பல்லாயிரக்கணக்கானோர் மீது வழக்கு! போராடும் பெண்கள் மீது தடியடி! முதியவர் உயிர் பலி! இதுதான் துரும்புக்கூடப் படாமல் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதா? எடப்பாடியின் பொய்ப் பிரச்சாத்திற்கும் அடக்குமுறைக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

15 Feb 2020

நேற்று பழைய வண்னாரப்பேட்டையில் சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தடியடி நடத்தியும் நேற்றிரவு தமிழகமெங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிந்தும் இருக்கும் நிலையில் இன்றுப் பட்டப் பகலில் பச்சைப் பொய்களைப் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மாண்புமிகு என்ற சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் எள்முனையளவும் தகுதி இல்லாதபடி இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் இரவோடு இரவாக உண்மையை இருட்டபடிப்பு செய்துவிட முடியும் என்று கருதுகிறார் போலும். இரண்டு மாதங்களாக உலகமே வியந்து நோக்கும் வகையில் அமைதி வழியிலானப் போராட்டத்தை இந்தியாவெங்கும் இஸ்லாமியர்கள் நடத்திவருகின்றனர். இந்தியாவின் தலைநகரம் தில்லியில் சாஹீன் பாக்கில் அமித் ஷாவின் கீழ் இயங்கும் காவல்துறைகூட இப்படியான அத்துமீறிய வன்முறையைப் போராடும் பெண்கள் மீது நடத்தாத நிலையில் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இப்படியொரு மூர்க்கத்தனத்தை எடப்பாடியின் கீழியங்கும் காவல்துறை வெளிப்படுத்துவது ஏன்? தில்லி எசமானர்களுக்கு இத்தனை விசுவாசமாக வாலாட்டுவது ஏன்? இப்படியெல்லாம் அடக்குமுறையால் கையாள்வதன் மூலம், பொய்ப் பரப்புரைகளை மேற்கொள்வதன் மூலம் போராட்டத்தை மட்டுப்படுத்திவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கனவு காண்கிறார் என்றால் அதைவிட மடமை வேறெதுவும் இருக்க முடியாது. இது தமிழகம் தழுவிய அனைத்து மக்களின் போராட்டமாக பரிணமிக்க வெறும் நூலிழை இடைவெளிதான் இருக்கிறது என்பது எடப்பாடிக்குப் புரியவில்லை. இஸ்லாமிய அமைப்புகளுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏதேனும் ஓர் அமைச்சரைக் கூட அனுப்பிப் பேச்சுவார்த்தை நடத்தாமால் காவல் துறை ஆணையரை வைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவது எந்த சனநாயக நடைமுறை? எது எப்படியேனும் போராட்டக்காரர்களிடம் காவல் ஆணையர் கொடுத்த வாக்குறுதிக்கு இணங்க திங்கட் கிழமை தமிழக சட்டசபையில் சிஏஏ வுக்கு எதிரானத் தீர்மானத்தையும் என்.பி.ஆர். ஐ நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்ற உறுதிமொழித் தீர்மானத்தையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நேற்று தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் அதற்கு ஆணையிட்ட உயர் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த முதியவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். காயம்பட்டவர்களுக்கும் இழப்பீடு கொடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் கவனத்திற்கு. பல்லாயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைக் கட்டவிழ்த்துவிடப் படும் போதும் அறிக்கைவிடுவதுதான் முதன்மையான எதிர்க்கட்சிகளின் சனநாயக கடமையா? இன்றைக்குக்கூட தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் இது குறித்து பேசும்போது, ’பொய்ப்பரப்புரைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்’ என்று சொல்கிறார். ரஜினிகாந்தை ஏவிவிட்டு சிஏஏ, என்.பி.ஆர். பற்றி எழுப்பப்படும் கேள்விகளைப் பொய்ப் பரப்புரை என்று சொல்ல வைக்கிறது ஆர்.எஸ்.எஸ். இன்னும் குறிப்பாக இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மீண்டும்மீண்டும் சொல்ல வைக்கின்றனர். தமிழக அரசும் ஆர்.எஸ்.எஸ். உம் இஸ்லாமியர் அல்லாத வெகுமக்களிடம் ஏற்படுத்திவரும் இந்த கருத்து வெற்றிப் பெற்று வருகிறது. இதை முறியடித்து சிஏஏ, என்.ஆர்.பி., என்.ஆர்.சி. எப்படி இஸ்லாமியர்களுக்கும் பொதுவில் எல்லாத் தரப்பினர்க்கும் எதிரானது, அகதிகளுக்கு எதிரானது, சனநாயகத்திற்கு எதிரானது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை உடனடியாக வெகுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது.

தமிழக மக்களே, கடந்த இரண்டு மாதங்களாக இஸ்லாமியத் தமிழர்கள் சிஏஏ, என்.பி.ஆர். என்.ஆர்.சி. க்கு எதிராகப் போராடிவரும் நிலையில் இப்போராட்டங்களில் பங்குபெறுவதற்கு மாறாக வேடிக்கைப் பார்க்கும் நிலை தொடர்ந்து வருகின்றது. இது மிகுந்த வருத்தத்திற்கு உரியது. தமிழ்நாட்டு மக்கள் மீதான எந்த வடிவத்திலான ஒடுக்குமுறையானாலும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் அதற்கு எதிரானப் போராட்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அது சல்லிக்கட்டுப் போராட்டாமானாலும், நீட் எதிர்ப்புப் போராட்டாமானாலும் மழைவெள்ளப் பாதிப்பின் போதான மீட்புப் பணியானாலும் அதில் ஊக்கமுடனும் உணர்வுடனும் பங்குபெற்றதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. சிஏஏ, என்.பி.ஆர்.,என்.ஆர்.சி. க்கு எதிரானப் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் பங்கேற்று அதை முறியடிப்பதும் தமிழக அரசின் நிலைப்பாட்டை மாற்றச் செய்வதும் உடனடி கடமையாகும். தமிழ் மக்கள் தமக்கு உரித்தான நீதி உணர்ச்சியை வெளிப்படுத்த முன்வர வேண்டும். சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி. க்கு எதிராக ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் போராடிக் கொண்டிருக்கும் இஸ்லாமியத் தமிழர்களுடன் தோளோடு தோளாக இரத்தமும் சதையுமாக நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையும் உரிமையுமாகும். தமிழ் மக்களே, வழிவழியாய் வந்த தம் அறவுணர்வை வெளிப்படுத்த வீறு கொண்டெழுங்கள், வீதியில் திரளுங்கள்!

 

-பாலன், பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW