டெல்லி வன்முறை, உயிரிழப்புகள் – அமெரிக்க அதிபர் டிரம்ப் பொறுத்தவரை இதுதான் மோடியின் ‘மத சுதந்திரத்திற்கு அயராத பாடுபடுவது’…
“மக்கள் மத சுதந்திரத்துடன் வாழ்வதையே விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். டெல்லி வன்முறை குறித்து கேள்விப்பட்டேன்; அது இந்தியாவின் உள் விவகாரம்” என தனது இரு நாள் சுற்றுப்பயண நிறைவின்போது செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துவிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு திரும்பிவிட்டார்.
பாஜக வென்ற தில்லி வடகிழக்கு தொகுதிகளில் நிகழ்த்தப்பட்ட வன்முறையானது, இஸ்லாமியர்களின் மீது பாஜகவால் திட்டமிட்ட நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் வன்முறைகளுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்கட்சிகளின் கோரிக்கை வலுப்பெறுகிறபோதே .வன்முறையை தூண்டுகிற விதமாக பேசிய பாஜக கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.தலைமைக் காவலர்,உளவுப் பிரிவு அதிகாரி உட்பட இதுவரை சுமார் 27 மக்கள் வன்முறைக்கு பலியாகியுள்ளனர்.
ஆனால், அமெரிக்க அதிபரைப் பொறுத்தவரை இதுதான் மத சுதந்திரத்திற்கு அயராத பாடுபடுவது!
இங்கே, அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு நடைமுறையில் எந்த பொருளுமில்லை என்றாலும் அவர் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.அதன் பொருட்டு அவர் இதையெல்லாம் பேசித்தான் ஆகவேண்டும்!
உள்நாட்டில் தனது தலைமை மீது எழுந்துள்ள அவநம்பிக்கையை மட்டுப்படுத்தவும்,வருகிற அதிபர் தேர்தலை எதிர்கொள்ளவும்,அமெரிக்க வர்த்தக நலனுக்கு ஒப்பந்தம் போட உள்ளபடியே டொனால்ட் டிரம்ப்பிற்கு தேவை உள்ளது. போலவே இந்திய ஆளும் கட்சியைப் பொறுத்தவரை,குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்,வரலாறு காணாத பொருளாதார மந்தம் போன்ற உள்நாட்டு சிக்கல்களை மட்டுப்படுத்தவும்,சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரை பயன்படுத்தி தனது பேரம் பேசும் உரிமையை வலுப்படுத்திக் கொள்கிற நோக்கம் இருக்கின்றது.ஆகவே,அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப்பயணமானது செயற்கையாக ஆடம்பரப் படுத்தப்பட்டது.அகமதாபாத்தில் குடிசை பகுதிகளை மறைத்து சுவர் கட்டியது புதிய சாலைகள் போட்டது,வழி நெடுக மக்களை நிறுத்தி வரவேற்பு அளித்தது,ஆயிரக்கணக்கான மக்களை கிரிகெட் மைதானத்தில் கூட்டி கார்பரேட் பிரச்சார பாணியில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடத்தியது என ட்ரம்பின் 36 மணி நேர இந்தியப் பயணத்திற்கு பல கோடி ருபாய் மக்கள் வரிப்பணம் விரையப்படுத்தப்பட்டது.
வெளியுறவுத் துறை செயலாளராக இருந்தபோது அமெரிக்காவில் ஹவ்டி மோடியை ஏற்பாடு செய்த ஜெயஷங்கர் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சரானவுடன் இந்தியாவில் நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.பாஜக ஆட்சியில் இதுவே வெளியுறவுக் கொள்கையின் அதிகபட்ச சாதனையாகும்!
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளின் தலைவர்கள்,பெரும் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே மேற்கொண்ட மகத்தான சந்திப்பின் துளிகள் வருமாறு
- இந்தியாவிற்கு,அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் வழங்குவது உட்பட சுமார் 21 ஆயிரம் கோடிக்கு பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்தியாவில் LPG இறக்குமதியை மேலும் அதிகரிக்க அமெரிக்க எண்ணெய் நிறுவனமான எக்சான் மொபைலுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
- 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது
- வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
ஆக,மேற்கூறிய முடிவுகளால் அமெரிக்காவின் ஆயுத வியாபாரிகளும் எண்ணெய் வியாபாரிகளும் பெரும் பணம் ஈட்டப் போகிறார்கள்,இந்தியா மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ள நாடாகும் என தனது உரையில் ட்ரம்ப் கூறுவதன் பொருளானது இந்தியாவின் ஆயுத தளவாடத் துறை,எண்ணெய் எரிவாயுத் துறையை அமெரிக்க ஏகபோக நிறுவனங்களுக்கு இந்திய சந்தையை திறக்க வேண்டும் என்பதே.!.
எங்களிடம் தேசபக்தி உண்டு காங்கிரசிடம் ஒட்டு பக்தி மட்டுமே உண்டு என்றவர்கள்தான் தற்போது நாட்டின் பாதுகாப்புத்துறையை ஏகாதிபத்திய நிறுவங்களுக்கு திறந்துவிடுகிறார்கள்.
– அருண் நெடுஞ்சழியன்