பெரியாரை தமிழ்நாட்டின் ‘சன் யாட் சென்’ என அழைப்பது பொருத்தமுடையதாக இருக்கும்…
(பெரியாரின் வேர்களைத் தேடி மூன்று நாள் அமர்வில் பெரியாரின் தத்துவப் பெருவெளிக்கு அப்பால் என்ற தலைப்பில் 25-8-2019 அன்று பேசிய உரையின் செழுமைப்படுத்தப்பட்ட எழுத்துவடிவம் – நிமிர்வோம் நவம்பர் 2019 இதழில் கட்டுரையாக வெளிவந்தது)
தமிழர்களின் புதுமைக்கால வரலாற்றில் இருந்து பிரித்தெடுக்க முடியாத பெரியார் மீது குற்றாய்வுகள் மட்டுமின்றி அவதூறுகளும், வெறுப்புரைகளும் அதிகம் பரப்பப்படும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்திய, தமிழக வரலாற்றுப் போக்கில் பெரியாரை நாம் புரிந்து கொள்வது எப்படி? இதனை உள்ளூர் வரலாறு மட்டுமின்றி உலகளாவிய வரலாற்றுப் போக்கின் ஊடாகப் பார்க்க வேண்டி இருக்கிறது.
வரலாற்றுத் திருப்பம்:
பெரியார் என்றால் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்பதில் இருந்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அன்றைய தமிழக அரசியல் வெளி, இந்திய அரசியல் வெளி எப்படி இருந்தது? ஆங்கிலேயக் காலனியாதிக்கத்திற்கு எதிரான இந்திய தேசிய இயக்கமே இந்தியா முழுவதும் மையநீரோட்ட அரசியலாக இருந்தது. அதன் அரசியல் இயக்கமாகக் காங்கிரசு கட்சி இருந்தது. அந்தக் காங்கிரசு கட்சியில் தான் பெரியாரும் இருந்தார். காங்கிரசு இந்திய விடுதலைக்குக் கொடுத்த முக்கியத்துவத்திற்கு இணையாக, சமூக மாற்றத்திற்கும், சாதி ஏற்றத்தாழ்வுக்கும் எதிரானப் போராட்டத்திற்குக் கொடுக்கவில்லை. இந்த இடத்தில் தான் பெரியார் காங்கிரசுடனான தனது பயணத்தை முறித்துக் கொண்டார். தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு இந்தப் பாதையிலான பயணம் உதவாது என்று அறிவித்தார். வேறொரு பாதையைத் தெரிவு செய்தால்தான் இந்த சமூகம் உய்வு பெறும் என்று தீர்மானம் எடுத்தார். 1925 இல் குடியரசு இதழைத் தொடங்கினார். அதுவே அவரது சுயமரியாதை இயக்கத்தின் தோற்றமுமாகும். இந்தத் திருப்பம் பெரியார் தன் வாழ்வில் மேற்கொண்ட திருப்பமாக மட்டும் அமையவில்லை. எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகமே தனது வளர்ச்சிக்காகத் தெரிவு செய்து கொண்ட பாதையாக அமைந்தது. அதனால்தான், தமிழினம் தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்கான இயக்கமாக, சுயமரியாதை இயக்கத்தை விவரித்தார் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ்., அவர் மட்டுமல்ல, நேரெதிர் முகாமில் இருக்கும் இன்னொருவர் பெரியாரின் காலத்தை எப்படிப் பார்க்கிறார் என்று குறிப்பிட்டால் மேற்படி கருத்து இன்னும் துல்லியப்பட்டுவிடும்.
அண்மையில் துக்ளக் இதழில் வரும் கேள்வி பதில் பகுதியில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி, ’தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பின்வரும் பொருளில் பதிலளித்தார். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றைத் தாம் நான்கு கட்டமாகப் பார்ப்பதாகச் சொன்னார். முதல் கட்டம், இந்திய தேசியத்தோடு ஒன்றுபட்டு நின்று பயணித்த காலம். பின்னர் பெரியாரின் காலம். அவர் தேசியத்திற்கு எதிராக நாத்திகம், பிரிவினை, தேச விரோதக் கருத்துகளின் மூலம் ஆபத்தான வழியில் கொண்டு சென்றார். அந்தத் திசைப் போக்கை மடைமாற்றி இந்திய தேசிய நீரோட்டத்தில் தமிழக அரசியலைக் கொண்டுவந்து இணைத்தார் அண்ணா. இது மூன்றாவது கட்டம். பின்னர், எம்.ஜி.ஆர். தமிழக அரசியலை இன்னும் முழுமையாக இந்திய தேசிய நீரோட்டத்தில் இணைத்து விட்டார். இது நான்காவது காலகட்டம். அதற்குப் பின்னான காலம் என்பது உப்புச் சப்பில்லாத கருணாநிதி, ஜெயலலிதா போட்டி அரசியல் காலமாக இருந்தது. பழையனவற்றை விட்டகன்று புதிய சிந்தனை கொண்டவர்கள் முன்னுக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உண்டு.
அதாவது, பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததிலிருந்து, அறிஞர் அண்ணா, திமுக வைத் தொடங்கிய 1949 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தைத்தான் மிகவும் ஆபத்தான காலமாக குருமூர்த்தி சொல்கிறார். உண்மையில், அவர்களே சொல்வது போல் தமிழகம் ஓர் ஆன்மீகப் பூமிதான். பெரியாரின் நாத்திகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தெருவுக்குத் தெரு கோயில்கள் உள்ளன, மாதந்தோறும் மக்கள் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனாலும், அவர்கள் பெரியாரின் நாத்திகத்தை ஏன் ஆபத்தாகப் பார்க்கிறார்கள்? காரணம், மதவழிப்பட்ட தேசியத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று உழைப்பவர்களுக்கு நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு என்பதோடு அவர்கள் கட்ட நினைக்கும் இந்து தேசிய மறுப்பாகவும் அமைந்துவிடுகிறது. அதனால்தான், அவர்கள் பெரியாரின் காலத்தை ஆபத்தானதாக, தேசத்திற்கு எதிரானதாகப் பார்க்கிறார்கள். திமுக, அஇஅதிமுக வின் தோற்றத்தை அவர்கள் மடைமாற்றமாகக் காண்கிறார்கள்.
ஆகவே, பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் என்பது தமிழ்ச் சமூகம் தன்னுடைய வளர்ச்சிக்காகத் தெரிவு செய்து கொண்ட வரலாற்றுப் பாதை ஆகும்.
பெரியாரின் நோக்குநிலை:
பெரியார் காங்கிரசு கட்சியை எதிர்த்துள்ளார், காங்கிரசை ஆதரித்துள்ளார். கம்யூனிஸ்ட்களை விமர்சித்துள்ளார், ஆதரித்துப் பரப்புரை செய்துள்ளார், திமுக வைக் கடுமையாக எதிர்த்துள்ளார், ஆதரித்தும் உள்ளார். பெரியாரின் அரசியல் தீர்மானங்கள், நிலைப்பாடுகள் சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்கக் காண்கிறோம். இதைக் கொண்டு பெரியாரை விளங்கிக் கொள்வதில் குழம்பிப் போகிறவர்களும் உண்டு, அறிந்தே குழப்புபவர்களும் உண்டு.
வரலாற்றில் நிலைபெற்ற ஆளுமைகள் எந்த நோக்குநிலையில் இருந்து நிலைப்பாடு எடுக்கின்றனர் என்று பார்க்க வேண்டியுள்ளது. லெனினின் சர்வதேசியக் கண்ணோட்டமானாலும் சரி, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய பார்வையானாலும் சரி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அரசு , சனநாயக மத்தியத்துவம் ஆகிய கோட்பாடுகளானாலும் சரி சோசலிசம் குறித்தக் கருத்துகளானாலும் சரி அவையாவும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்ற நோக்கு நிலையில் இருந்து வந்தடையப் பெற்றவையாகும். அண்ணல் அம்பேத்கர் என்று எடுத்துக்கொண்டால் அவர் நடத்தியப் போராட்டங்கள், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவுக்குத் தலைமையேற்றமை, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தது, அதில் இருந்து விலகிச் சென்றது, இந்தியக் குடியரசு கட்சியைத் தோற்றுவித்தது, பெளத்தத்திற்கு மதம் மாறியது என யாவும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்குநிலையில் இருந்து பெறப்பட்டவையாகும். அது போல் பெரியாரின் அளவுகோல் சாதி ஒழிப்பு இலட்சியாகும். அதன் நோக்கு நிலையில் இருந்து அவர் தனது அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார். அவர் தனித்தமிழ்நாடு என்ற அரசியல் இலட்சியத்தைக்கூட சாதி ஒழிப்பின் பொருட்டே முன்வைக்கிறார்.
பெரியாரின் அற அடிப்படை: (ethical foundation)
ஒவ்வொரு சிந்தனையாளருக்கும் அற அடிப்படை ஒன்று உண்டு. வள்ளுவரைப் பொருத்தவரை அவரது அற அடிப்படை என்பது வாய்மை, பொய்யாமை ஆகும். மார்க்சைப் பொருத்தவரை உழைப்பு, அறம். சுரண்டல் அறமற்றது. பெரியாரைப் பொருத்தவரை மாந்த நிகர்மை என்பதே அறம். அதாவது, ஒவ்வொரு மாந்தரும் பிறப்பால் நிகர், சமம் என்பதே அவரது அடிப்படை நெறி. சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையும் இதுவே. இது ஒவ்வொரு மாந்தரும் பிறப்பால் சமம் இல்லை என்ற கருத்தியலுக்கு நேரெதிரானது.
எச்.ராஜா போன்றவர்கள் இன்றைக்குப் பெரியாரின் மீது கக்கும் வெறுப்பும், பரப்பும் அவதூறும் திட்டவட்டமான இலக்குக் கொண்டது. அவரது இலக்கு பார்ப்பனச் சமூகத்தை உசுப்பிவிட வேண்டும் என்பதாகும். பார்ப்பன இளைஞர்களை அரசியல் களத்திற்கு இழுத்துவர வேண்டும் என்பதே அவரது பாடு. ஆண்டாள் பற்றிய கருத்துப் பூசல் எழுந்த போது நடந்த போராட்டங்களில் நிறைய பார்ப்பனர்கள் பங்கு கொண்டனர். ஒருவழியாக அவர் மெல்ல மெல்ல பார்ப்பனர்களை ஓர் அரசியல் சக்தியாகக் களத்திற்குக் கொண்டு வருகிறார். ஆனால், ஒருவகையில் அவர்கள் செயலூக்கமிக்க அரசியல் களத்திற்கு வருவது நமக்கும் சாதகமானதுதான். ஏனெனில், அப்போது அவர்கள் நம் தரப்பு கருத்துகளையும் உற்று நோக்க வேண்டிவரும். வெகுகாலத்திற்கு எச்.ராஜாக்களின் பொய்ப் புரட்டுகளுக்குள் அவர்களைக் கட்டிப் போட முடியாது. அன்றைக்கு இருந்ததைவிட இன்றைய சமூகப் பொருளாதார வாழ்வில் சாதியமைப்பின் இறுக்கம் தளர்த்தப்பட்டுள்ளது; தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனை செய்திராத அளவுக்கு வளர்ந்துள்ளது. தொடர்பு சாதனங்கள் உலகைப் பெருமளவுக்கு நெருக்கமாக்கியுள்ளது. உலகளாவிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு பன்னூறு மடங்காகியுள்ளது. செய்தி ஊடகத்தின் வளர்ச்சியும் அதிகமாகிவிட்டது. கலை இலக்கியப் பண்பாட்டுத் தளங்களில் குறிப்பாக, சாதியமைப்பின் காலப்பொருத்தமின்மை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன. இட ஒதுக்கீடு காரணமாகப் பல்வேறு துறைகளிலும் பார்ப்பனர்களோடு, பார்ப்பனரல்லாதோர் சேர்ந்து இயங்கக் கூடிய வாய்ப்பு பெருகி இருக்கிறது.
பெரியாரின் இயக்கம் சுயமரியாதைக்கான, மாந்த நிகர்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அவர்கள் வெட்டவெளிச்சமாக எல்லா இடங்களிலும் எதிர்த்துப் பேசிவிட முடியாது. எடுத்துக்காட்டாக, பேபால்(Paypal) என்ற அமெரிக்க நிறுவனத்தின் சென்னை கிளையில் சாதிப் பெயர்களைக் கொண்ட போட்டி ஒன்றை நடத்த முற்பட்ட பொழுது ஒரு சாதாரண எதிர்ப்பியக்கம் நடந்தது. அது அமெரிக்காவில் உள்ள அதன் தலைமைக்கு இச்செய்தியை உடனே கொண்டு சேர்த்தது. சாதிப் பாகுபாடு என்பது மேற்குலகில் இருக்கும் நிறப்பாகுபாட்டுக்கு ஒப்பானது என்று எடுத்துச்சொன்ன பொழுது உடனே அவர்கள் பின்வாங்க நேர்ந்தது. எனவே, நாம் ஒவ்வொரு மாந்தரும் பிறப்பால் நிகர் என்பதை நமது சொல்லிலும், எழுத்திலும், செயலிலும் வழுவாதிருந்து வெளிப்படுத்துவோமாயின் எச்.ராஜாக்கள் போன்ற கடும்போக்காளர்களைப் பார்ப்பனர்களிடமிருந்துகூட தனிமைப்படுத்த முடியும்.
பெரியாரின் பொருத்தப்பாடு:
தோழர் கொளத்தூர் மணி தன்னுடைய உரையில் சொன்னது போல் ’பெரியார் அன்றும் என்றும்’ என்று சொல்வதைவிட கால ஓட்டத்தில் பெரியாரே தன்னுடைய கருத்துகளைவிட முற்போக்கான கருத்துகள் வரும் என்று சொல்லியிருந்தார் என்ற பொருள்பட பேசினார். எவரது கருத்துக்களும் காலத்திற்கும் இடத்திற்கும் உரியவை தான். வள்ளுவரின் கருத்துகள் முக்காலத்திற்கும் உரியது என்றும், உலகப் பொதுமறை என்றும் மிகைப்படுத்தும் பழக்கம் நமக்கு உண்டு. வள்ளுவரின் கருத்து அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய தமிழ்ச்சமூகச் சூழலில் வெளிப்பட்ட ஒன்றே ஆகும். அது அன்றைய தமிழ்ச் சமூகத்திற்கான வாழ்நெறிகளைக் கொண்டிருந்தது, அதுவும் ஒரு நிலமானிய காலத்தின் நிலைமையில் தோன்றிய நூலாகும். அடவி தழுவிய உண்மைகள் ( universal truth) என்று சொல்லப்படும் சிலவற்றைத் தவிர மற்றவை தமிழ்ச் சமூக நிலைமைகளுக்கு உட்பட்டவையே. அதுபோல், பெரியாரின் கருத்துகளும் வாழ்நாள் தொண்டும் தமிழ்ச்சமூகத்தை உய்விப்பதற்கானவை. வட இந்தியாவிற்குக்கூட எந்தளவுக்குப் பொருத்தப்பாடு உடையது என்பது கேள்விக்குரியதே ஆகும்.
பெரியாரை நோக்கி அவதூறுகளை ஒருபுறம் இந்துத்துவ ஆற்றல்களும், இன்னொருபுறம் தமிழ்த்தேசியத்தின் பெயரால் இனவாத ஆற்றல்களும் அள்ளிவீசி வருகின்றனர். இதனால் இன்றைக்கு நம்மிடையே ஒருவித பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால், அத்தகைய பதட்டம் தேவையற்றது. ஏனெனில், இன்றைக்கும் பெண்கள் நம்முடைய சமூகத்தில் கட்டுண்டே உள்ளனர். வருங்காலத்தில் பெண்கள் தமக்கான ஆள்வகை உரிமை கோரி மாபெரும் எழுச்சிக்கொள்வர். அத்தகைய எழுச்சி கொள்ளும் பொழுது தமிழர்களின் புதுமக்கால அரசியலின் முதல் பெண்ணியவாதியாக அவர்கள் கையில் ஏந்தப் போவது பெரியாரின் படத்தையே. ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கிப் போராடும் போது உணர்ச்சிப் பெருக்கோடு பெரியாரின் கருத்துகளைப் பேசுவார்கள், அவரை உயர்த்திப் பிடிப்பார்கள். இன்றைக்கு அவதூறுகளைப் பரப்புவோர் எல்லாம் வாயடைத்துப் போவர்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சந்தை, ஒற்றையாட்சி என்ற திசையில் இந்திய அரசியலின் வரலாறு வேகமெடுத்திருக்கும் நிலையில் இதற்கு எதிரான தமிழ்த்தேசிய இயக்கமும் வளர்ச்சிப் பெறும். ஆங்கிலேயர்களின் கையில் இருந்த அதிகாரம் வடநாட்டாரிடமும் பார்ப்பனப் பனியாக்களிடம் மாறியிருக்கிறது. ’முதல் சுதந்திர நாளை கருப்பு நாளாகக் கடைபிடியுங்கள்’ என்று எந்தத் தமிழறிஞரும் அன்றைக்குச் சொல்லவில்லை. ’தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை யார் முதலில் சொன்னது என்று பட்டிமன்றம் நடத்துபவர்கள் பெரியாரிடம் இந்த முழக்கம் குறித்து இருக்கும் தொடர்ச்சியை மறந்துவிடுகின்றனர். தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை இந்தியாவிற்குக் கீழே தமிழகம் அடிமைப்பட்டு கிடக்கின்றது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளாதவர் பெரியார். வருங்காலத்தில், தமிழ்நாட்டு உரிமைக்கான இயக்கம் எழுச்சிக் கொள்ளும் பொழுது 1947 ஆகஸ்ட் 15 ஐ கருப்பு நாளென்று ஓங்கி ஒலித்தப் பெரியாரின் குரல் ஒவ்வொரு நாளும் நினைவு கூரப்படும். அந்தக் குரல் தமிழகத்தில் எழுந்த ஒற்றைக் குரல், எந்த தமிழ் அறிஞரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாத குரல். அவதூறுகளின் கூக்குரல்களால் பெரியார் ஓங்கி ஒலித்ததை இருட்டடிப்பு செய்துவிட முடியாது.
சுயமரியாதை இயக்கம் உள்ளடக்கத்தில் தமிழ்த்தேசிய இயக்கம்:
தமிழ்த்தேசியத்தின் பெயரால் இனவாத ஆற்றல்கள் பெரியாரின் வரலாற்றுப் பாத்திரத்தையும், பங்களிப்பையும் குறைத்துக் காட்ட முயல்கின்றனர். தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பெரியாரோ, பெரியாரைப் பின்பற்றுவோரோ எதிரானவர்கள் என்று சித்திரிக்க முயல்கின்றனர்.
தேசியம் என்ற வரலாற்று விளைபொருளின் சாறத்தை அறியாமல் அரசியல் இலக்கணம் பேசுகின்றனர். மதம், மொழி, இனம் எல்லாம் பன்னெடுங்காலமாக இருக்கின்றன.. ஆனால், தேசியம் என்பது வெறும் முன்னூறு ஆண்டுகள் வரலாறு கொண்டது. முதல் தேசிய விடுதலை இயக்கம் அமெரிக்க தேசிய இயக்கமாகும். அது மன்னராட்சிக்கு எதிரான போராட்டமாகும். பிறப்பால் ஆளும் உரிமை பெற்றவன் எனச் சொல்லிக்கொள்ளும் மன்னனுக்கு எதிராக பிறப்பால் எல்லோரும் சமம் என்ற அடிப்படையுடன் மக்கள் கிளர்ந்தெழுந்த போராட்டம் அது. அதுவரை புழக்கத்தில் இருந்த மேதகு, மாண்புமிகு ( his excellency, his majesty) என்ற முன்னூட்டுகள் தூக்கி எறியப்பட்டு Mr. President திரு அதிபர் என்று நிலைநாட்டப்பட்டது. பிரித்தானியாவில் இருந்து ஆட்சி செய்த ஆங்கில மன்னனுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள ஆங்கிலம் பேசும் மக்கள் போராடினார். அடக்குமுறையாளர்களுக்கும், போராடியவர்களுக்கும் மொழி ஒன்று தான், போராட்டம் சனநாயகத்திற்கானது. அதே போல, 1789 இல் நடந்தேறிய பிரெஞ்சு புரட்சியும், பிரெஞ்சு மன்னுக்கு எதிராக பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் நடத்திய தேசியப் போராட்டம். எனவே, இங்கு ஆள்பவரும் ஆளப்படுவோரும் வெவ்வேறு மொழி பேசுகிறவர்களா? என்பதல்ல கேள்வி, தேசியப் போராட்டம் என்பது சாறத்தில் மக்களாட்சி பற்றியது, பிறப்பால் எவரும் மன்னன் என்ற காரணத்தின் பெயரால் மக்களை அடக்கியாள முடியாது என்பது பற்றியது. முடிவெடுப்பதில் மக்களுக்கு இருக்கும் பங்கை நிலைநாட்டுவது பற்றியது. இப்படியாகத் தான் தேசியம் வரலாற்றில் உருப்பெறுகிறது. இதுவே ஐரோப்பா முழுவதுமான தேச அரசுகள் உருவாக்கத்திற்கான அடிப்படையாகவும் அமைகின்றது.
பின்னர் ஆசியாவில் உருப்பெற்றத் தேசியங்கள் ஆங்கிலக் குடியேற்றத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டமாக எழுந்தன. இந்திய தேசியம் ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரானப் போராட்டத்திற்குப் புராணங்களைத் தேடிப் போனது, வேத காலத்தைப் பொற்காலம் என போற்றியது, கடந்த கால தப்பெண்ணங்களை, காப்பியச் சிந்தனைச் சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டது.
இன்னொருபுறம் ஆங்கிலேயருக்கு எதிரான இலங்கை தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிங்களத் தேசியம் மகாவம்சத்தில் இருந்து தனது கட்டமைவுகளை எடுத்துக் கொள்கிறது. ஆங்கிலக் குடியேற்றத்திற்கு எதிரானப் போராட்டத்தை கிறித்தவ மிஷினரிகளுக்கு எதிரான பெளத்தர்களின் போராட்டமாக நடத்துகின்றனர். இந்திய தேசியமும் சிங்கள தேசியமும் காப்பியச் சிந்தனை மரபைக் கட்டி அழுதன. தேசியத்தின் சாறம் வெளிநாட்டு, உள்நாட்டு ஆதிக்கத்தை நிராகரித்து மக்களை முடிவு எடுக்கும் சக்தியாக முதன்மைப்படுத்துவதும், நிறுவுவதுமாகும். அது உள்ளுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, ஆண்டான் – அடிமை உணர்ச்சியை எதிர்க்கிறது. தேசியத்தின் சாறம் சனநாயகம். மொழி, மதம், இனம் போன்றவை எல்லாம் குறியீட்டு முக்கியத்துவம் உடையவையே ஆகும்.
”தேசியம் என்பது முதலில் சுயம் பற்றியது. அத்தகைய சுயம் முதலில் தனிமனித உரிமையில் ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு தனிநபருக்கும் சுயகெளரவம் உண்டு. சுயமான உரிமைகள் உண்டு. இதனைத் தனிமனித உரிமை(individual rights) என்பர். ஒரு மக்கள் கூட்டம் சார்ந்த உரிமை சம்பந்தப்படும்போது அதனைக் கூட்டுரிமை(collective rights) என்பர். தனிமனித உரிமையும் கூட்டுரிமையும் சரிவர இணைந்த ஒன்றுதான் தேசியம் என்பதாகும். இந்த வகையில் தேசியம் எல்லாவிடத்திலும் சுயம்(self) பற்றிக் கூறும். சுயகெளரவம்(self-respect), சுயாட்சி(self-government), சுயநிர்ணய உரிமை(self-determination) என அதுவொரு தனி நபரில் இருந்து, அதாவது ஒரு குழந்தையின் உரிமையில் இருந்து வளர்ந்தோர், இளைஞர், முதியோர் வரையான அனைத்துத் தனி நபர்களினது சுய உரிமையில் தொடங்கி, இனம், நாடு என்ற கூட்டுச்சுயம் வரை, அது விரிந்து பரந்த ஒன்றாகின்றது.” எனத் தேசியத்திற்கும், சுயத்திற்குமான உறவுப் பற்றித் தேசியமும் ஜனநாயகமும் என்ற குறுநூலில் ஈழத்து வரலாற்றாய்வாளர் மு.திருநாவுக்கரசு விளக்குகிறார்.
இந்தியச் சமூக அமைப்பில் சனநாயகத்திற்குப் பதிலாக பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வைச் சொல்லி சாதிநாயகம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. சாதிநாயகத்திற்கு எதிரான சனநாயகத்தை உயர்த்திப் பிடிப்பது தேசியப் போராட்டத்தின் அடிப்படையிலும் அடிப்படை ஆகும். இந்தப் பின்புலத்தில் பெரியார் 1925 இல் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் என்பது தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிநாயகத்திற்கு எதிரானது ஆகும். மேல்-கீழ் என்ற சாதியுணர்ச்சிக்குப் பதிலாக சுயமரியாதை உணர்வை உயர்த்திப் பிடித்த இயக்கமாகும். ஒவ்வொரு மாந்தரும் பிறப்பால் நிகர் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். அதனால் தான் சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் புறப்பட்ட இயக்கம் ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் பயணிக்க முடிந்தது. அத்துடன் நிற்கவில்லை, தனி மனித உரிமைப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அந்த மக்கள் கூட்டத்தினது கூட்டுரிமைப் பாதுகாக்கப்பட வேண்டும். கூட்டுரிமை என்ற வகையில் ’தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சுயமரியாதை இயக்கம் முழங்கியது. தனிமனித சுயமரியாதையில் தொடங்கி, தமிழ்ச் சமூகத்தினது சுயநிர்ணய உரிமையில் வந்து நின்றது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய தேசியங்களோடு ஒப்பிடும் போது, பழமைவாதச் சேற்றை அள்ளிப் பூசிக் கொள்ளாமல், உள்ளுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சனநாயகத்தை உயர்த்திப் பிடித்து, ஆக அதிகபட்ச தேசியத் தன்மை வாய்ந்த இயக்கமாக, சுயமரியாதை இயக்கம் காணப்படுகின்றது.
சுயமரியாதை இயக்கம் என்ற சிறந்த பெயரில் உலகில் எந்தவொரு சனநாயக இயக்கமும் தோற்றுவிக்கப்படவில்லை. மன்னராட்சிக் கலாச்சாரம், காப்பியச் சிந்தனை, பழம்பெருமைவாதம் என அழுக்குமூட்டைகள் நிரம்பிய, கீழைத்தேசப் பண்பாட்டுப் பின்னணியில் ’சுயமரியாதை’ என்ற பெயர் மிகவும் பொருள்பொதிந்த உணர்வு கலந்த பெயராகும்.
ஒருவர் தன் மதிப்பைத் தானே உணர்வது, தன்னைத்தான் மதிப்பது, தன்மதிப்பை, தன்மானத்தை நிலைநாட்டுவது, தன்னிடமிருக்கும் எஜமானத்துவ விசுவாசத்திற்குக் கொள்ளி வைப்பது, கூனிக் குறுகி நிற்கும் கூஜா தூக்கி மனப்பான்மையை அடித்து நொறுக்குவது, பிறப்பால் அனைவரும் சமம் என்ற மனநிமிர்வைப் பெறுவது, எல்லாவிதமான அடிமைத் தனத்திற்கும் எதிராகப் போராடுவது எனச் சுயமரியாதை தனது சிறகை விரிக்கின்றது. பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமும் அப்படிச் சிறகு விரித்தது. சுருங்கச் சொன்னால் சுயமரியாதை என்ற சொல்லுக்குள்ளே சனநாயகம் பற்றியும், தேசியம் பற்றியுமான சாறங்கள் உறைந்து கிடக்கின்றன.
இட்லரும், முசோலினியும் சோசலிசஸ்ட்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டு பாசிஸ்ட்களாக இருந்தார்கள் என்பதற்காக நாம் சோசலிசத்தை வெறுத்துவிடுவதில்லை அல்லது சோசலிசத்தில் இருந்து விலகி நிற்பதுமில்லை. அதுபோலவே, தமிழ்த்தேசியத்தின் பெயரால் இனவாத ஆற்றல்கள் பெரியாரின் இயக்கத்தையும் வாழ்நாள் தொண்டையும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதென்றோ அல்லது அந்நியமானதென்றோ சொல்கிறார்கள் என்ற காரணத்திற்காகப் பெரியார் சிந்தனை மரபினர் எவரும் தமிழ்த்தேசியத்தில் இருந்து விலகி நிற்க வேண்டியதில்லை.
தமிழ்ச்சமூகம் சாதியச் சமூக அமைப்பில் இருந்து மாறி தேசியச் சமூகமாகப் பரிணமிக்கும் நிகழ்ச்சிப் போக்கில் இருந்தும் தேசிய அரசுரிமைக்கான உணர்வை வளர்த்ததலிருந்தும் பெரியாரின் பணியைப் பெயர்த்தெடுத்துவிட முடியாது. பெரியார் வழிவந்து செயல்பட்டுக் கொண்டிருப்போர் தமிழ்த்தேசிய இயக்கத்தினர் என்று தம்மை உரிமையோடு அழைத்துக் கொள்வதற்கான வரலாற்று வேர்கள் இருக்கின்றன.
பெரியார் தமிழ்நாட்டின் சன் யாட் சென்
பெரியாரை, சாக்ரடீசோடு ஒப்பிடுவதைவிட சன் யாட் சென்னோடு ஒப்பிடுவது பொருத்தமுடையது. சாக்ரடீஸ் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அடிமைச் சமூகத்தில் வாழ்ந்தவர், அவரே அறிவியல் சிந்தனை மரபின் தந்தை என்று போற்றப்படுகிறார். ஆனால், பெரியாரோ தமிழ்ச் சமூகத்தின் புதுமக் கால அரசியல் கட்டத்தில் வாழ்ந்தவர். சீனாவின் புதுமக் கால அரசியல் கட்டத்தில் சீனத் தேசியத்திற்கான கோட்பாட்டை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தி சீன விடுதலைக்காக மூன்று பெருங்கோட்பாடுகளை வகுத்தளித்தார். அவருக்குப் பின்னான 30 ஆண்டுகளுக்குள் அவர் வகுத்து தந்த இலட்சியங்கள் காலப் பொருத்தத்துடன் சீனாவில் நிறைவேற்றப்படுகின்றன. அவரே சீன தேசத்தின் தந்தையும் ஆவர். அது போல் பெரியார் சாதி ஒழிப்பையும் சுதந்திர தமிழ்நாட்டையும் இருபெரும் இலட்சியங்களாக வகுத்தளித்துப் போயுள்ளார். இதற்காக தம் வாழ்நாளெல்லாம் உழைத்துள்ளார். அந்த இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். பெரியாரை தமிழ்நாட்டின் சன் யாட் சென் என அழைப்பது பொருத்தமுடையதாக இருக்கும்.
பெரியாரின் சுயமரியாதை சமதர்மக் கழகம்:
1930 இல் இருந்து 1935 வரையான காலகட்டத்தில் பெரியார் சுயமரியாதை சமதர்மப் பரப்புரையை மேற்கொண்டு வந்தார். ரஷ்யப் பயணம் மேற்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழில் கொண்டு வந்தார். பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன்’ நூலைத் தமிழில் கொண்டு வந்தார். நேற்றுவரை பார்ப்பானுக்கு அடிமையாய் இருந்துவிட்டு இனி பணக்காரனுக்கு அடிமையாக இருக்கப் போகிறோமா? எல்லாவித அடிமைத் தனத்திற்கும் எதிராகப் போராடுவது சுயமரியாதைக்காரனின் கடமையல்லவா? எனக் கேட்டார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும், தோழர் ஜீவானந்தமும் குடியரசில் பொதுவுடைமைச் சிந்தனையை வளர்க்கக்கூடிய கட்டுரைகளை எழுதினர். இக்காலகட்டத்தில் ஆங்கில அரசு கடுமையான நெருக்கடி தந்த நிலையில் சமதர்மத்திற்கான நிகழ்ச்சி நிரலைப் பிற்போடுவதாகப் பெரியார் அறிவித்தார். அதேநேரத்தில் மே தினத்தை அனுசரித்தார், கம்யூனிஸ்ட்கள் மீது நேரு-படேல் தலைமையிலான இந்திய அரசு அடக்குமுறையை ஏவியபோது தோழமை பாராட்டினார். 1952 இல் கம்யூனிஸ்ட்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இப்படி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும் கம்யூனிச இயக்கத்திற்குமான உறவைக் காண்கிறோம்.
இன்றைக்கோ உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளியல் கொள்கையின் கீழ் தமிழ்நாடு பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக் காடாக மாறியுள்ளது. பெரியார் இன்றைக்கு இருந்திருப்பாரேயானால், தமிழ்நாட்டின் உழைப்பைச் சுரண்டுவதோடு அல்லாமல் தமிழ்நாட்டின் ஆறு, கடல், மலை, காடுகள் என இயற்கை வளங்களை இந்தக் கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாடுவது கண்டு பொங்கி எழுந்திருக்க மாட்டாரா? கடுமையாக எதிர்த்து இருப்பார். எனவே, பெரியாரின் சுயமரியாதை சமதர்கக் கழகப் பணியை முன்னகர்த்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
சாவர்க்கரும் பெரியாரும்
சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம், ஆர்.எஸ்.எஸ். ஆகிய மூன்றும் 1920 களில் சமகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை. முன்னது இரண்டின் இலட்சியங்கள் உன்னதமானவை என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தான் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ளது. கற்பனைக் கெட்டாத வகையில் வெகுசன இயக்கங்கள், இரகசிய தாக்குதல் குழுக்கள், அரசியல் முன்னணி என நச்சுமரம் போல் வளர்ந்து நிற்கிறது. சாவர்க்கர் கனவு கண்ட இந்து இராஷ்டிரத்தை அவரது வாரிசுகள் நனவாக்குவது நோக்கி பீடுநடை போட்டு வருகின்றனர். பெரியார் மறைவுக்குப் பின்னான இந்த 46 ஆண்டுகளில் பெரியாரின் இலட்சியங்கள் நோக்கி எந்தளவுக்கு நாம் முன்னேறி இருக்கிறோம் என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
1957 இல் இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டத்தை அவர் நடத்தினார். அப்போது அவருக்கு வயது 79. அப்போது அவர் சிறைக்குப் போவதற்கு முன் 15-12-1957 அன்று விடுதலையில் எழுதிய தலையங்கத்தில் இருந்து…
“என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய்நாடான தமிழ்நாட்டைப் பனியா-பார்ப்பனர்களின் அடிமைத் தளையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க வழிசெய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.
அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்லுகிறேன், சென்று வருகிறேன்.”
“இது கண் போன்ற பிரச்சினை – எவ்வளவு மோசமாக நடத்துகிறான்?
நம் நாட்டில் வசூல்செய்யும் பணத்தில் 60 கோடி ரூபாய் எடுத்துக்கொண்டு 8 கோடி நமக்குக் கொடுக்கிறான் – பிச்சை கொடுப்பது போல ! யார் கேட்பது? ஏன் என்றால் – ‘அதிகப்பிரசங்கி’ என்பானே என்று இவன் பயப்படுகிறான்! இங்கு சுரண்டிக் கொண்டுபோய் வடநாட்டுக்குத் தருகிறான்.
எலக்ஷனுக்கு ஒரு தடவைக்கு 25 கோடி வசூல்செய்கிறான். முதலிலே சொன்னான். டாட்டா கம்பெனிக்காரன் என்னும் ஒரு கம்பெனி 10 இலட்சம் கொடுத்தான். ஒரு டைரக்டர் அதைக் கேட்டான். ஒரு கூட்டாளி, ‘அரசியல் கட்சிக்கு எதற்குப் பணம் கொடுப்பது?’ என்றான். ‘அடப் பைத்தியமே, நான் கம்பெனி நலனை உத்தேசித்துத்தான் கொடுத்தேன்; இதை கொடுத்தால்தானே கோடி கோடியாகக் கொள்ளையடிக்கலாம்’ என்று பதில் சொல்லியிருக்கிறானே வடநாட்டான்.
வடநாட்டான் 2 பூனையை வைத்துக்கொண்டு கூட ஆண்டுவிடுவானே! இந்த காமராசர் போனால் வேறொரு ராசர் அவனுக்குக் கிடைக்கக்கூடும். இந்தக் கொடுமை ஒழிய வேண்டும்.
நம் நாடு தனியாகப் பிரிந்தே ஆக வேண்டும். ஒரு சுண்டைக்காய் ‘எகிப்து’ உலகத்தையே கலக்கிவிட்டதே! நம்மால் ஆள முடியாதா?” ….
ஆகவே, நாம் பெரிய இயக்கம் நடத்த வேண்டும்; ஆதரவு கட்டாயம் இருக்கும். எனக்குப் பிறகு என்ன நடக்குமோ என்ற கவலையாகத்தான் உள்ளது; பாதியிலாவது விட்டுவிட்டுப் போனால் கொள்கையை விற்றுத் தின்னத்தான் ஆள்வரும்.
ஆகவே, தயவுசெய்து சிந்தியுங்கள். காரியம் நடந்தே தீரவேண்டும். இந்தியா படம் கொளுத்த தயாராக வேண்டும்.” – (விடுதலை 1-12-1957)
எவ்வளவு சீரழிந்துப் போயிருக்கின்றது தமிழ்நாட்டின் நிலை! இரண்டு பூனைகளை வைத்துக்கொண்டு கூட தில்லி ஆட்சி நடத்திவிடும் என்று பெரியார் சொன்னது போல் இன்று எடப்பாடியையும், பன்னீர் செல்வத்தையும் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு ஆட்சியில் இருந்தபடி அதிகாரத்தைத் தம்மிடம் குவித்துக் கொண்டிருக்கும் மோடி-அமித் ஷா கும்பலின் முதல்பெரும் பலமாக அறியப்படுவது கார்ப்பரேட்கள். இவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்திருக்கும் பன்னூறு கோடிகளாகும். இந்த முதலாளிகள் தான் நாட்டை ஆளுகின்றார்கள் என்பதைப் பெரியார் அப்போதே சுட்டிக்காட்டுகின்றார்.
பெரியார் மறைந்து மூன்று ஆண்டுகளில் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றிக்கொண்டது மத்திய அரசு. இன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே சட்டம், ஒரே தேர்தல் என பெரும்வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இட ஒதுக்கீட்டு கோட்பாட்டின் மீதே தாக்குதல் நடத்திவிட்டனர். பெரியார் விட்டுச்சென்ற இலட்சியங்களை நோக்கித் தீவிரமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிடில் தமிழ்நாட்டின் நூறாண்டு உழைப்பையும் அதனால் விளைந்த நன்மைகளையும் நாசம் செய்துவிடுவார்கள்.
என்னுடைய உரையைப் பெரியாரின் பின்வரும் வரிகளோடு முடிக்கிறேன்.
”உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்; மலத்தை மனமார முகருகிறோம்; மானமிழந்தோம்; பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம்; மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குதானா தமிழன் உயிர்வாழ வேண்டும் ? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி, நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக – வடநாட்டானுக்கும், தமிழரல்லாதவர்களுக்கும் நாம் படிக்கட்டு ஆகிவிட்டோம்.
இனியாவது ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று ஆரவாரம் செய்யுங்கள்.
உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்.
நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்துகொண்டதோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால் – நமக்கு இதைவிட மானமற்ற தன்மை , இழிதன்மை வேறு என்ன சிந்தியுங்கள்!
புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னாபின்னமாக்குங்கள்!
தமிழ்நாடு தமிழருக்கே! – (’விடுதலை’ – 3-12-1957)
– செந்தில், இளந்தமிழகம்