குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு (CAA, NPR, NRC) குறித்த விரிவான கேள்வி-பதில்கள்..

28 Dec 2019

 பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு (CAA-2019) எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு (NRC) எதிராகவும் நாடெங்கிலும் லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், அறிவாளிகளும், சிறுபான்மை மக்களும் போராடி வருகிறார்கள்.

இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட  நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் இத்திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றன. ஆனால் மத்திய பாசிச பாஜக அரசோ, போராடுகிற மாணவர்களையும், பொது மக்களையும் கடுமையாக போலீஸ் வன்முறையால் ஒடுக்கி வருகிறது. குறிப்பாக பாஜக ஆளுகின்ற உத்திர பிரதேச மாநிலத்தில்  மட்டும்  போலீசின் வன்முறையால் 30க்கு மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்னர். பொதுச் சொத்தை போலீஸ் சேதப்படுத்திவருகிறது. அசாமில் நான்கு பேரை சுட்டுக் கொன்றுள்ளது. மங்களூரில் இரண்டு பேரை சுட்டுக் கொன்றுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி  போலீசோ, ஜாமியா பல்கலைக்கழகத்தில் அத்துமீறி  நுழைந்து  மாணவர்களை மூர்க்கமாக தாக்கியதை நாடே  நேரடியாக கண்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாடெங்கிலும் நடைபெற்றுவருகிற போராட்டங்களால் கலக்கமடைந்துள்ள பாஜக, தற்போது தவறான விளக்கங்களையும் பொய் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளது. நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு எடுக்கிற யோசனை இல்லை எனவும் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தொடர்பில்லை எனவும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா மற்றும் பாஜகவினர் மாறி மாறி பேசி வருகின்றனர்.

இப்பின்புலத்தில்தான் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை குறித்த சுருக்கமான விளக்கங்களையும் பாஜகவின் வகுப்புவாத அரசியல் உள்நோக்கத்தையும்  இப்பிரசுரத்தில் தொகுத்துள்ளோம்.

  1. குடியுரிமை திருத்த சட்டம் CAA-19 என்றால் என்ன? இத்திருத்தம் ஏன் சர்ச்சைக்குரியதாக உள்ளது?

தற்போதையே குடியுரிமை திருத்த சட்டத்தின்படி  (CAA 2019) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்குள் வந்த இந்து, சீக்கியம், கிறிஸ்துவ, பார்சி, பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய ஆறு மதத்தை சேர்ந்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். இவர்கள் 2014 ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்திருந்தால் போதுமானது என்கிறது. ஆனால், இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களை மேற்கூறிய பட்டியலில் சேர்க்காததே சர்ச்சையின் மையம்.

  1. ஏன் இஸ்லாமியர்கள் மட்டும் விலக்கப்பட்டார்கள்?

இத்திருத்தம் மீதான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்சா, மூன்று இஸ்லாமிய அண்டை நாடுகளில் உள்ள இந்து மதத்தை சேர்த்த மக்களே மதப் பெரும்பான்மை மக்களால் “துன்புறுத்தலுக்கு” உள்ளானதாகவும் அதனால்  இந்துக்களை மட்டுமே கவனத்தில் கொண்டதாகவும் விளக்கமளித்தார்.

  1. உள்துறை அமைச்சரின் மேற்கூறிய விளக்கம் சரியானதா?

நிச்சயாக இல்லை. உள்துறை அமைச்சரின் விளக்கமானது பல அம்சங்களில் எதார்த்த உண்மையோடு முரண்படுவதோடு மதப் பாகுபடுத்தலையும் நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

முதலாவதாக

1947 பிரிவினையின்போது பெரிய அளவில் வங்கதேச அகதிகளாக அசாமில் குடியேறினர். அவர்களில் சிலர் இஸ்லாமிய பெரும்பான்மைவாதத்தின் (பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள்) மத நெருக்கடி/துன்புறுத்தல் காரணமாக  இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர். ஆனாலும் பல ஏழை எளிய இஸ்லாமியர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் எனும் கனவில் இந்தியாவில் குடியேறினர்.

ஆக, மதக் காரணங்களுக்காக மட்டுமல்லாமல்  நல்ல வாழ்க்கை நிலையை எதிர்நோக்கி புலம்பெயர்ந்தவர்கள் “பொருளாதார அகதிகள்” எனப்படுவர். சரியாக சொல்வதென்றால் 1951 இல் ஐ.நா அகதிகள் மாநாட்டில் அகதிகளை இவ்வாறே வரையறை செய்துள்ளது.

இந்தப் பொருளாதார அகதிகளை இத்திருத்த சட்டம் விட்டுவிடுகிறது.

இரண்டாவதாக

கடல் நீர் மட்டம் உயர்தல்,அதீத இயற்கைப் பேரிடர் நிகழ்வுகள்  போன்ற காலநிலை மாற்ற பிரச்சனையால் புலம் பெயர்கிற சூழலியல் அகதிகளைப்பற்றி இத்திருத்தம் துளியும் கவலைப்படவில்லை.

மூன்றாவதாக

ஈழத்தில் இருந்து சிங்கள பவுத்த பேரினவாத துன்புறுத்தலால்  பாதிக்கப்பட்ட (இந்து, கிறிஸ்தவ) தமிழர்களையும்,பர்மாவிலிருந்து வருகிற ரோஹிங்கியா இஸ்லாமியர்களையும்  இத்திருத்த சட்டம்  ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தானில் அஹமதியர்கள் இஸ்லாமியர்களே அல்ல என அந்நாட்டு சட்டத்திருத்தம் செய்துள்ளது. அதேநேரம் கேரள உயர் நீதிமன்றமோ, அஹமதியர்கள் இஸ்லாமியர்களே என தீர்ப்பளித்துள்ளது. அது எப்படியானாலும் பாகிஸ்தானில் அகமதியர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இம்மக்கள் யாவரும் தற்போதைய திருத்த சட்டத்தால்  ’சட்டப்புறம்பான குடியேறிகள்’ என  முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இறுதியாக

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கு என சில உரிமைகளைச் சட்டப்பிரிவு 19 இன் கீழ் வழங்கியுள்ளது.மேலும் சட்டபிரிவு-14 சமத்துவத்தையும் சட்டபிரிவு-21 வாழ்வதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் அனைவருக்கும் உறுதிப்படுத்துகிறது. குடிமகன் அல்லாதவரும் மனிதரே என்ற வகையில் அவர்களுக்கும் இந்த உரிமை பொருந்தும்

தேசிய மனித உரிமை ஆணையம் Vs அருணாச்சல பிரதேசம் வழக்கில், சக்மா அகதிகள் குறித்த கேள்வி வாதத்திற்கு வந்தது. வங்காளத்திலிருந்து அகதிகளாக வந்தததால்  இவர்களிடம் உரிய ஆவணம் எதுவும் இல்லை. இந்நிலையில் சக்மா அகதிகள், இந்திய குடிமக்களாக இல்லாவிட்டாலும், அரசியல் சாசன சட்டப்பிரிவு-21  இன்படி வாழ்வதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் பெறுவதற்கு அடிப்படை உரிமை கொண்டவர்கள் என நீதிமன்றம் கூறியது.

இதன் அடிப்படையில் பார்த்தால் CAA என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் -14 மற்றும் 21 ஐ மீறிய, அரசியல் சாசனத்திற்கு விரோதமான மசோதா ஆகும்.

  1. ஆனால் பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதோர் எண்ணிக்கை 23 % இருந்து 3.7 % ஆக குறைந்துவிட்டது என உள்துறை அமைச்சர் கூறியுள்ளாரே?

இது சுத்தப் பொய். 1951 ஆம் ஆண்டில்தான் பாகிஸ்தானில் முதல் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பே நடத்தப்பட்டது. வங்காளதேசமாக  பிரியாத காலகட்டத்தில் மேற்கு  பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்த்தே 14.20 விழுக்காடுதான் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை இருந்துள்ளது. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை தோராயமாக 3.5 விழுக்காடாகவே இருந்துள்ளது. என்பதை 1951 ஆம் ஆண்டுமுதல் 1998ஆம் ஆண்டு வரையிலான பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது.

இஸ்லாமியர்கள், பெரும்பான்மை மக்கள் தொகையாக வாழ்கின்ற நாட்டில் மதச் சிறுபான்மையினராக  இருந்த இந்து, பௌத்த மதத்தை சேர்த்த மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானதால் மட்டுமே பெரியளவில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் எண்ணிக்கை வங்காளதேசத்தில் சரிந்துள்ளது என பாஜக கூறுகிறது. ஆம், சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாயினர் மட்டுமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இதில் பகுதி உண்மை இருந்தாலும், மத நெருக்கடியால் மட்டுமே மக்கள் புலம் பெயரவில்லை. வறுமை, வேலைவாய்ப்புக்காக, நல்ல வாழ்க்கை நிலமைக்காகவும் இந்தியாவில் இஸ்லாமியர் அல்லாதோர் மட்டுமின்றி  பெருமெண்ணிக்கையில் இஸ்லாமியர்களும் இடம்பெயர்ந்தனர்

  1. அப்படியென்றால் எந்த புள்ளிவிவரங்களும் இல்லாமல்தான் பாஜக இந்த திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளதா?

ஆம் நிச்சயமாக. ஹிட்லருக்கு ஒரு கொயபல்சைப் போல மோடிக்கு ஒரு அமித் ஷா உள்ளார் என்பதற்கு மேற்கூறிய பொய்த் தகவல்களே சிறந்த உதாரணமாக கூற முடியும். நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பிற்கு சற்றும் பொருத்தமில்லாமல், உண்மைக்கு புறம்பாக வாய்க்கு வந்த புளுகுமூட்டைகளை நாடாளுமன்றத்தில் அள்ளிவிட்ட அமித்ஷா கொயபல்சையும் மிஞ்சி விட்டார் என்றே கூறவேண்டும். இத்தனை தகவல் பிழைகள் கொண்ட ஆதாரமற்ற புள்ளி விவரங்களை வைத்துத்தான் குடியுரிமை திருத்த சட்டத்தை  நியாயப்படுத்துவதற்கு பாஜகவும் இதர இந்து அடிப்படைவாத அமைப்புகளும் வெட்கமின்றி  கூப்பாடு போடுகின்றன.

  1. பிறகு ஏன் பாஜக இத்திருத்தத்தை கொண்டு வந்தது? பாஜவின் உண்மையான நோக்கமென்ன?

மத துன்புறுத்தல் காரணமாக இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் வரவில்லை மாறாக மற்ற ஆறு மதத்தினர் மட்டுமே மத துன்புறுத்தலால் இந்தியாவிற்குள் அகதிகளாக வந்துள்ளனர் என இஸ்லாமியர்கள் மீதான பாகுபாட்டை பாரதிய ஜனதா கட்சி நியாயப்படுத்துகிறது. இது சின்ன சாக்கு போக்கு மட்டுமே..குடியிரிமை சட்டத் திருத்த மசோதாவானது  இந்து ராஷ்டிரா சித்தாந்தத்தை நடைமுறையாக்க முயல்கிற இந்துத்துவ அடிப்படைவாத அரசின் அரசியல் சாசன விரோத நடவடிக்கையாகும்.

குடியுரிமை சட்டத் திருத்த சட்டம்,மதச் சிறுபான்மையினர் மீதான பாகுப்படுத்தலுக்கு சட்டபூர்வ வடிவம் கொடுக்கிறது.பெரும்பான்மை மதத்தின் பிரதிநிதியாக கருதிக்கொள்கிற ஆர் எஸ் எஸ்/பாஜக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறும்பான்மை மக்களின் சமூக உரிமைகளை சட்டப்பூர்வமாக பறிக்கிறது. குடியுரிமை என்ற சட்ட அங்கீகாரத்தை சட்டப்பூர்வமாக பறிக்கிறது.

1935 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நாசிக்கள் கொண்டு வந்த நூரம்பெர்க் சட்டமானது, யூதர்களை ஜெர்மன் குடியுரிமை பெறத் தகுதி அற்றவர்கள் ஆக்கியது. அரசு மற்றும் பல்கலைக் கழக வேலைவாய்ப்பு பெறுவதற்கு யூதர்களை தடை விதித்தது. பர்மாவில் சிறுபான்மை மக்களான ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு பர்மிய அரசு குடியிரிமை மறுத்ததை இங்கு உதாரணம் கூறலாம்.  இனம்,மத அடிப்படையில் பாகுபடுத்தலை தடுக்கிற சட்டங்கள் ஒழித்துக்கட்டப்படுகின்றன.

எந்த நாட்டில் இன மத சிறுபான்மையினர் மீதான பாகுபடுத்தல், பெரும்பான்மை குழுக்களால் சட்டப்பூர்வமாக மாற்றப்படுகிறதோ, அது அங்கே சிறுபான்மை மக்கள் மீதான கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிடுவதற்கு களத்தை தயாரிக்கிறது.

  1. அசாம் மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்?இவர்களின் போராட்டம் ஏனையே இந்தியப் பகுதிகளில் நடைபெறுகிற போராட்டத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

1947 இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பெரியளவில் வங்கதேசத்தினர்(அன்று கிழக்கு பாகிஸ்தான்) அகதிகளாக அசாமில் குடியேறினர். அவர்களில் சிலர் இஸ்லாமிய பெரும்பான்மைவாதத்தின் (பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள்) மத நெருக்கடி/துன்புறுத்தல் காரணமாக  இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர். ஆனாலும் பல ஏழை எளிய இஸ்லாமியர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் எனும் கனவில் இந்தியாவில் குடியேறினர்.

போலவே

1971இல் நடைபெற்ற வங்கதேச விடுதலை போரின்போது ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர்.

பிரிவினைகள் மற்றும் போர் காரணங்களாலும் நல்ல வாழ்க்கை நிலைமைகளுக்காகவும் இவ்வாறு பலர் அசாமில் குடியேறினார்கள். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக 70 களில் அசாம் மாணவர் போராட்டம் வெடித்து. இதனையடுத்து ராஜீவ் காந்தி ஆட்சியின்போது அசாமிய மக்களுக்கும் இந்திய அரசிற்குமான 1985 அசாம் ஒப்பந்தம் ஏற்பட்டது.அசாம் ஒப்பந்ததத்தின்படி, 1971  மார்ச்சுக்கு முன்பாக வங்கதேசத்திலிருந்து அசாமிற்குள் வந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமைச் சட்டத்தின்படி குடியுரிமை வழங்கப்படும்.

இதன்படியே அசாமில் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு,சுமார் 19 லட்சம் மக்களுக்கு  குடியுரிமை மறுக்கப்பட்டது.இதில் இந்துக்களும் அடக்கம்.

இப்பின்புலத்தில்தான் தற்போதைய குடியுரிமை திருத்த சட்டத்தின்படி(CAA 2019) குடியுரிமை பெறுவதற்கு 2014 ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்திருந்தால் போதுமானது என்கிறது.இது அசாமில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுதியுள்ளது.அசாம் ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது எனக் கூறி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அசாம் போரட்டக்காரர்களுக்கு அகதிகள் இஸ்லாமியர்களா, இஸ்லாமியர்கள் அல்லாதவர்களா என்பது பொருட்டல்ல. மாறாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதையே எதிர்க்கிறார்கள்.

1971 க்குப் பின்பு அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தில் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் வங்கதேசத்திலிருந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்குக் இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

  1. முன்னதாக அசாமில் மேற்கொண்ட தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) ஏற்படுத்திய விளைவுகள் என்ன?

கடந்த ஆகஸ்டில் அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்ட போது, ஏறக்குறைய 19 இலட்சம் மக்கள் அப்பட்டியலில் இடம் பெறவில்லை.

பட்டியலில் இடம் பெறாதவர்கள், தாங்கள் குடிமக்கள்தான் என்று நிரூபிக்க முறையீடு செய்ய வேண்டும். இவர்கள் நாடற்றவர்களாக்கப்படலாம் என ஐ.நா மற்றும் பல்வேறு சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.

இப்பட்டியலானது அசாமில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியின் பகுதியாகும். இவர்கள் அருகிலுள்ள இஸ்லாமிய பெரும்பான்மை நாடான வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என இந்திய அரசு கூறுகிறது. ஆனால், இப்பட்டியல் பல பத்தாண்டுகளாக இங்கு முறையாக வாழ்ந்து வந்த இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பட்டியலில் இடம்பெற வேண்டி விண்ணப்பிப்பவர்கள் பத்தாண்டுகள் பின்னோக்கிக் காட்டும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் ஆவணங்கள் பராமரிக்கும் பழக்கம் அரிதாகவே காணப்படுகிறது. தடுப்பு முகாம்களைக் கட்டும் தொழிலாளிகள் உட்பட பலர் தேசியக் குடியுரிமைப் பட்டியலின் கடுமையான விதிகளால் சிக்கியுள்ளனர்.

“எங்களிடம் பிறப்புச் சான்றிதழ் எதுவும் இல்லை”, என கோல்புரா  கிராமத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுவரும் முகாமில் பணிபுரியும் தொழிலாளி மாலதி ஹஜோங் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

உண்மை யாதெனில், பெரும்பாலான வங்காள இஸ்லாமியர்கள் பல தசாப்த காலமாக அசாமில் வாழ்ந்து வருகிறார்கள். சட்டப்பூர்வ வழிகளில் அவர்கள் இங்கே குடியேறவில்லை. பலர் அசாமிலேயே  பிறந்தும் உள்ளனர். தற்போது வங்காளத்தில் அவர்களுக்கு எந்த  வேர்களுமே இல்லை.

முன்னதாக, குடியுரிமை இழப்புடன் தொடர்புடைய அச்சம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக அசாமில் இதுவரை 51 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறுகிறார் சட்ட உதவி அமைப்பொன்றை சேர்ந்த சாம்சர் அலி. கடந்தாண்டு ஜனவரி மாதம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதலாவது வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட பிறகே, அவற்றில் பெரும்பாலான தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நாடுமுழுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு எடுப்பதன் முன்னோட்டமாக தேசிய மக்கள்தொகை பதிவேடு எடுக்கின்ற பணியையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

  1. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) குறித்து புரிந்துகொள்ளமுடிகிறது. இது என்ன தேசிய மக்கள் தொகை(NPR) பதிவேடு,அப்படியென்றால் என்ன?

இந்திய ஒன்றிய அரசு அதன் இணையதளத்தில் NPR  குறித்து வெளியிட்ட விளக்கம் வருமாறு ”நாட்டில் உள்ள மக்களை அடையாளம் காணும்வகையில்  ஒரு ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பை உருவாக்குவதாகும்”,”குடி விவரங்கள் மற்றும் கைரேகை பதிவுகள் உள்ளிட்ட பயொமெட்ரிக் தகவல்களை உள்ளடக்கியிருக்கும்” என்கிறது.

  1. சரி,தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் என்னென்ன விவரங்கள் பெறப்படும்?                                                         இதற்கு விடைகாணும் பொருட்டு,தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை குறித்து ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட மாதிரி கணக்கெடுப்பை scroll ஊடகம் ஆய்வு செய்தது. இந்த கணக்கெடுப்பில் சுமார் 14 கேள்விகள் கேட்கப்பட்டது. அக்கேள்விகள் பொதுவாக பெயர், வயது, பாலினம், கல்விநிலை, வேலைநிலை, பிறந்த இடம், இறப்பு விவரம், தாய் மொழி, முகவரி, எந்த நாட்டவர் போன்ற குடிவிவர கேள்விகளை கொண்டுள்ளது.

மேற்கூறிய கேள்விகளைப் பொறுத்தவரை இந்த கணக்கெடுப்பு கிட்டத்தட்ட வழக்கமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெறப்படுகிற விவரங்களை ஒத்துள்ளது. ஆனால் இந்த கேள்விகளோடு கூடுதலாக பெற்றோர்களின் பிறப்பிடம் குறித்த கேள்வி தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் கூடுதலாக கேட்கப்படுகிறது. மேலும் ஆதார் எண், ஓட்டுனர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை  , அலைபேசி எண் ஆகிய விவரங்களை கட்டாயம் என்றில்லாமல்  விருப்பத்தின் பேரில் வழங்கலாம் என்கிறது.

இவ்வாறு விருப்பத்தின் பேரில் மக்களிடமிருந்து  பெறப்படுகிற தகவல்களைக்கொண்டு  பெற்றோர்களின் பிறப்பட விவரங்களை  ஆதார் எண் போன்ற பயொமெட்ரிக் விவரங்களோடு முதல் முறையாக ஒன்றிய அரசு இணைக்கிறது.

  1. தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) எவ்வாறு தேசிய குடிமக்கள் பதிவேட்டோடு (NRC) தொடர்ப்புகொண்டுள்ளது?

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு, குடியுரிமை சட்டம் 1955 ,சட்ட வடிவம் கொடுக்கிறது. 2003 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான வாஜ்பாய் அரசு இந்த சட்டத்தில் திருத்தம் செய்து “சட்டப்புறம்பான குடியேறிகள்” என்ற அம்சத்தை புதிதாக சேர்க்கிறது. இந்த திருத்தத்தை அமல்படுத்துவதற்கு சில விதிகள்  வகுக்கப்படுகின்றன. அப்போதே இந்த விதிகள் சலசலப்பை ஏற்படுத்துகின்றன.

அதேவேளையில் இந்தியக் குடிமக்கள் பட்டியலை (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் மூலமாக) தயாரிக்கும் பொருட்டு சில அடிப்படைகளை உருவாக்கினார்கள். ”இந்த  பதிவேடானது இந்தியாவில் வசிக்கின்ற இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமகன்கள் குறித்த விவரங்களை கொண்டிருக்கும்” என  ஒன்றிய அரசு தெரிவித்தது.

இதன் செயல் விதிமுறைகளை அரசு இவ்வாறு விளக்குகிறது “இந்திய குடிமக்கள் பதிவேடானது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும்,நபர்களிடத்திலும் தனித்தனியே சென்று வட்டார அளவிலே இந்திய  குடியிரிமை நிலை உள்ளிட்ட  குடிவிவரங்களையும்  சேகரிக்கும் ”என்றது.

நாடுமுழுவதும் மக்களிடம் பெறப்படுகிற இப்பதிவேட்டை தொகுப்பதற்கு, நிர்வாக ரீதியான உள்கட்டங்கள் உருவாக்கப்பட்டன.தேசிய குடிமக்கள் பதிவேடு,

மாநில -இந்திய குடிமக்கள் பதிவாளர்,மாவட்ட -இந்திய குடிமக்கள் பதிவாளர்,துணை -மாவட்ட இந்திய குடிமக்கள் பதிவாளர்,வட்டார -இந்திய குடிமக்கள் பதிவாளர்  ஆகிய துணைக் கட்டங்களாக பிரிக்கப்பட்டு,தகவல்கள் தொகுக்கப்படுகின்றன.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.இதில் இந்திய குடிமக்கள் பதிவு எங்கே உருவாக்கப்படுகிறது? தேசிய மக்கள்தொகை பதிவேட்டை “சரிபார்த்து” வட்டார இந்திய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படுகிறது.அதாவது,தேசிய மக்கள்தொகை பதிவேடு, வட்டார இந்திய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குகிறது.இங்கே, வட்டார இந்திய குடிமக்கள் பதிவேடு செய்வது ஒன்றுமட்டும்தான்.அது தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெறப்பட்ட இந்திய குடிமகன் குறித்த விவரத்தை சரிபார்ப்பது மட்டுமே.ஒருவேளை இந்திய குடிமகன் குறித்த சந்தேகம் இருந்தால் “கோரிக்கை மற்றும் மறுப்பு” என்ற அடுத்த நிகழ்முறைக்கு மாற்றிவிடப்படும்.

மொத்தமாக தொகுத்துக் கூறுவதென்றால்,

  • நாட்டிலுள்ள அனைத்து மக்களின் விவரப்பட்டியலானது,  தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்(NPR) மூலமாக  சேகரிக்கப்படுகிறது.
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை சரிபார்க்கிற தேசிய இந்தியக் குடிமக்கள் பதிவேடு(NRC),யார் இந்திய குடிமக்கள்? யார் இந்திய குடிமக்கள் இல்லை? என முடிவு செய்து குடிமக்கள் பட்டியலை தயாரிக்கிறது. சந்தேதேகத்திற்கு இடமான குடிமக்கள் பட்டியலும் இதன் மூலம் பெறப்படுகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேடே, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் படியும் தொடக்கமுமாகும் என  தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்  பொருளாதார அறிஞருமான திரு பிரசென்ஜித் போஸ் எச்சரிக்கை செய்கிறார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கமே தேசிய குடியுரிமை பதிவேட்டை உருவாக்குவதுதான் என மனித உரிமை செயல்பாட்டாளர் ரஞ்சித் சுர் கூறுகிறார்.

  1. நாடுதழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு, அசாமில் மேற்கொள்ளப்படுகிற தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை 2003 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. அசாமிற்கு மட்டும் சில விலக்கும் அளிக்கப்பட்டது. அதாவது 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பு வரை அசாமில் இருந்தவர்கள் மற்றும் 1951 ஆம் ஆண்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டு ஆவணத்திலுள்ள  குடிமகனின் நிலை  ஆகியவற்றின் அடிப்படையில் அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும் போதிய ஆவணங்களுடன் அரசிடம் முன்வந்து சமர்ப்பிக்கவேண்டும்” என்றது.

இந்தியாவின் இதர பகுதிகளில்,தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படுகிறபோது, அசாம் மேற்கூறிய வகையில்  வேறுபடுகிறது.

மேலும் அசாமில் ஒவ்வொரு குடிமகனும் தாமாக முன்வந்து குடியுரிமையை நிருபிப்பதற்கு விண்ணப்பம் செய்யவேண்டும். அரசு அதை சரிபார்த்து குடியுரிமையை  தீர்மானிக்கும். மாறாக ஏனையே இந்தியாவில், அரசு அதிகாரிகள்  வீடு வீடாக சென்று பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை உருவாக்குவார்கள் என ரஞ்சித் சுர் கூறுகிறார்.

முன்னதாக அசாமில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடிமக்கள்  பதிவேடு அதிகாரிகளின் தன்னிச்சை முடிவுகளுக்கு வாய்ப்பளிக்கப்படுவாத விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதர இந்தியாவில், தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலமாக உருவாக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேட்டு நடைமுறையோ மேலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகும்  என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

அசாமில், மக்கள் இந்துவோ இஸ்லாமியரோ ஏழையோ பணக்காரனோ அனைவரும் ஒரு வரிசையில் வந்து நின்றனர். மேலும் காலக்கெடு தேதியும் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எல்லாமே அதிகாரிகள் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது.  நாட்டின் குடிமக்கள்  யார்? யார் குடிமக்கள் இல்லை? என்பதை சந்தேகத்தின் அடிப்படையில் அரசே தன்னிச்சையாக தீர்மானிக்கிறது.

13.தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

பொதுவாக தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியே என பாஜக கூறிவருகிறது. மேற்கு வங்கத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு வேலையை அம்மாநில முதல்வர் நிறுத்தி வைத்தபோதும் இதையே பாஜக மீண்டும் கூறியது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ஒரு பகுதியே தேசிய மக்கள் தொகை பதிவேடு எடுக்கிற பணி என பாஜக எம்பி  ஸ்வபன் தாஸ்குப்தா கூறினார்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு குடியிரிமை சட்டம்1955  மூலமாகவும் பிறகு 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விதிகள் மூலமாகாவும் நடைமுறையாக்கம் பெறுகிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்போ, 1948 – மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப்படி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை அரசு பொதுவெளியில் வெளியிடாது, ரகசியம் காக்கப்படும். மாறாக தேசிய மக்கள்தொகை பதிவேடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதன் பேரில் பெறப்படுகிற “கோரிக்கை மற்றும் மறுப்பு” ஆகியவற்றின் அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்படுகிறது. இதன் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படுகிறது

ஆக இரு சட்டங்களும் வெவ்வேறு நோக்கமுடையது. ஆனால் இதை பாஜக தவறாக சித்திரிக்கிறது.

  1. அப்படியென்றால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுப் பணியை எதிர்க்கவேண்டுமா?

ஆம் நிச்சயமாக. நாடெங்கிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(CAA-2019) எதிராகவும்  தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு(NRC) எதிராகவும் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்ற நிலையில், அதிகம் கவனம் பெறாத தேசிய மக்கள் தொகை பதிவேட்டை(National population Register(NPR)) அமலாக்க முயல்கிற அதிகாரவர்க்க  முயற்சிகள் தற்போது எதிர்ப்பிற்குள்ளாகியுள்ளன.

மேற்குவங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR)  தயாரிக்கும் வேலையை “பொதுமக்கள் நலனின்” பெயரில் நிறுத்துவதாக  அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி ஆணையிட்டுள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தற்போது கேரளா அரசும் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 31,2019 இல் அசாம் தவிர நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களிலும்  மக்கள்தொகை பதிவேட்டை மேற்கொள்ளவேண்டும் என மோடி அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  1. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்(NRC)எந்த தொடர்ப்பும் இல்லை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்(NRC) தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும்(NPR) எந்த தொடர்பும் இல்லை என அமித்சாவும் பாஜக ஆதரவாளர்களும், சில சமயம் மோடியும் கூறிவருகிறார்களே? அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள கேள்வி பதில் விளக்கத்திலும் அவ்வாறுதானே கூறப்பட்டுள்ளது?

குடியுரிமை சட்டத் திருத்தம் CAA-19 என்பது சட்டம் மட்டுமே மாறாக NPR/NRC விதிகள் பற்றியது என்கிறது அரசு. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான விதிகள் இனிதான் உருவக்காப்படவேண்டும் எனவும் மோடியும் சட்ட அமைச்சரும் கூறுகிறார்கள்.

இக்குடியுரிமை திருத்த சட்டம் அகதிகளை குறித்தது தான் என்றாலும், உள்நாட்டில் உள்ள குடிமகனை இந்திய அரசு எவ்வாறு அடையாளம் காணப் போகிறது என்பதில் ஐயம் எழுகிறது. ஏனெனில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான பாஜகவின் அரசியல் நோக்கமும் இந்திய குடிமகனை அடையாளம் காண்கிற இந்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு(NPR)மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு(NRC) நடைமுறையில், எந்தவித வெளிப்படைத்தன்மையும் கடைபிடிக்கப்படப்போவதில்லை என்பதிலிருந்து இந்த அச்ச உணர்வு எழுவது இயல்பே.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் யார் குடிமகன் என்பது தேசிய குடியுரிமை பதிவேடு உறுதி செய்கிறது என்பதை மேலே விரிவாக பார்த்தோம்.

குடிமக்கள் பதிவேட்டில்,போதிய ஆவணங்களைக் காட்டி குடியுரிமையை நிரூப்பிக்க முடியாமல் போனவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின் வழியே நிருபிக்க வேண்டும்.அதாவது NPR/NRC இல் குடியுரிமை விலக்கப்பட்ட/மறுக்கப்பட்ட மக்கள், CAA ரூட்டில் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்.இதிலும் குடியுரிமை நிரூபணம் செய்ய இயலாமல் போனால் ‘சட்டத்திற்கு புறம்பான குடியேறிகள்” என குடியுரிமை இல்லாத மக்களை முத்திரை குத்துகிற குடியுரிமை சட்டத்திருத்தம் 2003 இல் வாஜ்பாய் ஆட்சியில் முன்னரே மேற்கொள்ளப்பட்டுவிட்டது.

மேலும் 2003 ஆம் ஆண்டு திருத்தத்தின்படி, இந்திய அரசு தனது குடிமக்களைக் கணக்கிட்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு(National Population Registry) அல்லது என்.பி.ஆரினை உருவாக்கியது.

இப்போது சொல்லுங்கள் NPR /NRC இக்கும் CAA-2019 இக்கும் தொடர்பே இல்லையா?

  1. சரி அப்படியே வைத்துக் கொள்வோம்.ஆனால் பிரதமர் மோடியோ நாடு முழுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு எடுக்கிற யோசனை இல்லை எனக் கூறியுள்ளாரே? தற்போது உள்துறை அமைச்சரும் அவ்வாறு தெரிவித்துள்ளாரே?

அண்மையில்  டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேசிய மோடி, ““தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் பற்றி தனது அரசு ஆலோசிக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அசாமில் மட்டுமே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்சாவின் கடந்த கால பேச்சோடு மோடியின் தற்போதைய பேச்சு முற்றிலும் முரண்படுகிறது. இதில் யார், எப்போது கூறுவது உண்மை? எனத் தெரியவில்லை. முன்னதாக அமித்சா பேசியதை பார்ப்போம்.

மேற்கு வங்க தேர்தலின் போது ஏப்ரல் 21ம் தேதி பேசிய அமித்ஷா, “நாங்கள் நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவோம். அதன் மூலம் நாட்டிலிருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் அல்லாத ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றுவோம்” என்றார். இதைப்போல மாநிலங்களவையில் குடிமக்கள் பதிவேட்டின் மீதான விவாதத்தின் போது பேசிய அமித்ஷா, “குடிமக்கள் பதிவேட்டின் மூலம் இந்திய குடிமக்களை கணக்கெடுப்போம்.. இந்து, கிறித்துவர், பௌத்தர், சமணர், சீக்கியர் ஆகிய அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதற்காகவே இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கொண்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளார். இது போல இன்னும் பல இடங்களில் நாடுதழுவிய அளவில் குடிமக்கள் பதிவேடு எடுக்கப்பட்டு ஊடுருவல்காரார்களை விரட்டுவோம் என பேசியுள்ளார். தற்போது அவரது பேச்சுக்கு அவரே பொறுப்பு கூறும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு,மோடியையும் இக்கட்டில் மாட்டிவிட்டுள்ளார். மோடி அமித்ஷாவின் இம்முரண்பட்ட பேச்சுக்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில், நாடெங்கிலும் குடிமக்கள் பதிவேடு எடுக்கிற திட்டம் ஏதும் இல்லை என அமித்ஷா அவரது சொந்த கருத்தையே மறுத்துள்ளார், அல்லது பொய் கூறுகிறார்.

  1. அப்படியானால் நாட்டில் அகதிகள் தடுப்பு காவல் மையம் அமைக்கப்படவில்லை என பிரதமர் மோடி கூறியதும் உண்மையில்லையா?

டெல்லி கூட்டத்தில் பேசிய பிரதமர்  மோடி ‘குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஆபத்து இல்லை. நாட்டில் எங்கேயும் தடுப்புக் காவல் மையங்கள் கட்டப்படவில்லை’ என்றார்.ஆனால் இதுவும் வடிக்கட்டியே பொய்தான்.

அசாமில், கிட்டத்தட்ட 20 இலட்சம் மக்களுடைய குடியுரிமை நீக்கப்படலாம் என அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய அரசு தடுப்பு முகாம்களைக் கட்டமைத்து வருகின்றது. அப்பகுதியைச் சேர்ந்த செய்தி அறிக்கைகளின்படி, திட்டமிடப்பட்ட 10 தடுப்பு முகாம்களில் கோல்புராவும் ஒன்று. 3000 மக்களைக் அடைக்கும் நோக்கோடு  உருவாக்கப்படும் கோல்புரா முகாம் 7 கால்பந்து மைதானங்களின் பரப்பளவு கொண்டது.

உயர்ந்த மதிற்சுவர்களும் பாதுகாப்புப் படையினருக்கு காவற்கோபுரங்களும், முகாமின் மையப்பகுதியில் ஒரு பள்ளியும் மருத்துவமனையும் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

  1. திடுமென அயலவர்கள்/ஊடுருவல்காரர்கள்/அகதிகள் மீதான வெறுப்பரசியலை முக்கியப் பிரச்சார அரசியல் உக்தியாக பாஜக கையலெடுப்பதற்கான காரணம்தான் என்ன? இந்து ராஷ்டிர சித்தாந்தம் மட்டும்தான் காரணமா?

அதுமட்டும்தான் எனக் கூறமுடியாது. குறிப்பாக இதற்கு பின்னாலான பொருளாதார காரணங்களும் உள்ளன.

அரை நூற்றாண்டு கால முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் (தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம்) ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வட அமெரிக்காவிலும் ஏற்படுத்திய சமூக நெருக்கடிகள், அதன் உப விளைவான ஊழல்கள், சமூக குற்றங்கள், வேலைவாய்ப்பின்மை ஆகியவை உலகப் பொருளாதார ஒழுங்கை ஆட்டங்கானவைத்தன.

உலகமய தாராளமய கொள்கைகள் தோற்றுவித்த சமூக நெருக்கடிகளுக்கு எதிரான பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் வர்க்கப் போராட்டமானது, எதிர்புரட்சிகர சக்திகளான வலதுசாரி பாபுலிச அரசியல் சக்திகளால்  அயலவர்கள்/ஊடுருவல்காரர்கள்/அகதிகள் மீதான வெறுப்பரசியலாக மடைமாற்றப்பட்டது.

உலகெங்கிலும் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும், முற்போக்கு முகாம்களின் சமூக செல்வாக்குகள் சரிவுற்றுவருவதும் கடந்த பத்தாண்டுகால உலக அரசியல் போக்காகவே மாறிவருவதை வெறும் தற்செயல் நிகழ்வாக புரிந்து கொள்ளமுடியாது.

அமெரிக்காவில் ட்ரம்ப், பிரேசிலில் போல்சொனரோ, துருக்கியில் எர்டோகன், இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் போன்றோர்கள் தற்காப்புவாதம், இஸ்லாம் வெறுப்பு, அகதிகள் வெறுப்பு அரசியலுக்கு மேற்கூறிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளும் அதன் விளைவான சமூக நெருக்கடிகளும்/கொந்தளிப்புகளும் அடித்தளமாக உள்ளன.

முதலாம் உலகப் போருக்கு பிந்தைய ஜெர்மனியானது,போரால் பெரும்  பொருளாதார நெருக்கடிகளாலும் சமூக நெருக்கடிகளாலும் சூழப்பட்டிருந்த நிலையில்தான் யூதர்கள் மீதான வெறுப்பரசியலை ஹிட்லரின் நாசிசம் முன்வைத்து மக்களைப் பாகுபடுத்தியது. ஹிட்லருக்கு முன்பே யூதக் கேள்வி இருந்தாலும் நெருக்கடி காலத்தில், யூதக் கேள்வி முன்னுக்கு கொண்டுவரப்பட்டு சமூகத்தைப் பிளவுபடுத்தியது.

இஸ்லாம் வெறுப்பு, இன வெறுப்பு, அகதிகள் எதிர்ப்பு, அதீத தேசியவாதம், கவர்ச்சிகர வாய்வீச்சுரைகள், நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை வழங்குவது, அதி மனித வழிபாட்டிற்கு சமூகத்தை உடன்படவைப்பது, ஊடகங்களை விலைக்கு வாங்குவது, கார்ப்பரேட்மய பிரச்சார பாணி  போன்ற பல்வேறு விதமான வலது பாபுலிச உத்திகளால் நகர்ப்புற தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வர்க்க உணர்வும் வர்க்கப் போராட்டமும் திசை திருப்பப்படுகின்றன. பின்னர்,சட்டப்பூர்வ வடிவில் வலது சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்றனர்.

ஆக, இந்த பின்புலத்தில் பார்த்தோம் என்றால், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பாகுபாடு ஏற்கனவே இருந்தாலும், தற்போது இந்தியாவின் பொருளாதார சீரழிவு காலகட்டத்தில், வளர்ச்சி கோஷம் மங்கலாகிவிட்ட சூழலில், ஆட்சியாளர்கள் மீதான சமூகத்தின் கொந்தளிப்புகள் மத, இன மோதலாக வலது பிற்போக்கு சக்திகளால் மடை மாற்றப்படுகிறது. தற்போது அமித்சாவின் ’ஊடுருவல்கார்கள்’ பிரச்சாரத்தை மேற்கூறிய பின்புலத்தின் காண்பது அவசியாமாகும்.

குடியுரிமை பறிப்பும் தமிழர்களும்:

சொந்த நாட்டிலேயே தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதும்  தமிழர்கள்  இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதும் வரலாற்றில் நாம் கண்டு வருகிறோம். குடியுரிமை பறிக்கப்பட்டு  தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வந்துள்ளனர்.

குற்றப்பரம்பரை சட்டம்: காலனியாதிக்க ஆட்சி காலத்தில் குற்றப் பரம்பரை சட்டமானது தமிழர்களை இரண்டாம் நிலை குடிமக்ளாக அடக்கி ஒடுக்கியது. சித்தரவதை செய்தது. குற்றப் பரம்பரையினர் சட்டம்  1871, காலனியாதிக்க அரசிற்கு எதிராகக் குரல் கொடுத்த மக்களுக்கு எதிராக  இந்தச்சட்டத்தைப் பயன்படுத்தியது.

சாதி அடிபப்டையில் குறிப்பிட்ட சாதி மக்களை  ‘பிறவிக் குற்றவாளிகள்’ என்றது. அந்தச் சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். இரவில் ஆண்கள் அனைவரும் . காவலர் கண்காணிப்பில் காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். பக்கத்துக்கு  ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும் எனக் கூறியது. இச்சட்டத்தால் இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம்.

தமிழக பர்மிய அகதிகள் : காலனியாதிக்க காலத்தில் பர்மாவிற்கு புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள்,1960 களில் அங்கு  நடைபெற்ற ராணுவ ஆட்சியின் ஒடுக்குமுறையால் கொடுமைக்கு உள்ளானார்கள்.உழைப்பால் சேர்த்த அனைத்து சொத்தையும் விட்டுவிட்டு தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து வந்தார்கள். இவ்வாறு வந்த  பர்மியத் தமிழர்களும் இந்தியாவில் நாடற்றவர்களாகவே  நடத்தப்படுகிறார்கள. நூறாண்டுகளுக்கு முன்பாக பர்மாவை பொன்னாக்கிய தமிழர்கள் இன்று நாடற்ற அகதிகளாக தமிழகத்தில் உள்ளனர்.

இலங்கை மலையகத் தமிழர்கள்: சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் நிலவிய கடும் பஞ்சத்தாலும் சாதிய ஒடுக்குமுறையாலும்  இலங்கையின் தேயிலைக் காடுகளுக்கு கூலித் தொழிலாளிகளாக சென்ற மலையகத் தமிழர்கள், 1948 ஆம் ஆண்டைய  இலங்கை குடியுரிமைச் சட்டம்,  1964 லால் பகதூர் சாஸ்திரி – சிறிமாவோ பண்டாரநாயக்க ஒப்பந்தம் போன்றவற்றால் சுமார்  நாற்பது ஐம்பது ஆண்டுகளாக இலங்கை –இந்தியா ஆகிய இரு நாடுகளாலும் கைவிடப்பட்டு இலங்கைத் தீவிலும் தமிழகத்திலும்  நாடற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

 

இஸ்லாமயிர்க்ளின் குடியுரிமை பறிப்பு:

இந்திய துணைக்கண்டத்தில் இந்து பெரும்பான்மைவாத அடிப்படையில்  இஸ்லாமியர்கள் இந்நாட்டு மக்கள் அல்ல என்றும் இங்குள்ள இந்துக்களே இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்றும் இஸ்லாமிய  மக்களை எதிரிகளாக சித்திரித்து இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிப்பை பாஜக ஆர் எஸ் எஸ் நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்கிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றியுள்ள மூன்று இஸ்லாமிய நாடுகளில் வாழ்கின்ற இந்து மத மக்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக் கொண்டு இந்தியாவுக்கு இந்து நாடு என்ற தோற்றத்தை வழங்க முயற்சிக்கின்றது பாஜக. அண்டை நாடுகளில் இந்து சிறுபான்மை மக்கள் .ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள், இந்து நாடு அடைக்கலம் தருகிறது என்ற தோற்றத்தை வழங்கி, இந்து பெரும்பான்மைவாத அங்கீகாரத்தை பெற முயல்கிறார்கள்.இந்து ராஷ்டிர கொள்கையின் நடைமுறையாக மேற்கொள்கிறார்கள்.

ஆனால் இம்முயற்சி .இஸ்லாமியர்களுக்கு  எதிராக மட்டுமே கட்டமைக்கப்படவில்லை.ஆர் எஸ் எஸ் பாஜகவின் இந்து ராஷ்டிரத்தில் குடிமக்களாக அழைக்கப்படுகிற இந்து மக்களும்  இந்து ராஷ்டிர கொள்கையால் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள்.கேரள சபரிமலை கோவிலில் பெண்கள் நுழையக்கூடாது என முழங்குகிற இந்து ராஷ்டிரா பெண்களை இரண்டாம் குடிமக்களாகவே நடத்துகின்றன.போலவே நால்வர்ணக் கொள்கை அடிப்படையில் சூத்திரர்கள் கீழ் மக்களாக இரண்டாம் தர மக்களாகவே நடத்தப்படுவார்கள். ஆக மதம் என வரும்போது பெரும்பான்மைவாத அணி சேர்க்கைக்காக இந்து மத மக்களை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நிறுத்தப்படுவர்,  இந்துராஷ்டிரம் என  வரும்போது  ஒடுக்கப்பட்ட  மக்களும் பெண்களும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவர்.

 

மத்திய அரசே!

  • போராட்டக்காரர்கள் மீதான போலீஸ் வன்முறையை உடனடியாக நிறுத்து!
  • இஸ்லாமியர் மற்றும் இலங்கைத் தமிழகர்களுக்கு குடியுரிமையை மறுக்காதே!
  • இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தாதே!
  • குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்(NRC), தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும்(NPR) உடனடியாக திரும்பப் பெறு!

தொகுப்பு: அருண் நெடுஞ்சழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW