மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் (2019) முடிவுகள் – சாதிகள் வகித்த பங்கென்ன ? – ஆய்வு கட்டுரை

05 Feb 2020

குறிப்பு: தேர்தல் முடிவுகளுக்குள் புலப்படாமல் அதே நேரத்தில் திட்டவட்டமானப் பங்கை கொண்டிருக்கும் சாதிக் கணக்குகளையும் அதன் வாக்குகள் இடம் மாறுவதையும் அதற்கான காரணங்களை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி EPW இதழில் வந்த ஆங்கிலக் கட்டுரையில் சுருக்கம். இவ்வாய்வு தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் சாதியக் கணக்குகளைப் புரிந்துகொள்ள உதவும்..

 

மகாராஷ்டிரா 2019 சட்டமன்றத் தேர்தல் மிகவும் குறிப்பிடத்தக்கது, யாரும் எதிர்பார்க்காத, கணிக்க முடியாத தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் நாடகம் ஆகியவற்றின் காரணமாக மட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் சமூக தளங்களில் புதிரான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதாலும் தான்.

 

இரண்டாவது முறையாக முதலமைச்சரான தேவேந்திர ஃபட்னவிஸ் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சிவசேனா, காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கட்சி (என்சிபி) கூட்டணி ஆட்சி அமைத்தது, மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) வடிவத்தில். வாக்காளர்களின் குறைந்த வாக்குப்பதிவு, கட்சிகளின் வாக்குப் பங்கு, சிறிய கட்சிகளான வஞ்சித் பகுஜன் அகாதி (வி.பி.ஏ) மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AMIM) போன்ற காரணிகளைச் சுற்றியே உரையாடல்கள்  உள்ளன. பாசகவின்  உத்திகளில் ஒன்றான மிகவும் ஆதிக்கம் செலுத்தும் சாதியைப் புறக்கணிப்பதன் மூலம் ஒரு சாதித் தொகுதியைக் கட்டுவது மகாராஷ்டிரத்தில் இத்தேர்தலில் பெருசாக பலனளிக்கவில்லை. அதாவது, மராத்தா அல்லாத சமூகத்தின் ஒரு சமூக கூட்டணியை ஒன்றிணைப்பதற்கான முயற்சி இம்முறை பலன் தரவில்லை.

 

 

370 வது பிரிவு போன்ற இந்திய அளவிலான பிரச்சினைகளுடன்  மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தை, பாரதீய ஜனதா கட்சி தந்திரமாக மடைமாற்ற முயன்ற போதும், அல்லது பயனாளிகளை அதன் விசுவாசமான வாக்கு வங்கியாக மாற்றுவதற்காக பிரச்சாரம் முழுவதும் மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கினாலும், அது 2019 மக்களவைத் தேர்தல் போல் பயனளிக்கவில்லை.

 

உள்ளூர் அரசியலின் மட்டத்தில் சாதி இன்னும் குறிப்பிடத்தக்க காரணிகளில் ஒன்றாகவே உள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த தேர்தலில் சாதியின் பங்கு மற்றும் சமூக தளங்களை மாற்றுவதை மராட்டிய வாக்குகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்களிப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

 

மராத்தா வாக்குகளின் ஒருங்கிணைப்பு

 

மக்களவைத் தேர்தலில் பாசக ஈட்டிய பிரதான வெற்றியின் பின்னணியில், மற்றக் கட்சிகளின் பிரதான தலைவர்களை பாசக தன் வசப்படுத்தியது. இந்த பின்னணியில் பாசகவுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்ற மாநிலத்தின் சூழ்நிலையிலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாசக வெல்லமுடியாததாகத் தோன்றியது. அதற்கு ஆதரவாக பல காரணிகள் இருந்தன. மராத்தா சமூகத்திற்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு எதிரான சட்ட / அரசியலமைப்பு தடைகளை  அது திறமையாகக் கையாண்டது மூலம் நீண்டகால நிலுவையில் இருந்த கோரிக்கையான 16% இடஒதுக்கீட்டைப்  பூர்த்தி செய்ய முடிந்தது. சட்டசபை தேர்தலுக்கு சற்று முன்னதாக, சத்ரபதி சிவாஜி மகாராஜின் வழித்தோன்றல்கள் உட்பட மராத்தா உயரடுக்கின் உறுப்பினர்களை எதிர்க்கட்சிகளிலிருந்து பாஜக தன் வசப்படுத்தியது. ஆனால், இந்த முயற்சிகள் அனைத்தையும் மீறி, மராத்தா சமூகத்திடமிருந்து எதிர்பார்த்த அளவிலான ஆதரவைப் பாசக வால் பெற முடியவில்லை என்று தெரிகிறது.

 

இதற்கு நேர்மாறாக, பாசக-சிவசேனா கூட்டணி 2014 சட்டமன்றம் மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் மராத்தா சமூகத்தின் கணிசமான  ஆதரவைப் பெற்றது.   மராத்தாக்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிலிருந்தும் விலகிவிட்டதால், மராத்தா உயரடுக்கின் அரசியல் மாநிலத்தில் வீழ்ச்சியடைந்தது. 2014 தேர்தலில் மராத்தா-குன்பி வாக்காளர்களில் 53% பேர் பாசக-சிவசேனாவை விரும்பினர் , அதே நேரத்தில் என்சிபி தங்கள் வாக்குகளை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தில் இருந்தது. இருப்பினும், 2019 சட்டமன்றத் தேர்தலில், மராத்தா சமூகம் என்.சி.பி மற்றும் காங்கிரசின் பின்னால் ஒரு பெரிய அளவிற்கு ஒருங்கிணைந்துள்ளது என்று தெரிகிறது.

 

முதலாவதாக, இரு காங்கிரசு கட்சிகளின் பொருளாதார அடிப்படையைப் பாதிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது, அது கூட்டுறவுத் துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான  நடவடிக்கைகளை எடுத்தது . கூட்டுறவுத் துறை, குறிப்பாக சர்க்கரை கூட்டுறவுத் துறை நெருக்கடியில் இருக்கிறது, சர்க்கரை விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஊதிய விலையை (FRP Fair and remunerative price) செலுத்த முடியவில்லை. எனவே, கரும்பு விவசாயிகள் ஒருபுறம் வருத்தப்பட்டனர், அதே நேரத்தில் சர்க்கரையை இறக்குமதி செய்யும் கொள்கை சர்க்கரை கூட்டுறவுகளை கட்டுப்படுத்துபவர்களிடையே அதிருப்திக்கு வழிவகுத்தது.  ஒவ்வொரு ஆண்டும் கரும்பு அறுவடை காலத்தில் FRP இன் பிரச்சினை முன்னுக்கு வருகிறது. முன்னதாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, ​​என்சிபி தலைவரான சரத் பவார் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை கூட்டுறவு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க முயன்றார். ஆனால், மையத்தில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் போதும், மாநிலத்தில் பாஜக-சிவசேனா அரசாங்கத்தின் போதும், இப்பிரச்சனை  வேண்டுமென்றே தவறாகக் கையாளப்பட்டு வருவதாக இந்த பிரிவுகளிடையே பரவலான அதிருப்தி உணர்வு ஏற்பட்டுள்ளது. சர்க்கரை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை அறிவிப்புகளை அனுப்புதல், நஷ்டம் விளைவிக்கும் சர்க்கரை கூட்டுறவுத் தலைவர்களுக்கு பாசக அழுத்தம் கொடுத்தமை அவர்களை பாசக.வின் பக்கம் ஈர்த்தது. பண மதிப்பிழக்க  நடவடிக்கையால்  மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டக் கூட்டுறவு வங்கிகளுக்கு உதவாதது ஆகியவை அதிருப்தியை மேலும் தூண்டின.

 

மேற்கு மகாராஷ்டிரா, அம்மாநிலத்தின் சர்க்கரை கிண்ணமாக கருதப்படுகிறது, ஆனால், பாசக தலைமையிலான மாநில அரசு சர்க்கரைத் தொழிலுக்கு உதவ உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததால், பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் பாரம்பரியமாக இந்தத் துறைக்கு ஆதரவாக இருக்கும் என்.சி.பி மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் நெருக்கமாக சென்றனர். மராத்வாடாவில் கரும்பு வளர்ப்பது தடைசெய்யப்பட வேண்டும் என்ற சுனில் கேந்திரேகர் குழுவின் பரிந்துரை, இப்பகுதியில் எப்போதும் தண்ணீர் குறைவாக இருப்பது ஆகியவை கூட்டுறவுத் துறையின் உயரடுக்கினரும், பெரிய நீர்ப்பாசன நிலங்களைக் கொண்ட விவசாயிகளும் காங்கிரசு மற்றும் என்.சி.பி பக்கம் திரும்பினர்.

 

இரண்டாவதாக, விவசாய நெருக்கடி மற்றும் 2018-19 ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் பேரணி மாநிலத்தின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . தொடர்ச்சியான வறட்சி, நீர்ப்பாசனத்திற்கான சமமற்ற நீர் விநியோகம் ஆகியவை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை ஒரு பேரழிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளன. சோயா பீன் மற்றும் பருத்தியின் அதிகப்படியான உற்பத்தி மற்றும் அதன் விளைவாக விலைகள் செங்குத்தாக வீழ்ச்சியடைதல், இளஞ்சிவப்பு நிறப் புழுக்களின் தாக்குதல்களால் பருத்தி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதிகரித்து வரும் கடன்களால் ஏற்படும்   விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. உதவியற்ற தன்மையால் தாம் புறக்கணிக்கப்படுகிறோம் மற்றும்   மத்திய – மாநில அளவில் பாசக தலைமையிலான அரசாங்கம் முதன்மையாக நகர்ப்புற மக்களின் நலன்களுக்காக செயல்படுகிறது என்ற உணர்வை விவசாயிகளிடையே வலுப்படுத்தியது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, விவசாய விளைபொருட்களுக்கான ஊதிய விலைகளைப் பெருக்குவது போன்ற பாசகவின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகள் நிறைவேறாமல் இருந்தன, மேலும் கடன் தள்ளுபடிகள் மற்றும் பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் மோசமாக செயல்படுத்தப்பட்டமை  அதிருப்தியை மேலும் மோசமாக்கியது. மகாராஷ்டிராவில் விவசாயிகளில் பெரும்பான்மையாக மராத்தா சமூகம் உள்ளது.  பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் இரு காங்கிரசு கட்சிகளையும் நோக்கி நகர்ந்துள்ளனர்.

 

இருப்பினும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களைப் பொறுத்தவரை மராத்தா வாக்களிப்பு முறைகளில் ஒரு வேறுபாட்டைக் காணலாம். நகர்ப்புற மராத்தா வாக்காளர்கள் பாஜக-சிவசேனாவை ஆதரிக்க விரும்பினார்கள். ஆனால், பிரதான் மந்திரி பீமா யோஜனாவை சரியாக நடைமுறைப்படுத்தாததற்காக சிவசேனா தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டங்களை ஆரம்பித்ததிலிருந்து, சிவசேனாவுக்கு எதிராக விவசாயிகள் மத்தியில் இருந்த அதிருப்தி பாஜகவுக்கு எதிரானதைவிட மிகக் குறைவாகவே இருந்தது. சிவசேனாவின் இந்த நிலைப்பாடு, குறிப்பாக மராத்வாடா பிராந்தியத்தில், பலனளித்ததாக தெரிகிறது. மராத்வாடாவில் உள்ள குறுவிவசாயிகள் சிவசேனாவுடன் தங்கினர். விவசாய அமைச்சராக இருந்த அனில் போண்டே இத்தேர்தலில் விவசாயிகள் அமைப்பான ஸ்வாபிமானி ஷெட்கரி சங்க்தானாவின் ஆர்வலரால் தோற்கடிக்கப்பட்டார்.

 

மூன்றாவதாக, விவசாய நெருக்கடி, வேலை வாய்ப்புகள் இல்லாமை மற்றும் சமூகத்திற்குள் வளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு இடையை மராத்தா இடஒதுக்கீடு எந்த பலனும் அளிக்காதது. . மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான முடிவில் சமூக நீதி மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய கொள்கையைவிட பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலை அளவுகோலாக இருந்தது. இந்த அளவுகோல் மராத்தா சமூகம், அதன் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் பரந்த ஆதரவைப் பெற்றது. மராத்தா சமூகம் ஏற்பாடு செய்த மவுன ஊர்வலங்களுக்கு பதிலளித்த பாசக-சிவசேனா அரசாங்கம் அச்சமூகத்திற்கு 16% இடஒதுக்கீடு வழங்கியதுடன், அவர்களின் அதிருப்தியைக் கட்டுப்படுத்த முயன்றது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை பாசகவுக்கு அவர்களின் எதிர்பார்ப்புகளின்படி மராத்தா வாக்குகளை வென்றெடுக்க உதவியதாகத் தெரியவில்லை, ஏனெனில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை அடிப்படை உண்மை மிகவும் மோசமாக உள்ளது. அரசு வேலைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, கல்வி பெரிய அளவில்  தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO) வேலையின்மை விகிதம் 6.5% என்று தெரிவிக்கிறது, இது கடந்த 45 ஆண்டுகளில் மிக உயர்ந்ததாகும். பல்வேறு அரசு துறைகளில் சுமார் 35% பதவிகள் தற்போது காலியாக உள்ளன. ஊடக அறிக்கையின்படி, பல்வேறு மாநில அரசு துறைகளில் சுமார் 52,733 பதவிகள் காலியாக உள்ளன. அதே நேரத்தில் சுமார் 20,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மறுபுறம், சுமார் இரண்டு லட்சம் விண்ணப்பதாரர்கள் மாநில அரசின் வேலைகளுக்கு தங்களைப் பதிவு செய்துள்ளனர். ஃபட்னாவிஸ் அரசாங்கம் 72,000 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்திருந்தாலும், ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் இருக்கிறது. மேலும் சட்டமன்றத் தேர்தலின் நடத்தை நெறிமுறைகள் போன்ற பல்வேறு காரணங்களால், பதவிகளை நிரப்ப முடியவில்லை. ஆகவே, இலட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

 

விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முற்றிலுமாக செயல்படுத்தவில்லை, அரசு ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைக் குறைத்து வருகின்றன. மராத்தா இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், 72,000 பதவிகளை நிரப்புவதாகவும் 2014 இல் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியது. இதன் விளைவாக, மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றிய போதிலும், இளைஞர்களில் பெரும் பகுதியினர் பாசகவிலிருந்து அந்நியப்பட்டனர்.

 

நான்காவதாக, மராத்தா சமூகத்தினரிடையே ஒரு உணர்வு உள்ளது, அதில் உள்ள பாசக தலைவர்கள் பெருமளவில் மராத்த சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. சந்திரகாந்த் பாட்டீல், ஹரிபாவ் பாக்டே, ரோசாஹேப் டான்வே, வினோத் தவ்தே, ஆஷிஷ் ஷெலார், சம்பாஜி நிலங்கேகர் போன்றவர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு அப்பால் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. பாட்டிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மராத்தா இடஒதுக்கீட்டின் போது முன்னணியில் தள்ளப்பட்டார், ஆனால் தற்போதைய விவசாய நெருக்கடியின் தன்மையைப் புரிந்துகொள்ளும் கிராமப்புற முகம் பாசகவுக்கு இல்லை என்ற உணர்வு அதிகரித்து வந்தது. பாசக-சிவசேனாவின் மராத்தா தலைவர்களுக்கு வேளாண் மற்றும் கூட்டுறவுத் துறையிலும் கிராமப்புற உள்ளூர் தன்னாட்சி நிறுவனங்களிலும் வலுவான அடித்தளம் இல்லை, எனவே அவர்களுக்கு ஓரளவு இரண்டாம் நிலை சமூக அந்தஸ்து வழங்கப்படுகிறது . இந்த உண்மையை முழுமையாக புரிந்து கொண்ட பாசக, இந்த விஷயத்தில் இரு காங்கிரஸ் கட்சிகளுக்கும் மேலாக தன் கை இருக்க வேண்டும் என்பதற்காக கிராமப்புற பின்னணியையும் கூட்டுறவு இயக்கத்தில் அடித்தளத்தையும் கொண்ட மராத்தா உயரடுக்கினரை அதன் அணிகளில் சேர்த்தது. இது சத்ரபதி சிவாஜி மகாராஜின் சந்ததியினரை அதன் மடிக்குள் சேர்த்தது. இன்னும், மராட்டிய வாக்குகளை பெரிய அளவில் ஈர்ப்பதில் அது வெற்றிபெறவில்லை.இந்த காரணிகள் அனைத்தும் 2019 மக்களவைத் தேர்தலிலும் இருந்தன. அவை தேசிய அளவிலான தேர்தல் என்பதால் தேசிய அளவிலான பிரச்சினைகள் தாக்கம்செலுத்தியது என்ற உண்மையை உணர்த்தியுள்ளது. ஆனால், மாநில சட்டமன்றத் தேர்தல்களில், இந்தத் தேர்தலின் முடிவுகளை தீர்மானிப்பதில் உள்ளூர் / மாநில அளவிலான பிரச்சினைகள் முன்னுக்கு வந்துள்ளது

 

ஐந்தாவது, பவாரின் அயராத முயற்சிகள் மற்றும் உத்திகள், குறிப்பாக மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாசக-சிவசேனாவுடன் நெருக்கமாக சென்ற மராத்தா சமூகத்தின் அந்த பிரிவுகளைத் திரும்பப் பெறுவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது. பாசகவின் பிரச்சாரத்தின் முக்கிய திட்டமானது, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை 370 வது பிரிவின் கீழ் ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை மதிப்பிடுவதும், ஒருபுறம் பவாரை விமர்சிப்பதும் ஆகும். விஷயங்களை மோசமாக்குவதற்கு, மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் பவாரின் பெயரைச் சேர்த்தது. அமலாக்க துறையின் இந்த நடவடிக்கையைப் பவார் திறமையாக பயன்படுத்தினார்.  மராட்டியர்கள் ஒருபோதும் சரணடையவில்லை, அதிகாரத்திலிருந்து வழங்கப்படும் கட்டளைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்று என்சிபி தீவிரமாக சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்தது. இது முழு பிரச்சனையையும் மராட்டிய பெருமை மற்றும் வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அடையாளமாக மாற்ற உதவியது. இதன் விளைவாக, கிராமப்புற விவசாய சமூகங்கள் என்.சி.பி மற்றும் அதன் கூட்டாளியான காங்கிரஸின் பின்னால் பலப்படுத்தப்பட்டது.  இந்த வழியில் சண்டையை முன்வைப்பதன் மூலம், ஒருபுறம் கட்சிக்கு பின்னால் உள்ள மராத்தா வாக்குகளை பலப்படுத்தவும், மறுபுறம் மகாராஷ்டிரா தழுவிய பரந்த மராட்டிய அடையாளத்தை சமன் செய்யவும் என்சிபி புத்திசாலித்தனமாக முயன்று வருகிறது. மேலும், விவசாயம், சமீபத்திய வெள்ளம், வேலை வாய்ப்புகள் போன்ற முக்கியமான உள்ளூர் கவலைகள் தொடர்பான பிரச்சினைகளை இடமாற்றம் செய்வதில் பவார் வெற்றி பெற்றார், இதனால் தேசிய பிரச்சினைகளைச் சுற்றி பிணைக்கப்பட்ட பாசகவின் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறுத்தினார். இது மேற்கு மகாராஷ்டிராவின் பாரம்பரிய கோட்டையில் அதன் ஆதிக்கத்தை மீண்டும் நிறுவ உதவியது மட்டுமல்லாமல், வடக்கு மகாராஷ்டிரா, மராத்வாடா மற்றும் விதர்பாவில் மேம்பட்ட செயல்திறனை உறுதிசெய்தது.

 

மராத்தா ஆதிக்கம்:

என்.சி.பி மற்றும் அதன் கூட்டாளியின் பின்னால் மராத்தா வாக்குகளின் ஒருங்கிணைப்பு காணப்பட்டாலும், மராத்தா ஆதிக்கம் நான்கு முக்கிய கட்சிகளிடையே பிளவுபட்டுள்ளது, இதை 2019 சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் சமூக சுயவிவரத்திலிருந்து பார்க்க முடிகிறது. சட்டமன்றத்தின் 288 உறுப்பினர்களின் சமூக பின்னணியை ஆராய்ந்தால், மராத்தா உயரடுக்கினர் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. மாநில மக்கள்தொகையில் 30% –33% உள்ள மராத்தா-குன்பி சமூகம், மாநில சட்டசபையில் 47% பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, விவசாய நெருக்கடி, பெருமளவிலான கல்வி, வேலை வாய்ப்புகள் இல்லாமை மற்றும் சமூகத்திற்குள் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மராத்தா சமூகத்தினரிடையே ஒருவித அமைதியின்மை நிலவுகிறது. இந்த காரணிகள் இடஒதுக்கீடு தேவை என்ற தோற்றத்திற்கு வழிவகுத்தது. நான்கு கட்சிகளும் மராத்தா போராட்டத்திற்குப் பதிலளித்து, சமூகத்திலிருந்து வேட்பாளர்களை அதிக விகிதத்தில் நிறுத்தின.

 

மராத்தா ஆதிக்கத்தை மகாராஷ்டிராவின் அரசியலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அடையாளம் கண்டுள்ளனர். 1978 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் மராத்தா உயரடுக்கினரிடையே பிளவு ஏற்பட்டிருந்தாலும் (காங்கிரசின் பிளவு காரணமாக), 1990 களுக்குப் பிறகு பாஜக-சிவசேனாவின் எழுச்சி மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) அரசியல் தோன்றிய போதிலும், மராத்தா எம்எல்ஏக்களின் விகிதம்   அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மாறாமல் இருந்தது.

 

2019 சட்டமன்றத் தேர்தலில், 137 மராத்தா-குன்பி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களில் 121 பேர் மராத்தாக்கள், மீதமுள்ளவர்கள் மராட்டிய-குன்பிகள். 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில், மராட்டிய-குன்பி வேட்பாளர்களின் எண்ணிக்கை இந்த நேரத்தில் ஏழு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 1985 வரை, மராத்தா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மையானவர்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். 1990 களில் இருந்து, அவர்கள் காங்கிரஸ், சிவசேனா மற்றும் பாஜக இடையே பிரிக்கப்பட்டனர், இதில் 1999 முதல் என்சிபி சேர்க்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், பாசகவில் 48 மராத்தா-குன்பி எம்எல்ஏக்கள் இருந்தனர், இது மற்ற அனைத்து கட்சிகளுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். பாஜகவில் 2019 ல் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மராத்தா-குன்பி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் . மராத்தா உயரடுக்கு இப்போது பாஜக, சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றில் பிரிக்கப்பட்டுள்ளது. மராத்தா உயரடுக்கினர் இன்னும் தங்கள் எண்ணிக்கையிலான ஆதிக்கத்தை அனுபவித்தாலும், அவர்கள் பிளவுபட்டிருப்பதால் இனி ஒருங்கிணைந்த செல்வாக்கை செலுத்த முடியாது என்பதாகும்.

எண் சமூகப்பிரிவு பாசக காங் சிவசேனா என்.சி.பி பிற சுயேட்சை மொத்தம்
1 உயர்சாதிகள் 18 6 3 27
2 நடுச்சாதிகள் 8 4 1 1 14
3 மராத்தா-குன்பி 43 23 31 32 4 4 137
4 இதர பிற்படுத்தப்பட்டோர் 17 6 6 8 4 2 43
5 எஸ்.சி. 10 8 5 6 2 31
6 எஸ்.டி. 9 4 3 6 3 1 26
7 இஸ்லாமியர் 0 3 1 2 4 10
மொத்தம் 105 44 56 54 18 11 288

நடுச்சாதிகளில் வருபவை லிங்காயத், கோமடி, ராஜ்புத்திர, குஜ்ஜார் மற்றும் வானி

தரவு: Unique Foundation Data Unit

 

இதர பிற்படுத்தப்பட்டோர்களின் (OBC) பிரதிநிதித்துவம்

2019 தேர்தலில் 43 இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் (ஓபிசி) எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2014 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 55 ஆக இருந்தது. 2014 ஆம் ஆண்டில், பாஜகவில் 21 ஓபிசி எம்எல்ஏக்கள் இருந்தனர், அதன் எண்ணிக்கை நான்கு குறைந்துள்ளது, இப்போது, அதில் 17 ஓபிசி எம்எல்ஏக்கள் உள்ளனர், என்சிபியைப் பொருத்தவரை 2014 இல் பெற்ற அதே எட்டு இடங்களைப் பெற்றுள்ளது. ஒபிசி க்கள் மாநில மக்கள்தொகையில் 29% ஆக இருந்தாலும் மாநில சட்டமன்றத்தில்   குறைந்த பங்கையே பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் மண்டல் ஆணையத்தால் ஓபிசிகளாக அங்கீகரிக்கப்பட்ட 272 சாதிகள் உள்ளன. இவர்களில், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 2019 இல் 19 ஓபிசி சாதிகளுக்கு மட்டுமே அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

விதர்பா, கொங்கன் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவிலிருந்து ஓபிசி உயரடுக்கினர் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தங்கர் இடஒதுக்கீடு தீர்க்கப்படாமல் இருந்தபோதிலும், நான்கு கட்சிகளும் மிகக் குறைவான தங்கர் வேட்பாளர்களை மட்டுமே வைத்திருந்தன, அவற்றின் எண்ணிக்கை மற்ற ஓபிசி சமூகங்களுக்கும் சமமான எண்ணிக்கையிலும் இருந்தபோதிலும், ஒரு தங்கர் வேட்பாளர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். வஞ்சரி மற்றும் மாலி சமூகங்களுக்கு தலா ஐந்து எம்.எல்.ஏக்கள், அக்ரிஸ் ஆறு, டெலிஸ் நான்கு மற்றும் பஞ்சாராஸ் மூன்று பேர் உள்ளனர். 2014 ஆம் ஆண்டில், மாலிஸில் 11 எம்.எல்.ஏக்கள், அக்ரிஸ் ஒன்பது மற்றும் தங்கர்கள் ஐந்து பேர் இருந்தனர். இரகசிய மோதலாக இருந்தாலும் அல்லது மராத்தாக்களுடனான ஒத்துழைப்பாக இருந்தாலும், இறுதி முடிவு ஓபிசி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை 12 ஆக குறைத்தது.

 

1990 களில் இருந்து ஓபிசிக்கள் தொடர்ந்து பாஜகவை ஆதரிப்பது நிகழ்ந்தது, இது மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மண்டல் ஆணையம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வட இந்தியாவில் ஓபிசி கட்சிகள் தோன்றின. இந்த சமூகங்கள் தங்களை அரசியல்ரீதியாக ஒழுங்கமைக்கத் தொடங்கின.  அரசியல் அதிகாரத்தில் ஓபிசி களின் பங்கு மண்டல் ஆணையத்துக்குப் பிறகு 11% முதல் 22% வரை உயர்ந்தது, இது உயர்சாதியினரின் பங்கு குறைவதற்கு வழிவகுத்தது. ஆனால், மகாராஷ்டிராவில் இதுபோன்ற ஓபிசி கட்சிகள் எதுவும் தோன்றவில்லை. பகுஜன் சாதிகளின் சமூக கூட்டணியைக் கட்டியெழுப்ப இந்திய குடியரசுக் கட்சி-பகுஜன் மகாசங் மேற்கொண்ட சோதனை அகோலா மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டது. ஆதிக்க சாதிகளின் கோட்டையை நிலைநிறுத்திக் கொண்டு பகுஜன் மக்களுக்கு  சேவை செய்வதுபோல் பாசங்கு செய்யும் காங்கிரசின் பாரம்பரியக் கொள்கையால் அதிருப்தி அடைந்த ஓபிசி சமூகங்கள் தங்களை அரசியல்ரீதியாக ஒழுங்கமைத்தன. புதிதாக விழித்தெழுந்த இந்த அரசியல் சக்தி, அரசியல் அதிகாரத்தில் ஒரு பங்கை வழங்க தயாராக இருந்த கட்சிகளுக்கு திரும்பியது. ஆரம்பத்தில் மண்டலை எதிர்த்த பாசக, ஓபிசி தலைவர்களை ஊக்குவித்து, உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம் மற்றும் கட்சி அமைப்பு ஆகியவற்றில்கூட வாய்ப்புகளை வழங்கியது, இதனால் மகாராஷ்டிராவில் கட்சியின் மாலி, தங்கர் மற்றும் வஞ்சாரி (மாதவ்) சாதிகளிடையே பரிசோதனைகள் உச்சக்கட்டத்தை அடைந்தன. இதன் விளைவாக, ஓபிசி வாக்குகள் காங்கிரசிலிருந்து பாசக-சிவசேனாவுக்கு மாற்றப்பட்டன. சிவசேனாகூட ஆரம்பத்தில் மண்டல் அறிக்கையை அமல்படுத்துவதற்கு ஆதரவாக இல்லை, ஆனால் 1990 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், அது ஓபிசிக்களுக்கு டிக்கெட் கொடுத்தது.

 

ஆனால், அண்மையில் மாநிலத்தில் பாசகவின் சில சூழ்ச்சிகள் ஓபிசி வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு முரண்பாடு தோன்றுவதற்கு வழிவகுத்தது, இது ஓபிசி வாக்களிப்பு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது, இது அவர்கள் பாசகவிலிருந்து விலகிச் செல்வதைக் குறிக்கிறது. முதலாவதாக, மராத்தா அணிவகுப்பு மற்றும் அதன் விளைவாக சமூகத்திற்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ஓபிசி மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது. எண்ணிக்கையில் வலுவான சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது பல தொகுதிகளில் மராத்தாக்கள் மற்றும் ஓபிசி மக்களிடையே ஒரு இரகசிய மோதலுக்கு வழிவகுத்தது. மராத்வாடாவில் உள்ள கலாம்னூரி, முகேத், கங்ககேத் மற்றும் பாத்ரி போன்ற தொகுதிகளில் இந்த இரகசிய மோதல் தோன்றியது; விதர்பாவில் அகோலா, வர்தா, சந்திரபூர், நாக்பூர், யவத்மால் மற்றும் புல்தானா, மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் முக்தினகர், சின்னார், நாசிக் சென்ட்ரல் மற்றும் நாசிக் வெஸ்ட். இது சில தொகுதிகளில் மராத்தா வேட்பாளரின் தோல்விக்கு வழிவகுத்தது, மற்ற சில இடங்களில் ஓபிசி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். மராத்தாக்களின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக, பாசகவும் மற்ற கட்சிகளும் ஓபிசி ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் மராத்தா வேட்பாளர்களை நிறுத்துகின்றன. சில இடங்களில் மராத்தா வேட்பாளர்களுக்கு ஓபிசி ஆதரவு அளித்தது. இருப்பினும், விபிஏ ஒரு வலுவான ஓபிசி வேட்பாளரை நிறுத்திய இடங்களில்(குறிப்பாக மராத்வாடா மற்றும் விதர்பாவில்) அது சிறப்பாக செயல்பட்டது. இரண்டாவதாக, இந்த இரகசிய மோதலுக்கு மாறாக, பல தொகுதிகளில் மராத்தாக்களும் ஓபிசிகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதைக் காண முடிந்தது. பீட், லாதூர், அகமதுநகர், சோலாப்பூர், புனே, நாசிக் மற்றும் நாக்பூர் மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகள் ஓபிசி மற்றும் மராத்தாக்களிடையே இந்த ஒத்துழைப்பு முறையை வெளிப்படுத்தின, இது காங்கிரசுக்கும் என்சிபிக்கும் பயனளித்தது. மராத்தாக்கள் மற்றும் ஓபிசிக்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கும், ஓபிசிக்கள் பாசகவில் இருந்து தங்களைத் தூர விலக்குவதற்கும் பின்வரும் காரணிகள் உள்ளன.

 

பாஜக,வைச் சேர்ந்த  ஏகாந்த் காட்ஸே, பங்கஜா முண்டே, சந்திரசேகர் பவன்குலே போன்ற ஓபிசி தலைவர்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத காரணத்தால் ஓபிசி களின் கோபத்திற்கு பா.ச.க. ஆளானது. மாலி சமூகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறைந்து வருவது ஒரு விசித்திரமான நிகழ்வு. 2014 சட்டமன்றத் தேர்தலில் 11 மாலி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சமீபத்திய தேர்தல்களில் அவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாகக் குறைந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலி வேட்பாளர்களுக்கு பதிலாக, இந்த முறை, என்.சி.பியின் மூன்று மராத்தா-குன்பி வேட்பாளர்கள், பா.ச.க.வின் ஒரு மராத்தா-குன்பி வேட்பாளரும், சிவசேனாவும், சிவசேனாவிலிருந்து ஒரு வஞ்சாரி வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே, மாலியின் அரசியல் இடம் முதன்மையாக மராத்தா-குன்பிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் காணலாம். தங்கர் சமூகத்திலும் இதே நிலைதான். 2014 தேர்தலில், ஐந்து தங்கர் வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனுடன் ஒப்பிடுகையில், 2019 சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றாகக் குறைந்துள்ளது. அவர்களுக்கு பதிலாக, சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்று மராத்தாக்களும் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஸ்.டி அந்தஸ்தை வழங்குவதாக 2014 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதால் தங்கர் சமூகம் பாசக மீது கோபமடைந்தது.இந்தத் தேர்தல்களில் ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த பிறகும் பாசக மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்கத் தவறியதைத் தொடர்ந்து ஓபிசி தலைமையினரிடையே அதிருப்தி வெளிப்பட்டுள்ளது. கட்சித் தலைமைக்கு, குறிப்பாக தேவேந்திர ஃபட்னவிஸுக்கு, காட்ஸே மற்றும் பங்கஜா முண்டே போன்ற ஓபிசி தலைவர்களால் அண்மையில் முன்வைக்கப்பட்ட சவால்கள் பாசகவுக்குள் ஓபிசி தலைமை குறைந்து வருவதைக் குறிக்கிறது.

 

மறுபுறம், என்.சி.பி அடிப்படையில் மராத்தாக்களின் கட்சியாகக் கருதப்படுகிறது, ஒரு சமூகத்தை ஒரு ஆதரவு தளமாக மட்டுமே நம்பியிருப்பது அரசியல் விரிவாக்கத்தை நோக்கிய அதன் பாதையில் வரம்புகளை விதித்துள்ளது என்ற உண்மையை என்சிபி நன்கு புரிந்து கொண்டது. எனவே, அது தனது ஓபிசி தலைவர்களைக் கட்சியின் முக்கிய முகங்களாக உயர்த்தியது. சாகன் புஜ்பால் மற்றும் சுனில் தட்கரே போன்ற மூத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் அதே வேளையில், இது இளைய தலைமைத்துவமான அமோல் கோல்ஹே, ஜிதேந்திர அவாத் மற்றும் தனஞ்சய் முண்டே போன்றவர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. வஞ்சாரி சமூகம் வலுவான இருப்பைக் கொண்ட தொகுதிகளில், என்.சி.பி அச்சமூகத்திலிருந்து ஆறு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும், பாசக ஒரே ஒருவரை மட்டுமே முன்வைத்தது. விஜய் வதேட்டிவார் மற்றும் நானா படோல் ஆகியோர் தலைமை பதவிகளில் இருப்பது காங்கிரசுக்கு சாதகமாக இருந்தது. கட்சியின் மாநிலம் தழுவிய பிரச்சாரத்திற்கு சிவஸ்வராஜ்ய யாத்திரை என்று பெயரிடுவதற்கான முடிவை பவார் வேண்டுமென்றே எடுத்தார் . தொலைக்காட்சி தொடரில் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் பாத்திரத்தை எழுதிய கோல்ஹே, முண்டேவுடன் சேர்ந்து யாத்திரையை வழிநடத்துகிறார். கிராமப்புற பொருளாதாரத்தைப் பொருத்தவரை மராத்தாக்களும் ஓபிசிகளும் பரஸ்பரம் சார்ந்து இருக்கிறார்கள் என்பது இருவருக்கும் இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்குவதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது, குறைந்தது ஒரு சில தொகுதிகளில். மராத்தா அணிவகுப்புகளால் அதிருப்தி அடைந்தாலும், ஓபிசி சமூகங்கள் மராத்தாக்களை தங்கள் இயற்கையான கூட்டாளிகள் என்று நம்பினர், எனவே ஒத்துழைப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். ஆனால், இந்த கொள்கை ஒரு வகையில், மாநில சட்டசபையில் ஓபிசிகளின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் பங்கைக் குறைத்துள்ளது.

 

எஸ்.சி.க்களின் பிரதிநிதித்துவம்

எஸ்.சி./எஸ்.டி க்கென ஒதுக்கப்பட்ட 29 தனித்தொகுதிகளில், பாஜக அதிக எண்ணிக்கையில் (10) வென்றது, அதில் சார்மாக்கர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மிகப்பெரிய இடங்களை வென்றனர், சார்மாக்கர்கள் முதன்மையாக பாசகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளனர். 12 சார்மாக்கர் எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் பாசகவைச் சேர்ந்தவர்கள், இருவர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள். மறுபுறம், ஒன்பது புதிய பௌத்தர்கள், நான்கு பேர் என்.சி.பியிடமிருந்தும், மூன்று பேர் காங்கிரசிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1980 களில் இருந்து நடந்துவரும் நிகழ்ச்சிப்போக்கை இது மேலும் உறுதிப்படுத்துகிறது, இந்து தலித்துகளுக்கும் புதிய பௌத்தர்களுக்கும் இடையில் பிளவு ஏற்படுவதன் மூலம் எஸ்.சி.க்களை மத அடிப்படையில் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும், குறிப்பாக பாசக-சிவசேனா, இந்து தலித்துகளின் ஆதரவை ஈர்க்கும் பொருட்டு, பௌத்தர்கள் அல்லாத வேட்பாளர்களை தனித்தொகுதிகளில் நிறுத்தி வருகின்றன. எனவே, புதிய பௌத்தர்கள், சார்மகர்கள், சட்டசபையில் அதிக அளவு பிரதிநிதித்துவத்தை அனுபவித்து வருவதை ஒருவர் காணலாம் .

 

 

 

எண் சாதி பாசக காங் சிவசேனா என்சிபி சுயேட்சை மொத்தம்
1 புதிய-பெளத்தர்கள் 3 1 4 1          9
2 சார்மாக்கர் 8 2 1 1 12
3 மாதங் 1 3 4
4 தோர் 1 1
5 காதிக் 1 1
6 கைகாட் 1 1
7 ஜங்கம் 1 1
8 மேஹ்தர் 1 1
9 சுதர்(பலை) 1 1
  மொத்தம் 10 8 5 6 2 31

தரவு: Unique Foundation Data Unit

 

2019 சட்டமன்றத் தேர்தலில் முக்கியமாக அரசியல் கட்சிகளின் சமூக தளங்களை மாறியிருப்பதும், குறிப்பாக மராத்தா வாக்காளர்கள் ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதும், ஓபிசி ஆதரவின் தன்மை மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கவை. எவ்வாறாயினும், சட்டசபையில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில்  குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை. என்.சி.பி மற்றும் காங்கிரசு கட்சிகளுக்குப் பின்னால் மராத்தா சமூகம் தன்னைப் பலப்படுத்திக் கொண்டதால், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இடங்களையும் வாக்குகளையும் பெற முடிந்தது. ஓபிசிகளும் சில தொகுதிகளில் மராத்தாக்களுடன் ஒத்துழைக்கும் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். பதிலுக்கு ஓபிசிக்கள் தகுந்த அதிகாரத்தைப் பெறுவார்களா? அல்லது தேர்தல் பிரச்சாரங்களில் அவை வெறுமனே காட்சிப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுமா? என்பதை காலம் சொல்லும். முந்தைய காலங்களைப் போலவே, மராத்தா அல்லாதவர்களும் மராத்தா மேலாதிக்கத்திற்கு தங்கள் ஒப்புதலை வழங்கியிருந்தாலும், ஓபிசி க்களின் இந்த ஒத்துழைப்பு நீடிக்குமா? இது பாசகவின் ஓபிசி தலைமையின் அளவைக் குறைப்பதற்கும், பவாரின் ஓபிசி தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவரது கொள்கைக்கும் ஓபிசி வழங்கிய பதில், இதைக் கொண்டே  என்.சி.பி. இன் அரசியல் பகுசன் அரசியலை நோக்கி நகர்கிறது என்ற முடிவுக்கு இப்போதே வந்துவிட முடியாது. பாசக-சிவசேனா அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நீர்ப்பாசன நிலங்களைக் கொண்ட வசதியான மராத்தா விவசாயிகள் இரு காங்கிரசுகளுக்கும் பின்னால் அணி திரண்டுள்ளனர். எவ்வாறாயினும்,  பொருளாதார ரீதியில் சமூகத்திற்குள் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளை இது மாற்றவோ ம்றைத்துவிடவோ போவதில்லை. மேலும், மராத்தா உயரடுக்கின் ஆதிக்கம் அப்படியே இருப்பதாகத் தோன்றினாலும், கட்சி போட்டியின் மாறிவரும் தன்மை காரணமாக அவை நான்கு கட்சிகளிடையே பிளவுபட்டுள்ளன என்பதன் பொருள் அவர்களின் செல்வாக்கு ஒத்திசைவாக இல்லை, முறிந்த நிலையிலேயே உள்ளது என்பதாகும்.

ஆசிரியர்கள்: விவேக் கோட்லே, குப்தா குல்கர்னி

மொழிபெயர்ப்பு சுருக்கம் – சரவணன், இளந்தமிழகம்

Source: https://www.epw.in/journal/2019/51/special-articles/maharashtra-legislative-assembly-elections-2019.html

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW