அமித்சா அறிவித்துள்ள நாடுதழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் NRC பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது…!

19 Dec 2019

(தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கிற  இந்தியக் குடிமக்கள் பதிவேடு(NRC) உருவாக்கப்படுகிறது)

நாடெங்கிலும் குடியிரிமை திருத்த சட்டத்திற்கு(CAA-2019) எதிராகவும்  தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு(NRC) எதிராகவும் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்ற நிலையில்,  அதிகம் கவனம் பெறாத தேசிய மக்கள் தொகை பதிவேட்டை(National population Register(NPR)) அமலாக்க முயல்கிற அதிகாரிவர்க்க முயற்சிகள் தற்போது எதிர்ப்பிற்குள்ளாகியுள்ளது.

மேற்குவங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR)  தயாரிக்கும் வேலையை “பொதுமக்கள் நலனின்” பெயரில் நிறுத்துவதாக  அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி ஆணையிட்டுள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் (தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக) எந்த சலசலப்பும் எழாத  நிலையில் மே.வங்கத்தில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினை தற்போது கவனம் பெற்றுவருகிறது.

முன்னதாக,மே.வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டு நடைமுறையை அம்மாநில சமூக செயல்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டின் NRC முதல் கட்ட நடைமுறையே தேசிய மக்கள் தொகை பதிவேடு NPR என கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) சர்ச்சைமிக்கது. இதன் நோக்கம் சட்டப்புறம்பான அகதிகளை கண்டறிந்து வெளியேற்றுவதை இலக்காக கொண்டுள்ளது.  உண்மையான  இந்திய குடிமக்களையும்  “சட்டப்புறம்பான அகதி” என முத்திரை குத்தவும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் சற்றும் சட்டை செய்யாமல் 2024 ஆம் ஆண்டிற்குள்ளாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC)  நாடெங்கிலும் நிறைவேற்றி முடிப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்கிறார். பாஜகவோ தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் NPR, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் NRC தொடர்பில்லை என்கிறது. மேலும் ஒரு படி மேலே சென்று, மக்கள் தொகை கணக்கெடுப்பின்(census) ஒரு பகுதியே தேசிய மக்கள் தொகை  பதிவேடு எனக் கூறுகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக அரசு மேற்கொண்ட சட்டங்கள்/கடந்தகால சட்டத் திருத்தங்களை கவனித்துவந்துள்ள சட்ட  வல்லுனர்களுடன் scroll பேசியதில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் NPR, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் (census) தொடர்பில்லை என்பது தெரியவருகிறது. பாஜகவின் கூற்று பொய் என தெரிகிறது. அதேவேளையில் நாடுதழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் மக்கள் தொகை பதிவேடு தொடர்பு கொண்டிருப்பிருப்பதும் தெரியவந்துள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR)என்றால் என்ன?

இந்திய ஒன்றிய அரசு அதன் இணையதளத்தில் NPR  குறித்து வெளியிட்ட விளக்கம் வருமாறு ”நாட்டில் உள்ள மக்களை அடையாளம் காணும்வகையில்  ஒரு ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பை உருவாக்குவதாகும்”,”குடி விவரங்கள் மற்றும் கைரேகை பதிவுகள் உள்ளிட்ட பயொமெட்ரிக் தகவல்களை உள்ளடக்கியிருக்கும்” என்கிறது.

சரி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் என்னென்னே விவரங்கள் பெறப்படும்?

இதற்கு விடைகாணும் பொருட்டு, தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை குறித்து ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட மாதிரி கணக்கெடுப்பை scroll ஆய்வு செய்தது. இந்த கணக்கெடுப்பில் சுமார் 14 கேள்விகள் கேட்க்கப்பட்டது. அக்கேள்விகள் பொதுவாக பெயர், வயது, பாலினம், கல்விநிலை, வேலைநிலை, பிறந்த இடம், இறப்பு விவரம், தாய் மொழி, முகவரி, எந்த நாட்டவர் போன்ற குடிவிவர கேள்விகளை  கொண்டுள்ளது.

மேற்கூறிய கேள்விகளை பொறுத்தவரை இந்த கணக்கெடுப்பு கிட்டத்தட்ட வழக்கமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெறப்படுகிற விவரங்களை ஒத்துள்ளது. ஆனால் இந்த கேள்விகளோடு கூடுதலாக “பெற்றோர்களின் பிறப்பிடம்” குறித்த கேள்வி தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் கூடுதலாக கேட்கப்படுகிறது. மேலும் ஆதார் எண், ஓட்டுனர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, அலைபேசி எண் ஆகிய விவரங்களை கட்டாயம் என்றில்லாமல்  விருப்பத்தின் பேரில் வழங்கலாம் என்கிறது.

இவ்வாறு விருப்பத்தின் பேரில் மக்களிடமிருந்து  பெறப்படுகிற தகவல்களைக்கொண்டு  பெற்றோர்களின் பிறப்பட விவரங்களை  ஆதார் எண் போன்ற பயொமெட்ரிக் விவரங்களோடு முதல் முறையாக ஒன்றிய அரசு இணைக்கிறது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு(NPR) எவ்வாறு தேசிய குடிமக்கள் பதிவேட்டோடு(NRC) தொடர்ப்புகொண்டுள்ளது?

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு, குடியுரிமை சட்டம் 1955 ஆதாரம் ஆகிறது. 2003 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான வாஜ்பாய் அரசு இந்த சட்டத்தில் “சட்டபுறம்பான அகதிகள்” என்ற அம்சத்தை திருத்தம் செய்து புதிதாக சேர்க்கிறது. இந்த திருத்தத்தை அமல்படுத்துவதற்கு சில விதிகள்  வகுக்கப்படுகின்றன. அப்போதே இந்த விதிகள் சலசலப்பை ஏற்படுத்துகின்றன.

அதேவேளையில் இந்தியக் குடிமக்கள் பட்டியலை (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் மூலமாக) தயாரிக்கும் பொருட்டு சில அடிப்படைகளை உருவாக்கினார்கள்.”இந்த  பதிவேடானது இந்தியாவில் வசிக்கின்ற இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமகன்கள் குறித்த விவரங்களை கொண்டிருக்கும்” என  ஒன்றிய அரசு தெரிவித்தது.

இதன் செயல் விதிமுறைகளை அரசு இவ்வாறு விளக்குகிறது “இந்திய குடிமக்கள் பதிவேடானது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும்,நபர்களிடத்திலும் தனித்தனிய சென்று வட்டார அளவிலே இந்திய  குடியிரிமை நிலை உள்ளிட்ட  குடிவிவரங்களையும்  சேகரிக்கும் ”என்றது.

நாடுமுழுவதும் மக்களிடம் பெறப்படுகிற இப்பதிவேட்டை தொகுப்பதற்கு, நிர்வாக ரீதியான உள் கட்டங்கள் உருவாக்கப்பட்டன. தேசிய குடிமக்கள் பதிவேடு, மாநில -இந்திய குடிமக்கள் பதிவாளர், மாவட்ட -இந்திய குடிமக்கள் பதிவாளர், துணை -மாவட்ட இந்திய குடிமக்கள் பதிவாளர், வட்டார -இந்திய குடிமக்கள் பதிவாளர்  ஆகிய துணைக் கட்டங்களாக பிரிக்கப்பட்டு, தகவல்கள் தொகுக்கப்படுகின்றன.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.இதில் இந்திய குடிமக்கள் பதிவு எங்கே உருவாக்கப்படுகிறது? தேசிய மக்கள்தொகை பதிவேட்டை “சரிபார்த்து” வட்டார இந்திய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படுகிறது. அதாவது, தேசிய மக்கள்தொகை பதிவேடு, வட்டார இந்திய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குகிறது. இங்கே, வட்டார இந்திய குடிமக்கள் பதிவேடு செய்வது ஒன்றுமட்டும்தான். அது தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெறப்பட்ட இந்திய குடிமகன் குறித்த விவரத்தை சரிபார்ப்பது மட்டுமே. ஒருவேளை இந்திய குடிமகன் குறித்த சந்தேகம் இருந்தால் “கோரிக்கை மற்றும் மறுப்பு”என்ற அடுத்த நிகழ்முறைக்கு மாற்றிவிடப்படும்.

கடந்த ஜூலை 31,2019 இல் அசாம் தவிர நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களிலும்  மக்கள்தொகை பதிவேட்டை மேற்கொள்ளவேண்டும் என மோடி அரசு அரசானை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த அரசாணையில்  ஏப்ரல் மாதல் 2020  தொடங்கி செப்டம்பர் மாதம் 2020 குள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை முடிக்கவுள்ளனர்.

மொத்தமாக தொகுத்துக் கூறுவதென்றால்,

  • நாட்டிலுள்ள அனைத்து மக்களின்  விவரப்பட்டியலானது,  தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்(NPR) மூலமாக  சேகரிக்கப்படுகிறது.
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை சரிபார்க்கிற  தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC), யார் இந்திய குடிமக்கள் ? யார் இந்திய குடிமக்கள் இல்லை ? என முடிவு செய்து குடிமக்கள் பட்டியலை தயாரிக்கிறது. சந்தேதேகத்திற்கு  இடமான குடிமக்கள் பட்டியிலும் இதன் மூலம் பெறப்படுகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேடே NPR, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் NRC முதல் படியும் தொடக்கமாகும்” என  தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்  பொருளாதார அறிகருமான திரு பிரசென்ஜித் போஸ் எச்சரிக்கை செய்கிறார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கமே தேசிய குடியுரிமை பதிவேட்டை உருவாக்குவதுதான்” என மனித உரிமை செயல்பாட்டாளர் ரஞ்சித் சுர் கூறுகிறார்.

நாடுதழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு, அசாமில் மேற்கொள்ளப்படுகிற தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை 2003 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. அசாமிற்கு மட்டும் சில விலக்கும் அளிக்கப்பட்டது. அதாவது 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பு வரை அசாமில் இருந்தவர்கள் மற்றும் 1951 ஆம் ஆண்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டு ஆவணத்திலுள்ள  குடிமகனின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும் போதிய ஆவணங்களுடன் அரசிடம் முன்வந்து சமர்ப்பிக்கவேண்டும்”என்றது.

இந்தியாவின் இதர பகுதிகளில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படுகிறபோது, அசாம் மேற்கூறிய வகையில்  வேறுபடுகிறது.

மேலும் அசாமில் ஒவ்வொரு குடிமகனும் தாமாக முன்வந்த குடியுரிமையை நிருபிப்பதற்கு விண்ணப்பம் செய்யவேண்டும். அரசு அதை சரிபார்த்து குடியுரிமையை  தீர்மானிக்கும். மாறாக ஏனையே இந்தியாவில், அரசு அதிகாரிகள்  வீடு வீடாக சென்று பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை உருவாக்குவார்கள் என ரஞ்சித் சுர் கூறுகிறார்.

முன்னதாக அசாமில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடிமக்கள்  பதிவேடு அதிகாரிகளின் தன்னிச்சை முடிவுகளுக்கு வாய்ப்பளிக்கப்படுவாத விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதர இந்தியாவில்,தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலமாக உருவாக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேட்டு நடைமுறையோ மேலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகும்  என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

அசாமில், மக்கள் இந்துவோ இஸ்லாமியரோ ஏழையோ பணக்காரனோ அனைவரும் ஒரு வரிசையில் வந்து நின்றனர். மேலும் காலக்கெடு தேதியும் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எல்லாமே அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. நாட்டின் குடிமக்கள்  யார்? யார் குடிமக்கள் இல்லை, என்பதை சந்தேகத்தின் அடிப்படையில் அரசே தன்னிச்சையாக தீர்மானிக்கிறது.

 

தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR, மக்கள் தொகை கணக்கெடுப்பில்  இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

பொதுவாக தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியே என பாஜக கூறிவருகிறது. மேற்கு வங்கத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு வேலையை அம்மாநில முதல்வர் நிறுத்தி வைத்தபோதும் இதையே பாஜக மீண்டும் கூறியது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ஒரு பகுதியே தேசிய மக்கள் தொகை பதிவேடு  என பாஜக எம்பி  ஸ்வபன் தாஸ்குப்தா கூறினார்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு குடியிரிமை சட்டம்1955  மூலமாகவும் பிறகு 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விதிகள் மூலமாகாவும் நடைமுறையாக்கம் பெறுகிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்போ, 1948 -மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப்படி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை அரசு பொதுவெளியில் வெளியிடாது, ரகசியம் காக்கப்படும். மாறாக தேசிய மக்கள்தொகை பதிவேடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதன் பேரில் பெறப்படுகிற “கோரிக்கை மற்றும் மறுப்பு” ஆகியவற்றின் அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்படுகிறது. இதன் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படுகிறது

ஆக இரு சட்டங்களும் வெவ்வேறு நோக்கமுடையது. ஆனால் இதை பாஜக தவறாக சித்திரிக்கிறது.

ஆதாரம்:

https://scroll.in/article/947116/scroll-investigation-amit-shahs-all-india-nrc-has-already-begun-with-the-npr

ஆங்கிலம் வழி தமிழில்-அருண் நெடுஞ்செழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW