத்தில் வங்கித் துறையின் வாராக் கடன் சிக்கல்கள்
உலகமய சகாப்தமே இந்தியாவில் வங்கி ஊழல்களுக்கும் சூறையாடும் முதலாளித்துவ கும்பலின் அசுர வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டது. இந்திய வங்கிகளைப் பொறுத்தவரை நவதாரளமயமாக்கல் கட்டத்தில்,தனியார் வங்கிகள் திறக்க ஊக்கமளிக்கப்பட்டது.90 களில் HDFC வங்கியின் தொடக்கம் முதல் இன்று வரை பல பகாசுர வங்கி நிறுவனங்கள்,சிறு வங்கிகளை முழுங்கி பெரும் நிதிமூலதன நிறுவனங்களாக வளர்ச்சிப் பெற்றுள்ளன.
- கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய பொதுத்துறை வங்கிகள், இந்தியப் பெருமுதலாளிகளுக்கு வழங்கிய கடன்கள் அதிவேகத்தில் உயர்ந்துள்ளது.குறிப்பாக 2008 ஆம் ஆண்டு கால பொருளாதார மந்த கட்டத்திற்கு பின்பாக இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த, முதலீடுகளை உயர்த்த இந்த கடன்கள் அவசியமாக அரசு கருதியது.
- முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில்,குறிப்பாக முதலாளித்துவத்தின் ஏகபோக கட்டமான ஏகாதிபத்திய கட்டத்தில்,சிறு வணிகர்களை பெரும் ஏகபோக முதலாளியம் விழுங்குகிறது.வளர்ந்த மேற்குலக நாடுகளின்,1900 களில் இவ்வாறாக சிறு வணிகர்கள்,வளர்ந்த ஏக போகங்களால் நசுக்கப்பட்டனர்.நாம் மேற்குறிப்பிட்டபடி,இந்தியாவில் அது கடந்த இருபது ஆண்டுகளாக நடைமுறைக்கு வருகிறது.குறிப்பாக இந்தியாவின் தொலைதொடர்பு துறை,எண்ணெய் எரிவாவு,மின்சார உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சூறையாடும் முதலாளிகள் போட்டி போட்டுக் கொண்டு முதலீட்டையும் லாபத்தையும் பெருக்க முனைகின்றனர்.
- சாமானிய மக்கள் வங்கிகளில் விவசாயக் கடன் பெறுவது,கல்விக் கடன் பெறுவது, பெரும் சவாலாக இருக்கிற நிலையில்,இந்தியப் பெரு முதலாளிகளுக்கு மட்டும் எந்த வரைமுறையும் கண்காணிப்பும் இன்றி கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டது.கடன் கொடுக்கப்பட்டபின்னர் அந்த கடன் சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா,வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியுள்ளது என்பதை யார் கண்காணிக்கிறார்கள்?விடை இல்லை!லட்சம் கோடிகளாக இந்தியப் பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட இந்தக் கடன் மீண்டும் வட்டி வடிவத்திலோ,முதல் வடிவத்திலோ,இருப்பாக வங்கிகளுக்கு மீண்டும் வரவில்லை.
- இந்திய வங்கிகளின் வாரக்கடன் மதிப்பானது,இலங்கை,ஓமன் போன்ற நாடுகளின் ஒட்டுமொத்த மொத்த உற்பத்திக்கு சமமாக உள்ளது.
- மக்களின் வரிப்பணத்தை வங்கிகளின் ஊடாக இந்தியப் பெரு முதலாளிகளுக்கு வழங்கிய கடனை வசூலித்து வங்கி நிலையை சீராக்குவதற்கு மாறாக அம்பானி,அதானியிடம் கடனை வசூலிப்பதற்கு பதிலாக நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் வைப்புத் தொகையையுமே ஆளும் அரசுகள் சூறையாடுகின்றன.
வங்கி இணைப்பு,வங்கிகளுக்கு மறு மூலதனங்களை வழங்குவது போன்ற நடவடிக்கையால் வாராக் கடன் சிக்கலையும் வங்கி ஊழல்களை தற்காலிகமாக மூடி மறைக்கின்ற ஆளும் அரசு,வங்கி திவாலான பின்பு,காலம் கடந்து திவாலான வங்கிகளை பொதுத்துறை வங்கிகளை கொண்டே இறுதியின் இறுதியாக மீட்கிறது.
உலகமய கட்டத்தில்,வங்கிகள் என்பது மக்களின் நிதி சேமிப்பிற்காக தொடங்கப்பட்ட சேவை நிறுவனம் அல்ல,அது தொழில்நிறுவனங்களின் லாபத்தை அதிகரித்திட,சமூகத்தின் நிதி மூலதனத்தை கட்டுப்படுத்துகிற,முதலாளியப் பொருளாதாரத்தை சமூகமயப்படுத்த முனைகிற,சூறையாடும் முதலாளித்துவ நலனுக்கு சேவை செய்கிற நிதிமூலதன நிறுவனம் என்பதை ஒவ்வொரு வங்கிதுறை ஊழல்களும் எதார்த்தில் வெளிப்படுத்துகின்றன.
- அருண் நெடுஞ்சழியன்