மோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

25 Jan 2020

மோடி அரசின் இரண்டாவது சுற்று ஆட்சியில் நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் மகாரத்தினங்கள் என்றழைக்கப்படுகிற அரசுத் துறை தொழில் நிறுவனங்களை ஏகபோக முதலாளி வர்க்கத்திற்கு வேகமாக கூறுபோட்டு விற்கப்படுவது தீவிரமாகி வருகிறது. கப்பல் கட்டுமான நிறுவனங்கள்,கார்க்கோ நிறுவனங்கள்  மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் மீதான அரசின் பங்கை 51 விழுக்காட்டிற்கும் கீழாக குறைப்பதாக கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்தது.இதில் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் அரசின் பங்கான 63.75 விழுக்காட்டை முழுமையாக விற்கப்போவதாக அறிவித்துள்ளது.முன்னதாக  இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஒன்றான  பாரத் பெட்ரோலியம்(BPCL) நிறுவனத்தின் 53.29 விழுகாட்டு பங்கையும் விற்பதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தற்போது இப்பட்டியலில் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களாக சேர்க்கப்பட்டு வருகின்றன.

அவர்கள் எதையுமே உருவாக்கவில்லை. மாறாக உருவாக்கி வைத்திருந்ததை ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டுள்ளார்கள், இந்த நாட்டையே விற்றுக் கொண்டுள்ளார்கள் என மோடி அரசின் பொருளாதார அழிவுக் கொள்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

முன்னதாக  நாட்டின் 41 படைக்கல நிறுவனங்களை கார்பரேஷனாக (தனியார்மயத்திற்கு முந்தைய கட்டமாக கூறலாம்) மாற்ற மத்திய அரசு முயற்சித்து  வருவதையும், கார்ப்பரஷேனாக மாற்றப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு கை கழுவியதையும்  கண்டு வருகிறபோது மேற்கூறிய நடவடிக்கைகள் பாஜகவின் முதலாளித்துவ நலன் சார்த்த பொருளாதார சீர்திருத்த நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

நாட்டின் தொழிலில் அரசுக்கு எந்த தொழிலும் இருக்கக் கூடாது என்பதே எங்களின் நோக்கம்  என 2014 ஆண்டில்  பாஜகவின் எண்ணெய்வள அமைச்சர் பிரதான் பேசியது தற்செயலானது அல்ல. நாட்டின் பொருளாதார வடிவத்தை நேரடியாக கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு,தற்போது பொருளாதார விவாகரங்களை கார்பரேட்களின் நலன்களுக்காக ஒழுங்குபடுத்துகிற தரகு வேலையை மட்டுமே தற்போதைய மோடி அரசு தேர்ந்துகொண்டுள்ளது.

ஒருபுறம் மேக் இன் இந்தியா மறுபுறம் சூறையாடும் முதலாளிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்ப்பதே பாஜக ஆட்சியின்  புதிய இந்தியா போலும்.

அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் முக்கியத்துவம்

இந்தியாவில் சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக  செயல்பட்டு வருகிற அரசின்  பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் பொருளாதாரத்தில் செயல்முனைப்புடன்  தலையீடு செய்து வந்தன.

 • அரசின் பொதுத்துறை நிறுவனங்களானது, லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிற தனியார் நிறுவனங்களைப் போல இயங்குவதில்லை. அதாவது பொதுத்துறை நிறுவனங்களை முதலாளித்துவ அனிமல் ஸ்ப்ரிட் இயக்குவதில்லை. பொதுத்துறை நிறுவனங்களை முதலாளித்துவ மதிப்பு விதிக்கு கட்டுப்படுத்தவில்லை.
 • தொழில் முதலீடு மற்றும் விரிவாக்க செயல்பாடுகளுக்கு தேவையான நிதி ஆதாரங்களை எளிமையாக திரட்டுவதற்கும் அதன் பயனை மக்களிடம் சேர்ப்பதற்கும் பொதுத்துறை நிறுவனங்களால் முடிகிறது.
 • அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியானது தனியார் துறைகளின் வளர்ச்சியை தலையீட்டை கட்டுப்படுத்தின. நாட்டின் வளமானது, தேசிய நலனுக்கு திருப்பப்பட்டது.தேச பொருளாதாரத்தில் அந்நிய மூலதன ஊடுருவலை குறைக்கிறது.
 • நாட்டின் முக்கிய பொருளாதார துறைகளான எண்ணெய் எரிவாவு,போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் ஏகபோக உருவாக்கத்தை கட்டுப்படுத்தின.

தற்போதைய பாஜக ஆட்சியில் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஏன் தனியார்மயப்படுத்தப்படுகிறது?

கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக  இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிற  உலகமய தாராளமய தனியார்மய பொருளாதார கொள்கையால்,குறிப்பிடத்தக்க வகையில் இந்திய முதலாளித்துவ வர்க்கம் பலனடைந்தன அந்நிய ஏகபோக சக்திகளும் பலனடைந்தன.மேலும்,ஏக போக சகாப்தத்தில் இணைக்கப்பட்ட இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் மென்மேலும்  மூலதனத்தை குவிக்கிற ஏகபோக முதலாளிகளாக பரிணமிக்க தொடங்கி தங்களை பலப்படுத்திக் கொண்டனர். போர்ப்ஸ் பத்திரிக்கை அறிவித்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும்  ஒவ்வொரு ஆண்டிலும் தவறமால் இடம் பெறுகிறார்கள்.

 • இந்த ஏக போக முதலாளித்துவ சக்திகள் அரசுத் துறையின் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுகின்றனர். அரசுத் துறை வளர்ச்சியை குறுக்குகின்றனர்.
 • உதாரணமாக தற்போது தகவல்  தொலைத்தொடர்பு துறையில் அம்பானி  ஆதிக்கம் செலுத்துவதற்கு, பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை வழங்கமாலும் கடன் வழங்காமலும் மத்திய அரசு இழுத்தடித்து கிட்டத்தட்ட ஒழிக்கவே செய்து விட்டது.  இந்தியாவில் பலமாக உருவாகியுள்ள இந்த முதலாளித்துவ சக்திகள் இம்முயற்சியில் இறுதியில் வெற்றியும் பெறுகின்றன.
 • போலவே ஏர் இந்தியாவை விற்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அமைச்சாராக இல்லாவிட்டால் ஏர் இந்தியா பங்குகளை நானே வாங்கியிருப்பேன் என அத்துறை அமைச்சரே பகிரங்கமாக அறிவிக்கிறார். தனியார்மயத்துடன் ஒத்திசைந்து வாழ்வதற்கு அமைச்சரே பரிந்துரைக்கிறார்.
 • பொருளாதார முதலீடுகளில் அரசின் பாத்திரத்தை அறவே கைவிடக் கோருகின்ற பெரு முதலாளிகளின் கோரிக்கைகளை எந்தவித மறுப்பும் இன்றி ஏற்றுக் கொள்வதையும்,முதலாளித்துவ நோக்கங்களுடன்  ஒத்திசைந்த  செயல்படுகிறது என்பதையே மோடி அரசு  அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகின்றது.
 • இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்த முனைகிற ஏகபோக சக்திகளின் நிர்பந்திந்திற்கு மத்திய அரசு முற்றிலும் பணிந்துவிட்டதை ஒவ்வொரு அறிவிப்பும் சுட்டிக் காட்டுகிறது.
 • காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பெரு முதலாளிகளின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து மேற்கூறிய பொருளாதார முடிவுகள் எடுக்கப்பட்டன.ஆனாலும் அப்போதைய சமூக நிலைமைக்கு ஏற்ப இம்முடிவுகளை தள்ளிப் போடவோ மறு பரிசீலனை செய்யவோ காங்கிரஸ் முயன்றது.கிராமப் புற கொந்தளிப்பை தணிக்க நூறு நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டதை இதற்கு உதாரணம் கூற முடியும். ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியாளர்களோ நாட்டில் நிலவி வருகிற வேலையில்லா திண்டாட்டம்,குறைந்த பட்ச ஊதிய கோரிக்கை போன்ற சமூகத்தின் கோரிக்கைகளை சுத்தமாக புறக்கணித்துவிட்டது.ஒருபுறம் இந்துத்துவ அடிப்படை வாதம்மறுபுறம் பொருளாதார அழிவு வாதாமென நாட்டை நாசப்படுதினாலும் விளிம்பு நிலை மக்கள் வறுமையால் வாடினாலும் மோடியின் ஆட்சியை இந்திய பெரு முதலாளிகள் ஆரவாரத்துடன் போற்றி பாராட்டுகின்றனர்
 • தற்போதைய ஆட்சியில் இந்தியாவில் பெரு முதலாளிகள் பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்குடைய செல்லப்பிள்ளையாக மாறிவிட்டனர். நாட்டின் பொருளாதாரத்தில்  அரசின் தலையீட்டை அறவே நீக்குவது என்ற ஏகபோக முதலாளித்துவ சக்திகளின் கோரிக்கைகளை மிக விரைவாகவே பாஜக நிறைவேற்றி வருகிறது.இப்போக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடியை இன்னும் தீவிரப்படுத்தும் என்பது வெளிப்படை.குறிப்பாக போக்குவரத்து,தகவல் தொலைத்தொடர்பு துறையில் இந்த விளைவை விரைவிலேயே எதிர்பார்க்கலாம்.நாட்டின் முதல் தனியார் ரயிலை தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவை தனியார்மயமாவது குறிப்பிடத்தக்கது.

தேசிய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட,அரசின்  தொழில் துறை யாவும் தற்போதைய பாஜக ஆட்சியில் ஏகபோக மூலதனத்திற்கு சேவை செய்வதன் பொருட்டு வேகமாக தனியார்மயப்படுத்தப்பட்டு வருகிறது.இது மிகவும் ஆபத்தான கேடான பொருளாதார முடிவாகும்.நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஏகபோக முதலாளித்துவ வர்க்கத்தினர் சுரண்டுவதற்கு பாஜக வழி வகை செய்துவிட்டது.அதனால்தான் டாட்டாவும் அதானியும் அம்பானியும் தங்களுக்கு இடையிலான போட்டிகளை கடந்து, பாஜகவின் இந்துத்துவ ஆட்சிக்கு  வெக்கமின்றி சாமரசம் வீசுவதற்கு ஒன்றுபடுகிறார்கள்.

-அருண் நெடுஞ்சழியன்

ஆதாரம்:இந்தியப் பொருளாதாரம் அ.இ.மெதவோய்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW