தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கலவரம் – இந்துத்துவப் பாசிச பயங்கரம்! – மத்திய பாசக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – ஊடகச் செய்தி
02-03-2020, திங்கள், மாலை 4:00 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை
வணக்கம். தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான மத்திய பாசக அரசைக் கண்டித்து இன்று மாலை 4 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில் பல்வேறு சனநாயக அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் தில்லி கலவரத்தை தூண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ். – பாசகவையும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் இடப்பட்டன. இவ்வார்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் அம்ருதா, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன், சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டாரின் பொறுப்பாளர் வழக்கறிஞர் கார்க்கி, மக்கள் அரசு கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைமை குழு உறுப்பினர் அருண பாரதி, மக்கள் சனநாயக குடியரசு கட்சியின் பொதுச்செயலாளர் துரைசிங்கவேல், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளர் அப்துல் கரீம், தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேயன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் நாகூர் மீரான், தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த சேகர், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், தமிழர் விடியல் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் சண்முகவேல் உள்ளிட்ட பல்வேறு சனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்..
கடந்த பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை தில்லியின் வடகிழக்குப் பகுதியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவக் குண்டர்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் 48 க்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர், 265 க்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளனர், பல நூறு கோடி ரூபாய் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 23 அன்று பாசக தலைவர் கபில் மிஸ்ரா குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுவோரைக் கலைப்பதற்கு காவல்துறைக்கு மூன்று நாட்கள் கெடுவிதித்து பற்ற வைத்த வெறுப்புப் பேச்சுத் தீயில் அடுத்த மூன்று நாட்கள் தில்லி பற்றி எரிந்தது. இவர் மட்டுமின்றி தில்லி சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாசக தலைவர்கள் அனுராக் தாகூர், அபய் வர்மா, பர்வேஸ் வர்மா உள்ளிட்டோர் போராடும் இஸ்லாமியர்களைத் தேசத் துரோகிகளாக சித்திரித்து ’துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்று வெறுப்பு நஞ்சை உமிழ்ந்து தள்ளினர். தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். – பாசகவின் பெரும்பட்டாளமே இறங்கி தில்லி மக்களின் மனங்களில் நஞ்சை விதைத்தது.
ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் இந்துத்துவக் குண்டர்களால் தாக்கப்பட்டனர். ஜாமியா பல்கலைக் கழகத்திற்கு முன்னாலும் ஷாகீன் பாக் போராட்டக் களத்திலும் துப்பாக்கியை எடுத்துச் சென்று காவிப் பயங்கரவாதிகள் சுட்டுப் பழகினர். இதன் தொடர்ச்சியாக தில்லி வடகிழக்கில் நடத்தப்பட்ட கலவரத்தில் துப்பாக்கிகளோடு இந்துத்துவக் குண்டர்கள் களம் இறங்கி இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்றனர். பீகார், உத்தரபிரதேசம் போலன்றி இந்தியாவின் தலைநகரமான தில்லியிலேயே இப்படி துப்பாக்கிகளோடு ஒரு கலவரம் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. வழமைப் போலவே மசூதிகள் தாக்கப்பட்டன, திருக்குரான் எரிக்கப்பட்டது, இஸ்லாமியர்களின் வாழ்விடங்கள், சொத்துகள், வண்டி, வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 1984 இல் சீக்கியர்களுக்கு எதிராக தில்லியில் நடத்தப்பட்ட கலவரத்தை மீண்டும் நினைவூட்டுவதாக இக்கலவரம் அமைந்துவிட்டது. மோடி-அமித் ஷா கூட்டணியின் ’குஜராத் மாதிரி’ அதாவது இஸ்லாமியர்கள் மீது படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிடுவது தில்லியிலும் அரங்கேற்றமாகியுள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் மீது பழிபோட்டுவிட்டு செயலற்று நின்றார். காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சகமோ கலவரத்தை ஊக்குவித்தது. காவல்துறையே கல்லெறிவதும் இஸ்லாமிய இளைஞர்களை அடித்து துன்புறுத்துவதும் காணொளிகளில் காணக் கிடைக்கின்றன.
நாடு எதிர்க்கொண்டிருக்கும் இந்துத்துவ பாசிச நெருக்கடிக்கு எதிராக அனைத்து துறைசார் சனநாயக ஆற்றல்களும் சனநாயகத்தையும் உண்மையையும் நீதியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். அவ்வகையில் இந்துத்துவ அரசின் பொய்ப் பிரச்சாரங்களைத் தவிடுபொடி ஆக்கும் வகையில் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் உண்மைகளை வெளிக்கொணரப் பாடுபட்ட அரவிந்த் குணசேகரன், ஆகாஷ் போன்ற எண்ணற்ற செய்தி சேகரிப்பாளர்களையும் புகைப்படக்காரர்களையும் உளமாரப் பாராட்டுகிறோம். ஆட்சியாளர்களுக்கு அஞ்சாமல், ”இன்னொரு ’1984’ நடப்பதை வேடிக்கைப் பார்க்கமாட்டோம்” என்று சொன்ன நீதிபதி முரளிதரனைப் போன்றவர்களைப் பாராட்டுகிறோம். அரசு உயர்பதவியைத் தூக்கி எறிந்து பாசிச எதிர்ப்புக் களத்தில் உழைத்துக்கொண்டிருக்கும் சசிகாந்த் செந்தில், கண்ணன் கோபிநாத் போன்றவர்களை வாழ்த்துகிறோம். கலவரத்தின் போது தன்னுயிரைக் கொடுத்து இஸ்லாமியர்களைப் பாதுகாத்த பிரேம்காந்த் பாகெல் போன்ற வீரமறவர்களையும் குருத்வாராக்களை திறந்துவிட்டு இஸ்லாமியர்களைப் பாதுகாத்த சீக்கியப் பெருமக்களையும் இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்ற தலித் மக்களையும் இஸ்லாமியர்களைத் தாக்கவிடமாட்டோம் எனப் பாதுகாத்த இன்ன பிற இஸ்லாமியரல்லாத மக்களையும் போற்றுகிறோம்.
இது ஐயத்திற்கிடமின்றி இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம், இந்துத்துவப் பாசிசத்தின் பயங்கரம். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் பக்கம் நின்று சனநாயகத்திற்காகப் போராடுமாறு மக்களை அறைகூவி அழைக்கிறோம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாசக தலைவர்கள், இன்னபிற சங்பரிவார அமைப்புகளின் தலைவர்கள் தில்லியில் நடந்ததைப் போல் சென்னையிலும் கலவரம் நடக்க வேண்டும் என்று சொல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது. கலவரங்களைக் கொண்டாடும் காவிப் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
கோரிக்கைகள்:
- வெறுப்புப் பேச்சுகளைப் பேசி கலவரத்தை தூண்டிவிட்ட பாசக முன்னணி தலைவர்களான கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா, அபய் வர்மா, அனுராக் தாக்கூர் போன்றோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
- தில்லியில் நடந்தேறியக் கலவரத்திற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்
- உயரிழந்தோர், காயம்பட்டோர், உடைமை இழந்தோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
- தாக்கப்பட்ட மசூதிகள், வீடுகள், பொதுவிடங்களை அரசேப் பொறுப்பேற்று புனரமைத்துக் கொடுக்க வேண்டும்.
- தில்லியில் நடந்தேறிய கலவரத்தை விசாரிப்பதற்கு பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
தோழமையுடன்
செந்தில்
99419 31499