பாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும்விட எதார்த்தம் மிகவும் சிக்கலானது. எனவே, எதார்த்தம் பற்றிய மதிப்பீடும் சிக்கலானது, சறுக்கலை ஏற்படுத்தக் கூடியது. எதார்த்தம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ளும்பொழுது முகத்தில் அறைந்தாற் போல் உண்மை பளிச்சிடுகிறது. ஆனால், உண்மை சுட்டெரிக்கும் கதிரவனைப் போன்றதாகையால் அதை நேருக்குநேர் கண்கொண்டு பார்ப்பதில் எப்போதும் தயக்கம் இருக்கிறது. உண்மை பற்றிய உரையாடல்கள் கசப்பானதாகவும் ஆகிவிடுகின்றன. உண்மையை உரைகல்லாக கொண்டு தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டியுள்ளது. தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்தால்தான் அதைக் களைந்து வெற்றியை நோக்கிச் செல்ல முடியும். அப்படி வெற்றியை நோக்கிச் செல்வதற்கு முதல்படி என்பது தோல்வியை ஒப்புக்கொள்வதும் அதற்கு பொறுப்பேற்பதுமாகும். தோல்விக்கு பொறுப்புக்கூறல் இல்லாதவிடத்து அங்கு மீட்சி இருக்கப் போவதில்லை. ஐநூறு ஆண்டுகள் இருந்த பாபர் மசூதி குடியரசு இந்தியாவில் இடிக்கப்பட்டு அந்த குடியரசு அரசமைப்புசட்டத்தால் வழிநடத்தப்படும் உச்சநீதிமன்றத்தால் இராமர் கோயிலைக் கட்டுமாறு கட்டளையிடப்பட்டிருப்பதை எந்தவொரு கட்சியும் எந்தவொரு இயக்கமும் அவ்வளவு எளிதில் கடந்துபோய்விட முடியாது. அதுபற்றிய ஒரு சுயவிசாரணை தேவை.
1948 சனவரி 30 அன்று இந்தியாவின் மாபெரும் மக்கள் தலைவரான காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் கடைசியாக அவர் மேற்கொண்ட பட்டினிப் போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்று கோயிலாகவும் வீடுகளாகவும் மாற்றப்பட்ட மசூதிகள் மீண்டும் அதற்குரிய பயன்பாட்டிற்கு மாற்றப்பட வேண்டும் என்பதாகும், அதாவது, தொழுகைக்குரியதாக மாற்றப்பட வேண்டும் என்பதாகும். காந்தியின் கொலையும் அதை ஒட்டி இந்திய அரசு இந்துத்துவ ஆற்றல்களிடம் அதாவது ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபையிடம் மேற்கொண்ட கெடுபிடியும் அவ்வாற்றல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. ஆனால், அதிலிருந்து வெறும் 23 மாதங்களுக்குள் அதாவது 1949 திசம்பர் 22 க்கும் 23 க்கும் இடைப்பட்ட இரவில் அயோத்தியில் பாபர் மசூதிக்குள் ராமர் சிலை நிறுவப்பட்டது. 1949 திசம்பர் 23 அதிகாலையில், இந்தியாவின் எந்தவொரு தலைவரும் 1992 திசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்படும் என்றோ 2019 நவம்பர் 9 அன்று இந்தியாவின் உச்சநீதிமன்றம் அவ்விடத்தில் இராமர் கோயிலை கட்டிக்கொள்ளுமாறு தீர்ப்பளிக்கும் என்றோ எண்ணியிருக்கமாட்டார். சொல்லப்போனால், இந்தியா விடுதலைப் பெற்று குடியரசு ஆவதற்கு முன்பே மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டுவிட்டது. இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மை என்பது பாபர் மசூதிக்குள் இராமர் சிலை!
1949 திசம்பர் 23 க்கும் 2019 நவம்பர் 9 க்கும் இடைப்பட்ட இந்த வரலாற்றுப் போக்கை எப்படி மதிப்பிடுவது? அது உணர்த்தும் செய்தி என்ன? அதில் இருந்து பெற வேண்டிய படிப்பினை என்ன? இதை ஒத்த ஒரு வரலாற்று வளர்ச்சிப் போக்கை அண்டை நாடான இலங்கையில் காண முடிகிறது என்பதால் அதை ஒப்புநோக்கிப் பார்ப்போம்.
இலங்கையில் தனிச் சிங்கள சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் 1940 களில் தொடங்கிவிட்டன. 1944 ஆம் ஆண்டு முதன்முதலாக தனிச் சிங்கள சட்டத்திற்கான மசோதாவை ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொண்டுவந்தார். அதை எதிர்த்து சனநாயகத்தை உயர்த்திப் பிடித்தவர்களில் சிங்களத் தலைவர் பண்டாரநாயக்கா குறிப்பிடத்தக்கவர். ஆனால், எந்த பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்துப் பேசினாரோ அந்த பண்டாரநாயக்காவால்தான் 1956 இல் பிரதமராக இருக்கும்போது தனிச்சிங்கள சட்டம் இயற்றப்படுகிறது. அந்தளவுக்கு சிங்களப் பெளத்தப் பேரினவாத அரசியல் இலங்கையில் வளர்ச்சிப்பெற்றிருந்தது. அப்போது தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்துப் பேசியவர்களில் சிங்கள இடதுசாரி தலைவர்களான எம்.என்.பெரேரா மற்றும் கொல்வின் டி சில்வா குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், அதே கொல்வின் டி சில்வா பங்குபெற்ற வரைவுக்குழு தான் 1972 இன் குடியரசு யாப்பை இயற்றியது. அந்த யாப்பு தனிச்சிங்கள சட்டத்திற்கு அரசமைப்பு சட்டத் தகுதியை வழங்கியது.
இங்கு இதனை வெறுமனே தனி மனிதர்களின் பிறழ்வாகவும், கட்சிகளின் சறுக்கலாகவும் காணாமல் வரலாற்று மாற்றுப் போக்கின் விளைவாகவும் தனி மனிதர்களின், கட்சிகளின் சந்தர்ப்பவாத பதவி அரசியல் மோகத்தின் விளைவாகவும் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, இலங்கையின் அரசியலில் சிங்களப் பெளத்த பேரினவாதம் வக்கிரம் பெற்று மென்மேலும் வளர்ச்சியடைந்ததைத் தனிச் சிங்கள சட்டத்தின் வரலாறு சுட்டி நிற்கின்றது.
பாபர் மசூதி சிக்கலின் வரலாற்று வளர்ச்சிப் போக்கை காண்போம்.
1949 இல் பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்பட்டதை நேரு கண்டித்தார். மசூதியில் இருந்து ராமர் சிலை அகற்றப்பட வேண்டும் என்று அவர் ஐக்கிய மாகாணத்தின் ( அன்றைய உத்தர பிரதேசம்) முதல்வர் வல்லப பந்த்துக்கு கடிதம் எழுதுகிறார். கடிதம் வழியாக தொடர்ச்சியாகப் பின் தொடர்கிறார். இது குறித்த முன்னேற்றங்களை உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான வல்லபாய் படேலிடம் பகிர்ந்து கொள்வதையே பந்த் விரும்பினார். அவ்வண்ணமே செய்தார். வல்லபாய் படேலோ, இரு தரப்பின் ஒப்புதலோடுதான் எதையும் செய்ய முடியும் என்று கருதினார். ஒருகட்டத்தில், முதல்வர் பதவியை விட்டுவிட்டு மத்திய அரசில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்குமாறு பந்த் ஐ நேரு கேட்டுப் பார்க்கிறார். ஆயினும் கட்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி பந்த் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்கிறார். 1950 இல் படேல் மறைவுக்குப் பின் நேரு காங்கிரசின் தனிப் பெரும் அதிகார மையமாக மாறுகிறார். ஆயினும் அவர் ராமர் சிலையை மசூதியில் இருந்து அகற்றவில்லை அல்லது அவரால் அகற்ற முடியவில்லை. பாபர் மசூதியில் ராமர் சிலையை விட்டுவைத்து இந்தியாவின் முதல் பிரதமராகவும் பதினேழு ஆண்டுகாலம் அப்பொறுப்பில் இருந்தவராகவும் 1964 இல் தன் கண்ணை மூடிக்கொண்டார் அவர். ஆனால், பாபர் மசூதியில் இருந்து அவர் அகற்றாமல் விட்டுச் சென்ற ராமர் சிலை என்பது வெறும் சிலை அல்ல, எதிர்கால இந்திய அரசியலின் போக்குகளை மாற்றக் கூடியதென்றோ அல்லது அந்த மசூதியை தரைமட்டமாக்கப்போகும் வெடிகுண்டு என்றோ அவர் கருதியிருக்க வில்லை. எது எப்படியோ, நேரு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த அத்துமீறலை பதினேழு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தபோதும் சரி செய்யவில்லை என்பது .இங்கு முக்கியமானது.
தான் பூட்டுப் போட்ட இந்த பாபர் மசூதியை தன்னுடைய வாரிசுகளில் ஒருவர் தேர்தல் அரசியல் நலன்களுக்காக திறந்துவிடுவார் என்று நேரு கற்பனை செய்திருக்க மாட்டார். அவரது மகள் இந்திரா கோயில்களுக்கு செல்வதை அரசியல் நடவடிக்கையின் பகுதியாக்கிக் கொண்டார். 1983 இல் விசுவ இந்து பரிசத்தின் ஏகத்மாதா பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து கட்சித் தலைமைக்கு வந்த நேருவின் பேரன் ராஜீவ் காந்தி 1986 இல் பாபர் மசூதியின் கதவைத் திறந்துவிட்டார். மசூதிக்குள் இருந்து ராமர் பூதம் வெளியே வந்தது!
நடுவண் அரசில் காங்கிரசு ஆட்சியில் இருக்கும் போதே இலட்சக்கணக்கானோர் அயோத்தியில் திரண்டு பாபர் மசூதியை இடித்து தள்ளும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பிவி நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். இலட்சக்கணக்கான இராணுவத்தினரைக் கொண்டு காசுமீர் பள்ளதாக்கை சிறைப்படுத்தியிருக்கும் நடுவண் அரசு பாபர் மசூதி இடிப்பைத் தடுக்கவில்லை. காங்கிரசைப் பொருத்தவரை காந்தி கொலையானாலும் சரி பாபர் மசூதி இடிப்பானாலும் சரி அதை அனுமதித்து ’பழி உனக்கு பலன் எனக்கு’ என்ற உத்தியைத் தான் கடைபிடித்து வந்துள்ளது.
மசூதி இடிப்பைக் கண்டித்து காங்கிரசு, சிபிஐ, சிபிஐ(எம்), திமுக போன்ற கட்சிகள் அறிக்கைகள் விட்டன. நடுவண் அரசு, “பாபர் மசூதி மீண்டும் கட்டித்தரப் படும் என்று உறுதியளித்திருந்தது. நீதிமன்றத்தின் வழியாக இதை எதிர்கொள்வதால் பிரச்சனையைத் தள்ளிப் போட முடியும் என்று நம்பியிருந்தார்கள். மண்டல் கமிசனைப் பின்னுக்கு தள்ளவே, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கமண்டலத்தைக் கையில் எடுத்துள்ளனர் என்று பிரச்சாரம் செய்தனர். மசூதி இடிப்பைக் கண்டித்துப் போராடினார். இவற்றால் எல்லாம் பாபர் மசூதி இடிப்பை எவராலும் தடுக்க முடியவில்லை என்ற யதார்த்தம் மறைந்துவிடாது. அந்த மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது! மசூதியை இடிக்கும் அளவுக்கு பரந்துபட்ட மக்களை ஆர்.எஸ்.எஸ். ஆல் அணி திரட்ட முடிந்தது. மசூதி இடிப்பதற்கு மக்கள் திரளுவதை தடுக்கவோ அல்லது அத்தகைய முயற்சிக்கு எதிராக மக்களைத் திரட்டவோ முடியவில்லை என்பதே யதார்த்தம். கற்குவியலானது மசூதி!
அதிலிருந்து சுமார் 27 ஆண்டு கால ஓட்டத்தில், இரண்டாவது முறையாக பா.ச.க. முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துவிட்டது, இந்தியாவின் உச்சநீதிமன்றம் பொது அமைதியைக் காக்கும் நோக்கத்தில் பாபர் மசூதியின் இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளுமாறு தீர்ப்பளித்துவிட்டது. மசூதி இடிப்பின் போது எந்த எந்த கட்சிகள் அதை கண்டித்தனவோ அக்கட்சிகள் யாவும் இப்போது இந்த தீர்ப்பை அநீதியானது என்று சொல்ல முன்வரவில்லை. அக்கட்சிகள் இத்தீர்ப்பைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்தவில்லை. அக்கட்சிகள் தீர்ப்பைக் கண்டித்து அறிக்கை விடுவதற்குகூட முன்வரவில்லை. மாறாக, அக்கட்சிகள் தீர்ப்பை வரவேற்றன. அதைவிட ஒருபடி மேலே சென்று தீர்ப்பின் பொருட்டு மக்களைப் பார்த்து அமைதி காக்க சொன்னார்கள். அதாவது, பாபர் மசூதியின் இடத்தில் ராமர் கோயிலைக் கட்டச் சொல்லும் தீர்ப்பைக் கண்டித்து இஸ்லாமியர்கள் கிளர்ச்சி செய்யக் கூடாது என்பதை மறைமுகமாகச் சொன்னார்கள். நீதியற்ற அமைதிக்கு வக்காலத்து வாங்குவதில் இவர்கள் எப்போதும் சளைத்தவர்கள் இல்லை. காங்கிரசு இப்படி ஒரு நிலைப்பாடு எடுத்ததில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், திமுகவும், சிபிஐ, சிபிஐ(எம்) போன்ற கட்சிகளும் தீர்ப்பை வரவேற்றன என்பது உற்று கவனிக்கத்தக்கது.
பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து அறிக்கை எழுதிய கலைஞர் அவ்விடத்தில் ராமர் கோயிலைக் கட்டச்சொல்லும் தீர்ப்பை வரவேற்று தன்னுடைய மகன் ஸ்டாலின் தலைமையிலான தன்னுடைய கழகம் அறிக்கை எழுதும் என்று நம்பியிருக்க மாட்டார். ’பாலம் கட்டுவதற்கு எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் படித்தான் ராமன்’ என்று கேட்டவர்கள் ’உச்சநீதிமன்ற தீர்ப்பு அநீதியானது’ என்று சொல்லும் துணிவுக் கொள்ளவில்லை. இராமனைத் திட்டி பரப்புரை இயக்கம் நடத்திய பெரியாரின் திராவிடர் கழகம் இந்த தீர்ப்பை வரவேற்கும் என்று பெரியாரோ, மணியம்மையோ கற்பனையிலும் எண்ணியிருக்க மாட்டார்கள். ஆயினும் இவையெல்லாம் நடந்துமுடிந்துவிட்டது!
இரக்கமற்ற உலகில் மனிதனின் ஆன்மாவாக கடவுள் இருக்கிறார் என்கிறார் மார்க்ஸ். இதைக் கொண்டு, பண்பாட்டு உரிமைகளில் வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். மன்னன் பாபரின் பெயராலும் கடவுள் ராமரின் பெயராலும் நீதிமன்ற மேடை நாடகங்களில் நவீன அரசமைப்புச் சட்டத்தின் பெயராலும் ஒரு மசூதி இடிக்கப்பட்டு கோயிலாக மாற்றப்பட்டதை இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் எப்படி எடுத்துக் கொள்வர்? இந்நாட்டில் சம உரிமைக் கொண்ட, பிரிக்கமுடியாத அங்கமாக உணருமாறு அவர்களைக் கோருவதற்கு எவருக்கேனும் அருகதை உண்டா? ஒரு மசூதி கோயிலாக மாற்றப்படக் கூடாது என்பதற்காக காந்தியைப் போல் உயிரைக் கொடுப்பதற்கு எந்த தலைவரும் முன்வரவில்லை என்பதைவிட வெட்கக் கேடானது என்னவென்றால் ஒரு மசூதி கோயிலாக்கப்படுவது இந்தியாவின் அவமானம் என்று சொல்லும் துணிவுகூட எந்தக் கட்சிக்கும் இல்லை. ஆனால், இந்தியாவின் பிரதமராக இருந்த ஆர்.எஸ்.எஸ். காரரான வாஜ்பாய், பாபர் மசூதியை இந்நாட்டின் அவமானச் சின்னம் என்றும் அது இடிக்கப்பட்டது மகிழ்ச்சியானது என்றும் மசூதி இடித்தப் பின்பு துணிவுடன் பேசினார். முதலில் அயோத்தி பின்னர் காசி, மதுரா என்று எப்போதோ ஆர்.எஸ்.எஸ். சொல்லிவிட்டது. இந்த வாஜ்பாயைப் புகழ்ந்துதான் அவருடன் கூட்டணி வைத்தனர். இந்த வாஜ்பாயின் மறைவுக்குப் பின்னான புகழஞ்சலிக் கூட்டத்தில் காவிகளுடன் ஒன்றுபட்டு மேடையில் நின்றனர்.
காந்தியைப் போல் உயிரைக் கொடுக்க முன்வராவிட்டாலும் தன்னுடைய கட்சியின் சார்பாக சில இலட்சம் பேரையோ அல்லது சில ஆயிரம் பேரையோ திரட்டி பாபர் மசூதி தீர்ப்பைக் கண்டித்துப் போராட எந்த மதச்சார்பற்ற கட்சியும் முன்வரவில்லை.
இவையெல்லாவற்றையும்விட கவலைக்குரியது எதுவென்றால் இதை தடுக்க முடியாதது சனநாயக அரசியலுக்கும் அதை முன்னெடுக்கும் தமக்கும் ஏற்பட்டுள்ள தோல்வி என்று ஒப்புக்கொள்ளக்கூட அணியமாயில்லை. 1949 திசம்பர் 23 காலையில் இருந்து 2019 நவம்பர் 9 வரையான 70 ஆண்டு காலத்தில் தாம் இதன் பொருட்டு முன்வைத்த அரசியல் முழக்கங்கள், செயலுத்திகள், இது குறித்து கொண்டிருந்த அடிப்படை கண்ணோட்டம் ஆகியவற்றில் என்ன பிழை நேர்ந்தது என்பதைப் பரிசீலிக்கவும் அதிலிருந்து தன்னுடைய கருதுகோள்களை மாற்றிக் கொள்ளவும் அணியமாய் இல்லை. அதை வெளிப்படையாக மக்களிடமும் அணிகளிடமும் முன்வைக்கவும் தயாரில்லை.
இந்துத்துவ எதிர்ப்பின் ஈட்டி முனையாக தம்மை அறிவித்துக் கொண்ட அனைத்திந்திய இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் திமுக ஆகியவை இத்தகைய தீர்ப்பை வரவேற்கும் என 1992 திசம்பர் 6 அன்று அக்கட்சிகளே எண்ணியிருக்காது. ஆனால், இந்துத்துவ ஆற்றல்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி காரணமாக இத்தீர்ப்பை வரவேற்க வேண்டிய நிலைக்கு இக்கட்சிகள் தள்ளப்பட்டுளன. வரலாற்று ரீதியாக இந்துத்துவ அரசியல் அடைந்திருக்கும் வளர்ச்சியின் குறியீடாக இராமர் கோயில் அமையப் போகிறது. இது வரலாற்று வளர்ச்சிப் போக்கை அடையாளம் காட்டுகிறது. இந்திய தேசியம் எதிர்ப்புரட்சிகர வளர்ச்சியடைந்து இந்துத்துவ தேசியமாக நிலைப்பெறுவதைச் சுட்டிக்காட்டுகிறது.
அது, இந்துத்துவ தேசியத்தின் வளர்ச்சியின் குறியீடு மட்டுமல்ல இந்திய அரசியல் கட்டமைப்பில் இஸ்லாமியர்களின் உரிமையைப் பாதுகாக்க முடியும் என்ற கருத்துக்கு ஏற்பட்ட தோல்வியின் குறியீடாகும்.
பாபர் மசூதியின் இடத்தில் ராமர் கோயில் கட்டப்படவிருப்பதை இந்தியாவின் அனைத்து முற்போக்கு அரசியல் மரபுகளுக்கும் ஏற்பட்ட மாபெரும் தோல்வி என்று கருதிப் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி அம்மரபை சேர்ந்தோர் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை இருக்கிறது..
காந்தி கொலையே மதச்சார்பின்மையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் முடியவில்லை என்பதன் அறிகுறியாகும். இந்தியாவில் மதச்சார்பின்மையைக் கட்டியெழுப்பும் போராட்டம் குடியரசு இந்தியாவின் கையில் ஒப்படைக்கப்பட்டது. அந்த கடமையில் சனநாயக ஆற்றல்கள் அடைந்திருக்கும் மைல்கல்லான தோல்வி – அயோத்தியில் கட்டப்படவிருக்கும் இராமர் கோயில்.
எனவே, இதுகாறும் இந்தியாவின் மதச்சார்பின்மை, இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய தேசியம் ஆகியவை குறித்தெல்லாம் விதந்தோதிக் கொண்டிருந்தோர் இந்த வரலாற்று கேள்விக்குப் பதலளிக்க வேண்டும். தேர்தல் வெற்றித் தோல்விகளுக்குப் அப்பால் ஒரு சமூக சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்துத்துவ அரசியலுக்கு எப்படி மடைபோட போகிறார்கள்?
இந்துத்துவ தேசியம் என்பது ஒரு சமூக சக்தியாக வளர்ந்து நிற்கிறது. அது மோடி – அமித் ஷா வோடு தொடங்கவும் இல்லை, அவர்களோடு முடியப் போவதுமில்லை. அந்த முகாமில் உருப்பெறும் ஆளுமைகள் யாராகினும் அவர்கள் அந்தஅந்த காலத்திற்கு உரிய பாத்திரத்தை வகித்துச் செல்லும் வரலாற்றின் கருவிகளே. கட்டப்படவிருக்கும் இராமர் கோயில் என்ற அவமானகரமான தோல்வியின் சின்னத்திற்கு முன்பு தமது கடந்த கால கருதுகோள்களை, கண்ணோட்டங்களை, மதிப்பீடுகளை, செயலுத்திகளை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய கடமை சனநாயகத்தின் பாற் பற்றுகொண்ட ஒவ்வொரு கட்சிக்கும் உண்டு.
பொருளியல் நெருக்கடிகளைப் பயன்படுத்தி இந்துத்துவ தேசியத்திற்குள் மக்களை இழுத்துவருவதில் வெற்றி கண்டிருக்கிறது பாசிச ஆர்.எஸ்.எஸ். எதிர்முகாமில் பொருளியல் நெருக்கடிகளையும் அரசியல் தேசியத்தையும் இணைத்து ஒரு மாற்றை முன்வைப்பதில் இடைவெளி இருக்கிறது. குறிப்பாக, இந்த வரலாற்று சிக்கலுக்கு தீர்வை முன்வைக்க வேண்டிய இடதுசாரிகளில் அனைத்திந்திய கட்சிகளான சிபிஐ, சிபிஐ(எம்) போன்றவை ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்தில் உருப்பெற்ற இந்திய தேசியத்திற்கும் சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய தேசியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை காண மறுக்கின்றன.
சுதந்திரத்தின் பின்பான இந்திய தேசியம் பண்பளவில் அரச தேசியமாக வினையாற்றிக் கொண்டிருக்கிறது. அதிகாரம் குவிக்கப்பட்ட நடுவண் அரசும் விளையாட்டு சாமான் போன்ற மாநில அரசும் மொழிவழி சமூக தேசியங்களின் இருப்பையும் அம்மக்கள் கூட்டத்தினது சனநாயக விருப்பையும் மறுத்து நிற்கின்றன. பெருமூலதனம் அனைத்திந்திய சந்தையைக் கோரி நிற்கின்றது. எனவே, மென்மேலும் அதிகாரம் மையத்தில் குவிக்கப்பட வேண்டியுள்ளது. அத்தகைய அதிகாரம் குவிக்கப்பட்ட மைய அரசுக்கு வெறும் 50 ஆண்டுகாலப் போராட்டத்தில் உருப்பெற்ற இந்திய தேசியம் ஈடுகொடுக்க முடியவில்லை. இத்தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு பொது மொழியாலோ அல்லது பொது சமயத்தாலோ இறுக்கிக் கட்டப்படும் தேசியம் முன்நிபந்தனையாகிறது. அந்த இடத்தைத்தான் இந்தி மொழியையும் இந்துச் சமயத்தையும் கொண்டு இந்துத்துவ தேசியம் இட்டு நிரப்புகின்றது. எனவே, இந்திய தேசியம் என்றதன் வழியாக இந்துத்துவ தேசிய சிக்கலுக்கு தீர்வு காண முற்படுவது அப்பட்டமான தோல்வியையே தரும், தந்துள்ளது.
பசி, தூக்கம், காதல், காமம் என்ற உயிரியல்-பொருளியல் மெய்ம்மையும் தேசியம் என்ற அரசியல் மெய்ம்மையும் தேசிய சமூக வாழ்வுக்கு மக்கள் கொண்டிருக்கும் பெருவிருப்பமும் எப்படி ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்திருக்கிறது என்பதைக் கற்றாக வேண்டும்.
மனிதகுல வரலாற்றில் தேசியம் வகித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தையும் அதில் மொழி, மதம் ஆகியவற்றின் பங்கில் அதனதன் அளவையும் அது மக்களை உருட்டி திரட்டி ஒரு வரலாற்று சக்தியாக்குவதில் கொண்டிருக்கும் ஆற்றலையும் கற்றுத்தெளிவதிலும் தேசியத்தை அமைதிக்கும், நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும், நாகரிகத்திற்கும் ஏற்றாற் போல் வடிவமைப்பதிலும்தான் இந்திய துணைக்கண்டத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.
கற்பனைகளை வங்கக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு பாபர் மசூதி தோல்வியை ஒப்புக்கொண்டு வரலாற்று அன்னையின் முன்பு மண்டியிட்டு ஒரு சுயவிசாரணை செய்து கொள்ளத் துணிவோம்.
-செந்தில், இளந்தமிழகம்
Excellent Senthil …. It is a great pleasure to see my Tamil language used so beautifully.