இனப் படுகொலையின் பத்து கட்ட கோட்பாடும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆட்சியில் இந்தியாவில் நமது நிலையும்..
(இந்தியாவில் இனப்படுகொலைக்கான களம் தயாரிப்பு நிலையில் உள்ளது என்ற டாக்டர் கிரகோரி ஸ்டாண்டன் எச்சரிக்கையை முன்வைத்து)
இந்தியாவில் தற்போது இனப்படுகொலைக்கான களம் தயாரிக்கப்பட்டு வருகிறது, அடுத்து கட்டம் இனப் படுகொலைதான் என “இனப்படுகொலை கண்காணிப்பகம்” அமைப்பின் நிறுவனர் டாக்டர் கிரகோரி ஸ்டாண்டன் அவர்கள் அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது அசாமில் இரண்டு மில்லியன் மக்களை அடைத்து வைப்பதற்கான(குடிமகன் என நிரூபிக்கத் தவறிய மக்களை அடைப்பதற்கு)பிரம்மாண்ட தடுப்பு முகாமை பாஜக அரசு கட்டி வருவதையும், குடியுரிமை சட்டத் மசோதாவிற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர்களை “உடைகளை” வைத்தே அடையாளம் காணலாம் என பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பேசிவருவதும்,அயோத்தியில் வான்முட்ட பிரம்மாண்ட ராமர் சிலை காட்டப்படும் என்றும், அகதிகளை/வந்தேறிகளை அரபிக் கடலில் வீசுவோம் என கொக்கரிக்கின்ற இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஜாவின் செயல்பாடும்,காஷ்மீரில் 370 சட்டபிரிவு நீக்கம் அதைத்தொடர்ந்த போலீஸ்/ராணுவம் ஒடுக்குமுறை ஆகிய அனைத்தும், வரவுள்ளை மத, இனப் படுகொலைகளுக்கு கட்டியும் கூறுவதாகவே உள்ளது. இந்தியாவில் பாஜகவின் ஆட்சியில் நடைபெற்று வருகிற மாற்றங்களை கவனித்துவருகிற டாக்டர் கிரகோரி ஸ்டாண்டன், தற்போது எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளார்.
டாக்டர் ஸ்டாண்டனின், “இனப்படுகொலையின் கட்டங்கள்” உலகளவில் பல அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலைகளை விசாரணை செய்த ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு வரைவு தீர்மானங்களை ஸ்டாண்டன் வழங்கியுள்ளார். கம்போடியா, பர்மா(ரோஹின்கியா) மற்றும் ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து இவரது ஆய்வு முக்கியதுவதம் கொண்டது.
1996 ஆம் ஆண்டில் இனப்படுகொலையின் ‘எட்டு கட்டங்கள் உருவாக்கிய ஸ்டாண்டன் 2013 ஆம் ஆண்டில் பத்து கட்டங்கள் வளர்க்கிறார். இவர் உருவாக்கியுள்ள கட்டங்களை வரிசைக் கிராமமாக ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற வேண்டும் என அவசியமில்லை என கூறுகிற ஸ்டாண்டன் இறுதியில் வரவுள்ள படுகொலைகளை தவிர்க்க எச்சரிக்கை சமிஞ்சைகளாக தயாரிப்பு கட்டங்களை புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார். இனி அவரின் கோட்பாட்டையும் அதன் இந்தியப் பொருத்தப்பாட்டையும் சுருக்கமாக பார்ப்போம்.
கட்டம்-1: வகைப்படுத்தல்(CLASSIFICATION)
இனம், மதம், நிற அடிப்படையில் அவர்கள் Vs நாம் என வகைப்படுத்தல். ஜெர்மனியில் ஜெர்மன் Vs யூதர்கள், ருவாண்டாவில் ருவாண்டா Vs புருந்தி, இலங்கையில் சிங்களவர்கள் Vs தமிழர்கள். தென் அமெரிக்காவில் வெள்ளை Vs கறுப்பர் என உதாரசமூகத்தில் அவர்கள் நாங்கள் என்ற பாகுபாடு பெரும்பான்மை மக்களிடம் புகுத்தப்படும். இன வேற்றுமை அடிப்படையில் மகாராஷ்ட்ராவில் மண்ணின் மைந்தர்கள் Vs அயலவர்கள், தமிழகத்தில் வந்தேறி அரசியலை இதற்கு உதாரணம் கூறலாம். ஆர் எஸ் எஸ்/பாஜகவை பொறுத்தவரை சமூகத்தை இஸ்லாமியர் Vs இந்துக்கள் என செங்குத்தாக வகைப்படுத்துவது.
கட்டம்-2:அடையாள உருவாக்கம் (SYMBOLIZATION)
வகைப்படுத்தலை, அடையாளமாக பெயராக மாற்றுதல். யூதர்களை ஜிப்சிக்கள் என பெயர் வைப்பது,அந்த பெயரை வைத்து ஒட்டுமொத்த குழுவையும் அடையாளப்படுத்துவது.உடை அல்லது நிறம் மூலமாக அடையாளப்படுத்துவது .யூதர்களை குறிப்பதர்கள் நாசிக்கள் மஞ்சள் நட்சத்திரத்தை அடையாளமாக்கினார்கள்.போலவே, எதிர் அடையாளமாக ஸ்வஸ்திக் குறியீட்டை உருவாக்கினார்கள்.
நாம் மேற்கூறியதுபோல ஜார்கண்ட் மாநில பிரச்சாரத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை உடைகளைக் கொண்டே அடையாளம் காணலாம் என்ற பிரதமர் மோடியின் பேச்சு உடை அடையாளத்தின் மூலமாக விஷ வெறுப்பு பேச்சை உமிழ்வதாகும். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி,மோடியின் உடை பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமியர்களே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்ற பொருள் படவே உடையை பிரச்சாரத்தில் அடையாளக் குறியீடாக பிரதமர் குறிப்பிடுகிறார் என்பதை இங்கு விளக்கத் தேவையில்லை. ஆக ஆர் எஸ் பாஜகவும் இந்த அடையாள உருவாக்கத்தை மக்களிடம் பரப்புவதை இலக்காக கொண்டுள்ளது தெளிவு.நாசிக்களின் எதிர் அடையாளமான ஸ்வஸ்திக் போலவே ஆர் எஸ் எஸ்/பாஜக காவி நிறம்,சிவாஜி மன்னன் பிம்பம்,திரிசூலம்,ராமர் போன்ற அடையாளங்களை உருவாக்கியுள்ளது.
வகைப்படுத்தலும் அடையாள உருவாக்கமும் இனப் படுகொலைகளுக்கு இட்டுச் செல்லும் அல்லது மனிதத்தை நீக்குவதற்கு இட்டுச் செல்லும் எனக் கூற இயலாது.ஆனால்,மத இன சிறுபான்மையினரின் மீதான வெறுப்பு பிரச்சாரம் முடிக்கிவிடப்பொழுது இந்த அடையாளங்கள் இனப் படுகொலைகளை நோக்கி இட்டுச் செல்ல பயன்படுகிறது.
கட்டம்-3: பாகுபடுத்தல்(DISCRIMINATION)
பெரும்பாண்மை குழுவானது சட்டம், பண்பாடு அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற சிறுபான்மைக் குழுவின் உரிமைகளை பறிக்கின்றது. அதிகாரமற்ற சிறுபான்மைக் குழுவோ, குடிமகன் என்ற சட்ட அங்கீகரம் இன்றி சமூக உரிமை அற்ற குழுவாகிறது. உதாரணாமாக 1935 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நாசிக்கள் கொண்டு வந்த நூரம்பெர்க் சட்டமானது, யூதர்களை ஜெர்மன் குடியுரிமை பெறத் தகுதி அற்றவர்கள் ஆக்கியது.அரசு மற்றும் பல்கலைக் கழக வேலைவாய்ப்பை யூதர்கள்பெறுவதற்கு தடை விதித்தது.பர்மாவில் சிறுபான்மை மக்களான ரோஹின்யா இஸ்லாமியர்களுக்கு பர்மிய அரசு குடியிரிமை மறுத்ததை இங்கு உதாரணம் கூறலாம். இனம்,மத அடிப்படையில் பாகுபடுத்தலை தடுக்கிற சட்டங்கள் இக்கட்டத்தில் ஒழித்துக் கட்டப்படுகிறது.
தற்போதையே குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி (CAB 2019) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளத்திலிருந்து இந்தியாவிற்குள் வந்த இந்து, சீக்கியம், கிறிஸ்துவம் பார்சி, பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய ஆறு மதத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்படும். இவர்கள் 2014 ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்திருந்தால் போதுமானது என்கிறது.ஆனால், இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களை மேற்கூறிய பட்டியலில் சேர்க்கவில்லை. மத துன்புறுத்தல் காரணமாக இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் வரவில்லை மாறாக மற்ற ஆறு மதத்தினர் மட்டுமே மத துன்புறுத்தலால் இந்தியாவிற்குள் அகதிகளாக வந்துள்ளனர் என இஸ்லாமியர்கள் மீதான பாரதிய ஜனதா கட்சி பாகுபாட்டை நியாயப்படுத்துகிறது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கு என சில உரிமைகளைச் சட்டப்பிரிவு 19 இன் கீழ் வழங்கியுள்ளது.மேலும் சட்டபிரிவு-14 சமத்துவத்தையும் சட்டபிரிவு-21 வாழ்வதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் அனைவருக்கும் உறுதிப்படுத்துகிறது.ஆனால் குடியுரிமை சட்டத் திருத்தம் மூலமாக இன,மொழி,நிற பாகுபடுத்தலை தடுக்கிற சிவில் சமூக உரிமைகளை பாஜக முற்றிலும் ஒழித்துக் கட்டிவிட்டது.
குடியுரிமை சட்டத் திருத்த சட்டம்,மதச் சிறுபான்மையினர் மீதான பகுப்படுத்தலுக்கு சட்டபூர்வ வடிவம் கொடுக்கிறது.பெரும்பான்மை மதத்தின் பிரதிநிதியாக கருதிக்கொள்கிற ஆர் எஸ் எஸ்/பாஜக அரசியல் அதிகாரத்தைபயன்படுத்தி சிறும்பான்மை மக்களின் சமூக உரிமைகளை சட்டப்பூர்வமாக பறிக்கிறது.குடியுரிமையை என்ற சட்ட அங்கீகாரத்தை சட்டப்பூர்வமாக பறிக்கிறது.
கட்டம்-4: மனிதத்தை அகற்றுதல்(DEHUMANIZATION)
சிறுபான்மைக் குழுவின் மீதான மனிதநேயத்தை/மனிதத்தன்மையை பெரும்பான்மை குழு மறுப்பது. சிறுபான்மை குழுவை விலங்குகள் போலவும் நோயாகவும் கரப்பான் பூச்சுகளுக்கு இணையாகவும் சித்தரிப்பது. அல்லது தீவிரவாதி என முத்திரை குத்துவது, உடலின் கான்சர் கட்டி என அழைப்பது.இது பாதிக்கப்பட்ட குழு மீதான கட்டற்ற கொலைகளுக்கு ஒரு நியாயத்தை கற்பிக்கிறது.பாதிக்கப்பட்ட சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான இத்தகைய வெறுப்பு பேச்சை அச்சில் பிரச்சாரம் செய்வது.பாதிக்கப்படுகிற குழுக்களுக்கு எதிராக பரப்பப்படுகிற இப்பிரச்சாரங்களை பாதிக்கப்பட்ட குழு மறுப்பதற்கான சட்டபூர்வ ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுகிறது.
கட்டம்-5: நிறுவனம் (ORGANIZATION)
இனப் படுகொலைகள் எப்போதுமே திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இனப்படுகொலையை மேற்கொள்கிற அரசானது பெரும்பாலும் மில்லிடன்ட் நிறுவனம்/குழுக்களின் மூலமாக அல்லது போலீஸ்/ராணுவம் மூலமாகவோ சிறுபான்மை குழுக்களை கொலை செய்கிறது,ஒடுக்குகிறது.பெரும்பாலும் இக்குழுக்கள் அரை ரகசியமாகவோ முறையான சட்டப்பூர்வ பதிவுகள் இல்லாமலோ இயங்குகிறது.இந்தியாவிலே ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் பல்வேறு கிளை அமைப்புகள் இத்தகைய பண்புடன் செயல்படுகின்றன.காந்தி கொலை முதல் கல்புர்கி,கவுரி லங்கேஷ் கொலை வரையிலும் இத்தகைய குழுக்களாலேயே செய்துமுடிக்கப்படுகின்றன.போலவே பசுப்பாதுகாப்பு குண்டர்களும் இதில் அடக்கம்.இக்குழுக்களுக்கு ஆயுத பயிற்சியும்,இனப் படுகொலை மேற்கொள்வதற்கான திட்டங்களும் வழங்கப்படுகின்றன.இக்குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள்,சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக காட்டப்படுகிறார்கள்.காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு நீக்கத்திற்கு பிறகு(முன்பும்தான்) ராணுவமும் போலீசும் இத்தைகைய ஒடுக்குமுறை நிறுவனமாக செயல்படுகின்றன.
கட்டம்-6: பிரிப்பது (POLARIZATION)
மிலிடன்ட் நிறுவனங்களை/குழுக்களை வலது தீவிரவாத தலைவர்கள் இயக்குகிறார்கள்.இத்தலைவர்கள், சமூகப் பிரிவினையை ஊக்கப்படுத்துகிற வெறுப்பு பிரச்சாரங்களை தீவிரப்படுதுகிறார்கள்.புறமன முறை திருமணங்கள் போன்ற சமூக கலப்பு போக்குகள் தடைசெய்யப்படுகின்றன.இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிற மத மாற்ற தடை சட்டத்தை இங்கே உதாரணம் கூறலாம்.வலது தீவிரவாதிகள்,சமூக ஜனநாயகவாதிகள் மீது தாக்குதலை தொடுத்து மௌனிக்கப் படுகிறார்கள்.
கட்டம்-7:தயார்படுத்தல் (PREPARATION)
ஒடுக்குகிற பெரும்பான்மை குழுவின் தலைவர்கள்,மத,இன வேற்றுமை பிரச்சனைகளுக்கு இறுதி வழி கண்டுபிடித்துவிட்டதாக தேசத்திற்கு அறைகூவல் விடுப்பார்கள்.இனத் தூய்மை, மதத் தூய்மை தீவிரவாத்திற்கு எதிரான போர் என்ற முழக்கங்களில் மூலமாக இந்த அறைகூவல் நியாயப் படுத்தப்படும்.ஜெர்மனியில் யூத கேள்வியை(jews question)தீர்ப்பதற்கான இறுதி வழியை இவ்வாறுதான் நாஜிக்கள் அறிவித்தார்கள்.போலவே அர்மேனிய இனப் படுகொலைகளுக்கும் இப்படியே தயாரிப்பு செய்யப்பட்டது.
மிலிடன்ட் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு தயார் நிலைக்கு ஆயத்தப் படுத்தப் படுகிறார்கள்.”அவர்களை நாம் கொல்லவில்லை என்றால் நம்மை அவர்கள் கொன்று விடுவார்கள்” என கொலைக்கான நியாயத்திற்கு பெரும்பான்மை மக்களின் ஒப்புதலை பெறுகிறார்கள்.
கட்டம்-8: துன்புறுத்தல் (PERSECUTION)
மத,இன சிறுபான்மை குழுக்கள் அடையாளம் காணப்பட்டு சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.அதற்கான அடையாளம் வழங்கப்படுகிறது.தடுப்பு முகாம்,வதை முகாம் போன்றவற்றிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.அல்லது பஞ்சப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.கொலைப் பட்டியில் தயாரிக்கப்படுகிறது.சிறுபான்மை குழுக்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.தற்போது அசாமும் காஷ்மீரும் இந்தகட்டத்தில் நுழைந்துவிட்டது என கிரகோரி ஸ்டாண்டன் கூறுகிறார்.
கட்டம்-9: அழிப்பு (EXTERMINATION)
கூட்டுக் கொலைகள் தொடங்கப்படுகின்றன.சட்டவழியில் இனப் படுகொலை என இக்கொலைகளை அழைக்கலாம்இக்கொலையில் ஈடுபடுபோவர்கள் .கொலை செய்யப்படுவோர்களை மனிதர்கள் என கருதுவதில்லை.அரசு ஆதரவுடன் இக்கொலைகள் நடைபெற்றால் போலீஸ் ராணுவமும் இக்குழுக்களுடன் இணைந்து இனப்படுகொலையில் ஈடுபடும்.பெண்கள் மீதான பாலியில் வன்முறை கொலைகள் மேற்கொள்ளப்படும்.அர்மேனியப் படுகொலை,ஜெர்மனியில் யூதர்கள் படுகொலை,ஈழத்தில் தமிழர்கள் படுகொலை,ருவாண்டாவில் டுட்சி மக்கள் படுகொலை என இந்த கட்டத்தை நாம் கண்கூடாக பார்த்துள்ளோம்.
கட்டம்-10: மறுப்பு( DENIAL)
மேற்கூறியவாறு மேற்கொள்ளப்படுகிற இனப் படுகொலைகள் முடிந்தபின்னர், உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ சாட்சிகள் மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.உண்மை வெளிவரும் சூழலில், கொலைக்கான பொறுப்பை எந்த குழுவும் ஏற்பதில்லை.குற்றம் சாட்டப்பட்டாலும் வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள் கடுமையாக மறுப்பு தெரிவிக்கும்.கொலை குறித்த சுதந்திர விசாரணை ஆய்விற்கு அனுமதி மறுக்கப்படும்.மீறியும் நடைபெற்றாலும் உண்மை மறைக்கப்பட்டே வெளிவரும்.குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருவார்கள்.இடி அமீன்,ராஜபக்ஷே இதற்கான சமகால உதாரணங்கள்.
-அருண் நெடுஞ்செழியன்