தலைநகரில் தேர்தல் தோல்வி பாஜகவிற்கு சொல்வதென்ன?

11 Feb 2020

புது தில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது எதார்த்த உண்மையாகி வருகின்றன.தேர்தல் கணிப்புகள் வெறும் பொய்யென்றும் 48  இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தில்லியில் ஆட்சியை பிடிப்போம் எனக் கூறிய தில்லியின் பாஜக தலைவர் மனோஜ் திவாரி தற்போது என்ன முடிவு வந்தாலும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறுகிறார். பாஜகவின் ஒட்டுமொத்த படையையும் தில்லியில் குவித்து பிரச்சாரம் செய்த அமித்ஷா,தற்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

தில்லி தேர்தலைப் பொறுத்தவரையிலும் ஆம் ஆத்மி,காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்று பிரதான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆம் ஆத்மிக்கும் பாஜகவிற்குமான இருமுனைப் போட்டியே நிலவியது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மியின் பி அணி என்றுகூட பாஜகவால் விமர்சிக்கப்பட்டது.

பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகத்தைப் பொறுத்தவரையிலும்

  • இந்துத்துவ அடிப்படைவாத வெறுப்பு பேச்சுக்கள்
  • மோடி என்ற தனி நபர் பிம்பம்
  • மத்திய அரசின் நகர்ப்புற கட்டுமான திட்டங்கள், குறிப்பாக சட்டப்புறம்பான காலனி வீடுகளை முறைப்படுத்துவது

ஆகிய அம்சங்களை சுற்றியிருந்தது.

ஆம் ஆத்மியைப் பொறுத்தவரையிலும்,கடந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் நாங்கள் தில்லியின் வளர்ச்சிக்கு ஏதேனும் செய்திருந்தால் எங்களுக்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்தார்கள்.குறிப்பாக கல்வி,சுகாதாரம்,மின்சாரம்,பெண்கள் பாதுகாப்பு  மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் குறித்த அரசின் ஐந்தாண்டு செயல்பாடுகளை விளம்பரப்படுத்தினார்கள். பாஜக முன்வைத்த வெற்று நகர்ப்புற திட்ட அறிவிப்பு மக்களிடம் எடுபடாததை ஒருகட்டத்தில் அமித்ஷா உணர்ந்துகொள்கிறார்.இதையெடுத்து பிரச்சாரப் பாணியை மாற்றுகிற பாஜக, ஆம் ஆத்மியின் தில்லி வளர்ச்சி சாதனை பட்டியலை முறியடிக்கிற முயற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. டில்லியில் கண்காணிப்பு கேமெராக்கள் பொறுத்தவதாக சென்ற தேர்தலில் வாக்களித்த ஆம் ஆத்மி அதை செய்யவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தாக்கிப் பேசத் தொடங்கினார்.

மேலும்  தில்லியின் 7 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்டார்கள்.கிட்டத்தட்ட பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களும் தில்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அசாமியர்கள், வங்காளிகள், கன்னடியர்கள் வசிக்கின்ற பகுதிகளில் அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.  கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு பெரும் படையே அமித்ஷாவால் தில்லியில் இறக்கப்பட்டது.

அமித்ஷாவின் குற்றச்சாட்டை மறுத்த கெஜ்ரிவால் தன்னோடு நேரடியாக விவாதத்திற்கு வர அழைப்பு விடுத்தார்.தன்னை தீவிரவாதி என்ற பாஜகவின் பிரச்சாரத்தை தனக்கு சாதமாக பிரச்சாரம் செய்து கொண்டார். தில்லி போலீசை அமித் ஷா  தவறாக வழிநடத்துவதாக பேசினார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஷாஹின்-பா போராட்டத்தில் இருந்து கவனமாக விலகியே நின்ற கெஜ்ரிவால்,பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தொடர்ச்சியான போலீஸ் வெறியாட்டத்தை கண்டித்து, எதிர்ப்புகளை தன்வயப்படுத்திக் கொண்டார்.

போலவே ஷாஹின்பா  போராட்டம் மற்றும் நாடெங்கிலும் நடைபெற்று வருகிற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்சியாக கொச்சைப் படுத்தி பேசி வருகிற அமித்ஷா(பாஜகவின்)  மீதான தில்லி மக்களின் எதிர்ப்புகளையும் அறுவடை செய்துகொண்டார்.

மொத்தத்தில்,மோடி-அமித்ஷாவின்  ஆரவாரப் வாய் வீச்சுரைகள்,பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் மத வெறுப்பு பேச்சுக்கள்,தேசத் துரோகிகள்,தீவிரவதிகள் என்ற முத்திரை குத்தல் பேச்சுகளை ஆம் ஆத்மியின் வளர்ச்சி பிரச்சாரம் தின்று செரித்துவிட்டது.2014 ஆம் ஆண்டில் காங்கிரசிற்கு எதிராக நாடெங்கிலும் பாஜக மேற்கொண்ட அதே பிரச்சாரத்தை தற்போது தில்லியில் பாஜகவிற்கு எதிராக ஆம் ஆத்மி செய்துள்ளது. ஆம் ஆத்மியின் இந்த தேர்தல் பிரச்சார உக்தி தற்போது வெற்றி பெற்றுள்ளது.

மேலும், மக்களின் உணர்வுநிலையை  இந்துத்துவ அடிப்படைவாத கருத்துக்கள் பக்கமாக திருப்பலாம் என நம்புகிற பாஜகவிற்கு மரண அடி கிடைத்துள்ளது என்றே கூறலாம்.இந்துத்துவ அடிப்படைவாத கருத்துநிலை உருவாக்கங்களுக்கு  இரையாகாத சிவில் சமூகத்தில் அரசியல் உணர்வுமட்டதை  இத்தேர்தல் முடிவுகள் பிரதிபளித்துள்ளன.

ஏற்கனவே, பாஜகவின் கூட்டணி கட்சிகளே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசி வருகையில், தில்லியில் தேர்தல் முடிவுகள்,பாஜகவின் முன்னேறித் தாக்கும் போரை மீளாய்வு செய்ய வைத்துள்ளது.

தலைநகரில் பாஜகவிற்கு கிடைத்த தோல்வியால் அமித்ஷாவின் அரசியல் சாணக்கியர் பட்டதை பாஜகவின் உட்கட்சி தலைவர்களே கேள்விக்குள்ளாக்கும் வகையில் சன்னமாக முனு முணுக்கத் தொடங்குவார்கள்.

வேளாண் மண்டல அறிவிப்பு,பெரியார் மீதான பாஜவின் விமர்சனத்திற்கு எதிரான நிலைப்பாடு என சமீமாக காலமாக பாஜகவில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு சம்பந்தமில்லாத  கட்சியாக காட்டிக் கொள்ள முயல்கிற  எடப்பாடியின் அஇதிமுக,ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் வருகை ஆகியவற்றின் எதிர்கால திசைப்போக்கில் கூட தில்லி தேர்தல் முடிவுகள் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தும்.

 

-அருண் நெடுஞ்சழியன்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW