சனவரி 6’ல் கூடும் தமிழக சட்டசபையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை NPR நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றவேண்டும் !
2020 புத்தாண்டில் ஜனவரி 6ல் கூட இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் தேசிய குடிமக்கள் பதிவேடு NPR கணக்கெடுப்பை நடத்த முடியாது என்ற தீர்மானத்தை உடனடியாக தமிழக சட்டசபை இயற்ற வேண்டும். ஏறக்குறைய இந்திய மக்கள் தொகையில் 56 சதவீதம் மக்கள் வாழக் கூடிய 11 மாநிலங்கள் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன.
தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கும்(NRC)-தேசிய மக்கள் தொகை பதிவேட்டு(NPR)க்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டு மேற்குறிப்பிட்ட 11 மாநிலங்களும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. ஆனால் மோடி – அமித்ஷா பாசிச கும்பலின் அடிமையாக செயல்படும் தமிழக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று எஜமானர்களை சந்தித்து வந்த பிறகு மக்களின் போராட்டங்களை கணக்கில் எடுக்காமல் இஸ்லாமியர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் இழைத்ததைப் பற்றி கவலைப்படாமல் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவரின் எஜமானர்கள் சொன்னதை திரும்பத் திரும்ப வாந்தி எடுத்து வருகிறார். எதிர்கட்சிகள் மக்களை திசை திருப்புவதாக உளறிக் கொண்டிருக்கிறார். போராடுகின்ற மக்களையும் மாணவர்களையும் சிறுபான்மை சமூகத்தினரையும் நோக்கி எஜமானர்கள் கூறியதைக் கிளிப்பிள்ளை போல பேசிக்கொண்டிருக்கிறார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பணம் 70,000 கோடியை வாங்குவதற்கு வக்கில்லாமல், நீட் தேர்விற்கு விலக்கு வாங்குவதற்கு போராடாமல், ’ஒரே ரேஷன் கார்டு’ என்ற பெயரில் பொது விநியோக திட்டத்தில் மாநில உரிமைப் பறிப்பை எதிர்க்காமல் தமிழகத்தைக் காவு கொடுக்கும் அடிமை கும்பல், குடியுரிமை சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு வாக்களித்ததோடு மட்டுமல்லாமல் அதை இங்கே அமல்படுத்தவும் பாசிசக் காவி கும்பலின் வாயாகவும் அடியாள் படையாகவும் செயல்பட முனைகிறது.
பாராளுமன்றத்தில் வாக்களித்த பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மட்டுமல்ல பாஜகவின் அஸ்ஸாம், கர்நாடகம், மேற்கு வங்கத் தலைவர்கள் கூட சட்டத் திருத்தத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது எனக் கூறியுள்ளனர். ஆனால் அதிமுக அடிமை கும்பல் அவர்களைவிட காவிகளுக்கு விசுவாசம் காட்டி பிழைப்பிற்காக வாலாட்டி நிற்கிறது.
எனவே இதை உடனடியாக முறியடித்தாக வேண்டும். எனவேதான் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு NPR நிறுத்தப்படுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அடிமை அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம், தெரிந்துதான் அவர்கள் முன் இந்த கோரிக்கை வைக்கிறோம். எதிர்க்கட்சிகள் தமிழக அரசை அம்பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளே தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை ஒரு விவாதமாக்கிட வேண்டும்; சட்டமன்றத்திற்கு வெளியில் நடைபெறுகின்ற மக்கள் போராட்டத்தின் துணையோடு அரசை நிர்பந்தித்து தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு அமல்படுத்த மாட்டோம் என்ற சட்டசபை தீர்மானத்தை நிறைவேற்றச் செய்ய வேண்டும்.
போராடும் மக்கள், சிவில் சமூகத்தினர், ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளின் இக்கோரிக்கையை சட்டமன்ற தீர்மானமாக்கிட வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
-பாலன், பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி