ஐரோப்பாவில் வலதுசாரி தேசியவாதம்; நாடுகள் வாரியாக ஓர் அறிமுகம்
ஒரு புறம் வாக்காளர்கள், அரசியல் கட்டமைப்பின் மீது விரக்தியில் இருந்தாலும் உலகமயமாக்கல், அந்நியக் குடியேற்றம், தேசிய அடையாள நீர்ப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கவலையிலும் இருக்கின்றனர்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒன்பது தீவிர வலதுசாரி கட்சிகள் சேர்ந்து அடையாள ஜனநாயகம்(Identity Democracy) என்கிற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.
ஆக ஐரோப்பிய நிலப்பரப்பில் வலது சாரிய கட்சாகளின் தாக்கம் என்ன?
ஐக்கிய இராச்சியம்(United Kingdom)
ஐரோப்பிய ஒன்றிய அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக சமீபத்திய இங்கிலாந்தில் (ஐக்கிய இராச்சியத்தின் United Kingdom) தேர்தல் அமைந்துள்ளது.
தீவிர வலதுசாரி ஆதரவாளரான போரிஸ் ஜான்சனின் பழைமைவாத கட்சி(Conservative Party) பெரும் வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் 365ல் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டனின் வெளியேற்றமே(Brexit) அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எதிர் கட்சியான தொழிலாளர் கட்சி(Labour Party) வரலாறு காணாத தோல்வியை தழுவியது.
போரிஸ் ஜான்சன் அடிப்படையில் புலம்பெயர்ந்தோருக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான கொள்கைகளைக் கொண்டவர். அவர் எழுதும் செய்தித்தாள் கட்டுரைகளில் நீண்ட காலமாக இனவெறி கருத்துக்களை வெளியிடுகிறார் – அவர் கறுப்பின மக்களை இழிவாக குறிக்கும் சொல்லான “பிகானினீஸ்” என்றும் இஸ்லாமியர்களை காட்டுமிராண்டிகள் என்றும் விமர்சித்தார். மேலும் சமீபத்தில் அவர் “புர்கா” அணிந்த முஸ்லீம் பெண்களை “லெட்டர்பாக்ஸ்” என கேலி செய்தார். அதற்காக வருத்தம் தெரிவிக்கவும் மறுத்து விட்டார்.
பாலஸ்தீனிய ஆதரவாளர்களால் கொண்டு வரப்பட்ட இஸ்ரேலிய முதலீடு மற்றும் ஒப்பந்த புறக்கணிபிற்கு (Boycott, Divestment and Sanctions ) எதிரான சட்டங்களையும் நிறைவேற்ற உள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இத்தாலி
இத்தாலியன் மேட்டியோ சால்வினி, லீக்(League) என்கிற வலது சாரிய கட்சியின் தலைவர். நிறுவனமயத்திற்கு எதிரான ஃபைவ் ஸ்டார் இயக்கத்தின்(Five Star Movement) கூட்டணியில் இவரது கட்சி அமைத்த ஆட்சி அன்மையில் முடிவிற்கு வந்த போதும், ஐரோப்பியாவின் தேசியவாத அரசியலில் முக்கிய நபராக இவர் கருதப்படுகிறார்.
ஃபைவ் ஸ்டார் இயக்கத்திற்கும் மைய இடதுசாரிய கட்சியான ஜனநாயக கட்சிக்கும் (Democratic Party) இடையிலான எதிர்பாராத ஒப்பந்தம் உள்துறை அமைச்சராக இருந்த சால்வினியின் பதவியை முடிவிற்கு கொண்டு வந்தது. இத்தாலியிய பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு மற்றும் 2016ல் சகாரா துணை கண்டத்திலிருந்து அதிகப்படியான அகதிகளின் வருகை ஆகியவற்றின் பின்னணியில் லீக் கட்சியின் செல்வாக்கு பெருகியது. உள்துறை அமைச்சராக இருந்த சால்வினியின் குடியேற்றத்திற்கு எதிரான சட்டங்கள் மீட்பு கப்பல்கள் இத்தாலியின் கரைகளில் தஞ்சமடைவதை தடுத்தது.
லீக் கட்சி தன் வரலாற்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்திற்கு எதிரான அரசியலைக் கொண்டது. மேலும் தற்போதைய கருத்துக்கணிப்புகளிலும் முன்னிலை வகிக்கிறது லீக் கட்சி. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் வலது சாரிய கூட்டமைப்பில் மொத்தம் உள்ள 73 உறுப்பினர்களில் 28 பேர் லீக் கட்சியை சேர்ந்தவர்கள்.
ஜெர்மனி
2017ல் தீவிர வலதுசாரி கட்சியான ஜனநாயகத்திற்கான மாற்று ( Alternate for Democracy) நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு 12.7% வாக்குகளை பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவானது.
ஐரோப்பியாவிற்கு எதிரான கட்சியாக உருவெடுத்த AfD, குடியேற்றத்திற்கு எதிரான கடுமையான சட்டங்களை முன்மொழிந்தது, இஸ்லாமிய விரோத போக்கை கையாண்டது. ஜெர்மனி லட்ச கணக்கான ஆவணமற்ற குடியேற்றத்தை அனுமதித்த நேரத்தில் AfD ன் செல்வாக்கு பல மடங்கு பெருகியது.
தற்போதைய ஜெர்மனிய சான்சிலர் ஆஞ்சலா மெர்கல் குடியேற்றத்தை குறித்த தன்னிலையில் இறுக்கத்தை காண்பிக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் AfD கட்சியின் தேர்தல் வெற்றிகள் அதிகரித்து இப்போது அனைத்து மாநில அவைகளிலும் பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளது. அக்டோபர் 2019ல் கிழக்கு மாநிலமான துரிங்கியாவில் நடந்த தேர்தலில் ஆஞ்சலா மெர்கலின் கிருத்துவ ஜனநாயக ஐக்கியத்தை (Christian Democratic Union -CDU) பின்னுக்கு தள்ளி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
AfD முன்னாள் கம்யூனிஸ்ட் பகுதியான கிழக்கு ஜெர்மனியில் பெரும் பலத்துடன் விளங்குகிறது. அதன் ஆதரவாளர்கள் “”Wir sind das Volk!”( நாங்கள் மக்கள்) என்று முழங்குகின்றனர். இது 1989 நடந்த கம்யூனிஸ எதிர்ப்பு போராட்டத்தின் உணர்ச்சி மிகுந்த முழக்கமாகும். AfD கட்சியும் ஐரோப்பிய அதிகாரத்திற்கு எதிரானது மேலும் ஐக்கிய இராச்சியத்தின் ( United Kingdom -UK) பிரக்சிட்( Brexit ) கட்சி தலைவர் நைஜெல் ஃபாராஜ் 2017ல் நடந்த தேர்தலில் AfD ன் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரக்சிட்( Brexit ) கட்சிக்கு ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லா விடினும் மே மாதம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் பெரும் வாரியான வெற்றியை பெற்றது. அது 2016ல் நடைபெற்ற வாக்கெடுப்பின்படி ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்த நிபந்தனைகளும் இன்றி வெளிவர வேண்டும் என்று வாதிடுகிறது.
ஸ்பெயின்
ஸ்பெயினின் அரசியல் களத்தில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களில் வாக்ஸ் என்கிற தீவிர வலதுசாரி கட்சியின் திடீர் வளர்ச்சியும் ஒன்று.
ஸ்பெயினில் நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற நான்கு பொது தேர்தல்களில் நான்காவது தேர்தல் நவம்பர் 10 ம் தேதி நடைபெற்றது. அதில் வாக்ஸ் தனது இடங்களை இரட்டிப்பாக்கி 52 இடங்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்தது. அது கடந்த ஏப்ரலில் தான் முதல் முறையாக பாராளுமன்றத்தில் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்ஸ் தன்னை ஸ்பெயினின் ஒற்றுமையை காக்கும் கட்சியாக முன்னிறுத்துகிறது. அது சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதாகவும் பாலின வண்முறைக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்வதாகவும் உறுதியளிக்கிறது. அக்டோபர் 2017ல் வட கிழக்கு பகுதியான கட்டோலினாவின் சுதந்திரத்திற்கான முயற்சிகள் தோல்வியுற்ற வேளையில் வாக்ஸ் கட்டோலினாவின் சுயாட்சியை ரத்து செய்ய கோரியதன் மூலம் பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்றது.
1975ல் உயிரிழந்த ஃபரான்சிஸ் ஃபரான்கோவின் சர்வாதிகார வரலாற்றின் காரணமாக பெரும்பாண்மையானோர் ஸ்பெயின் ஒரு தீவிர வலதுசாரி கட்சியை அங்கீகரிக்காது என்றே எண்ணினர். குறிப்பாக 1979க்கு பிறகு ஒரேயொரு தீவிர வலதுசாரி வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
ஆஸ்திரியா
2017ல் ஆஸ்திரியாவின் சுதந்திர கட்சி(Freedom Party) பழமைவாத தலைவர் செபாஸ்டின் கர்சரின் கூட்டணியில் அங்கம் வகித்து ஆட்சி அமைத்த போது மேற்கு ஐரோப்பாவில் அதிகாரத்தில் இருந்த ஒரே தீவிர வலதுசாரி கட்சியாக இருந்தது. கர்சின் மக்கள் கட்சியும்(People Party) சோசலிச ஜனநாயகமுமே (Socialist Democrats) நெடுங்காலமாக ஆஸ்திரியாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
சுதந்திர கட்சி அதன் ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக பல முறை இனவாதம் தொடர்பான வழக்குகளில் சிக்கி இருக்கிறது. அதன் அன்றைய தலைவர் ஹெய்ன்ஸ்-கிறிஸ்டியன் ஸ்ட்ராச் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஜோஹன் குடெனஸ் ஆகியோர் 2017 ஆம் ஆண்டில் இபிசாவில் படமாக்கப்பட்ட ஊழல் தொடர்பான ஒரு வீடியோ “ஸ்டிங்” ஆப்பரேஷனில் சிக்கினர்.
அதில் ஸ்ட்ராச் பதவி விலகியதோடு சுதந்திர கட்சியும் ஆட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. தொடர்ந்து செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில் அதன் வாக்கு விகிதம் 16% சரிந்தது.
பிரான்ஸ்
தீவிர வலதுசார சக்தியை பிரான்ஸின் மையநீரோட்ட அரசியலில் இணைக்க வலது சாரிய தலைவர் மெரைன் லீ பென் பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், 2017 நடந்த ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மேக்ரோனிடம் அவர் பெரும் தோல்வியை சந்தித்தார்.
தொடர்ச்சியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அவரது தேசிய முன்னணி(National front) கட்சி தோல்வியை சந்திக்கவே கட்சியின் பெயர் தேசிய பேரணி(National Rally) என மாற்றம் செய்யப்பட்டது.
லீ பென்னின் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானது, பெருந்திரளான புலம்பெயர்தலுக்கு அதுவே காரணமென கருதியது. மேலும் ஐரோப்பாவில் உள்ள பிற தேசியவாத மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகளை ஒத்த கருத்துடையதாய் இருந்தது.
கீழ்த்தட்டு மக்களின் மஞ்சள் அங்கி (yellow vest) போராட்டம் தீவிர வலதுசாரிகள் பலரை ஈர்த்ததாக நம்பப்படுகிறது. சில மஞ்சள் அங்கி போராட்டக்காரர்கள் யூத எதிர்ப்பு வாசகங்களையும் தங்களது ஆக்ரோச முழக்கத்தில் சேர்த்தனர்.
நிறுவனமயத்துக்கு எதிரான, அன்றாட செலவு அதிகரித்தலுக்கு எதிரான மக்கள் போராட்டமே தற்போதைய அரசின் பெரும் சிக்கலாக இருக்கிறது.
ஸ்வீடன்
2018ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்நிய புலம்பெயர்தலுக்கு எதிரான ஸ்வீடன் ஐனநாயக( Sweden Democrats) கட்சி 18% வாக்குகளை பெற்று குறிப்பிட தக்க வெற்றியை பெற்றுள்ளது.
இந்த கட்சியின் வேர்கள் நாஜி ஆதரவு சிந்தனை எனினும் சமீப காலமாக அது தன்னை புதுப்பித்துள்ளது. பன்மைத்துவ கலாச்சாரத்திற்கு எதிரான இந்த கட்சி புலம்பெயர்தலில் கடுமையான சட்டங்களை கோருகிறது.
இங்கே குறிப்பிட பிற நாடுகளைப் போல நிலைமை சிக்கலான போதும் எந்தவொரு ஐரோப்பிய தேசத்தை விடவும் அதிகமான மக்கள் ஸ்வீடனில் குடியமர்ந்திருக்கின்றனர். மேலும் அந்நாட்டு மக்கள் குடியேறுபவர்களிடம் இணக்கமான அணுகுமுறையை கையாள்கின்றனர்.
ஃபின்லாந்து
தீவிர வலதுசாரி கட்சியான ஃபிக்ஸ் கட்சி ( Fins Party) ஏப்ரல் 2019ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெறும் 0.2% வாக்குகள் வித்தியாசத்தில் சோசலிச ஜனநாயக கட்சியிடம் (Social Democratic Party -SDP) வெற்றியை தவறவிட்டது.
அதன் வெற்றி இரண்டு கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தது: அந்நிய குடியேற்ற எதிர்ப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை கட்டுபடுத்தும் மூர்க்கத்தனமான சட்டங்களின் எதிர்ப்பு. கடந்த 2015ல் நடந்த தேர்தலில் நல்ல நிலையில் இருந்து பின்னர் உள்கட்சி பூசலால் செல்வாக்கை இழந்த அக்கட்சிக்கு இந்த வெற்றி மிகப்பெரும் மீட்சியாய் அமைந்தது.
எஸ்டோனியா
தீவிர வலதுசாரியான எஸ்டோனிய பழமைவாத மக்கள் கட்சி தனது முதல் வெற்றியை 2015ல் பெற்றது.
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதன் வாக்கு வங்கி இரட்டிப்பாகி 18% வாக்குகளுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. அது தனது செல்வாக்கை பயன்படுத்தி பிற எதிர்கட்சிகளான மைய மற்றும் தேசியவாத கட்சிகளுடன் இணைந்து தாராளவாத தலைவரான காஜா கல்லாஸ் அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்பதை தடுத்தது.
அந்த கட்சி குடியேற்றத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்ததுடன் ஓரின திருமணத்தையும் எதிர்த்தது. அதன் தலைவர் மார்டின் ஹெல்ம் ஒரு முறை வெள்ளையர்கள் மட்டுமே எஸ்டோனியாவில் குடியேற வேண்டும் என கூறினார்.
போலந்து
தீவிர வலதுசாரி கட்சியான கான்ஃபெட்ரேட் கட்சி(Confederate Party) 2019ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 6.8% வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலின் முக்கிய அம்சம் பழைமைவாத சட்டம் மற்றும் நீதி கட்சி(Law and Justice Party) 43% வாக்குகளுடன் நிலையான வெற்றியை பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியதே.
அந்த கட்சியை முதுபெரும் கம்யூனிச எதிர்ப்பாளர் ஜார்ஸ்லா கேக்ஸின்கி வழி நடத்தினார். கத்தோலிக்க சிந்தனைகள் வேரூன்றிய ஊரக பகுதிகளே அக்கட்சியின் பெரும் பலம்வாய்ந்த இடங்கள். பிற ஐரோப்பிய வலது சாரிய கட்சிகளை போலவே இதுவும் தேசியவாதம் மற்றும் சமூக பொதுநலத்தில் அதிக கவனம் செலுத்துகிறது.
அக்கட்சியின் சர்ச்சைக்குரிய நீதித்துறை திருத்தங்கள் ஐரோப்பிய ஒன்றிய வாரியத்துடன் தர்க்கத்தை ஏற்படுத்தியது.
ஹங்கேரி
2018 ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்தோர் ஆதிக்கம் செலுத்திய தேர்தலில் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி, ஹங்கேரியர்களுக்கு “தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஹங்கேரியைப் பாதுகாக்கவும் வாய்ப்பளித்தது” என்று அவர் கூறினார்
விக்டர் ஆர்பன் நீண்ட காலமாக இஸ்லாமிய புலம்பெயர்தலுக்கு எதிரான ஹங்கேரி மற்றும் ஐரோப்பாவின் பாதுகாவலனாக தன்னை முன்வைக்கிறார், ஒருமுறை கலப்பு மக்கள் தொகை மற்றும் அடையாள உணர்வு இல்லாத ஐரோப்பாவின் அச்சுறுத்தலை குறித்தும் எச்சரித்தார். மார்ச் 2019 இல் ஐரோப்பாவின் பிரதான மைய-வலது குழுவான ஐரோப்பிய மக்கள் கட்சி (Europe People Party), ஆர்பனின் ஃபிடெஸ்(Fidesz) கட்சியை அதன் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக இடைநீக்கம் செய்தது.
ஹங்கேரியில் மற்றொரு தேசியவாத கட்சியாக ஜோபிக்(Jobbik) கட்சி உள்ளது. ஜோபிக் தனது கடந்த காலத் தீவிர வலதுசாரிய அரசியலை தவிர்த்து மைய வாக்காளர்களை கவரும் முயற்சியில் 2018 இல் நடைபெற்ற தேர்தலில் 19% வாக்குகளை அதிகமாக பெற்றது.
ஸ்லோவேனியா
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு ஸ்லோவேனியன் ஜனநாயகக் கட்சி (Slovenian Democratic Party) பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றாத போதும் அந்த தேர்தலின் தனிப்பெரும் கட்சி அந்தஸ்தினை பெற்றது .
ஹங்கேரியின் விக்டர் ஆர்பனின் ஆதரவாளரான முன்னாள் பிரதமர் ஜானெஸ் ஜான்சா இந்த கட்சிக்கு தலைமை தாங்குகிறார். “ஸ்லோவேனியா ஸ்லோவேனியர்களின் நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் முதலிடம் கொடுக்கும் ஒரு நாடாக மாற வேண்டும்” என்று அவர் விரும்புகிறார்.
கிரீஸ்
புலம்பெயர் எதிர்ப்பு மற்றும் தேசியவாத கட்சியான கிரேக்கத்திற்கான தீர்வு(Greek Solution) என்று அழைக்கப்படும் கட்சி 2019 பொதுத் தேர்தலில் 3.7% வாக்குகளை பெற்று, 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 10 இடங்களைக் கைப்பற்றியது. நவ-நாஜி கட்சியான கோல்டன் டான்(Golden Dawn) கட்சிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை. கிரேக்கத்தின் தொடர்ச்சியான பொருளாதார சீர்கேடு மற்றும் புலம்பெயர்ந்தோர் நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் விரக்தி தீவிர வலதுசாரிகளுக்கு வாக்குகளாக மாறவில்லை.
https://www.bbc.com/news/world-europe-36130006
தமிழில்: சர்ஜுன்